Pages

May 10, 2017

சிந்தையிலை வந்து போகுது


பண்ணை கடல் வெளி
வண்ண விளக்குகளால்
மின்னி மினுங்குதாம்
அள்ளி வந்து அதை
திரைகளில் நிரப்பி
துள்ளி மகிழுது
எம் தமிழ் தும்பிகள்
பட்டி தொட்டி எங்கும்
படோபாகார அலங்காரங்களாம்
பகிடியும் பம்பலுமாய்
பொழுதுகள் கழிவதாய்
புழுகித் தள்ளுகிறான்
பள்ளித் தோழன் ஒருவன்
அவித்த கிழங்கும்
அரைச்ச சம்பலும்
ஆமி தந்தவன்
அமிர்தமாய் இனித்ததாம்
சொல்லிப் போகிறான்
பிள்ளை பருவத்தோழன்
ஆமத்துறுக்கள் கைகளில்
கட்டிடும் நூல் பெரும்
பாதுகாப்பு கவசமாம்
வைரவர் கோயில் பூசாரியின் மகன்
வியந்து சொல்கிறான்
வெள்ளிக் கிழமை தோறும்
சிங்களப் பெட்டையள்
சுற்றுலா வந்து
சுழட்டியடித்து போகிறாளவையாம்
ஆரியகுள சந்தி
அல்லோல கல்லோல பட்டு போகுதாம்
பாவி எனக்கு மட்டும்
கொள்ளி வைக்க ஆள் இன்றி
கொன்று குவித்து
சீன அமிலம் தின்று தீர்த்தும்
சிவந்து கிடக்கும் மண் ஏனோ
சிந்தையிலை வந்து போகுது...

#ஈழத்துப்பித்தன்
10.05.2017