Pages

November 5, 2024

அமரன்


 அமரன் திரைப்படைத்தையும் இராணுவ வீரனின் கடமை உணர்வையும் காதலையும் எம்மவர்கள் சிலரும் ஆங்காங்கே கொண்டாடித் தீர்ப்பதை காண முடிகின்றது.

ஊதியம் பெற்று தேசக் கடமையாற்றும் இராணுவ வீரர் முன் தேசத்துக்காய் எந்த ஒரு எதிர்பார்ப்பு மற்று தங்கள் உயிரை தந்த பல்லாயிரம் போராளிகளின் கதை இரத்தமும் சதையுமாய் எங்கள் கண் முன்னே உள்ளது.

தங்கள் காதலன் கணவன் போர்க்களத்தில் என்பதை அறிந்து தாமும் தம் துணையின் இலட்சியத்துக்காக தாமும் போராளிகளாகி களம் சென்ற கதைகளுண்டு.

உண்மைக் கதைகளாக பல பதிவாக்கப்பட்டுள்ளன.

படைப்பாளி வெற்றிச் செல்வியின் “போராளியின் காதலி”படைப்பாளி லதா உதயனின் “அக்கினிச் சிறகுகள்”

போரையும் போராளிகளின் காதலையும் பேசும் இரு போராளிகளின் உண்மைக்கதைகள்.

*எங்கள் ஊருக்குள் நடந்த முதற்சண்டை.

*நான் நினைவு தெரிந்து கண்ட முதற் கொலை.

*முதல் இடப்பெயர்வு.

*இரவுகளில் நின்மதி அற்ற தூக்கம். 

*எங்கள் நெருங்கிய உறவுகளுக்குள் பல இழப்புகள்

  என் வயதை ஒத்த பலர் கொல்லப்பட்டும் காயப்பட்டும்.

*யாழ் மருத்துவமனை படுகொலை. அதற்குள் இருந்து தப்பித்து இன்றும் நேரடிச் சாட்சிகளாய் இருக்கும் என் மாமாவும் மச்சான்மாரும்.

*அச்சமூட்டும் பள்ளிக்கும் வீட்டுக்கும் இடையேயான பயணவழி. 8-9 வயதான எங்களைக் கூட மறித்து வைத்து பாடு ஆடு முழங்காலில் நில் என மிரட்டும் சீருடை.

இவை அத்தனையும் பசுமரத்தாணிபோல் பதிந்து இன்றும் பல இரவுகளில் அச்சமூட்டிப் போகும்.  இந்திய இராணுவ பிரதாபங்களை் கொண்டாடக் கூடிய மனநிலையில் நான் இல்லை.


இணுவையூர் மயூரன்

05.11.2024