Pages

November 13, 2024

வாய்ப்பாட்டு இசை அரங்கேற்றம்

 கலாநிகேதன் நடனாலய அதிபர் திருமதி. கிருஸ்ணபவானி சிறீதரன், திரு. தங்கராஜா சிறீதரன் தம்பதிகளின் புதல்வனும் சங்கீதாலய நிறுவுநர் “இசைக்கலைமணி” திரு.செகசோதி ஆறுமுகம் “கலை வித்தகர்” திரு.நீருஜன் செகசோதி ஆகியோரின் மாணவனுமான செல்வன் சிறீதரன் ஹரீஷ் அவர்களின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம் கடந்த 05.10.2024 அன்று சுவிற்சர்லாந்தின் பாசல் மாநிலத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பொதுச் சுடரினை திரு.குலம் அவர்களும் மங்கல விளக்கினை சுவிற்சர்லாந்தின் கலை ஆசிரியர்களும் ஹரீஷ் அவர்களின் வளர்ச்சியில் வழிகாட்டிகளாக திகழ்ந்தோரும் ஏற்றிவைத்து சிறப்பாக ஆரம்பித்து வைத்தனர்.

நிகழ்வின் பிரதம நிகழ்ச்சித் தொகுப்பாளராக இணுவையூர் மயூரன் அவர்களும் இணை நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக இசைகலைமணி, இசைக்குயில் செல்வி அஜானா தயானந்தன் மற்றும் திருமதி அனீனா மதிவண்ணன் ஆகியோரும் தொகுத்து வழங்கினர். பிரதமவிருந்தினராக “சங்கீத வித்துவான்” பராசக்தி விநாயக தேவராசா சக்தி சங்கீதா அக்கடமி,கனடா அவர்களும்
சிறப்பு விருந்தினராக “நவயுக நந்தி” Dr.பத்திரி சதீஸ் குமார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

வரவேற்புரையினை ஹரீஷ் அவர்களின் தாயாரும் நடன ஆசியருமான
திருமதி. கிருஷ்ணபவானி சிறீதரன் அவர்கள் திகழ்த்தினார். ஆசியுரைகளை சுவிற்சர்லாந்து பாசல் மாநிலத்தின் இந்து ஆலய பிரதம குரு சிவஶ்ரீ சந்தானக்கிருஷ்ணக் குருக்கள் அவர்களும் சுவிற்சர்லாந்தின் ஆரம்பகால குருவான சிவஶ்ரீ பாலா கிருஷ்ணகுமாரக் குருக்கள் அவர்களும் வழங்கியிருந்தனர்.

அணிசேர் கலைஞர்களாக
* வயலின் –
கலைவித்தகர்
திரு.நீருஜன் செகசோதி

* மிருதங்கம் –
மிருதங்க வித்துவான்
Dr.பத்திரி சதீஸ் குமார்

* கடம் –
வித்துவான்
R.N.பிரகாஷ்

* தம்புரா –
கலைவித்தகர்
சயந்தவி கேதீஸ்வரன்
மதுவந் மகேஸ்வரன்
யதீஸ்வரந் மகேஸ்வரன்

ஆகியோர் பங்கேற்று ஹரீஷ் அவர்களின் ஒவ்வொரு உருப்படிகளுக்கும் மெருகூட்டியிருந்தனர்.

புலம்பெயர் தேசங்களில் இளைய தலைமுறையினர் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கலை கலாச்சாரம் என்பவற்றை வேறு கலாச்சார முறைகளுக்குள் சிதைந்துபோக விடாது எமது கலாச்சாரத் தனித்துவத்தோடு பேணிப் பாதுகாத்து வருகின்றமை பெரிதும் போற்றுதலுக்குரியதாகும். அவ்வாறான இளைய தலைமுறையினருள் பெற்றோரின் விடா முயற்சியாலும் குருவானவர்களின் அதீத பயிற்றுவிப்பாலும் அரங்கேற்ற நாளில் தொடக்கம் முதல் முடிவு வரை நிகழ்வரங்கையும் வருகை தந்த இரசிகர் குழாமையும் தன்பால் ஈர்த்துவைத்திருந்தார் செல்வன் சிறீதரன் ஹரீஷ் அவர்கள்.

“இசையே நம் உலகின் முதன்மையே அகவிம்பம் காட்டும் ஒலியே” என்ற தோடி இராகம் பஞ்சமுகி திஸ்ரதிரிபுடை தாள பல்லவியை தானே இயற்றி அரங்கத்தில் பாடி இசை இரசிகர்களையும் ஆர்வலர்களையும் வியப்பில் ஆழ்த்தினார். இது இவரது இசைப் பயணத்தின் வீரியத்தை மேலும் முரசறைந்து நின்றது.

வாணி சரஸ்வதியின் கலை அருளும், திருவருள்கடாட்சமும், பரந்த இசைஞானமும் இருந்தால் மட்டுமே இவ் இசைக்கலை கைகூடும். இந்நிகழ்வில் பெற்றோரையும் குருவானவர்களையும் மகிழ்வித்து தன் இசை அரங்கேற்றத்தை இனிதே நிறைவு செய்தார் ஹரீஷ்.

பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர் உரைகளைத் தொடர்ந்து அணிசேர் கலைஞர்கள் மற்றும் இசை ஆசிரியர்கள் மதிப்பளிப்பு நடைபெற்றது. நிகழ்வின் நன்றியுரையினை ஹரீஷ் அவர்களின் சகோகரி காயத்திரி சிறீதரன் அவர்கள் வழங்கியிருந்தார்.

இந்நிகழ்வில் பெருந்திரளான கலை இலக்கிய ஆர்வலர்கள், இசை இரசிகர்கள், சக இசைக் கலைஞர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நன்றி: து.திலக் கிரி யாழ் உரும்பையூர் மற்றும் வீரகேசரி 

நிகழ்ச்சித் தொகுப்பைச் செய்யும் வாய்பைத் தந்த பவானி அன்ரி பாபு மாமாவுக்கு நன்றி சொல்வது தாய்ப்பாலைக் குடித்துவிட்டு வாயைத் துடைத்துக்கொண்டு தாய்க்கு குழந்தை நன்றி சொல்லும் செயலுக்கு ஒப்பானது.

இன்று சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் 1995 இல் கலாநிகேதன் நடனாலயத்தின் “நாட்டியாஞ்சலி” எனும் சுவிற்சர்லாந்தின் முதலாவது முழுநேர நாட்டிய நிகழ்வில் நடனாலயம் சார்பான நன்றியுரையை வழங்கும் வாய்ப்பை 15 வயதுப் பெடியான என்னை நம்பித் தந்து நம்பிக்கையூட்டியவர். 

இந்த அன்பும் ஆசிகளும் என்றும் தொடர வேண்டுகின்றேன். 


அன்புடன்

இணுவையூர் மயூரன்

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.