Pages

February 25, 2016

வெள்ளிப்பனி சொரியுது இங்கே

இலவு தெறிச்சு வெடிச்சது போல்
ஈரப் பனி பறக்குது இங்கு
சாளரம் எல்லாம் சாத்திவிட்டு
சாய்ந்திருந்து ரசிக்கையிலே
இன்னல் உற்ற மனசினிலே
இறுகிக் கிடக்கும் சுமைகளெல்லாம்
பட்டுப் பட்டாம் பூச்சிபோல
பறந்தடிச்சு ஓடுது எங்கோ

கிட்டப் போய் தொட்டுப் பாக்க
கெலி கொள்ளும் மனசை
கிலி கொள்ள வைக்குதிங்கு
கிளர்ந்தெளும்பும் குளிரின் குணம்
கொள்ளை அழகுதான் பனி
கொட்டிக் கிடக்கும் அழகு
கொடுமையாய் இருக்குது
கொடுங் குளிரை நினைக்கையிலே

வந்து இங்கு வாழத் தொடங்கி
வருசம் இருபத்தி அஞ்சு
வரலாற்றில் பதிந்த போதும்
இந்த மண்ணில் ஒட்டாப் பனிபோல
இங்கு எங்கள் வாழ்வும் நகருதென்றும்
பிள்ளை பருவ வாழ்வின் சுவட்டை
பிரித்துப் பிரித்து மேய்ந்து பார்த்து
பின்னை காலமும் நகரும் இங்கே...

#ஈழத்துப்பித்தன்
25.02.2016

(எங்கள் வீட்டுச்சாளரமூடாய் தினமும் காணும் காட்சியின் இன்றைய தோற்றமும் சிலமாதங்களுக்கு முன்னைய தோற்றமும், இன்று வெள்ளிப்பனி சொரிகின்றது)

February 18, 2016

போர் கண்ட வம்சமெடி!!!

போர் கண்ட வம்சமெடி!!!
○●○●○●○●○●○●○●○●○●○

நிலமிடை தமிழ் வீரம்
நாட்டிப் பெண்டிர் நின்று
நீண்ட எல்லைகளின் சாமிகளாய்
நிலம் காத்த மண்ணிலிருந்து
நித்தம் வரும் சேதி கேட்க
நீறு பூத்த நெருப்புபோல்
நெஞ்சம் எல்லாம் கனல்கிறது

அங்கையற் கண்ணிகளாய்
அகிலம் முழுதும் அறிய
ஆயுதம் ஏந்தி நின்று
அசர வைத்த எம் குலப்பெண்கள்
அடி ஒற்றி வந்த பிஞ்சுகள்
அநீதியாய் அற்ப சுகத்துக்காய்
அரக்கர்கள் கரங்களில் மாள்வதோ?

பொறுத்தார் பூமி ஆழ்வாராம்
பொங்கினால் பயனேதும் இல்லையாம்
போங்கடா போங்கடா உங்கள்
பொறுப்பற்ற பதில்களைக் கொண்டு
பொங்கி எழும் தருணம் இது
பெண்டிரே குழல் கொண்டு
போர் கண்ட வம்சமெடி நீங்கள்

போகம் நீ என்று வன் புணர வரும்
பேயர் தனை துவம்சம் செய்ய
போர்க் கலை யாவும் கற்று
பெரும் புயலாக நின்றிறெடி
பேதை அல்ல ஈழம் தந்த
பெண்ணவள் என்றுணர்ந்து
பெருமையோடு வாழ்ந்திடெடி.

#ஈழத்துப்பித்தன்
18.02.2016

February 12, 2016

வாழுகின்ற வல்லமையை வரமாகத் தந்தவர்கள்.

வாழுகின்ற வல்லமையை
வரமாகத் தந்தவர்கள்
மனம் அழும் கணங்களில்
மருந்தாக இருப்பவர்கள்
நோய் பிடித்த உடலம்போல்
நொய்ந்து போகும் தருணங்களில்
நாம் இருக்கிறோம் என
நலம் பாடும் நெஞ்சங்கள்
வாழ்வு இனிக்க வைப்பவர்கள்
வரமாக வந்தவர்கள்
தேன் தந்த சொந்தங்கள்
தெகிட்டாத இன்பங்கள்

#ஈழத்துப்பித்தன்
02.06.2014 - 11.02.2016

February 7, 2016

எதிர்பாராப் பயணம் அது எதிர்கொண்டு வந்துவிட்டேன்


முல்லைத்தீவு போயிருந்தேன் - அந்த
முள்ளிவாய்க்கால் தாண்டிப் போனேன்
இறங்கி நின்று படமெடுக்க - என்
இதயம் ஒன்றும் இரும்பால் ஆனதில்லை

விசுமடு தாண்டிப் போக நான் தொழுத
வீரர் புதைந்த குழி மேடாய் கண்ட பின்னர்
வீதி வழி விடுப்புப் பார்த்து மனம் கனக்க
விருப்பம் இன்றி பூனை போல ஆகி நின்றேன்

ஆனந்தபுரமும் மாத்தளனும் பெயர்ப் பலகையிலே
அருகிருந்த தம்பி தட்டி அதன் கதை சொல்லி காட்ட
ஆவி அடங்கி அத்தனை உயிர் கொடுத்த இடத்தை
ஆர்வம் இன்றி அகம் கனக்க அகன்று போனேன்

வட்டு வாக்கால் பாலம் தாண்ட தேக்கி வைச்ச
மீதிக் கண்ணீர் விழி உடைத்து வழி தேட
வார்த்தைகள் வாய் திறந்து உதிர்க்க மறுத்து
வரலாற்றில் பதிந்த அந்தத் தடம் கடந்தேன்

இந்த ஏரிதான் எங்கள் உறவுகள் உடலங்கள் மிதந்த ஏரி
இரத்த ஆறாய் செங்குழம்பாய் திடப் பொருளாய் மிதந்த ஏரி
மறு கரை இருந்து மிதக்கும் உடலங்களை விலத்தி விட்டு
முற்றும் மறந்து நீர் பருகினோமென மச்சான் சொன்னான்

வாழ்க்கையிலே நான் போக விரும்பா இடம் - தமிழ்
வரலாற்றின் முடிவுரையும் முகவுரையும் சொல்லுமிடம்
எதிர்பாரா பயணம் அது எதிர் கொண்டு வந்து விட்டேன்
இனி ஒருக்காலும் வேண்டாம் என் வாழ்வில் அது

வீழ முடியாத வீரம் வஞ்சித்து வீழ்த்தப்பட்ட வரலாறை
விடுதலைக்காய் உயிர் தந்த வீரியம் கொண்ட அந்த
வித்துக்களின் பெயரால் கேட்கிறேன் யாரும் பிழைப்புக்காய்
வீர காவியம் என்று விலை பேசி விற்று விடாதீர்.

#ஈழத்துப்பித்தன்
07.02.2016

(படம்: வட்டு வாக்கால் பாலம். யுத்தத்தின் இறுதி மையப்புள்ளியாகச் சொல்லப்படும் இடம். இந்த நீரேரி இறுதி நேரத்தில் உடலங்கள் நிறைந்து செந்திறத்தில் ஓடியதாம். இறங்கி நின்று பார்க்க மனத்துணிவு இல்லாத்தால் வாகனத்தினுள் இருந்து எடுத்த படம்)

February 6, 2016

இளைஞர்களின் கனவே!!!

இளைஞர்களின் கனவே!!!
****************************
விடிகாலை சூரியனின்
விழி தெறித்த மலர் இதுவோ?
செங்காந்தள் மலர் போல
சிறகடிக்கும் விரல் இதுவோ?
சொக்கத்தான் வைத்திடும்
சொர்ப்பனம்தான் இதுவோ?
குலையாத அழகொழிரும்
குமர் இதுவோ?
கலையாத கூந்தலின்
கயல் இதுவோ?
தலை காட்டி நமை ஈர்க்கும்
தளிர் இதுவோ?
நிலை இல்லா வாழ்வினில்
நிலவு இதுவோ?
மலை போல மறைத்து நிற்கும்
மயில் இதுவோ?
பட்டாடை கட்டி வந்த
பவித்திரமும் இதுவோ?
பாரினில் எனை ஈர்த்த
பாவையும் இதுவோ?

இனி வரும் நாளில்
இளைஞர்களின்
கனவு இதுவே!!!

#ஈழத்துப்பித்தன்
03.02.2016

பட உபயம்: Kailase Kanagaratnam
எழுத தூண்டியவர்: Jeyarajan Rajan

February 4, 2016

(சு)தந்திர நாள்

(சு)தந்திரநாள்
*****************
இன்று சுதந்திர நாளாம்
சொல்லவும் கேட்கவும்
எவ்வளவு இனிக்கிறது

ஒரே நாடு
ஒரே தேசம்
கேட்க கேட்க
காதினிக்கிறது.

இந்தச் சுதந்திர
ஒரே தேசத்தின்
ஒரு தாய் மக்கள்தானாம்
நாம் எல்லாம்
எவ்வளவு இதமாயிருக்கிறது

என் தாத்தன் முதுகில்
சிங்களச் சிறி
சீராய் பதிந்ததும்
என் தந்தையின் கல்வி
தரப்படுத்தலுக்குள்
தாழ்ந்து போனதும்
நான்
புலம் பெயர்ந்து
புலன் இழந்ததும்
என் பிள்ளை
இன்னோர் நாட்டின்
சுதந்திர அடிமையாய் ஆனதும்
அவன் பிள்ளை
தான் யாரென்றே தெரியாத
இனமொன்றின் வாரிசு ஆவதும்

இந்தச்
(சு)தந்திர நாட்டின்
மக்களாய் பிறந்ததால்தானாம்

சுதந்திரம்
கேட்கவே காதினிக்கிறது.

சுதந்திரம்
சொல்லச் சொல்ல
நா இனிக்கிறது

#ஈழத்துப்பித்தன்
04.02.2016