Pages

November 22, 2011

வாய்விட்டுக்கதறி அழவேனும் ஒரு தேசம் வேண்டும்.

ஈழதேசம் மிளிர
இன் உயிர் தந்தோரே?
சாவினை அணைத்தொரு
சத்தியம் செய்தோரே?
உங்கள் துயில் கலைத்து
துயிலெழும் நாளில்
வாய் விட்டுக் கதறி அழ
வக்கத்துப்போய் நிற்கின்றோம் நாம்

மாவீரரே!
உம் பெயர் சொல்லி அழ
தொலைத்த எல்லாவற்றோடும் - எம்
தன் மானத்தையும்
தொலைத்துவிட்டு நிற்கின்றோம் நாம்.

வாய் விட்டுக் கதறி அழும்
வல்லமை தான் இழந்து
நோய் பிடித்த உடலைப் போல்
சக்தி அற்று நிற்கின்றோம் நாம்

சோதிப் பிழம்பானவரே ! உமை
சுடரேற்றி தலை வணங்க
சுதந்திரமற்று நிற்கின்றோம் நாம்.

கார்திகைப் பூ எடுத்து உம்
கல்லறைகளில் தூவியழும் நிலை இழந்து
துன்பச் சுமை சுமந்து தவிக்கின்றோம் நாம்.

நாம் கூடி வாழ இல்லை
கூடி இருந்து உமை நினைத்து
வாய்விட்டுக்கதறி அழவேனும்
ஒரு தேசம் வேண்டும்.

வாரும் ஐயா ! இந்த
கார்த்திகை நாளில் ஒரு வரம் தாருமையா.