Pages

April 27, 2016

ஆருக்குச் சொல்லி அழ.....





90களின் முற்பகுதியில் எழுத்து தமிழ் ஊடகங்களின் வளர்ச்சி ஐரோப்பாவில் கோலோச்சிய காலம். செய்திகளை அறிந்து கொள்வதற்கான ஒரே வழியாக எழுத்து ஊடகங்களும் அந்தந்த நாடுகளில் இயங்கிய புலிகளின் கிளைகளினால் இயக்கப்பட்டு வந்த தொலைபேசி வாயிலான செய்திச் சேவையுமே இருந்து வந்தன.

அத்தகைய காலத்தில் பல வார, மாத சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் வெளிவந்த போதிலும் பரிசிலிருந்து வெளிவந்த 'ஈழநாடு' 'ஈழமுரசு' ஆகிய பத்திரிகைகள் அதிகளவு வாசகர்களைக் கொண்ட செய்தித்தாள்களாக இருந்து வந்தன.

ஒவ்வொரு பதன் கிழமையும் இவ்விரு செய்தித்தாள்களும் அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும். பெரும்பாலும் மாலைக்குள் செய்தித்தாள் விற்றுத் தீர்ந்து விடும். நேரம் தவறிப்போனால் செய்தித்தாள் கிடைக்காது ஏமாற்றத்தோடு திரும்ப வேண்டியதுதான். 

அப்படி வெளிவரும் இவ் இரு சஞ்சிகைகளிலும் வெளிவரும் பலதரப்பட்ட சிறப்பு ஆக்கங்களாலும் கவரப்பட்டு நானும் நிரந்தர வாசகனாக இருந்தேன். குறிப்பாக ஈழநாட்டில் வரும் ஊர்க்குருவியும் ஈழமுரசில் வரும் ஆருக்குச் சொல்லி அழவும் அதிகம்பேரை கவர்ந்த ஆக்கங்களாகும். இதில் ஊர்க்குருவியை எழுதியவர் இன்று எனது நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கும் Kailase Kanagaratnam என்பதை அண்மையில்தான் அறிந்தேன். அதே போல் ஆருக்கு சொல்லி அழ பகுதியை ஈழமுரசின் ஆசிரியர் மறைந்த கஜன் அவர்கள் எழுதுவார். ஐரோப்பாவின் அவலங்களை ஈழத்து மொழி வழக்கிலே ஆசைத்தம்பி எனும் பெயரில் எழுதி வந்தார். இதை முதலே வாசித்துவிட வேண்டுமென்பதற்காக செவ்வாய் இரவு பாசல் வரும் தொடருந்தில் வரும் ஈழமுரசை பெற்றுக்கொள்ள பாசல் தொடருந்து நிலையத்துக்கே சென்று விடுவேன். இந்த ஆசைதம்பி பாத்திரமே பின்னை நாளின் எனது விடுப்புச் சுப்பர் பாத்திரத்திரப் படைப்புக்கும் உந்துகோலாய் அமைந்தது.

கஜனின் மறைவுக்குப் பின் ஆசைத்தம்பியால் எழுதப்பட்ட ஆருக்கு சொல்லி அழ நூல் உருப்பெற்று வந்திருந்தது. அதன் மீள்வாசிப்போடு இன்றைய பொழுது.

April 19, 2016

ஒருநாள் யுத்த நிறுத்தமாம்...

அருவி ஊற்றென
அழுது வடித்தவள்
அடங்கிக் கிடக்கிறாள்
பொருமி வெடித்திட
புழுங்கித் தவிக்கிறாள்
தழுவித் தகித்தவள்
தயங்கி நிற்கிறாள்

ஒற்றைநாள்
ஒருதலைப்பட்ச
யுத்த நிறுத்தமாம்
சத்தம்  இன்றி
சலனம் இன்றி
இப்போதான்
சற்று சிரித்துச்
சிவக்கிறாள்

சிவக்கிறாள்
சிரிக்கிறாள் இவளென
சிந்தை தெளிந்து
சிரிக்க முடியவில்லை
ஒருதலைப்பட்ச
ஒருநாள்
யுத்த நிறுத்தம் தானாம்

யுத்தம் எப்பவும்
சத்தத்தோடு வெடிக்கலாம்
பாதிப்பு முன்னதை விட
பலமாயும் இருக்கலாம்
யுத்த நிறுத்தம்
காலவரையற்று
நீடிக்கவும் படலாம்
எதற்கும் தயாராய்த்தான்
இருப்பை நிலை நிறுத்த
எடுத்தடி வைக்கிறேன்...

#ஈழத்துப்பித்தன்
19.04.2016

April 11, 2016

சத்திய சோதனை



மிகச் சிறு வயது முதல் நான் வாசிக்க விரும்பிய நூல் சத்திய சோதனை.

சிறு வயது முதல் எங்கள் ஊரின் அண்ணா கோப்பி அல்லது  மில்க்வைற்றினதோ கலண்டரில் சரியாக நினைவில்லை, அதில்தான் முதன் முதலாக காந்தியின் படத்தைப் பார்த்து மனதுக்குள் பதிந்தார் காந்தி. அதே காந்தி பள்ளிக் காலத்தில் வில்லனானார் கட்டுரைப் போட்டிகளுக்காய் அவர் பற்றிய விபரங்களை மனனம் செய்ய வேண்டி வந்த போது.

அதுக்கு பின் தியாகி. திலீபன் உண்ணா நோன்பிருந்த போது "காந்தியத்தின் சிகாமே உனது இரத்த வேள்விக்கு நன்றி"  அப்படியென எழுதப்பட்ட பிரசுரங்களினூடாகவும் காந்தி கூட ஆட்டுப்பால் அருந்தித்தான் உண்ணாவிரதம் இருந்தார் திலீபா நீ நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருக்கிறாயே என்ற கோசங்களூடாகவும் காந்தி மீண்டும் அறிமுகமானார்.

இந்தியா எம் தேசம் மீது தொடுத்த போரின் வலியையும் வடுக்களையும் நினைவு தெரிய ஆரம்பித்த அந்த வயதிலேயே கண்ணால் காண நேர்ந்ததாலும் ராஜீவின் பேருக்குப் பின்னால் காந்தியிருந்ததால் இவையெல்லாம் கூட்டுக் களவாணியள் என்ற கருத்தியல் மனதில் ஆழமாய் வேரூன்றிப் போய்விட்டது.

அதன் பின் இந்திய விடுதலைப் போர் சுபாஸ் சந்திரபோஸ் பற்றி அறிந்தபோது விடுதலைக்காய் நாமும் போராடும் இனமானதால் சுபாஸ் சந்திரபோஸ் மீது இனம்புரியாத பிடிப்பு ஏற்பட்டுப்போனது.

இருந்தபோதும் காந்தியின் சத்திய சோதனையை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் எந்த மாற்றமும் இருக்கவில்லை அதற்கு எனது சுவிற்சர்லாந்திலான கல்விக்காலத்தில் பிரபலங்களின் சுயசரிதைகள் எனும் பாடமூடாக உலகில் உண்மையை மறைக்காமல் தனது சுயசரிதையை எழுதியவர் காந்தி என்ற கூடுதல் தகவல் கிடைத்ததாலும் அடுத்தவரின் அந்தரங்கத்தை அறிவதில் ஆர்வம்கொண்ட தமிழருக்கே உரிய தனித்துவமும் காரணமாகிப் போனது.

பல தடவைகள் எனது புத்தகக் கொள்வனவுகளின் போதும் சத்திய சோதனை நூலை பெற்றுக் கொள்ள முயற்சித்தபோது அது எனக்கு பெரும் சோதனையாகவே முடிந்தது. அனைத்துப் புத்தகசாலைகளிலும் விற்றுத்தீர்ந்துவிட்டது என்ற ஒரே பதிலே கிடைத்தது.

சரி கிடைக்கும் போது வாசிப்போம் என விட்டாச்சு. கடந்த தமிழகப் பயணத்தின் போது சிதம்பரத்தில் நடைபெற்ற புத்தக்க்கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் கிடந்த போதும் சத்திய சோதனை சோதனையாகவே இருந்தது. அங்கிருந்து புறப்படுவதற்கு முதல் நாள் இறுதிக்கட்டக் கொள்வனவுக்காக தி.நகர் போயிருந்தேன். அங்கேயுள்ள ஒரு இசைப்பேழை விற்பனை நிலையத்தில் ஒலித்துக்கொண்டிருந்த மகாநதி சோபனாவின் குரல் உள்ளே இழுத்தது.

 சில இசைப்பேழைகளை கொள்வனவு செய்துகொண்டு நிமிர்ந்தபோது மகாத்மா காந்தி பொக்கை வாய் திறந்து சிரித்துக் கொண்டிருந்தார். எட்டித் தூக்கிய போது மகிழ்வும் ஒரு வித ஏமாற்றமும் மிஞ்சியது. நீண்ட பல காலமாக தேடிய நூல் எதேட்சையாக கிடைத்த போதும் அதுவும் முதல் மாதம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் வடுச் சுமந்து நின்றது. ஆம் நூல் சற்று தண்ணீரில் நனைந்திருந்தது ஆனாலும் உருக்குலையவில்லை. வேறு பிரதி உள்ளதா எனக் கேட்ட போது இப் பதிப்பு விற்றுத்தீர்ந்துவிட்டதாகவும் இதுவே இறுதி நூல் எனும் பதிலை கிடைத்தது. விலையை விசாரித்தேன் வெறும் நாற்பது ரூபாய் சரி என்று வாங்கி வந்தாச்சு. பயண வழியில் காந்தியும் கூட வருவார் என எண்ணியிருந்தேன். ஆனால் அதுவும் திசை மாறியது. விமான நிலையத்தில் ஏற்பட்ட சில குளறுபடிகளால் அந்த நூல் இருந்த கைபையை அங்கேயே விட்டுவிட்டு வரவேண்டியதாய்ப் போய்விட்டது. மீண்டும் சத்திய சோதனை சோதனை ஆனது.

இப்படி இடையூறுகளுக்கு உள்ளாக்கி கண்கட்டி வித்தை காட்டிய சத்திய சோதனை ஒருவாறு பொதியூடாக கரம் வந்து சேர்ந்தடைந்துள்ளது.

காந்தி உண்மை சொல்லித்தான் இருப்பாரோ என்ற சந்தேகத்தோடு பிரித்து மேயத் தொடங்குகிறேன்....

April 1, 2016

உழைப்பு ஒன்றே உயர்வு


குடந்தை நகர வீதியிலே
குளு குளு மார்கழி காலையிலே
குடித்தேன் ஒரு தேநீரை
குடிசை போன்ற கடையினிலே
அமிர்தம் போல இனித்ததுவே
ஆசையோடு பருகினேனே
கறந்த உடன் பசும் பாலும் - என் போல்
கறுத்த நிறத்து தேநீரும்
சமனாய் கலந்து தரும் போதே - சுவை
சம்மணமிட்டு அமர்ந்ததுவே
பழகத் தாய்போல் இருந்தவளின்
பாசம் கலந்து இனித்ததுவே
மீதிப்பணத்தை வைத்திரென
மனம் நிறைந்து நானும் சொல்கையிலே
உழைப்பு ஒன்றே உயர்வென்று - என்
உள்ளங் கையில் வைத்தனளே
மண்ணில் இப்படி சிலர் இருப்பதாலே
மாதமும் மும்மாரி பொழிகிறதே...

#ஈழத்துப்பித்தன்
01.04.2016

குடந்தை = கும்பகோணம்