Pages

September 11, 2018

வேலூர் பொற்கோவில்

2015 தமிழ்நாடு சென்றிருந்தபோது நாட்டின் பல முக்கிய தலங்களையும் சென்று பார்வையிட்டிருந்தேன். திருநெல்வேலியை சேர்ந்த ஜெயமுருகன் என்பவர் வழிகாட்டியாகவும் சாரதியாகவும் இருந்தார். மிகவும் கலகலப்பான மனிதர்.

ஒருநாள் கேட்டார் "அண்ணா வேலூரில் ஒரு பொற்கோவில் இருக்கு போய் பாத்திட்டு வந்திடுவமா? காலையில புறப்பட்டா சாயங்காலமே வந்திடலாம் என்று ஆசையை கூட்டினார்.

சரி என்று புறப்பட்டு வேலூருக்கு நுழைந்து இரு பக்கமும் புளியமரம் குடை பரப்பும் வீதியூடாய் சிறைச்சாலை சுற்று மதிலையும் தாண்டி சிலோன்காரங்க ஊர் என்று செல்லப்படும் அரியூர்  நோக்கி பயணித்தோம்.

சாஸ்திரி - சிறீமா ஒப்பந்த அடிப்படையில்  மலையகத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழும் பகுதியாக இப்பகுதி உள்ளதால் இப்பகுதி சிலோன்காரங்க ஊர் என அழைக்கப்படுகின்றது.  அந்த ஊரின் மலைகோடி என்ற இடத்தில்தான் பொற்கோவில் அமைந்துள்ளது. இன்று அந்த இடம் சிறீபுரம் என அழைக்கப்படுகின்றது.

பொற்கோவில் தக தக என்று மின்னியபடி ஒரு பெருவீதிக்கரையில் இருக்குமென்ற எதிர்பார்ப்போடு போனால் ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு சாதாரண நுழைவாயிலில் வழமையான உடற்சோதனை முடித்து உள் நுழைந்தபோதும் கோவிலை காண முடியவில்லை. நட்சத்திர வடிவிலான ஒரு பாதையே காணப்பட்டது. 1500 ஏக்கர் பரப்பளவான கோவில் வளாகத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் நட்சத்திர  வடிவிலான வீதி அமைப்புடன் நடுவில் பொற்கோவில் அமைந்துள்ளது. அந்த நட்சத்திர வீதியின் முழுமையான நீளம் சுமார் இரண்டு கிலோ மீட்டர் அந்த வீதியை முழுமையாக நடந்து முடித்தால் பொற்கோவிலினுள் நுழைய முடியும். கூரையோடு அமையப்பட்ட நட்சத்திர வீதி சுத்தமாகப் பேணப்படுகின்றது. இயற்கை கொஞ்சும் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தின் நட்சத்திர வீதியில் நடப்பதென்பது அப்படியொரு ரம்யமாயிருக்கும் இயற்கை இருபக்கமும் பாய் விரித்திருக்கும் இயற்கை, நீர் ஊற்றுக்களும் நறுமணம் சொரியும் மலர்களுமாய் மனம் நிறையும். வெய்யில் சுட்டெரித்து பொட்டல்காடுகளாய் கிடக்கும் வேலூரில் இப்படி ஒரு இடமா பிரமிப்பாயிருந்தது. 

இந்தப் பகுதி முன்னர் அடர்ந்த காடாகவும்  சித்தர்களும் முனிவர்களும் உலவிய தியானம் செய்த பகுதியெனவும் அந்த இடத்தில் நாராயணி அம்மனை நினைந்து சக்தி அம்மா எனப்படும், ஆலய தர்மகர்த்தா தியானமிருந்து அருள்பெற்று இந்த கோவிலை கட்டினார். இந்த கோவில் அமைவதற்கான இடத்தினை அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி வழங்கினார்.   

நட்சத்திர வடிவ வீதியின் நிறைவில் கதிரவனின்ஒளி பட்டு தெறித்து மின்னும் தங்கக்கோவிலின் நுழைவை அடைந்தோம்.  நாராயணி அம்மன் மூலவராய் தங்கவர்ணத்தில் ஒளிபரப்பும் அற்புதக்காட்சியை அருகிருந்து தரிசித்தோம். சுமார் 1500 கிலோ தங்கத்தில் தூண் சுவர்கள் உட்பட முழுமையாய் அமைந்துள்ள கோவிலின் வனப்பை கோவிலின் உட்பகுதி வரை சென்று தரிசிக்க முடியும், எவரும் சுவரைகூட தொட்டுப்பார்க்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிலை சூழவும் அகழி அமைக்கப்பட்டு நீர் நிரப்பப்பட்டுள்ளது. 

கோவில் தரிசனம் முடிந்து வெளியேறி வரும்போது அன்னதானசேவை இடம்பெறும் இடமுள்ளது. அறுசுவை மிகு அன்னதானம் சுத்தமான சூழலில் வழங்கப்படுகின்றது. கோவிலில் உண்டியல் எதையும் காணவில்லை. காணிக்கை செலுத்த விரும்புவோர் அதற்கென குறிக்கப்பட்ட இடங்களில் செலுத்தி பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம். அன்னதானத்திற்கு பொருட்களை தானம் செய்ய விரும்புவோர் அங்கேயே நியாய விலையில் வாங்கி தானமாக கொடுத்து பற்றுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

கோவில் வளாகத்தின் வெளியே 150 நோயாளர் தங்கக்கூடிய மருத்துவமனை உள்ளது. வெறும் 500 ரூபாயோடு பிரசவம் பார்க்கப்படுகின்றதாம். பல நூற்றுக்கணக்கான குழந்தைகள் அங்கு பிறந்ததாக பணியாளர் ஒருவர் கூறினார். மேலும் பல உதவித் திட்டங்கள் ஆலயதால் முன்னெடுக்கப்படுவதையும் அறிய முடிந்தது.

ஆலய சூழல் முழுவதும் சக்தி அம்மா எனப்படும் ஆலய தர்மகர்த்தாவின் படம் நாராயணி அம்மனைவிடவும் அதிகளவு ஒளிர்வோடு பிரகாசித்தது. அது மனதுக்கு சற்று நெருடலாக இருந்தது. 

இந்தியாவின் இரண்டாவது பெரிய பொற்கோவிலை தரிசித்த நிறைவோடு எமது வாகனம் புளியமரச் சாலையூடாய் 150 கிலோமீற்றர் தொலைவிலிருந்த சென்னை நோக்கிப் பறந்தது.

#உலாத்தல் 2015