Pages

December 7, 2012

தமிழூடாய் நீ வாழ்வாய்...

இரண்டாயிரங்களின் முற்பகுதி புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழர்களின் இலக்கியங்கள் புத்தெழுச்சிபெறத் தொடங்கிய காலம். கன்னித்தமிழ் கணனித்தமிழாக உருமாறி உருளும் உலகின்போக்குக்கு ஏற்ப உலாவரத் தொடங்கிய காலம்.

நானும் எனது நண்பர்களும் இணைந்து சுவிற்சர்லாந்திலிருந்து 'குருத்து' என்ற மாதஇதழை வெளியிடத் தொடங்கியிருந்தோம். சமவேளையில் வலைப்பூக்கள் மலரத் தொடங்கியிருந்தன. புத்தெழுச்சியோடு தமிழ் மொழி நாளொரு வண்ணமாய் இணையத்தில் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது.

எமது குருத்து இதழை தொடர்புகள் பெரிதளவில் இல்லாத அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள வாசகர்களும் எழுத்தாளர்களும் தபால் மூலம் பெற்று வாசிக்குமளவிற்கு வளர்சி கண்டமைக்கும் பெரு வாசக வட்டத்தை கொண்டிருந்தற்கும் இணையம் பெரும் ஆதரவினை நல்கி வந்தது. குறிப்பாக யாழ். இணையமும் அதன் கருத்துக்களமும் பெரும் ஆதரவு நல்கியிருந்தது.

இக் காலப் பகுதியில் உலகின் பல பாகங்களிலிருந்தும் புதிய எழுத்தாளர்களின் ஆக்கங்கள் எங்கள் மின்னஞ்சலை தினமும் நிறைத்த வண்ணம் இருக்கும். பல வகையான ஆக்கங்கள் வித்தியாசமான படைப்புகள் என வரும். அவற்றில் சில நெஞ்சில் நிறைந்து நிற்கும்.

அப்படித்தான் 'அம்மாவின் கடிதம்' என்ற தலைப்பில் ஒரு கவிதையும் எங்கள் மின்னஞ்சலின் வரவுப் பெட்டிக்குள் வந்து விழுந்திருந்தது. படித்ததும் நெஞ்சில் நிறைந்தது. எழுதியவர் பெயரைப் பார்த்தேன் 'ஈழநாதன்' என்று இருந்தது. யாரோ ஒரு பெரியவர் புனை பெயரில் எழுதியிருக்கிறார் என்று நினைத்தேன். மீண்டும் சில காலங்களில் 'எதிர்ப்பு' என்ற பெயரில் சிறுகதையொன்றும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அது ஒரு குறியீட்டுக் கதை மிகவும் வித்தியாசமாக இருந்தது. சரி அவரைத் தொடர்பு கொள்வோம் என மின்னஞ்சல் மூலம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டேன். அக்குறியீட்டுக் கதையின் மூலகாரணமாக அமைந்த யாழ். நூலகம் பற்றியும் அதற்கு இணையாக நாமும் ஒரு இணைய நூலகமொன்றினை உருவாக்கி ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற பெரும் இலட்சியம் பற்றியும் குறிப்பிட்டார். அவரோடு உரையாடியதில் பல விடயங்களில் எமக்குள் ஒற்றுமையும் ஒரே இலட்சியமும் இருப்பது தெளிவாயிற்று. அவரின் இணைய நூலக உருவாக்கத்திற்கு ஆதரவு நல்குவதாக வாக்களித்தேன்.

அப்போதுதான் அவர் தனது வலைபதிவுகள் பற்றியும் குறிப்பிட்டார். அச்சு ஊடகங்களில் மட்டும் எழுதாது வலைப்பதிவுகளையும் செய்யுமாறு கோரினார். kuruthu.yarl.net எனும் பெயரில் வலைப்பதிவொன்றினை தொடங்கி எனது படைப்புக்களைப் பதியத் தொடங்கினேன். குருத்து இதழின் ஆசிரியராக இருந்து அதன் பணிகளில் பெரும்பாலான நேரத்தை செலவு செய்ததால் வலைப்பதிவில் நேரம் செலுத்த முடியாது போனது. கனடாவிலிருந்து வலைப்பதிவை மேற் கொள்ளும் நண்பர் கவிதனின் அன்புக் கோரிக்iயால் என் ஆக்கங்களை அவரது கவிதைகள் என்ற வலைப்பதிவில் அவர் மூலம் பதிவு செய்து வந்தேன். ஈழநாதன் எனக்கும் கவிதனுக்கும் பொதுவான நண்பராக இருந்ததால் கவிதனின் தளத்தில் ஈழநாதன் தனது கருத்துக்களை பதிவிடுவார்.

எமது குருத்து இதழ் யாழ். பல்கலைக் கழக சமூகத்தின் ஆதரவுடன் தாயகத்திலும் வெளிவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஏற்பாடுகளில் நான் மூழ்கிப் போனதால் ஈழநாதனுடனான தொடர்பு வலைப்பதிவோடு மட்டுமே மட்டுப்பட்டுப் போனது. சமவேளையில் யாழ் கருத்துக்களத்தில் ஈழவன் என்ற பெயரில் கருத்தாடல் செய்யும் நண்பராகவும் அறிமுகமாகினார். பல தரப்பட்ட கருத்துக்கள் சிந்திக்க தூண்டும் எண்ணங்கள் என கருத்தக்களம் களைகட்டத் தொடங்கிய காலம். நெற்பயிர் சிறப்பாக வளர்கின்றது என்றால் அங்கே களையும் அதே வேகத்தில் வளரும் என்பது இயற்கையின் நியதிதானே. கருத்துக்களமும் அப்படித்தான் ஆனது. அதனால் ஒதுங்கிக் கொண்டோம்.

நீண்ட இடைவெளியின் பின் ஈழநாதன் இணைய நூலகம் ஆரம்பிப்பதற்குரிய நேரகாலம் கூடி வந்ததும் என்னை தொடர்பு கொண்டார். அவர் அழைத்த நேரம் மிகவும் இக்கட்டான காலப்பகுதி பல தரப்பட்ட சிக்கல்கள், குருத்து இதழ் இனி வரமுடியாது என்ற நிலை, மிகவும் மனமுடைந்து போயிருந்தேன். என்னால் வேறு எத் திட்டங்களுக்குள் புதிதாய் என்னை இணைத்தக் கொள்ளக் கூடிய மனநிலை இருக்கவில்லை. ஈழநாதனுக்கு சிலரை இனங்காட்டி வைத்தேன்.

எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கிக் கொண்டேன். இனி நான், என் வாழ்வு என்று வாழ நினைக்க என் பெற்றோர் எனக்கு திருமணம் பேசி இல்லற பந்தத்தினுள் நுழைக்க ஏற்பாடு செய்தனர். முதற் பார்த்த பெண் பெயர் கேட்டதுமே பிடித்துப் போயிற்று. ஆம் தேன்மொழி என் இல்லறத் துணையென நிச்சயிக்கப்பட்டாயிற்று. தேன்மொழியின் அண்ணாவின் பெயர் ஈழநாதன் அந்த ஈழநாதன் தான் எழுத்துலகூடாய் எனக்கு அறிமுகமாகியிருந்த ஈழநாதன் என நான் நினைக்கவில்லை. எனது மனைவிக்காக நான் கவிதனின் வலைப்பதிவில் எழுதிய நினைவிருக்கிறதா?  என்ற கவிதைத் தொடர் தொடர்ச்சியாக வெளி வந்தபோது ஈழநாதனும் கருத்தெழுதிச் செல்வார். சிறிது காலங்களின் பின்தான் தெரியவந்தது எனது மனைவியின் அண்ணாதான் அந்த ஈழநாதன் என்று.

குடும்ப உறவான பின்னும் குடும்ப நலங்கள் பற்றி நாம் பேசிக் கொண்டது மிக மிகக் குறைவு. தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் இலக்கியங்கள் பற்றியும் ஈழத்தவர்களின் படைப்புகள் பற்றியும்தான் மணிக்கணக்கில் பேச்சு நீளும். 2007களில் இருந்து ஈழநாதன் எழுதுவது என்பது முற்றாக இல்லாமல் போனது. இருந்தபோது புதிதாக எழுதுபவர்கள் பற்றியும் புதிதாக வருகின்ற படைப்புகள் பற்றியும் விரல் நுனியில் தகவல்களுடன் இருந்தார்.

ஈழத்தவர்களின் ஆக்கங்கள் வெளிக்கொண்டு வரப்படவேண்டும். அதற்கு உரிய அங்கீகாரம் கிட்ட வேண்டும். அவற்றைப் பற்றிய விமர்சனங்கள் வெளிவர வேண்டும். மலிந்த விலைகளில் நூல்கள் அச்சிடப்பட்டு அனைத்துத் தரப்பினரையும் சென்றடைய வேண்டும். இதுவே ஈழநாதனின் பேரவாவாக இருந்தது.

இப்படி படைப்பாளிகளையும் அவர் தம் படைப்புக்களையும் வெளிக்கொண்டுவர வேண்டும் என துடித்த ஈழநாதன் இலக்கியம், தமிழ்ச்சமூகம், அரசியல், திரையுலகம், அறிவியல் என பல தரப்பட்ட விடயங்களில் நூற்றுக்கணக்கான ஆக்கங்களை எழுதி இணையத்தளமெங்கும் விதைத்துச் சென்றிருக்கின்றார். அவரின் ஒரு சில ஆக்கங்களேனும் அவரது ஆசைபோல அனைத்துத் தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடு ஒரு சில ஆக்கங்கள் அவரது நினைவு சுமந்து வெளிவருpன்ற 'அறிவுக் களஞ்சியம்' என்ற இந்த நூலில் தொகுக்கப்படுகின்றது. அவரை நாம் இழந்து தவித்த நேரத்தில் அவரது எழுத்துலக நண்பர்கள் பலரும் எழுதிய நினைவுக் கட்டுரைகள் அனைத்தையும் இங்கே இணைக்க முயற்சித்த போதும் அதற்கு காலம் அவகாசம் தரவில்லை. முடிந்தவரை கிடைத்தவை இணைக்கப்பட்டுள்ளது.

ஈழநாதனின் உடல் மட்டுமே எமை பிரிந்திருக்கின்றது. உணர்வுகளும் எண்ணங்களும் அவரின் எழுத்துக்கள் மூலமும் எழுப்பிச் சென்றிருக்கும் இணைய நூலகம் மூலமும் வாழ்வாங்கு வாழும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இணுவையூர் மயூரன் 

அறிவுக்களஞ்சியம் ஈழநாதனின் 60வது நினைவுநாளையொட்டி (27.11.2012) அன்று வெளியிடப்பட்ட 'அறிவுக்களஞ்சியம்' எனும் சிறப்பு வெளியீட்டுக்காக எழுதப்பட்டது.

August 26, 2012

எங்கள் ஊரின் அடையாளம்

காங்கேசன் துறைவீதியில்
இணுவைப்பதியின் எல்லையை
இரு கூறாய் சமமாய்ப் பிரித்தால்
ஊரின் நடுவில்
உயர்ந்து வளர்ந்திருந்தது அந்த மரம்.
புதிதாய் எங்கள் ஊர் வருபவர்களுக்கு
புரியும்படி சொல்லி வைக்கும் அடையாளம்.

சீனிப் புளியடி
பெயர் சொல்லும்போதே நா இனிக்கும் .

எங்கள் பள்ளி கூட புளியடிப் பள்ளியென்றுதான்
புவி எங்கும் அறிமுகம்
குடை போல விரிந்த மரம்
குளிரோடு தந்த நிழலில்தான்
இடைவேளையில் அம்மா கட்டித் தந்த
இடியப்பமும் முட்டைப் பொரியலும்
கவளமாய் களம் இறங்கும்.

வகுப்பறையில் வராத சங்கீதம் - இந்த
மர நிழலில் வரும் என்று லேகா ரீச்சர் எங்களோடு
தொண்டை தண்ணி வத்த ச ப
சொல்லித் தந்தும் அங்குதான்.
கண்ணன் பாட்டுக்கு அபிநயம் பழகியதும் அங்குதான்
உடற்பயிற்சி வேளை முடிய
உற்சாகம் தேடி சாய்ந்து இருந்து கதை பேசுவதும் அங்குதான்
பாலசிங்கம் வாத்தியார்
தான் படித்த கதைகளையெல்லாம் - நாம்
வாய் பிளந்து கேட்டிருக்க சுவை கலந்து சொல்வதும் அங்குதான்.

எத்தனை முறை
எங்களிடம் கல்லடி பட்டிருக்கும்
அத்தனை முறையும் தந்தது
நாவினிக்கும் சீனிப் புளியதைத்தான்

போன முறை ஊர் போனபோது
எனக்கு நாலாம் வகுப்பு  படிப்பிச்ச
பரஞ்சோதி மாஸ்ரர்தான்
பள்ளியின் அதிபராய் இருந்தார்.
அந்த மர நிழலில்தான் மணிக்கணக்காய்
அமர்ந்திருந்து கதை பேசினோம்
இந்த முறை போன போது பெருத்த ஏமாற்றம்
அவரும் இல்லை அந்த மரமும் இல்லை.....


June 9, 2012

பாடுகின்றேன் பல்லாண்டு.

அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுததாபனமே!
அகில வான் பரப்பில் உன் மூலம் தமிழ்
ஒலிக்கத் தொடங்கியதன் பதினைந்தாம் அகவைநாள் இன்று
பத்தொடு ஐந்தாண்டுகள் பாரினில் - உன்
பணி தொடரும் வேளை பாடுகின்றேன் பல்லாண்டு.

எடுத்த காரியம் யாவினும் வெற்றியென
என் வீட்டு வானொலி பெட்டி
தன்னம்பிக்கை தந்து - ஒரு உறவாய்
என்னோடு உறவாடத் தொடங்கி
மூவைந்து ஆண்டுகள் முன் வந்து நிற்குது இன்று

ஊடகப் பணி செய்ய உவகையுடன் வாய்ப்பளித்து
உலக வான்பரப்பில் உன்னூடாய் என் குரலும் ஒலிக்க வைத்தாய்
அந்த நன்றியின் உணர்வொடு பாடுகின்றேன் பல்லாண்டு
வாழிய நின் புகழ் வையகம் உள்ள மட்டும்.

June 5, 2012

பாலைவனத்தில் பந்தாடும் சிறுத்தைகளுக்கு...


பாலைவன தேசத்தில் எங்கள் சிறுத்தைகளின் பந்தாட்டம்
பக்கம் இருந்து பார்க்கின்ற கொடுப்பனவு எமக்கில்லை
எட்ட நின்றாலும் பக்கம் வந்து உணர்வாலே உம்மை
பாடி வைக்க தமிழ்தாய் வரம் தந்ததால் பாடுகின்றேன் உம்மை

வெற்றித்திலகமிட்டு வாழ்த்துகின்றோம் வீரரே !
வென்று வாரும்.
சாவினிற்க்கு அஞ்சாதோர் மீது
சாற்றிய கொடியொடு சென்றுள்ளீர்
நிச்சயம் வென்றுதான் வருவீர்!!!

குண்டடிபட்ட எம் தேசக்கொடி
பந்தடிக்கும் வீரரே!
உம்மால் பாரினில் பறக்குது இன்று
காணொளியில் கண்டதுமே கை கூப்பித் தொழுகின்றோம்
கதிரவன் உதிக்கும் திசை நோக்கி

எத்தனை ஆயிரம் வீரர்கள் குருதி தந்து காத்த கொடி
உங்கள் கைவசம் இருந்திடும் கர்வத்தோடு களம் காணுங்கள்
நிச்சயம் உம்மோடு நிழல் போல நின்றாடுவர்
வித்தாகிப் போன எங்கள் வீர மறவர்கள் - அவர்
உடன் இருந்து உரம் கொடுப்பார் - அந்த
உறுதியோடு வாகை சூடி வாரும்
வந்தும்மை வரவேற்கக் காத்திருக்கிறோம்.

May 18, 2012

சிவந்த மேயின் பதினெட்டாம் நாள்


சிவந்த மேயின் பதினெட்டாம் நாள் - எம்
சிந்தைகள் கலங்கிப் போன நாள்
முள்ளிவாய்க்காலில்
மனிதம் மரணித்த நாள்
உயிர் வலி சுமந்து
உலகம் முழுவதிலிலும் நாம் இணைந்து
உலகின் மனச்சாட்சியை
ஒட்டு மொத்தப் பலமும் கொண்டு
ஒலுப்பி எடுத்த நாள்
எங்கள் உயிர் அழுத நாள்
உணர்வுகள் தழிழராய்
ஒருங்கிணைந்த நாள்
மீண்டும் ஒரு முறை ஒருங்கிணைவோம்
உயிர்வலி சுமந்து உதிரம் சொரிந்த எங்கள்
உறவுகளின் உணர்வுகள் உயிர்பெற

April 5, 2012

மலையை மடு விமர்சிப்பதா???


மலையை மடு விமர்சிப்பதா???
எனக்கும் உங்களுக்கும் இடையில்
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு வரை
பிறப்பில் இடைவெளி
ஆதலால் ஐயா... என்று அழைப்பேன்.
மற்றப்படி எனக்கும் உங்களுக்கும்
இடையே உள்ள உறவு நெருங்கிய நட்பு.
பதின்ம வயதில் நான் இருந்தபோது பழுத்த பழம் நீங்கள்
தோற்றத்தில் மட்டுமல்ல இலக்கிய, அரசியல், சமூகப் பணிகளிலும்
ஒரு விமர்சகனாய் தான் முதன் முதலாக
என் முன் அறிமுகமானீர்கள்
ஒழிவு மறைவின்றி உள்ளதை உள்ளபடி
உரத்து உரைத்திடும் உங்கள் குணத்தால்
எம் நட்பு மலர்ந்தது

உங்கள் மகனின் நண்பனாய்
முதன் முதலாய் உங்கள் இல்லம் வந்த நான்
பின்னர் வந்த அத்தனை தடவையும் - உங்கள்
நண்பனாய்தான் வந்து சென்றேன்.
இலக்கியத்தில் ஆரம்பித்து அரசியல்வரை
மணிக்கணக்கில் அழவளாவுவோம்
சில சமயங்களில் கருத்து மோதல்கள் சீண்டல்கள் - அந்த
சீண்டல்கள்தான் என்னையும் சிந்திக்க வைத்தது
சிறப்பான சில ஆக்கங்களையேனும் படைக்க வைத்தது.
என் எழுத்துக்களுக்கு விமர்சகனாக மட்டுமல்லாமல்
வாசித்து ரசித்து ரசிகனாகவும் நீங்கள் இருந்துருக்கிறீர்கள்
ஒரு முறை நீங்கள் என்னை தொலைபேசியூடாய்
தொடர்பு கொண்டபோது
வையுங்கள் ஐயா நான் எடுக்கிறேன் என்றதும்
வாழ்த்தும் பாராட்டும்
தேடி எடுத்துச் சொன்னால்தான் பெருமை என்று
பத்திரிகையில் வந்திருந்த என் ஆக்கம் ஒன்றைப் பற்றி
பாராட்டித் தள்ளினீர்களே
தொலைதூரக் கனவுகள் உங்கள் தொடர் நவீனம்
வெளிவந்தபோது தபாலில் நூலை அனுப்பி விட்டு – என்
விமர்சனத்தை எதிர்பார்ப்பதாய் மடல் ஒன்றும் வரைந்திருந்தீர்கள்
விக்கித்துப் போனேன்.
மலையை மடு விமர்சிப்பதா???

அதை உங்களிடமே முன்மொழிந்தபோது
உங்களால் அது முடியும்
அதனால்தான் எதிர்பார்க்கிறேன் என்றீர்கள்

தவறுகள் யார் விட்டாலும் தட்டிக் கேட்கும் நீங்கள்
திறமைகள் எங்கிருந்தாலும் தட்டிக் கொடுக்கவும் தவறியதில்லை

உங்களை திறமை மிகு ஆசானாய்
ஆற்றல் மிகு படைப்பாளியாய்
உண்மை தவறாத ஊடகனாய்
மனித நேயம் மிகு மனிதனாய்
பற் பல அவதாரம் கண்டேன் உங்களில்
வாழ்வினிலே இப்படியும் ஒரு பக்கம் உண்டென்று
அநுபவரீதியாய் புரிய வைப்பதற்கா
எமை விட்டுப் பிரிந்து சென்றீர்???
 முனைவர் நாகேசு இராசலிங்கம் (சக்கரவர்த்தி)
(எழுத்தாளர், பிரபல நாடக ஆசிரியர், பிரபல பத்திரிகையாளர், தமிழக, ஈழத்து பத்திரிகைகளின் முன்னோடி)
அவர்கள் 31.03.2012 இயற்கை எய்தியபோது இரங்கல் நிகழ்வுக்காய் வடித்த இரங்கல் பா.


March 2, 2012

ஒரே ஒருமுறை சிந்திப்போம் ஓரணியில் சந்திப்போம்.

பேதங்கள் தொலைப்போம் -
எங்களுக்காக தம்மை தந்தவர்கள்
பாதங்கள் தொழுது வேண்டுகிறோம்
எங்களுக்குள் இருக்கும்
பேதங்கள் தொலைப்போம்.

தாயகம் மலரவும் தமிழ்க்கொடி பறக்கவும்
தம்மையே தந்து தரணிக்கு எம்மை இனம் காட்டிய
தவப் புதல்வர்களின் இலட்சியம் நிறைவேற
பேதங்கள் தொலைப்போம்.

ஒன்று பட்ட ஓர் இனமாய்
ஒருங்கிணைந்து செயற்படுவோம்
உத்தமர் தம் உயிராலே நெய் ஊற்றி
ஒளி ஏத்தி வைத்த தீபமதை
சத்தியம் செய்து காத்து வைப்போம்.

அண்ணன் அடிக்கடி சொல்லிடுவான்
அடுத்த சந்ததிக்கு வேண்டாம் நாம் பட்ட துன்பம் என்று
அவன் வழித்தடத்தில் தடம் பதித்து வரும் நாம்
அடுத்த சந்ததிக்காய் எதை விட்டுச் செல்லப் போகிறோம்
அடிமை வாழ்வையும் பிரிவினையையுமா
ஒரே ஒருமுறை சிந்திப்போம்
ஓரணியில் சந்திப்போம்.