Pages

December 6, 2013

கருப்புச் சூரியனே! போய் மீண்டும் வருக..

இருண்ட கண்டத்தின்
இருள் அகற்றிய கதிரவனே!
வெருண்டது வெண்ணினம் - உன்
வீர எழுச்சி கண்டு
தொலைந்தது நிறவெறி
தொடர்ந்த உன் பணியால்
கொத்தடிமைத் தனம் உடைத்து - உன்
குடி அரசாள வழி அமைத்தாய்
ஒடுக்கப்பட்ட இனங்களின்
ஒளி விளக்கானாய்
துடிக்கிறது எம் இதயம்
தூயவனே உன் சேதி கேட்டு
இரத்த உறவொன்றை
இழந்த உணர்வு
எங்கள் உதிரமெல்லாம்
பரந்து நிற்கின்றது
கருப்புச் சூரியனே! போய் மீண்டும் வருக..
கண்ணீரோடு காத்திருக்கின்றோம்
கலங்கரை விளக்கினைத் தேடி
இருண்ட கண்டத்தின் நாயகனே!
இருண்ட எம் வாழ்வில் ஒளி ஏற்ற
இனி எம் தேசத்தில் வந்து பிறந்துவிடும். - எம்
தலைவனுக்கு அடுத்து நாம்
துதிக்கின்ற பேரொளியே
துயில் எழும் ஞாயிறே
தூமணியே போய்வாரும்.
ஆண்டுகள் ஆயிரமாய்க் கடந்தாலும் - என்றும்
அகிலத்தில் ஆதவனாய் நீ திகழ்வாய்.

December 4, 2013

எனக்குள் ஒருவன் இருக்கின்றான்


எனக்குள் ஒருவன் இருக்கின்றான்
அதிகமாய் அவன்தான் என்னை ஆள்கின்றான்
அதிக தடவை அவனை ஆள நான் நினைத்ததுண்டு
அது நினைப்போடே போன சம்பவங்கள் நிறையவுண்டு

அவன் சொற்கேட்டு ஆடிய போதெல்லாம் - இந்த
அவனியே என் காலடியில்
அடைக்கலம் போல் தோன்றும்
அகங்காரம் நெஞ்சமெல்லாம் குடி கொள்ளும்

அவனை நான் எதிர்த்து ஆள முனைந்தபோது
அவனியில் புகழாலே ஓங்கியதுண்டு - என்
ஆழ் மனமும் ஆண்டவன் குடியிருக்கும்
ஆலயம் போல் அமைதியானதுண்டு.

01.06.2004