Pages

December 7, 2012

தமிழூடாய் நீ வாழ்வாய்...

இரண்டாயிரங்களின் முற்பகுதி புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழர்களின் இலக்கியங்கள் புத்தெழுச்சிபெறத் தொடங்கிய காலம். கன்னித்தமிழ் கணனித்தமிழாக உருமாறி உருளும் உலகின்போக்குக்கு ஏற்ப உலாவரத் தொடங்கிய காலம்.

நானும் எனது நண்பர்களும் இணைந்து சுவிற்சர்லாந்திலிருந்து 'குருத்து' என்ற மாதஇதழை வெளியிடத் தொடங்கியிருந்தோம். சமவேளையில் வலைப்பூக்கள் மலரத் தொடங்கியிருந்தன. புத்தெழுச்சியோடு தமிழ் மொழி நாளொரு வண்ணமாய் இணையத்தில் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது.

எமது குருத்து இதழை தொடர்புகள் பெரிதளவில் இல்லாத அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள வாசகர்களும் எழுத்தாளர்களும் தபால் மூலம் பெற்று வாசிக்குமளவிற்கு வளர்சி கண்டமைக்கும் பெரு வாசக வட்டத்தை கொண்டிருந்தற்கும் இணையம் பெரும் ஆதரவினை நல்கி வந்தது. குறிப்பாக யாழ். இணையமும் அதன் கருத்துக்களமும் பெரும் ஆதரவு நல்கியிருந்தது.

இக் காலப் பகுதியில் உலகின் பல பாகங்களிலிருந்தும் புதிய எழுத்தாளர்களின் ஆக்கங்கள் எங்கள் மின்னஞ்சலை தினமும் நிறைத்த வண்ணம் இருக்கும். பல வகையான ஆக்கங்கள் வித்தியாசமான படைப்புகள் என வரும். அவற்றில் சில நெஞ்சில் நிறைந்து நிற்கும்.

அப்படித்தான் 'அம்மாவின் கடிதம்' என்ற தலைப்பில் ஒரு கவிதையும் எங்கள் மின்னஞ்சலின் வரவுப் பெட்டிக்குள் வந்து விழுந்திருந்தது. படித்ததும் நெஞ்சில் நிறைந்தது. எழுதியவர் பெயரைப் பார்த்தேன் 'ஈழநாதன்' என்று இருந்தது. யாரோ ஒரு பெரியவர் புனை பெயரில் எழுதியிருக்கிறார் என்று நினைத்தேன். மீண்டும் சில காலங்களில் 'எதிர்ப்பு' என்ற பெயரில் சிறுகதையொன்றும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அது ஒரு குறியீட்டுக் கதை மிகவும் வித்தியாசமாக இருந்தது. சரி அவரைத் தொடர்பு கொள்வோம் என மின்னஞ்சல் மூலம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டேன். அக்குறியீட்டுக் கதையின் மூலகாரணமாக அமைந்த யாழ். நூலகம் பற்றியும் அதற்கு இணையாக நாமும் ஒரு இணைய நூலகமொன்றினை உருவாக்கி ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற பெரும் இலட்சியம் பற்றியும் குறிப்பிட்டார். அவரோடு உரையாடியதில் பல விடயங்களில் எமக்குள் ஒற்றுமையும் ஒரே இலட்சியமும் இருப்பது தெளிவாயிற்று. அவரின் இணைய நூலக உருவாக்கத்திற்கு ஆதரவு நல்குவதாக வாக்களித்தேன்.

அப்போதுதான் அவர் தனது வலைபதிவுகள் பற்றியும் குறிப்பிட்டார். அச்சு ஊடகங்களில் மட்டும் எழுதாது வலைப்பதிவுகளையும் செய்யுமாறு கோரினார். kuruthu.yarl.net எனும் பெயரில் வலைப்பதிவொன்றினை தொடங்கி எனது படைப்புக்களைப் பதியத் தொடங்கினேன். குருத்து இதழின் ஆசிரியராக இருந்து அதன் பணிகளில் பெரும்பாலான நேரத்தை செலவு செய்ததால் வலைப்பதிவில் நேரம் செலுத்த முடியாது போனது. கனடாவிலிருந்து வலைப்பதிவை மேற் கொள்ளும் நண்பர் கவிதனின் அன்புக் கோரிக்iயால் என் ஆக்கங்களை அவரது கவிதைகள் என்ற வலைப்பதிவில் அவர் மூலம் பதிவு செய்து வந்தேன். ஈழநாதன் எனக்கும் கவிதனுக்கும் பொதுவான நண்பராக இருந்ததால் கவிதனின் தளத்தில் ஈழநாதன் தனது கருத்துக்களை பதிவிடுவார்.

எமது குருத்து இதழ் யாழ். பல்கலைக் கழக சமூகத்தின் ஆதரவுடன் தாயகத்திலும் வெளிவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஏற்பாடுகளில் நான் மூழ்கிப் போனதால் ஈழநாதனுடனான தொடர்பு வலைப்பதிவோடு மட்டுமே மட்டுப்பட்டுப் போனது. சமவேளையில் யாழ் கருத்துக்களத்தில் ஈழவன் என்ற பெயரில் கருத்தாடல் செய்யும் நண்பராகவும் அறிமுகமாகினார். பல தரப்பட்ட கருத்துக்கள் சிந்திக்க தூண்டும் எண்ணங்கள் என கருத்தக்களம் களைகட்டத் தொடங்கிய காலம். நெற்பயிர் சிறப்பாக வளர்கின்றது என்றால் அங்கே களையும் அதே வேகத்தில் வளரும் என்பது இயற்கையின் நியதிதானே. கருத்துக்களமும் அப்படித்தான் ஆனது. அதனால் ஒதுங்கிக் கொண்டோம்.

நீண்ட இடைவெளியின் பின் ஈழநாதன் இணைய நூலகம் ஆரம்பிப்பதற்குரிய நேரகாலம் கூடி வந்ததும் என்னை தொடர்பு கொண்டார். அவர் அழைத்த நேரம் மிகவும் இக்கட்டான காலப்பகுதி பல தரப்பட்ட சிக்கல்கள், குருத்து இதழ் இனி வரமுடியாது என்ற நிலை, மிகவும் மனமுடைந்து போயிருந்தேன். என்னால் வேறு எத் திட்டங்களுக்குள் புதிதாய் என்னை இணைத்தக் கொள்ளக் கூடிய மனநிலை இருக்கவில்லை. ஈழநாதனுக்கு சிலரை இனங்காட்டி வைத்தேன்.

எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கிக் கொண்டேன். இனி நான், என் வாழ்வு என்று வாழ நினைக்க என் பெற்றோர் எனக்கு திருமணம் பேசி இல்லற பந்தத்தினுள் நுழைக்க ஏற்பாடு செய்தனர். முதற் பார்த்த பெண் பெயர் கேட்டதுமே பிடித்துப் போயிற்று. ஆம் தேன்மொழி என் இல்லறத் துணையென நிச்சயிக்கப்பட்டாயிற்று. தேன்மொழியின் அண்ணாவின் பெயர் ஈழநாதன் அந்த ஈழநாதன் தான் எழுத்துலகூடாய் எனக்கு அறிமுகமாகியிருந்த ஈழநாதன் என நான் நினைக்கவில்லை. எனது மனைவிக்காக நான் கவிதனின் வலைப்பதிவில் எழுதிய நினைவிருக்கிறதா?  என்ற கவிதைத் தொடர் தொடர்ச்சியாக வெளி வந்தபோது ஈழநாதனும் கருத்தெழுதிச் செல்வார். சிறிது காலங்களின் பின்தான் தெரியவந்தது எனது மனைவியின் அண்ணாதான் அந்த ஈழநாதன் என்று.

குடும்ப உறவான பின்னும் குடும்ப நலங்கள் பற்றி நாம் பேசிக் கொண்டது மிக மிகக் குறைவு. தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் இலக்கியங்கள் பற்றியும் ஈழத்தவர்களின் படைப்புகள் பற்றியும்தான் மணிக்கணக்கில் பேச்சு நீளும். 2007களில் இருந்து ஈழநாதன் எழுதுவது என்பது முற்றாக இல்லாமல் போனது. இருந்தபோது புதிதாக எழுதுபவர்கள் பற்றியும் புதிதாக வருகின்ற படைப்புகள் பற்றியும் விரல் நுனியில் தகவல்களுடன் இருந்தார்.

ஈழத்தவர்களின் ஆக்கங்கள் வெளிக்கொண்டு வரப்படவேண்டும். அதற்கு உரிய அங்கீகாரம் கிட்ட வேண்டும். அவற்றைப் பற்றிய விமர்சனங்கள் வெளிவர வேண்டும். மலிந்த விலைகளில் நூல்கள் அச்சிடப்பட்டு அனைத்துத் தரப்பினரையும் சென்றடைய வேண்டும். இதுவே ஈழநாதனின் பேரவாவாக இருந்தது.

இப்படி படைப்பாளிகளையும் அவர் தம் படைப்புக்களையும் வெளிக்கொண்டுவர வேண்டும் என துடித்த ஈழநாதன் இலக்கியம், தமிழ்ச்சமூகம், அரசியல், திரையுலகம், அறிவியல் என பல தரப்பட்ட விடயங்களில் நூற்றுக்கணக்கான ஆக்கங்களை எழுதி இணையத்தளமெங்கும் விதைத்துச் சென்றிருக்கின்றார். அவரின் ஒரு சில ஆக்கங்களேனும் அவரது ஆசைபோல அனைத்துத் தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடு ஒரு சில ஆக்கங்கள் அவரது நினைவு சுமந்து வெளிவருpன்ற 'அறிவுக் களஞ்சியம்' என்ற இந்த நூலில் தொகுக்கப்படுகின்றது. அவரை நாம் இழந்து தவித்த நேரத்தில் அவரது எழுத்துலக நண்பர்கள் பலரும் எழுதிய நினைவுக் கட்டுரைகள் அனைத்தையும் இங்கே இணைக்க முயற்சித்த போதும் அதற்கு காலம் அவகாசம் தரவில்லை. முடிந்தவரை கிடைத்தவை இணைக்கப்பட்டுள்ளது.

ஈழநாதனின் உடல் மட்டுமே எமை பிரிந்திருக்கின்றது. உணர்வுகளும் எண்ணங்களும் அவரின் எழுத்துக்கள் மூலமும் எழுப்பிச் சென்றிருக்கும் இணைய நூலகம் மூலமும் வாழ்வாங்கு வாழும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இணுவையூர் மயூரன் 

அறிவுக்களஞ்சியம் ஈழநாதனின் 60வது நினைவுநாளையொட்டி (27.11.2012) அன்று வெளியிடப்பட்ட 'அறிவுக்களஞ்சியம்' எனும் சிறப்பு வெளியீட்டுக்காக எழுதப்பட்டது.