Pages

November 22, 2022

இயற்கையின் வணக்கம்


 எங்கள் தேசம் மட்டுமல்ல

எல்லாத் தேசமும் உங்களுக்காய்

சிவப்பும் மஞ்சளுமாய்

சிங்காரித்து நிற்கின்றன


வார்த்தைகளால் உங்களை நான்

வணங்கவும் தடை

சொற்கள் பார்த்து கோர்த்துதான்

சோதியானவர்களே உங்கள் புகழ் பாடும் நிலை


இயற்கை என் நிலை அறிந்து

இலை இதழ்களில் வர்ணம் தீட்டி

என் உள உணர்வினை 

எடுத்துச் சொல்கிறாள் இங்கு


#ஈழத்துப்பித்தன்

22.11.2022

கச்சானும் கனித்தோடையும்


 நிலக்கடலைக்கும் தேன் தோடைக்குமான கூட்டணியை குளிர் காலம் ஆரம்பிக்கும் காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் உணரமுடியும்.

அலுவலகங்கள், உணவகங்கள், வீட்டு வரவேற்பறை என எங்கும் இந்தக் கூட்டணியை காண முடியும். அதுவும் நத்தார் காலம் நெருங்கும் பொழுது இந்தக் கூட்டணியின் ஆதிக்கமும் அதிகரிக்கத் தொடங்கிவிடும். 

குளிர் காலத்தில் குளிரின் தாக்கத்தில் இருந்து எம்மை காத்துக்கொள்ள தேவையான கொழுப்புச்சத்தினையும் புரத த்தினையும் நிலக்கடலை தாராளமாகத் தருகின்றது. அதே போல் தேன்தோடை உடலுக்கு தேவையான உயிர்ச்சத்து c யினை அதிகம் தருகின்றது. இது குளிர்காலத்தில் ஏற்படும் சளித்தொல்லையில் இருந்தும் தடிமன் வராமலும் இருக்க உதவுகின்றது.

இரண்டையும் கலந்து சுவைத்தல் அபரிதமான சுவையாக இருக்கும்.

சுவைத்துப் பாருங்கள்.

கண்டனக்கவி

(சுவிற்சர்லாந்தில் வாழும் கவிஞர் 

ஒருவரின் அரங்க வெளிப்படுத்தலுக்கான என் பதில்.

இதனை சொல்லாது போனால் அவர் கூற்றுக்கு அங்கிருந்த நானும் துணையானவனாவேன்.)


அத்தனையும் முடிந்தது  என்ற பொழுதில்

விட்டு விட்டு ஓடியவரே

நீங்கள் 

பட்ட கடனும் சேர்த்து

படாத பாடு பட்டு

வட்டியோடு கட்டி வைத்தவர்கள் அவர்கள்

சரி் பிழை உண்டென்றாலும்

சகதியை வாரி இறைக்கும் உரிமை உமக்கில்லை

வாய் உள்ளது என்பதற்காகவும்

வல்ல தமிழ் துணை உள்ளது என்பதற்காகவும்

வசை பாடி விட்டு நீர் செல்ல  

கேட்டு கைதட்டி குதூகலித்து

வாய் மூடி இருப்பதற்கு நானும் 

மற்றவர் போல் அல்ல

புவிப் பந்தில் எனக்கும் அடையாளம் தந்தவன்

உமக்கு அடையாளம் தந்த அதே

பு லித்தாய் கருச் சுமந்து புறம் தள்ளியவன்தான்

விழி் நிமிர்த்தி பார்த்தோம் உங்களை - உங்கள்

வழி மீது தடம் பதித்தும் நடந்தோம்

வீணானவர்கள் நீங்கள் என்று நாம் 

எண்ணும் வகையில்

விடங்களை மனங்களில் பரவி விடாதீர்

வீணான வார்த்தைகளால் கல்லெறிந்து

மீண்டும் மீண்டும் குளங்களை குழப்பாதீர்

சீ இவர்கள் சில்லறைகள் என்று

உமை நோக்கி வாய் உமிழ வைத்துவிடாதீர்

பொது எதிரியை கை விட்டு விட்டு

கூடித் திரிந்தவனுக்கு சாபமிடாதீர்

அந்த அரங்கிலே பதில் சொல்லும் 

திடம் எனக்கு இருந்தாலும்

அரங்கை காக்கும் பொறுப்பு என் 

கரங்களில் இருந்ததால்

நாவடக்கிக் கொண்டேன்.

உடைத்தெறிவது சுலபம்

உருவாக்கி எடுப்பதுவே கடினம்

வல்லமை உண்டெனில் வாய் வீரம் காட்டாமல்

செயல் வீரராய் வாருங்கள்

சேர்ந்து வடம் பிடிப்போம்


#ஈழத்துப்பித்தன்

21.11.2022

November 19, 2022

ஈழத்தின் தொன்மையான இணுவை.


விஜயன் வருகைக்கு முன்னரே தமிழர் ஈழத்தை ஆண்டனர். ஆதாரங்கள் இணுவிலில்.


குமரிக்கண்டத்தில் அமைந்த தமிழ்ச் சங்கங்களில் ஒன்று இணுவிலில் அமைந்திருந்ததாகவும் அதன் எச்சங்கள் மண்ணுள் புதைந்துள்ளதாகவும் அவற்றை இன்றும் பூதங்கள் காப்பதாகவும் சிறு வயதில் மூத்தவர்கள் காவி வந்த செவி வழிச் செய்திகளினூடாக அறிந்துள்ளேன். 


அதனால்தான் அந்த மண்ணில் வேறெங்கிலும் இல்லாத அளவில் தமிழும் சைவமும் செழித்து வளர்வதாகவும், சிவனின் ஆட்சி நிலவும் சிவபூமியாக திகழ்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 


இன்று பார்த்தால் கொழும்பு தமிழ்ச் சங்கம் உட்பட உலகம் முழுவதிலும் தமிழ் சார் அமைப்புக்களையோ சைவ ஆலயங்களையோ நிறுவி தமிழ் சைவ பணிகள் தொடர வழி வகுப்பதில் முன் நிற்பவர்கள் இவ்வூரவர்களே.

அதனை மெய்ப்பிக்கும் வகையில் இணுவிலின் காரைக்கால் சிவன் கோவில் பகுதியில் அண்மையில் கேணி அமைக்க முயன்றபொழுது சிக்கிய கட்ட எச்சங்களும் தொல்பொருட்களும் அமைந்துள்ளன.

பல்லவர்களாலும் சோழர்களாலும் பராமரிக்கப்பட்ட பல்லாயிரம் ஆண்டு கடந்த காரைக்கால் சிவன் கோவில் வளாகத்திலேயே இத் தொல்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இக்கோவில் பகுதி சித்தர்கள் வாழும் பகுதி எனப்படும். 

அந்தப் பகுதிக்குள் நுழைகின்ற போதே ஒரு பரவச நிலையையும் மன அமைதியும் ஒட்டிக்கொள்ளும். பல அற்புதங்களை நிகழ்த்திய அப் பகுதி இன்று பல அற்புதங்களை வெளிக்கொணரும் பகுதியாக ஈழத்தமிழர்களின் தொன்மத்தை மீட்கும் பகுதியாக அமைந்துள்ளது.

இந்த பகுதி என் தந்தை மற்றும் தாயார் வழி மூதாதைகள் பிறந்து வளர்ந்த பகுதி என்பதிலும் நாம் சிறுவயதில் உருண்டு புரண்ட பகுதிகள் என்பதிலும் பெருமையும் மகிழ்வும். 

#இணுவையூரான்

https://youtu.be/4O8V3tFn9GQ 

November 7, 2022

எழுச்சிக்கவி தெரிவுப் போட்டியில்...

 

இன்று தமிழீழ நினைவேந்தல் அகவத்தினால் சுவிஸ் தழுவியரீதியில் மா. வீரர் நினைவு சுமந்த கவிதைப் போட்டி எட்டாவது தடவையாக பேர்ண் மாநிலத்தில் நடாத்தப்பட்டது. 

இந்த போட்டிகளில் நான்கு பிரிவுகளில் சுமார் 47 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள். 

இதில் அதிமேற்பிரிவில் முதலிடத்தை பெறும் போட்டியாளருக்கு "எழுச்சிக்கவி" விருது வழங்கப்படும்.

இவ்வாண்டு நடைபெற்ற போட்டியின் நடுவர்களில் ஒருவராக கலந்து சிறப்பிக்கும் வாய்ப்பினை சுவிஸ் கிளையின் மா. வீரர் நினைவு அகவம் எனக்கு வழங்கியிருந்தது.

கடந்த ஆண்டே நினைவேந்தல் அகவத்தின் ஒருங்கிணைப்பாளர் மதியண்ணாவும் மதிப்பிற்குரிய சிவலோகநாதன் அண்ணாவும் அழைத்திருந்தார்கள். நான் பின்னின்றபோது நம்பிக்கையும் உற்சாகமும் தந்து உங்களைப் போன்ற இளையவர்கள் வர வேண்டும் அன்புக்கோரிக்கையை முன் வைத்தார்கள்.  சில தவிர்க்க முடியாத காரணத்தால் கடந்த தடவை என்னால் இறுதிக்கணத்தில் கலந்துகொள்ள முடியாது போய்விட்டது.

இம் முறை இவர்களெல்லாம் தந்த நம்பிக்கையை ஏற்று கலந்து கொண்டேன்.  

ஏற்கனவே பல பேச்சுப்போட்டிகள் மற்றும் தமிழ்த் திறன் போட்டிகளுக்கு நடுவராக சென்றிருந்தாலும் கவிதைப் போட்டிக்கு இதுவே முதற் தடவை. போட்டியாளர்களை விட என் மனம் பதை பதைப்பாக இருந்தது. தவறான முடிவுகளை கணித்துவிட்டால் அது திறமையானவர்களை புறம் தள்ளிவிடுமே என்ற பேரச்சம் மனம் முழுதும் நிலவியது.

போட்டியாளர்களை சீர்தூக்கவென லண்டனில் இருந்து நான் பெரிதும் மதிக்கும் கவிஞர் ராஜமனோகரன் அவர்களும் மூத்த படைப்பாளி ஆதிலட்சுமி சிவகுமார் இணைந்திருந்தார்கள்.  இருவரும் இவர்களுடன் சுவிஸ் தமிழ்க் கல்விச்சேவையின் ஒருங்கிணைப்பாளர் பார்த்தீபன் கந்தசாமி அவர்களும் உற்சாகமூட்டி தரவுகளை தந்து வழிகாட்டினார்கள்.

போட்டியாளர்களுக்கு பிரிவுகளுக்கேற்ப 40 முதல் 60 நிமிடங்கள் குறிப்பிட்ட தலைப்புகளில் கவிதை எழுத நேரம் வழங்கப்படது.

அதனையடுத்து அரங்கில் கவிதைபாட நேரம் வழங்கப்பட்டது.

போட்டிகள் அனைத்துமே சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது. 

முடிவுகள் எடுப்பதில் கடுமையான போட்டியாக இருந்தது. 

நிறைவில் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எனது முடிவுகள் ஏனைய இரு நடுவர்களின் முடிவுகளுடனும் அச்சொட்டாய் பொருந்திப் போனது. 


யாருடைய திறமையையும் நான் தவறாக கணிக்கவில்லை என்ற மனநிறைவைத் தந்தது.


நடுவர்களாக கலந்துகொண்ட கவிஞர் இராஜமனோகரன் மற்றும் மூத்த படைப்பாளி ஆதிலட்சுமி சிவகுமார் ஆகிய பெரும் ஜாம்பவான்களோடு கத்துக்குட்டியான நானும்.

October 2, 2022

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் 




எனக்கு நன்றாக பிடித்துள்ளது.

1 குந்தவை

2 வந்தியதேவன்

3 அருண்மொழி

4 ஆதித்த கரிகாலன்

5 நந்தினி

இந்த வரிசையில் பாத்திரப் படைப்புகள் மனங்களில் நிறைகின்றன.

நாவல் திரைக்கதையாக மாறும் போது அதன் உருமாற்றம் எந்த வகையில் இருக்குமென்று எதிர்பார்த்தேனோ அதே போல் இருந்தது.

முதற் பாகத்திலேயே அருண்மொழிவர்மனை அறிமுகப்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கம் நாவலில் உள்ள கதை நகர்வை விரைவுபடுத்தியுள்ளது. கதையில் இரசித்த பல சம்பவங்கள் இல்லாமல் இருந்தாலும் ஏமாற்றத்தை தரவில்லை.

பொன்னி நதி பாடலின் காட்சிப்படுத்தல் பாடலை மனதோடு ஒட்டச் செய்கின்றது.

சோழா சோழா பாடல் அதற்கான காட்சிப்படுத்தலால் மனதோடு ஒட்டவில்லை. அந்தப் பாடலில் வரும் புலிக்கொடி கரிகாலன் போன்ற வார்த்தைகள் எம்மை எங்கோ கொண்டு செல்வதாலும் இந்தக் காட்சிப்படுத்தல் எம் மனதோடு ஒட்டாமல் போவதற்கான காரணியாக இருக்கலாம்.

குந்தவை - நந்தினி சந்திக்கும் காட்சி, அருண்மொழி, வந்தியதேவன் சந்திக்கும் காட்சிகளும் ஆதித்த கரிகாலனின் அறிமுகமும் மனதில் நிறைகின்றது.

கடற்சமர் மிரட்டிப் போகின்றது. 

தனிமனித வீரத்தை கொண்டாடும் பாகுபலியோடு ஒரு இனத்தின் புனைவுடன் கூடிய வரலாற்றை ஒப்பிட முடியாது. பாகுபலியை எதிர்பார்த்து போவோருக்கு இங்கு வேறுவிதமான அவலே காத்திருக்கின்றது.

மொத்தத்தில் பார்க்க கூடிய திரைப்படம்.


July 10, 2022

நயப்புரை - "சிவபுரத்தரசே சிவபெருமானே"



 நேற்று (09.07.2022) சூரிச் சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கம் நடாத்திய "சிவபுரத்தரசே சிவபெருமானே" எனும் இசை வெளியீட்டு நிகழ்வில் நயப்புரை ஆற்றும் வாய்ப்பினை சைவத் தமிழ்ச் சங்கமும் கவிஞர் வேலணையூர் சுரேஸ் அவர்களும் வழங்கியிருந்தார்கள். 

கவிஞர் வேலணையூர் சுரேஷ் அவர்களிடம் "அண்ணா மீண்டும் பெரும் பொறுப்பை தந்துள்ளீர்களே" என்ற பொழுது அவர் சொன்ன "இது அ( சி)வனின் அழைப்பு" ஒற்றை வரி நம்பிக்கையை தந்தது. அந்த நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டேன். அந்த நிகழ்வு பல நன்மைகளைத் தந்தது.

நயப்புரை

*********

மூத்த குடியின் முதன்மொழி மகளே!

ஆதி முகாந்திரமாய் தோன்றிய முகிதல் இல்லாத முத்துக் குளிக்கும் கடலே என் தமிழ்த் திருவே உன் மலரடிக்கே என் முதல் வணக்கம்.

சீர் மேவும் இணுவை சிவகாமி மைந்தன்

கார் எட்டும் பெருமஞ்ச நாயகன் சோதரன்

பார்  புகழும் இணுவை பர்ராசசேகரன் பதம் பணிந்து, சூரிச்சில் உறைகின்ற சுந்தரன் தாழ் பணிகின்றேன்.

அவன் அருளால் அவன்தாழ் வணங்கி அந்தணப்பெருமக்களுக்கும் ஐயனின் அடியவர்களுக்கும் என் தமிழால் அவன் புகழ் பாடி அரங்கேற்றி நிற்கும் கவிஞர் பெருமக்களுக்கும்  நுண் இசையால் சுவையூட்டிய இசையமைப்பாளர்களுக்கும் தம் குரலால் உயிர்கொடுத்து பாடி உரமேற்றிய பாடகர் குழாமிற்கும் சிவன் ஆலய நிர்வாகத்தினருக்கும் சைவத் தமிழ்ச் சங்கத்தினருக்கும் வணக்கம். 

சைவத் தமிழ்ச் சங்கம் மீண்டும் ஒரு தடவை குருவி தலையில் பனங்காயை ஏற்றி வைத்திருக்கின்றது. அதனைச் சுமக்கின்ற அடித்தளத்தையும் அவர்களே தந்ததாலும் அவன் அருளால் இந்தச் சந்தர்ப்பம் அமைந்ததாலும் அந்த துணிவோடு களம் இறங்குகிறேன்.

மிகச் சிறுவயதில் புலம்பெயர்ந்து வந்த நான் உட்பட இன்று வரை இங்கு பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் தமிழ்க் குழந்தைகள் ஏன் இந்த இசைப்பேழையில் பாடியிருக்க கூடிய அத்தனை பிள்ளைகளின் தாய்மொழி மற்றும் கலை வளர்ச்சியில் இந்த சூரிச் சிவன் ஆலயமும் சைவத் தமிழ்ச் சங்கமுமே அடிக்கற்களாக உள்ளது என்றால் மிகையாகாது. 

இன்று சுவிற்சர்லாந்தில் நாடளாவியரீதியில் இயங்கும் தமிழ்ப் பள்ளிகள் முதல் நாடளாவியரீதியில் நடைபெறும் பொதுத்தேர்வு வரை சைவத் தமிழ்ச் சங்கத்தால்தான் அறிமுகப்படுத்தி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

தாய்மொழித் தேர்வு, திருக்குறள் மனனப் போட்டி, பேச்சுப் போட்டி, நாடகப்போட்டி என என் திறன்களை காட்ட களம் தந்து எனை வளர்த்து இந்தச் சமூகத்துக்கு என்னை அறிமுகப்படுத்திய இந்தக் கூடம் தற்போது என் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் களம் தந்து நிற்கின்றது. அந்த நன்றி உணர்வோடு தொடர்கின்றேன்.

தவறுகள் இருப்பின் தமிழால் பொறுத் தருள்க.

இறைவனை பாடுதல் என்பது இன்று நேற்று ஆரம்பமானதல்ல. தமிழை அதன் சுவையை அதன் இலக்கண இலக்கிய தரங்களை வளர்த்த பெருமை தொன்று தொட்டே பக்தி இலக்கியங்களுக்கு உண்டு.  

ஈழத்து புலவர்களாலும் பல பக்தி இலக்கியங்கள் படைக்க கூடிய சூழல் உருவாகி அங்கொன்றும் இங்கொன்றுமாய் படைக்கத் தொடங்கிய காலத்தில் எங்கள் தேசத்தில் நிலவிய இன ஒடுக்குமுறையும் அதற்கெதிரான கிளர்வும் மண் மீட்பு போராக உருக்கொண்டு எம் தேசம் மீது கருமேகம் சூழ்ந்தது.  போர்ச்சூழல் புரவலர்களை பரணி பாட அழைப்பு விடுத்தது. எங்கள் தேசத்தின் வலியும் போரும் வெற்றியும் கருவாகி உருவாகின.

2009இல் எங்கள் வாழ்வும் வளங்களும் புரட்டிப்போடப்பட இயலாமையாலும் அச்சத்தாலும் எங்கள் படைப்பாளிகளின் குரல்களும் படைப்புக்களும் சுருங்கிப் போயின. 

 தன் உள உணர்வுகளை வடித்துக் கொட்ட வடிகால் தேடிக் கொண்டிருந்த பொழுதினில் மனம் முழுதும் நிறைந்த இயலாமையும் வெப்பியாரமும் ஏக்கமும் வடிகால் தேடி இறைவனை எம் மீட்பனாக கருதி தங்கள் வலிகளைச் சொல்லி  பாட அவை இறையருட் பாட்களாக மலரத் தொடங்கின.

அந்த வகையிலே அன்று முதல் இன்று வரை மக்களின் வலிகளை உணர்ந்து சிவபுரத்தின் அரசாக படியளந்துகொண்டிருக்கும் சூரிச்பதி உறை சுந்தரேசன் மீது தொடர்ச்சியாக பல பாடல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்று முத்தாரமாய் இரண்டு இசையமைப்பாளர்கள் இசை மீட்டி 12 கவிஞர்கள் பாடல் யார்த்து 19 பாடகர்கள் பாடி 16 பாடல்களுடன் வெளி வந்திருக்கின்ற "சிவபுரத்தரசே சிவபெருமானே" என்ற இந்த இசைப்பேழையின் இசை வெளியீடு ஒரு காலத்தின் பதிவாக சிறப்புப் பெறுகின்றது.

சுந்தரர் சம்பந்தர் பாடிய திருக்கோணேச்சரம் திருக்கேதீச்சரம் போல் எங்கள் புதுவையரால் பாடல் பெற்ற தலம் எனும் பெருமை மிகு சிவனாரை இன்று இத்தனை பேர் இணைந்து பாடியிருப்பது பெரும் சிறப்பாகும்.

பாடல்களுக்குள் நுழைய முன்னர் பாடல்களில் இருக்க வேண்டிய கவனிக்க வேண்டிய சில விடயங்களை குறிப்பிட்டுச் செல்லலாம் என நினைக்கின்றேன்.

ஒவ்வொரு படைப்பும் அந்த காலத்தை அந்தக் காலத்தில் வாழும் மனிதர்களின் உள உணர்வை, எதிர்பார்ப்பை, சூழலையும் பதிவாக்கி காலங்கள் கடந்தும் கடத்தும் வல்லமையை கொண்டனவாக உருவாக்கப்படுதல் வேண்டும். 

இன்று தேவாரங்களை வைத்து திருக்கோணேச்ரம் திருக்கேதீச்சம் பற்றி நாம் அளவிடுவதைப் போலவும் அந்தக் காலத்தை உணர்தலைப் போலவும் இருத்தல் இருத்தல் வேண்டும். அத்தகைய படைப்புக்களே காலங்கள் கடந்தும் நிலைபெறும். 

இவை பற்றி இன்னும் ஆழமாகப் பேசலாம். உங்கள் நேரத்தை நான் அதிகம் திருடிக்கொள்ள விரும்பவில்லை.

உள்ளே என்ன உள்ளது என பார்க்க வேண்டும் என்ற ஈர்ப்பை ஏற்படுத்துகின்ற அழகிய வடிவமைப்புடன் கூடிய இந்த இசைப் பேழை இசையமுதனின் முகவுரையுடன் விரிகின்றது.

இரு பக்கமும் மின்னொளி அலங்காரங்கள் ஒளி சுடர நடுவே செங்கம்பளம் விரிந்திருக்க வானவேடிக்கை முழங்க கரங்களை பிடித்து விழா மண்டபத்தினுள் அழைத்துச் செல்லும் உணர்வினை இசையமுதனின் முகவுரை தந்து பாடல்களை கேட்கும் மன நிலைக்கு எம்மை தயாராக்கி அழைத்துச் செல்கின்றது.

பதினாறு பாடல்களையும் கேட்டு முடித்த பொழுது கை நிறைந்து தேன் வழிந்து ஒழிகிடும் பஞ்சாமிர்தத்தை உண்டது போல் மனம் இனித்துக் கிடந்தது.

முதலாவது பாடலாக கவிஞர் இன்பம் அருளையாவின் வரிகளில் முகிலரசனின் இசையில் ஜனாவின் குரலில் உருவான முதற் பிள்ளை கணபதிக்கு என்ற பிள்ளையார் பாடல் பிள்ளையார் சுழி்போட்டு நல்லதை தொடங்கிவிடு என்ற பாடலுக்கு நிகரான இசையில் மனதோடு இணைந்துகொண்டது. 

முகிலரசனின் இசையில் 14 பாடல்கள் இசையமைக்கப்படுள்ளன அவை ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை அல்ல அத்தனை பாடல்களும் உணர்வோடு கலந்து சாமகானம் இசைத்தன.

இந்த பாடலை எழுதியிருக்கும்  கவிஞர் இன்பம் அருளையா அவர்கள்  இந்த இசைப்பேழையில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளன. இவரைப் பற்றி சொல்வதாயின் இன்று சுவிற்சர்லாந்தில் வாழும் கவிஞர்கள் மத்தியில் அதிக பாடல்களை புனைந்திருக்கும்  கவிஞர்  என்ற பெருமை இவருக்குண்டு. 

ஜனாவினுடை காந்தக்குரல் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றது.

இரண்டாவது பாடல் "மனமொழி மெய்ப்பால்" கவிஞர் வேலணையூர் சுரேஸ் அவர்களின் வரிகளில் ஆரபி திருநாமசிங்கம் அவர்களின் குரலில் இடம்பெற்றிருக்கின்றது.   கவிஞர் வேலணையூர் சுரேஸ் பற்றி சொல்லத் தேவையில்லை. அனைத்தையும் காப்பாற்று எம் இனத்தையும் காப்பாற்று என எங்கள் எதிர்பார்ப்பை சொல்லிச் செல்கின்றது. ஆரபியின் குரலில் நல்ல முதிர்ச்சி தெரிகின்றது. வருடிப் போகின்றது. 

மூன்றாவது பாடல் "உந்தன் பாதம் தஞ்சமென்று வந்தடைந்தோம் பரமனே" கவிஞர் மணிமொழியின் வரிகளில் அஜித்தா விஜயகுமார் பாடியிருக்கின்றார். 

இனி நீதான் எல்லாமே என அவன் பாதம் பணிந்து உருகின்ற வரிகள் மனதை பிசைந்து போகின்றது. சிறந்த பாடகியாக எங்கள் மனங்களில் பதிந்த மணிமொழி சிறந்த பாடலாசிரியை எனவும் நிரூபித்த பாடல் இது. அஜித்தாவின் குரல் எனக்கு மிகவும் பரீட்சயமான குரல். மனதோடு உறவாடிப் போகின்றது.

நான்காவது பாடலாக "காரிய காரணனே" கவிஞர். கு. வீரா அவர்களின் வரியில் வசீகரன் அவர்களின் இசையில் செல்லப்பா ஶ்ரீகந்தவேள் அவர்களின் குரலில் இன்றைய கால வலிகளை சொல்லும் பாடலாக அமைந்துள்ளது. கவிஞர் வீராவின் கவித்துவம் பற்றி சொல்லத் தேவையில்லை.

இசையமைப்பாளர் வசீகரன் இந்த இசைப்பேழையில் இரு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இரு பாடல்களும் வரிகளின் ஆழத்தை வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. 

ஐந்தாவது பாடலாக "ஆதியும் நீயே அந்தமும் நீயே" கவிஞர் இன்பம் அருளையாவின் வரிகளில் சாரங்கா வரதராஜனின் குரலில் அமைந்துள்ளது. விறுவிறுப்பாக அமைந்த இந்த பாடலில் பஞ்சபூதங்களை கட்டி ஆளும் சிவனின் அற்புதங்களையும் புலம்பெயர்வின் வலியையும் பேசும் வகையில் அமைந்துள்ளது. சாரங்கா வரதராஜன் இன்றைக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னரே நாம் கரம் பிடித்து மேடைகளில் ஏற்றிய சிறுமி. இன்று அற்புதமான மிளிர்ந்து பாடகியாக தன் குரலால் உயிர்கொடுத்துள்ளாள். 

ஆறாவது பாடலாக "அன்பே சிவமென்று" அகரப்பாவலனின் வரிகளில் மாதுமை மகேந்திரராஜாவின் குரலில் வெளிவந்துள்ளது.

அகரப்பாவலனின் வரிகள் மனதுக்கு பேரின்பத்தை தந்து போகின்றது. மாதுமையின் குரல் இனிக்கின்றது. மாதுமையின் குரலில் ஏன்கனவே கடந்த ஆண்டு ஒரு பாடலை கேட்டிருந்தேன். அதனிலிருந்து இந்தப்பாடலில் அனுபவ முதிர்ச்சி தெரிகின்றது.

ஏழாவது பாடலாக "ஆதி சிவபெருமானே"  மயிலையூர் இந்திரனின் வரிகளில் ஜீவனின் குரலில் உள்ளத்துள் ஊடுருவுகின்றது. "ஊரிழந்து உறவிளந்து படும் வலிகளை சிவனிடம் சொல்லி உருகும் இப்பாடலில் மூலம் சிறந்த படகராக எம் மத்தியில் நீண்டகாலமாக அறிமுகமான இந்திரன் தான் சிறந்த காலக் கவிஞன் என்பதை நிரூபித்துள்ளார். ஜீவனின் குரல் மனதைப் பிசைந்து வருடுகின்றது. 

எட்டாவது பாடலாக " அருணாச்சலனே" ஈழப்பிரியனின் வரிகளில் பிரியா முரளீஸ்வரனின் குரலில் இடம் பிடித்திருக்கின்றது. சந்தம் சிந்தும் ஈழப்பிரியனின் வரிகளுக்கு பிரியா இனிதாக உயிர் கொடுத்துள்ளார். 

கவிஞர் ஈழப்பிரியனின் கவித்துவம் பற்றி கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் முன்னதாகவே இனங்கண்டு பாராட்டியிருந்தேன். பிரியாவின் பாடும் திறனை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னரே பாசல் சங்கமம்  இசைக்குழுவின் மேடைகளில் கேட்டிருக்கிறேன். இங்கும் மிளிர்ந்திருக்கிறார்.

ஒன்பதாவது பாடலாக "அன்பே சிவமாய் அமர்ந்த நாதனே" கவிஞர் இன்பம் அருளையா அவர்களின் வரிகளில் திருமால் ஆர்த்திகன் டினுஜா முகிலரசன் பாடியிருக்கின்றார்கள். மழலைத் தமிழில் சிவன் நாமம் சிறந்திருந்தது.

பத்தாவது பாடலாக "சோதியே சுடரே" கவிஞர் நிர்மலாதேவி பரராஜசேகரம் அவர்களின் வரியில் பிரதீபா இராதாகிருஷ்ணனின் குரலில் இடம்பெற்றுள்ளது. 

பாரா முகமாய் உள்ள பாம்பணிந்த ஈசனை பாடித் தொழும் இப்பாடலின் கவித்துவம் தனித்துவமானது. கவிஞர் நிர்மலாதேவி சுவிற்சர்லாந்தில் பக்தி இலக்கியத்துக்கு வித்திட்ட கவிஞர்களில் முதன்மையானவர். பிரதீபா கவிஞரின் உணர்வை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

பதினொராவது பாடலாக பக்தருக்கு அருள் செய்வாய் கவிஞர் விவேகானந்தன் அவர்களின் வரிகளில் அபூர்வா செல்வச்சந்திரனின் குரலில் இடம்பெற்றுள்ளது. மிகுந்த ஆர்வத்தோடு கவிபுனையும் கவிஞர் விவேகானந்தனின் வளர்ச்சியின் மைல் கல்லாக இப்பாடல் அமைந்துள்ளது. ஆபூர்வாவின் மழலைத் தமிழ் எம்மையும் ஈர்த்துப் போகின்றது.

பன்னிரண்டாவது பாடலாக எத்திசையில் நான் கவிஞர் வெற்றி துஸ்யந்தனின் வரிகளில் ஆரூரன், அதிசயா திருநாமசிங்கம் பாடியுள்ளார்கள். எம் பிரானை நினைந்து உருகும் கவிஞரின் பாடல்வரிகள் எம்மையும் உருக்குகின்றது. ஆரூரன், அதிசயா இருவரின் குரல்களிலும் நல்ல முதிர்ச்சி தென்படுகின்றது. 

பதின்மூன்றாவது பாடலாக அப்பன் பரமேஸ்வரன் கவிஞர் இன்பம் அருளையா வரிகளில் வசீகரனின் இசையில் விஜிதா இலங்கேஸ்வரன் பாடியுள்ளார். சூரிச் சிவன் கோவிலில் உறைகின்ற கந்தனை பாடியுள்ள கவிஞரின் வரிகள் விஜிதாவின் குரலில் வருடுகின்றது.

பதின்நான்காவது பாடலாக காளியே சூலியே அகரப்பாவலனின் வரிகளில் அக்சயா இராதா கிருஸ்ணனின் குரலில் துள்ளலாக அமைந்துள்ளது. காவடிக்கு ஏற்ற பாடலாக சிறக்கிறது. 

பதினைந்தாவது பாடலாக அன்பே சிவமென்போம் கவிஞர் மூத்த படைப்பாளி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களின் வரிகளில் பெரியவர் சாம்பசிவம் அவர்களின் குரலில் ஓர் தத்துவப்பாடலை ஒத்து அமைந்திருந்தது. கவிஞர் ஆதிலட்சுமி அவர்கள் பற்றி சொல்வதாயின் எனது வயதையும் விட அவரது படைப்புலக அனுபவம் நீண்டது. பல படைப்புக்களை நூறு படைப்புக்களை வெளிக்கொண்டு வந்த ஒரு ஆளுமை.

ஐயா சாம்பசிவம் அவர்களின் குரலில் பாடல் உணர்வோடு கலக்கின்றது.

பதினாறாவது பாடலாக நடராஜர் சுவாமி கவிஞர் ஈழப்பிரியனின் வரிகளில் இன்பா இராதா கிருஷ்ணன்  மற்றும் சாயினி சுரேஸ்குமார் ஆகியோரின் குரலில் இடம்பெற்றுள்ளது. கவிஞரின் கவித்துவமான வரிகளுக்கு எம் இளந்தலைமுறை பாடகர்கள் இனிதாய் குரல் கொடுத்துள்ளார்கள். 

உண்மையில் இந்த இசைப்பேழையில் பாடியிருக்கும் பெரியவர்களைவிட பாடிய சிறார்கள் சிறப்பாக பாடியுள்ளார்கள். பெரியவர்கள் எப்படியோ மொழியை எமது தாயகத்தில் பயின்று வந்தவர்கள். இந்தச் சிறார்களோ இங்கு பிறந்து மொழியை இங்கே பயின்று இவ்வளவு தூரம் உச்சரிப்பு தெளிவாக பாடியிருப்பது பிரமிக்க வைக்கின்றது.

அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் உரித்தாக்கிக் கொள்கின்றேன். 

எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சைவத் தமிழ்ச் சங்கத்தினருக்கு எனது அன்பையும் நன்றியையும் உரித்தாக்கி விடைபெறுகின்றேன்.

அன்பே சிவம்

படங்களை அனுப்பி வைத்த சுதா அண்ணாவுக்கு நன்றிகள்.

பல வாசகிகள் தங்கள் கைப்பேசிகளில் படமாக்கி உள்பெட்டிகளை நிறைத்திருந்தார்கள். அனைவரது அன்புக்கும் நன்றி.


March 10, 2022

இளவேனில்




 மழலை பாடல் தொகுப்பொன்றுக்காக எழுதப்பட்டது.

இளவேனில்

************

வானம் மெல்ல வெளிக்கின்றது - எம்

மனமும் அதுபோல் சிரிக்கின்றது

பூமி மேனி சிலிர்க்கின்றது

பூக்கள் அங்கே முகிழ்க்கின்றது


பச்சை வர்ணம் தெறிக்கின்றது

பசும்புற் தரைகள் விரிகின்றது

பகலாய் இரவும் ஒளிர்கின்றது

பகலவன் ஆட்சி நடக்கின்றது


எங்கும் பூக்கள் நிறைகின்றது

எந்தன் மனமும் மகிழ்கின்றது

தேனீ பறந்து திரிகின்றது

தேடித் தேனை புசிக்கின்றது


மழலை மனங்கள் நிறைகின்றது

மகிழ்ந்து துள்ளிக் களிக்கின்றது

கவலை எல்லாம் பறக்கின்றது

கதிரின் ஒளிபோல் ஒளிர்கின்றது


இணுவையூர் மயூரன்

#ஈழத்துப்பித்தன்

18.02.2021

March 7, 2022

குடமுழுக்காடும் சிவகாமி

 வரும் மார்ச் 27 (பங்குனி 13) அன்று குடமுழுக்காடவுள்ள இணுவை மண்ணின் சக்தி பீடமாக விளங்கும், சீர் இணுவைத் திருவூரின் சிதம்பரவளவுறை அருள்மிகு சிவகாமி அம்மன் திருக்கோவில்.

 இந்தக் கோவிலிலும் கோவில் வீதியிலும் தேர்முட்டி படிகளிலும் எங்கள் தடங்கள் பதியாத இடங்கள் இல்லை.

இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு காலத்தில் எமக்கு அடைக்கலம் தந்து காத்த இடம். பல இரவுகள் பாதுகாப்புக்காக ஒட்டு மொத்த கிழக்கு இணுவை மக்களும் இந்த கோவிலின் உட்புறத்திலேயே தங்கி உறங்கினோம். 

இணுவை மக்களின் உணர்வுகளுடன் இரண்டறக் கலந்து "ஆச்சி" என்று அழைக்கப்படும் உறவுமுறைக்கு சொந்தக்காரி.

யாழ்ப்பாண இராட்சியத்தின் 12 பேரூர்களில் ஒன்றாக இணையிலி (இணுவில்) விளங்கிய காலத்தில் மண்ணை ஆண்ட பேராயிரமுடையானால் சிதம்பரத்தில் இருந்து சிவகாமி அம்மையின் சிலை கொண்டு வரப்பட்டு நிறுவப்பட்டது.

சிதம்பரத்துக்கும் இணுவை மண்ணுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நான் சிதம்பரம் சென்றபோது சிதம்பரத்திலுள்ள சைவ சமய பாடசாலையை அமைப்பதற்கு கூரைக்கு தேவையான பனஞ் சிலாகைகளும் தீராந்திகளும் இணுவிலில் இருந்தே சென்றதாக அறிந்தேன்.

பேராயிவன் எடுத்த பெருங்கோவிலை பின் ஆட்சித் தலைவனாக இருந்த காலிங்கராஜன் சிறப்பாய் முன்னெடுத்தான். அவனைத் தொடர்ந்து இணுவை மண்ணை நிர்வகித்த அவனது மகனான இளந்தாரி என அழைக்கப்படும் கைலாயநாதனால் தேரேற்றி உலா வரச் செய்யப்பட்டாள்.

போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தில் எல்லாக் கோவில்களும் போலவே இணுவில் சிவகாமி அம்மன் கோவிலும் இடித்தளிக்கப்பட்டது. சுமார் 150 ஆண்டுகளாக உணர்வுகளூடாக கடத்தப்பட்ட அம்மையின் வழிபாடு பின் வந்த ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் பிற் பகுதியில் உருவ வழிபாடாக மாற்றம் பெற்றது. 

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் தவறான குற்றச்சாட்டொன்றின் பெயரில் இணுவை சின்னத் தம்பி புலவர் சிறையில் அடைக்கப்பட்டபோது சிறையில் இருந்து அம்மனை வழிபட்டு அவள் அருளாலே சிறை மீள, அன்னையின் புகழ் எங்கும் பரந்தது. 

சிறை மீன்ட சின்னத்தம்பி புலவர் சிவகாமி மீது "சிறை நீங்கு பதிகம் பாடினார். அதே போல் இணுவை சிவகாமி அம்மை மீது சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ், சிவகாமியம்மை துதி, இணுவைச் சிவகாமசுந்தரி பதிகம் என்பனவற்றையும் பாடியுள்ளார். 

இணுவை சிவகாமி அம்மன் திருக்கோவில் வளாகம் சைவத்தை மட்டும் வளர்க்காமல் இயல்,இசை,நாடகம் எனும் முத்தமிழையும் வளர்த்தெடுக்கும் பணியினையும் ஒல்லாந்தர் காலத்தில் இருந்தே மேற்கொண்டு வருகின்றது. 

இங்கு  நவராத்திரி, ஆடிப்பூரம், வருடாந்த பெருந் திருவிழா, திருவெம்பாவை ஆகியன மிகச் சிறப்பாக நடைபெறும்.

நவராத்திரியின் ஒன்பதாம் நாள் நடைபெறும் மகிசாசுரன் போரும் பத்தாம் நாளான விஜயதசமியன்று கிழக்கு இணுவிவில் இருந்து மேற்கு இணுவிலில் அமைந்துள்ள கந்தசுவாமி கோவில  சென்று கந்தசுவாமி கோவில் வளாகத்தில் நடைபெறும் மானம்பூ வாழை வெட்டு நிகழ்வு மிகவும் சிறப்பாக இருக்கும். கிழக்கு, மேற்கு என இணுவை மக்கள் பிரிந்து போகாமல் இருப்பதற்காக பரந்த நோக்கோடு எம் மூதையர்களால்  அன்றே விழாக்கள் இவ்வாறு திட்டமிடப்பட்டன. 

ஆடிப்பூரத் திருவிழா காணக் கண் கோடி வேண்டும்.  பூந் தண்டிகையில் அம்மாளாச்சி உலா வர கோவில் வீதி முழுதும் கற்பூரச் சட்டியின் ஒளியில் மிளிர்ந்து நிற்கும். 

வருடாந்தத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பங்குனி உத்திர நாளில் தீர்த்த திருவிழாவுடன் நிறைவுபெறும்.

திருவெம்பாவை வேளை சிதம்பரேசனுக்கும் சிவகாம சுந்தரிக்கும் திருவிழா நடைபெற்று அதிகாலையில் தேர்த் திருவிழா நடைபெற்று திருவாதிரையில் தீர்த்த திருவிழாவுடன் நிறைவுபெறும்.

ஆறு ஆண்டுகளாக காத்திருந்த பெருவிழாவான அம்மனின் குடமுழுக்கு விழா நடைபெற அருள் கூடியுள்ளது.

அவள் 

கட்டும் சேலை அழகினிலே

கட்டுண்டு நின்றிருப்பேன்

பட்டுப் போன்ற அவள் வதனம்

பார்த்து (தினம்) பசி மறப்பேன்


#இணுவையூரான்

#ஈழத்துப்பித்தன்

February 11, 2022

ஆச்சியும் அப்புவும்

 


ஆச்சிக்கு எப்பவுமே

அப்பு நினைப்புத்தான்

கொண்டாடி வாழ்ந்த வாழ்வென்று

சொல்லிச் சொல்லி மனுசி குதூகலிக்கும்


பேச்சுக்கு துணைக்கு ஆரன் கிடைச்சால் போதும்

பெரியபுராண படலம் போல சொல்லிச் சிவக்கும்

கண்ணீர்த் துளி மெல்ல வழிந்து

காஞ்ச தோலில் ஈரம் கசியும்


சனிக்கிழமை எண்ணை தேச்சு முழுக வாத்து

சாராயம் கொஞ்சம் குடிக்கத்தந்து  

தலை கோதித் தூங்க வைத்ததும்

நாச்சார் வீட்டில் ஓடி விளையாடிய காலம் பற்றியும்

நாளாந்தம் இரை மீட்டல் நடங்கும்


அப்பு எப்பிடி எணை உன்னைப் பாத்தவர் என்று கேட்டால் 

கதை சூடு பிடிக்கும்

உங்களைப் போலதான் 

உந்த திண்ணையே கதி என்று வந்து இருந்து குந்து உரஞ்சி உரஞ்சியே என்னைப் பாத்தவர்

கண்ணாலை கதை பேசினவர் 

கருந் தேகமும் களையான முகமும் 

அந்த நாளையான் ஆணழகன் 

இப்ப மட்டுமென்ன கிழவன் இருந்தால்

நீங்கள் எல்லாம் கிள்ளுக் கீரையள் என்று

சொல்லும் போதே ஆச்சி முகத்தில

ஆயிரம் சூரிய ஒளித்தெறிப்போடு 

வெக்கம் வந்து கசியும்


கொண்டாடி வாழ்ந்த வாழ்வென்று

கொப்பாட்டப்பிள்ளை கண்ட பிறகும்

ஆச்சி சொல்லி மகிழும் போது 

அப்பு மேல எனக்கும் பொறாமை வந்து போகும்...


#ஈழத்துப்பித்தன்


2003களில் ஊர் போனபோது ஆச்சிமாரோடு பறைஞ்ச பொழுதில் அவை பறைஞ்சதில் இருந்து...

January 25, 2022

நிறைவாக எங்கள் படலையையும் தாண்டினாள்...



இன்று நள்ளிரவு 23.59 (24.01.2022) க்கு கடந்த 8 நாட்களாக எனக்கிருந்த தனிமைப்படுத்தல் நிறைவடைகின்றது. 

கடந்த வாரம் சோதனை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டதால் குடும்பமாக சோதனைக்கு உட்படுத்திக்கொண்டோம். எனக்கு Negative என்றும் மனைவி பிள்ளைகளுக்கு Positive என்றும் சோதனை முடிவுகள் வந்து சேர்ந்தது. 

பிள்ளைகளுக்கு அதற்கான அறிகுறிகள் இரண்டு நாட்கள் இருந்து குணமானார்கள். மனைவியை கொஞ்சம் அதிகமாகவே வாட்டி எடுத்துவிட்டது. எனக்கு Negative என முடிவுகள் வந்தபோதும் ஒரு கொரோனா தாக்கத்துக்கு உள்ளானவருக்கு ஏற்படும் அனைத்து அறிகுறிகளும் இருந்தது.  அடித்துப் போட்டது போன்ற உடல் நோ, குனிந்து நிமிர, இருந்து எழும்ப வயிறு மற்றும் நாரிப் பகுதிகளில் கொழுவி இழுத்தது. மூட்டு நோ, கை விரல்களில் உழைவு.

மனைவி பிள்ளைகளுக்கு Positive என்ற முடிவு வந்ததாலும்,  நான் இரண்டாவது தடுப்பூசியை எடுத்து 4 மாதங்களை கடந்து விட்டதாலும் அவர்களை விட ஓரிருநாள் அதிகமாக என்னை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டேன். கடந்த வாரத்தின் நடுப்பகுதியில் மீண்டும் சோதனைக்கு அழைக்கப்பட்டேன் அப்போதும் Negative என்றே முடிவு வந்தது. 

ஒடியல்கூழ், ரசம், புளிக்கஞ்சி போன்ற உணவுகளை எடுத்துக்கொண்டோம். சிறந்த நிவாரணியாக இருந்தது. 

வார இறுதில் உடல் ஓரளவு இயல்புக்குத் திரும்பத் தொடங்கியது.

இப்போ அனைவரும் ஓரளவு இயல்புக்கு திரும்பிவிட்டோம். மனைவிக்கு மட்டும் இன்னும் இடைக்கிடை காய்ச்சல் காய்கின்றது. தொடர்ச்சியான மருத்துவருடான ஆலோசனைகளை பெற்று வருகின்றோம். சிலருக்கு ஓரிரு நாளில் சரியாகிவிடும். சிலருக்கு சில வாரங்கள் கூடச் செல்லுமாம். 


கடந்த 2019 ஒக்டோபர் கம்போடியா சென்று வந்த பின் தொடர்ச்சியான கொரோனாக்காலங்களால் விடுமுறைகள் எதையும் எடுக்கவில்லை. எட்டு நாட்கள் அதிகாலை துயிலெழுப்பி இல்லாத உறக்கம். எம்மை மீட்டெடுக்க இயற்கை வழங்கிய காலம் இது.