Pages

January 28, 2016

நிழல்களில் வாழும் நினைவுகள் 2

நிழல்களில் வாழும் நினைவுகள் 2
****************************************
ஈழத்தமிழரின் இன்னொரு அடையாளம்.
கிளுவை வேலிகள் எப்படி யாழ்ப்பாணத்துக்கான அடையாளமாகத் திகழ்கிறதோ. அதே போல் பூவரசும் அத்தகைய இடத்தை ஈழத்தின் அனைத்துப்பகுதிகளிலும் பிடித்துள்ளது.
யாழ்ப்பாண வேலிகளில் பெரும்பாண்மையாக எல்லையை நிர்ணயிக்கும் எல்லைக் கதியாலாக பூவரசே இடம் பிடிக்கும்.
வன்னி போன்ற ஏனைய பகுதிகளில் காணிகள் ஏக்கர் கணக்கில் விசாலமாக விரிந்து செல்வதால் அப்பகுதிகளின் வேலிகளில் கணிசமான பகுதியை பூவரசே நிரப்புகின்றது.
பூவரசு கிளுவை போல் அல்ல விரைவில் அகன்றுவிடும் அதனால் குறைந்த பரப்பு காணிகளை கொண்ட யாழில் அந்த இடத்தை முற்று முழுதாக நீண்டகாலத்துக்கு மெலிந்த தோற்றத்தோடு இருக்கும் கிளுவை ஆக்கிரமித்துள்ளது.
பூவரசு நிறைந்த பலன் தரும் மரமாகும்.
சிறார்களாக நாம் இருந்த காலத்தில் பூவரசம் இலையில் பீப்பி செய்து ஊதிய காலங்கள் மறக்க முடியாதவை.
பூவரசம் இலையில் புக்கை வேண்டிச் சாப்பிட்ட காலங்கள் என பூவரசம் இலைக்கும் எமக்கும் இடையேயான பந்தம் மிக நெருக்கமானது.
பூவரசின் தடியை வெட்டி அதன் தோலை உரித்தால் எவ்வித சிராய்ப்பும் இல்லாத வழுவழுப்பான கட்டைகள் கிடைக்கும் அவற்றை உரிய அளவில் வெட்டி கிட்டிப்புல்லு விளையாடப் பயன்படுத்துவோம்.
கூடுதலாக பூவரசின் மெல்லிய கம்புகள்தான் வாத்திமாரின் கைகளில் சுழன்றாடி எம்மை பதம்பார்ப்பதுண்டு.
பூவரச மரமே மசுக்குட்டிகளின் வாசஸ்தலமாகவும் கோழிகளின் இரவுக்கான பாதுகாப்பரணாகவும் உள்ளது.
இணுவில் போன்ற புகையிலை பயிர்ச்செய்கை அதிகமாக உள்ள பகுதிகளில் புகையிலைக்கன்றுகளை நட முன்னர் குழை தாட்டல் இடம்பெறும். அந்தக் குழைதாட்டலுக்கு. கொப்புக் கொப்பாக பூவரசங் குழைகளே தாழ்க்கப்படும். இது பசளைக்காக தாழ்க்கப்படும். இப்போதும் அப்படியெல்லாம் உள்ளதா தெரியவில்லை.
இந்திய இராணுவகாலத்தில் இப்படித்தான் குழைதாட்டலுக்கு கொப்புகளை வெட்டிவிட்டு சாற்றி வைக்கப்பட்ட கதியால்களால் என் கண்முன்னே பல அப்பாவிகள் தாக்கப்பட்டது இன்னமும் நேற்று நடந்ததுபோல் நெஞ்சில் பதிந்துகிடக்கின்றது.
முன்னைய காலங்களில் இறந்தவர்களின் இறுதிக் கிரிகைகளின் போது நெஞ்சாங் குத்தியாக பச்சை பூவரசங் குற்றிகளையே வைப்பதுண்டாம். இது எனக்கான நெஞ்சாங்குத்திக்குரியதென்று சொல்லியே சிலர் வளர்ப்பதுமுண்டாம்.
பூவரசு பற்றி நிறைய எழுதலாம். பூவரசையும் ஈழத்தமிழரையும் பிரிக்க முடியாதென்பதால்தானோ என்னவோ ஈழத்தின் புரட்சிக்கவிஞன் புதுவை இரத்தினதுரை "பூவரசம் வேலியும் புலுணிக்குஞ்சுகளும்" எனும் அழியாக் காவியத்தை படைத்துள்ளான்.

நிழல்களில் வாழும் நினைவுகள் 1

நிழல்களில் வாழும் நினைவுகள் 1
*************************************
யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்று கிளுவை வேலி.

கிளுவை பல நினைவுகளை தந்து போகும். சிறார்களாக நாம் இருந்தகாலங்களில் பல் விழும்போது அந்த இடைவெளிக்கு கிளுவங் கதியால் போடுவமோ என்ற சொல்லாடலை கேட்க்காமல் எவரும் அப்பருவத்தை கடந்திருக்கும் முடியாது.

நெருப்புப்பெட்டிக்குள் பொன்வண்டு வளர்த்த பருவத்தில் பொன்வண்டுக்கான உணவாக இக் கிளுவங்குருத்துக்களே இருந்துள்ளன.

யாழ்ப்பாண மக்களின் வாழ்வோடு ஒன்றிய கிளுவையின் முள் விசத்தன்மை கொண்டது. இதன் முள் குத்தினால் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் கிளுவங் கதியால் வெட்டும் விற்பனையும் சூடு பிடிக்கும். இக்காலத்தில் எங்கையன் கதியால் கிடந்தா சொல்லுங்கோவன் என்ற சொல்லாடலை அதிகமாய்க் கேட்க முடியும்.

யாழின் அடையாளங்களில் ஒன்றான கிளுவை வேலி இப்போ வழக்கொழிந்து வருபவையின் பட்டியலில் இணைந்துள்ளது.

26.01.2016