Pages

December 26, 2010

எழுவோம் அகிலம் வியக்கும் வகை நிமிர்வோம்.

வேண்டாம் அம்மா வேண்டாம் !!!

ஆண்டுகள் ஒன்று ஆகித்தான் போனபோதும்
ஆற்றுவார் இன்றி தவிக்கின்றோம் நாம்
ஆழிப் பேரலை கொண்டு வந்து - எம்
அன்புச் சொந்தங்களைகடல் காவு கொண்டு
ஆண்டுகள் ஒன்று ஆகித்தான் போனபோதும்
ஆற்றுவார் இன்றி தவிக்கின்றோம் நாம்

பட்ட காலிலே படும் என்பது பழமொழி – அது
பலதரம் ஈழத் தமிழர் வாழ்வினில் நிகழ்வதேனோ?
மணிக்கொருதரம் மரணித்தோர் தொகை
மலைபோல உயர உயர – எம்
மனம் பட்ட பாடு யார் அறிவார்

இயற்கை அன்னையே ஈழத்தமிழன் மீது
உனக்கும் என்னம்மா கோபம்
சக்திக்கு மீறிய விலை கொடுத்து விட்டு
சற்று சமாதானக் காற்றைச் சுவாசிக்க
எத்தணித்த வேளையிலே
இரண்டு தசாப்தமாய் எதிரியால் முடியாததை
இரண்டு நொடிக்குள் அலை கொண்டு வந்து
அள்ளிச் சென்றது ஏனம்மா?

பாலகன் யேசு பிறந்த மறுநாள்
பாலகர் பலரை கடலே – நீ
காவு கொண்டது ஏனம்மா?
எத்தனை கனவுகளுடன் அந்த
இளம் பிஞ்சுகள் ஓடி விளையாடியிருப்பார்கள்
அலை வந்து தம்மை
அடித்துச் செல்லப் போகின்றது என்பதே தெரியாமல்

ஆண்டுகள் ஒன்று ஆகித்தான் போனபோதும்
ஆற்றுவார் இன்றி தவிக்கின்றோம் நாம்
ஆழிப் பேரலை கொண்டு வந்து - எம்
அன்புச் சொந்தங்களைகடல் காவு கொண்டு
ஆண்டுகள் ஒன்று ஆகித்தான் போனபோதும்
ஆற்றுவார் இன்றி தவிக்கின்றோம் நாம்

காலை உணவை சமைத்து விட்டு
களையாறி உண்ண அமர்ந்த எத்தனை பேர்
கடலுக்குச் சென்ற தன் உறவின்
வரவை நோக்கிக் காத்திருந்த எத்தனை பேர்
இப்படி ஒன்று நிகழுமென்று
கனவில் கூட நினைத்திராமல்
கண்ணயர்ந்திருந்தோர் எத்தனை பேர்
அத்தனை பேரையும் சில நொடிக்குள்
கொடிய அலை கொண்டு வந்து
கொன்று தள்ளியது ஏனம்மா?

ஆண்டுகள் ஒன்று ஆகித்தான் போனபோதும்
ஆற்றுவார் இன்றி தவிக்கின்றோம் நாம்
ஆழிப் பேரலை கொண்டு வந்து - எம்
அன்புச் சொந்தங்களைகடல் காவு கொண்டு
ஆண்டுகள் ஒன்று ஆகித்தான் போனபோதும்
ஆற்றுவார் இன்றி தவிக்கின்றோம் நாம்

உலகமே ஒரு முறை உற்றுத்தான் நோக்கியது
ஆயினும் என்ன பயன்
வந்த உதவிகள் யாவும்
தெற்கிற்கே திசை திருப்பப்பட்டன
எங்கள் தேசம் தேற்றுவார் இன்றித்தவித்தது
அலை கொன்ற எங்கள் உறவுகளின் உடலம்
அழுகி நாறிட முன்னர் ஆவன செய்திட
அண்ணன் ஆணையிட்டான்
அண்ணனின் சேனைகள் அனைத்துமே களமிறங்கின
ஓர் இரு தினங்களில் மீட்புப் பணிகள்
முழுமையாய் நிறைவு கண்டன

புலம் பெயர்ந்த தமிழினமும்
புலத்தில் உதித்த இளந் தமிழினமும்
கொட்டும் பனி வேளையிலும்
குளிருக்கு மத்தியில் நின்று
சிறுகச் சிறுகச் சேர்த்த தொகை
பெருந்தொகையாய் சென்று
மீள் கட்டுமானப் பணிகளும் முடுக்கி விடப்பட்ன

ஆண்டுகள் ஒன்று ஆகித்தான் போனபோதும்
ஆற்றுவார் இன்றி தவிக்கின்றோம் நாம்
ஆழிப் பேரலை கொண்டு வந்து - எம்
அன்புச் சொந்தங்களைகடல் காவு கொண்டு
ஆண்டுகள் ஒன்று ஆகித்தான் போனபோதும்
ஆற்றுவார் ஒன்று தவிக்கின்றோம் நாம்

உலக நாடுகளின் பிரதிநிதிகள் - எம்
ஊரின் நிலை பார்க்க முனைந்த போது
சிங்களம் தடை விதித்தது
சுனாமியின் பின்
மீள்கட்டுமானப் பணிக்கென போடப்பட்ட
முகாமைத்துவக் கட்டமைப்பும்
முகவரி அற்றுப் போனது.

இருந்த போதும் எம் தேசம் மீண்டெழுந்தது !
ஆயினும் என்ன பயன் இன்று
அனைத்துமே பறிபோய்
அகதியாய் அகிலமெங்கும்
ஆதரவற்று அலைந்து கிடக்கின்றோம்.
விழ விழ எழுவது எமக்கொன்றும் புதிதல்ல
எழுவோம் அகிலம் வியக்கும் வகை நிமிர்வோம்.



26.12.2005 அன்று சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் நகரில் நடைபெற்ற சுனாமி ஆழிப்பேரலை முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வின் கவியரங்க நிகழ்வின் என்னால் எழுதி வாசிக்கப்பட்ட கவிதை.