Pages

July 22, 2026

இணுவில் டென்சி


 காலையில் கண் விழித்தபோது வந்த செய்தி கேட்டு மனம் கனத்துப்போனது!

சில ஆண்டுகளுக்கு முன் தன் ஒரே ஒரு மகளை பறிகொடுத்து கடந்த ஆண்டு மனைவியை பறிகொடுத்து வாழ்வின் பெருந்துயரை சுமந்துகொண்டிருந்த அவர் இன்று இவ்வுலக வாழ்வை நீர்த்தார்.

டென்சி சிறி இவரது நிழற்படக்கலையகம் எங்கள் வீட்டில் இருந்து நடை தூரத்தில் காங்கேசன்துறைவீதியில் இருந்தது. அந்தக் கடை பின் பகுதியில் படமெடுப்பதற்கான ஒழுங்குபடுத்தல்களுடன் முன் பகுதி அழகுசாதன பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் விற்கும் கடையாகவும் இருந்தது. நாங்கள் கந்தசாமி கோயிலடியில் இருந்த தனியார் கல்வி நிலையமான “Everest“ போறதுக்கு வீதியை கடந்து இவரது நிழற்படக் கடைக்கு அருகாக உள்ள ஒழுங்கையால்தான் போவம்.

எங்கள் வீட்டிலும் சில நிகழ்வுகளை இவர்தான் படம் பிடித்து தந்தார். அந்தப் படங்களில் மூலையில் “Inivil Denshi“ என்ற அவரது முத்திரை புடைப்பான எழுத்துகளில் பதிவாகி இருக்கும்.

அப்போ எல்லாம் படங்கள் படச்சுருள் (Filmroll) மூலம் எடுக்கும் முறை இருந்து. அந்த படச்சுருள்கள் கறுப்பு நிற உருளை சாம்பல் நிற மூடியுடன் கூடிய பெட்டியில் அடைத்துதான் வரும். அதை சேகரிப்பது எங்களுக்கெல்லாம் பிடிக்கும்.  அதை எங்களுக்காக எடுத்து வைப்பார் நாங்கள் எவரெஸ்ற் போகும்போது வாங்கி வருவோம். அந்த உருளைக்குள் புளியம்பழம் உப்பு மிளகாய்த்தூள் போட்டு பிரசாந்தி பாடசாலைக்கு கொண்டு வருவாள். 

நான் புலம்பெயர்ந்த பிறகு அவரும் கொழும்புவாசியாகிப் போனார். பேஸ்புக் ஆரம்பமான காலம் அவரது தொடர்பு மீண்டும் புதிப்பிக்கப்பட்டது. 

இணுவிலை சமூக வலைத்தளங்களில் உலவ வைத்தவர்களுள் ஒருவர். கடந்த ஆண்டுகளில் “எங்கள் இணுவில்” என்ற வாட்சப் குழுமத்தை உருவாக்கி உலகு வாழ் இணுவையூர் மக்களை எல்லாம் இணைத்தார். 

அவருடன் கதைக்கும்போது அறிந்தேன் நிறைய பொதுவிடயங்களை செய்ய ஆர்வமாக இருந்தார். பலதை செய்துகொண்டும் இருந்தார்.  

நம்பமுடியவில்லை

ஆழ்ந்த அனுதாபங்கள்! அவர் ஆன்மா கந்தனுள் இளைப்பாறட்டும்.

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

15.02.2026


July 17, 2026

கோடைஉலாத்தல்2026 பகுதி 1

இந்த ஆண்டு கோடை உலாத்தலுக்கு எங்கு செல்லலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தோம். அந்தக் காலப்பகுதியில் எங்கள் மகனின் 13வது பிறந்தநாளும், மகளின் 16வது பிறந்தநாளும் வருவதால், அவர்கள் இருவருக்கும் மிகவும் பிடித்த இடங்களுக்கு அழைத்துச் சென்று, அந்த நாட்களை மறக்க முடியாத நினைவுகளாக மாற்றலாம் என்று முடிவு செய்தோம்.

எங்கள் மகன் தீவிர பார்சலோனா ரசிகன். உலகப் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரங்கள் விளையாடிய, அவனுக்கு மிகவும் பிடித்த Spotify Camp Nou மைதான வளாகத்திலேயே அவனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் என்பது எங்கள் விருப்பமாக இருந்தது. அதேபோல், போர்த்துகல் நாட்டை மிகவும் விரும்பும் எங்கள் மகளை அந்நாட்டுக்கு அழைத்துச் சென்று, அவளது பிறந்தநாளையும் அங்கேயே கொண்டாடலாம் என்று தீர்மானித்தோம்.

இருவரின் பிறந்தநாளுக்கும் நான்கு நாட்கள் மட்டுமே இடைவெளி இருந்ததுடன், அது கோடை விடுமுறைக் காலத்திலும் அமைந்திருந்ததால், முழுப் பயணத்தையும் ஒரே திட்டமாக அமைப்பது எங்களுக்கு மிகவும் எளிதாக இருந்தது. பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அமைதியாகச் செய்து முடித்தோம். இது அவர்களுக்கு ஒரு பிறந்தநாள் இன்ப அதிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதால், பயண நாள் வரும் வரை எங்கள் திட்டத்தை இருவரிடமும் ரகசியமாகவே வைத்திருந்தோம்.

எங்கள் பயணத்தின் உண்மையான இலக்கை அவர்கள் அறியாமல் இருக்க, வேறொரு நாட்டுக்குச் செல்கிறோம் என்றும், பார்சலோனா நகரில் விமானம் மாறுவதற்காகச் சிறிது நேரம் இடைநிறுத்தம் இருக்கும் என்றும் கூறியிருந்தோம். அங்கிருந்து வேறொரு விமானத்தில் எங்கள் பயணம் தொடரும் என்று நம்பியிருந்த அவர்கள், தங்களை எதிர்நோக்கிக் காத்திருந்த அந்த இனிய ஆச்சரியத்தை அறிந்திருக்கவில்லை.

பயண நாளும் வந்தது.

மாத இறுதியும் கோடை விடுமுறைக் காலமும் என்பதால், எனது விடுமுறை முடியும் வரையிலான அனைத்து வேலை ஒழுங்குகளையும் முன்கூட்டியே நிறைவு செய்திருந்தேன். எனக்குப் பதிலாக பணிகளை மேற்கொள்ளவிருந்தவரிடம் தேவையான பொறுப்புகளையும் ஒப்படைத்து முடித்த பின்னர் வீட்டிற்கு வரும்போது மதியம் 1:00 மணியைத் தொட்டிருந்தது.

மாலை 5:30 மணிக்குத்தான் எங்கள் விமானம் புறப்படவிருந்தது. எங்கள் வீட்டிற்கு அருகிலேயே பாசல்/முல்ஹவுஸ் விமான நிலையம் அமைந்திருந்ததால், பிற்பகல் 3:00 மணிக்குப் பின்னர் புறப்பட்டாலே போதுமானதாக இருந்தது. திட்டமிட்டபடி சுமார் 3:30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு, அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்திலிருந்து விமான நிலையப் பேருந்தில் பயணித்தோம். ஏழு நிமிடப் பயணம் மட்டுமே என்பதால், மிகக் குறுகிய நேரத்திலேயே விமான நிலையத்தைச் சென்றடைந்தோம்.

தானியங்கி உள்நுழைவு முறையும், பொதிகளை ஒப்படைக்கும் வசதியும் இருந்ததால், அனைத்து நடைமுறைகளையும் விரைவாக முடித்துவிட்டு 4:30 மணிக்கெல்லாம் எங்கள் விமான வாயிலை அடைந்துவிட்டோம்.

பயண உற்சாகத்துடன் விமானத்திற்காகக் காத்திருந்த அந்த நேரத்தில், விமானம் புறப்படும் நேரம் தாமதமாகும் என்ற குறுஞ்செய்தி எங்கள் தொலைபேசியில் வந்து சேர்ந்தது.

அந்தச் தாமதச் செய்தி, எங்கள் பயணத்தில் எதிர்பாராத ஒரு புதிய அத்தியாயத்திற்கான தொடக்கமாக அமையும் என்பதை அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை.

தொடரும்…

#கோடைஉலாத்தல்2026 #SummerWander2026 #குடும்பப்பயணம் #FamilyTrip #பிறந்தநாள்ஆச்சரியம் #BirthdaySurprise #மறக்கமுடியாதநினைவுகள் #UnforgettableMemories #கனவுப்பயணம் #DreamJourney #பிள்ளைகளின்மகிழ்ச்சி #KidsHappiness #குடும்பநேரம் #FamilyTime #பயணநினைவுகள் #TravelMemories #ஐரோப்பியபயணம் #EuropeTrip #பார்சலோனாபயணம் #BarcelonaTrip #SpotifyCampNou #BarcelonaDream #போர்த்துகல்பயணம் #PortugalTrip #கோடைவிடுமுறை #SummerVacation #எதிர்பாராதஇன்பம் #UnexpectedJoy #ரகசியபயணத்திட்டம் @@#SecretTravelPlan #குடும்பத்துடன்பயணம் #TravelWithFamily #பயணக்குறிப்பு #TravelStory #உலகம்சுற்றலாம் #ExploreTheWorld #நினைவுகளின்பயணம் #JourneyOfMemories

January 21, 2026

ஜெயகுமார் துரைராஜா – செங்காலனின் புதிய உயரிய தலைவர்

இன்றைய Tages Blatt கட்டுரையின் தமிழாக்கம்.

«20 முறை இறந்திருக்கலாம்»

புதிய ஆண்டின் முதல் அமர்வில் செங்காலன் நகர பாராளுமன்றத்தில் பல பதவிகள் புதிதாக நிரப்பப்பட்டன. இதில், பசுமைக் கட்சி (Grüne) சார்ந்த ஜெயகுமார் துரைராஜா, நகர பாராளுமன்றத்தின் புதிய தலைவராக – அதாவது செங்காலனின் உயரிய பதவியாக – தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1988ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு அகதியாக வந்த, ஒருகாலத்தில் எந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களும் இல்லாத ஒரு தமிழர், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் செங்காலன் நகர பாராளுமன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் தான் ஜெயகுமார் துரைராஜா.

தேர்வுக்குப் பிறகு அவர் கூறியதாவது:

«என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய மரியாதை இதுவே.»

ஜெயகுமார் துரைராஜா 2011ஆம் ஆண்டு சுவிஸ் குடியுரிமை பெற்றார். 2016ஆம் ஆண்டு முதல் செங்காலன் நகர பாராளுமன்றத்தில் பசுமைக் கட்சியின் சார்பில் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மூன்று உறுப்பினர்கள் விலகியதைத் தவிர, எந்த எதிர்ப்பு வாக்குகளும் இன்றி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கு முன், பசுமைக் கட்சி மற்றும் இளைய பசுமைக் கட்சியின் பிரிவு தலைவர் கிறிஸ்டியான் ஹூபர், தேர்தல் பரிந்துரையை வழங்கினார். அவர் கூறியதாவது:

«செங்காலன் நகரில் நிரந்தரமாக வசிக்கும் மக்களில் மூன்றில் ஒருபங்கிற்கும் அதிகமானோர் சுவிஸ் குடியுரிமை இல்லாதவர்கள். 15 வயதுக்கு மேற்பட்ட மக்களுள் பாதிக்கும் மேற்பட்டோருக்கு குடியேற்றப் பின்னணி உள்ளது. எனவே இன்று ஒரு ‘கெல்லர்’ அல்லது ‘முல்லர்’ அல்லாமல், ஒரு ‘துரைராஜா’ செங்காலனின் உயரிய பதவிக்குத் தேர்வாகுவது விசேஷமான ஒன்றல்ல. இது இந்த நகரத்தின் மற்றும் இந்த நாட்டின் உண்மையான யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது.»

இந்த யதார்த்தம் எளிதாக உருவானதல்ல; அது முன்பும் இன்றும் போராட்டங்களுக்கு உள்ளாகி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஜெயகுமார் துரைராஜாவின் அனுபவங்கள் தனிப்பட்டவை அல்ல; அவை சுவிட்சர்லாந்தின் குடியேற்ற வரலாற்றின் ஒரு பகுதியாகும்.

1960களில் வந்த இத்தாலிய காலாண்டுத் தொழிலாளர்கள் முதல், 1980களின் அகதி கொள்கைகள், பால்கன் நாடுகளிலிருந்து வந்த அகதிகள், இன்றைய போர் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வருபவர்கள் வரை—குடியேற்றம் பெரும்பாலும் ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கப்பட்டதே தவிர, ஒரு செல்வமாக அரிதாகவே கருதப்பட்டது. இருந்தாலும், குடியேற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது; அது இன்றைய சமூகத்தின் இயல்பான ஓர் அங்கமாக உள்ளது.

«என் இலக்கு வாழ்க்கைத் தப்பிப்பதே»

பதவியேற்பு உரையில், பயிற்சி பெற்ற செவிலியராக இருந்து தற்போது சமூக ஆலோசகராக புதிய பாதையில் தன்னை அமைத்துக்கொண்டு வரும் ஜெயகுமார் துரைராஜா, உள்நாட்டுப் போர் நிலவிய தனது தாயகத்திலிருந்து தப்பியோடிய ஒரு இளைஞனின் கதையை கூறினார். அது உண்மையில், அவர் இளமையில் அனுபவித்த தனது சொந்தக் கதையே.

«நான் என் குடும்பத்தை, நண்பர்களை, எனக்குத் தெரிந்த அனைத்தையும் விட்டுவிட்டு புறப்பட்டேன். பெற்றோர்களும் இல்லை, உடன் பயணிக்க யாருமில்லை. என் இலக்கு ஒரு பதவி அல்லது தொழில்முறை வாழ்க்கை அல்ல; உயிர் தப்பிப்பதே என் ஒரே நோக்கம்.»

அவர் தொடர்ந்து கூறினார்:

«போரின் நடுவிலும், தப்பியோடும் பயணத்திலும், அறியாத எதிர்காலத்தை நோக்கிச் சென்ற வழியிலும், நான் 20 முறை இறந்திருக்கலாம். இருந்தும் உயிர் தப்பினேன்.»

அவரது வார்த்தைகள் மிகுந்த உணர்ச்சியை ஏற்படுத்தின. அவை பாராளுமன்ற உறுப்பினர்களின் மனங்களை ஆழமாகத் தொட்டன. செங்காலனில் அவர் தன்னை வளர்த்துக்கொள்ளவும், ஒரு குடும்பத்தை அமைக்கவும் முடிந்தது. அவர் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. தன்னை நம்பிய மனிதர்களை அவர் சந்தித்தார்; அந்த நம்பிக்கையே அவரை இன்று செங்காலனின் உயரிய பதவிக்கு கொண்டு வந்தது.

«இந்த நாட்டிலும், இந்த நகரமான செங்காலனிலும் வாழ முடிவது ஒரு பெரும் பாக்கியம். நன்றி, செங்காலன்» என்று அவர் கூறினார்.

அவர் ஒரு புகழ்பெற்ற தமிழ் இலக்கிய வரியை (திருக்குறளை) மேற்கோள் காட்டி, அதன் பொருளை விளக்கினார்:

«நன்றி உணர்வு கொண்டவர்களே முன்னேற முடியும்; மற்றவர்கள் முன்னேற முடியாது.»

பாராளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக நோக்கி அவர் கூறினார்:

«உங்கள் இந்தத் தேர்வின் மூலம், நீங்கள் எனக்கு ஒரு பெரிய மரியாதையை மட்டுமல்ல, ஒரு பொறுப்பையும் ஒப்படைத்துள்ளீர்கள்.»

பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதோடு, செங்காலன் நகரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கடமையும் தன்னிடம் இருப்பதாக அவர் நினைவூட்டினார். செங்காலன் ஒரு குடும்பநேய நகரம் என்றும், சமூக உணர்வும், விளையாட்டு-பண்பாட்டு சங்கங்களும், புதுமை, பசுமை, நிலைத்தன்மை மற்றும் பல்வகைத் தன்மையும் கொண்ட நகரம் என்றும் அவர் பாராட்டினார்.

«இந்த பல்வகைச் செங்காலனையும், செங்காலனுக்குள் உள்ள பல்வகைத் தன்மையையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்» என்று அவர் கூறினார்.

மரியாதை, நம்பிக்கை, மதிப்பு மற்றும் நன்றி – இவைதான் நம்மை முன்னேற்றும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து ஜெயகுமார் துரைராஜாவுக்கு நீண்ட நேரம் கரகோஷம் எழுந்தது.


நன்றி: Tages Blatt

தமிழில்: AI உதவியுடன் இணுவையூர் மயூரன்


#TamilNews #Prasident #swisstamil #stgallen

January 16, 2026

சுவிஸ் ஆமியும் சொக்ளேற்றும்


சுவிற்சர்லாந்து இராணுவத்தினருக்கு வழங்கப்படும் சொக்ளேற்.

அதிக உற்சாகம், நீண்ட நாள் கெடாமல் இருக்கும் தன்மை காரணமாக இது படைவீரர்கள், மலையேற்றம் செய்வோர், அவசர நிலைகளில் பயன்படுத்துவதற்காக உற்பத்தி செய்யப்படுகிறது.

சுவிற்சர்லாந்தின் இராணுவப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இராணுவக் கடைகளில் இதனை வாங்கலாம்.

இந்த சொக்ளேற்றை எங்காவது கண்டால், 1992-ஆம் ஆண்டின் கோடை விடுமுறையில் சுவிற்சர்லாந்தின் செங்காளன் (St. Gallen) மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது.

1992 கோடை விடுமுறையின் போது, சுவிற்சர்லாந்தின் செங்காளன் மாநிலத்திலுள்ள Wattwil கிராமத்துக்குச் சென்றிருந்தோம்.

அப்போது எங்கள் பயணங்கள் பெரும்பாலும் தொடரிப் பயணங்களாகவே இருந்தன. சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளிலும் தொடரியில் உலாவியுள்ளோம். தொடரிப் பயணங்கள் எப்போதும் அலாதியானவை.

Wattwil ஒரு அழகான கிராமம். பயணத்தை முடித்துக்கொண்டு, அந்த ஊரின் தொடரி நிலையத்தை நோக்கி சிறு நதியோரமாக நடந்து கொண்டிருந்தோம். அந்தப் பகுதியில் சுவிற்சர்லாந்தின் இராணுவப் பயிற்சி முகாம்கள் உள்ளன.

நாங்கள் நதியோரமாக நடந்துகொண்டிருக்க, எதிர்திசையில் சில சுவிற்சர்லாந்து இராணுவ வீரர்கள் நடந்து வந்துகொண்டிருந்தார்கள்.

இந்திய, இலங்கை இராணுவங்களின் அடாவடித்தனங்களுடன் கூடிய போர்ச் சூழலில் வாழ்ந்து, அந்த அச்சம் நிறைந்த தேசத்திலிருந்து வெளியேறி சில மாதங்களே கடந்திருந்த எனக்கு, இராணுவம் என்றாலே இயல்பான பயம் இருந்தது.

அந்த பயம் என்னையும் அறியாமல் நதிக்குக் கீழேயுள்ள பாதையை நோக்கி இறங்கச் செய்தது.

என் அச்சமான மனநிலையை உணர்ந்த என் தந்தையார் என்னை மேலே அழைக்க முயன்றார். ஏதோ சிக்கல் என உணர்ந்த இராணுவ வீரர்கள் அருகில் வந்து என்ன நடந்தது என்று விசாரித்தார்கள்.

போர்ச் சூழலில் வாழ்ந்ததால் இராணுவம் மீதான பயம் இருப்பதாகச் சொன்னதும்,

“பயப்பட வேண்டாம்” என்று சொல்லி, கைகளைத் தந்து இந்த சொக்ளேற்றையும் கொடுத்து அவர்கள் சென்றார்கள்.

எப்போது, எங்கு இந்த சொக்ளேற்றை கண்டாலும், அந்த நினைவுகள் மனதில் வந்து செல்லும்.


#இணுவையூர்_மயூரன்

16.01.1015


#swissmade #swissalps #swiss #நினைவுகள் #உலாத்தல் #SwissChocolate

#MemoryInASquare #TravelDiaries

#WattwilMoments #UnexpectedKindness

#Summer1992 #SwissArmyChocolate

#SweetMemories #ChildhoodFear #TravelAndStories



ஈழத்தின் போர்க்காலத்தில் இடைக்காட்டிலிருந்து பல குடும்பங்கள் எங்கள் ஊருக்கு இடம்பெயர்ந்து வந்தார்கள். அப்படி வந்த குடும்பங்களில் உள்ள மாணவர்கள் பலர் எங்களுடன் எங்கள் பள்ளிகளில் இணைந்து படிக்கத் தொடங்கினார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவன்தான் கங்கா.

அமைதியான சுபாவமும், அதிர்வில்லா பேச்சும், புதிய முகமும் ஆரம்பத்தில் அவனை எங்களிடமிருந்து சற்றுத் தள்ளியே வைத்திருந்தன.

பழகப் பழக எங்களில் ஒருவனாக மாறிப் போனான். சாரணியம் பற்றி நாங்கள் அறிந்திருந்தாலும், யுத்தகாலம் என்பதால் அது வடக்கின் அனைத்துப் பாடசாலைகளையும் சரியாக வந்தடையவில்லை. எங்கள் பாடசாலையில் ஒருமுறை சாரண இயக்கம் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது; ஆனால் அது ஏனோ பின்னர் தொடரவில்லை.

கங்கா ஏற்கனவே தனது பழைய பாடசாலையில் தன்னைச் சாரணியத்தில் இணைத்திருந்தான். அதைப்பற்றி அறிய எங்களுக்கு ஆர்வம் அதிகம். கதை கதையாகச் சொல்லுவான். சில நேரங்களில் மதில் பாய்ந்து, மரமேறி பயிற்சிகள் செய்ததாகக் கதைகளும் விடுவான். மற்றவர்களைப் பொறுத்தவரை அமைதியானவன் என்ற கங்கா, எங்கள் வட்டத்தில் கலகலப்பான பெடியனாக இருந்தான்.

தொடர்ந்த யுத்தகாலம் என்னை சுவிட்சர்லாந்துக்கும், அவனைப் போராட்டக் களத்துக்கும் அனுப்பியது. ஊருக்குச் சென்றபோது அவனைப்பற்றி ஏனைய நண்பர்களிடம் விசாரித்தேன். “அவன் வன்னியில்” என்ற பதிலே கிடைத்தது.

சில மாதங்களுக்கு முன் ஒரு பேஸ்புக் பதிவின் கருத்துப் பகுதியில், ஒரு போராளி “கங்கா” என்ற பெயரை குறிப்பிட்டு எழுதியிருந்தார். அவன் நினைவு வர, அந்தப் போராளியிடம் “யார் அந்த கங்கா?” என்று விசாரித்தேன். அவர் ஒரு படத்தை அனுப்பி வைத்தார். என் கண்கள் பனித்துப் போனது.

ஆம்… அதே கங்காதான்.

5.1.2008 அன்று, மன்னார் பள்ளமடுவில், சிறிலங்காப் படையின் ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர் தாக்குதலில்,
“காவலன்” என்ற பெயரில்
வீரகாவியமானான்
என்ற செய்தியோடு…

#இணுவையூர்_மயூரன்

#கங்கா #போராளி #மாவீரன் #ஈழம் #சாரணர் 

January 5, 2026

என் முதலாவது விமானப் பயணம் – பயமும் நம்பிக்கையும் கலந்த ஒரு புறப்பாடு.


-தமிழ் மற்றும் ஜேர்மன் மொழியில்-

என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத அனுபவம் எனது முதலாவது விமானப் பயணம். அது 29.09.1991 அன்று நிகழ்ந்தது. இலங்கையின் கொழும்பிலிருந்து ஆரம்பமான அந்தப் பயணம், அபுதாபி வழியாக சூரிச் நோக்கி சென்ற ஒரு நீண்ட பயணம்.

இந்தப் பயணம் ஒரு சாதாரண பயணம் அல்ல. ஏழு ஆண்டுகளுக்குப் பின் என் தந்தையை காணவும், அவருடன் சேர்ந்து வாழவும் மேற்கொண்ட வாழ்க்கையை மாற்றிய ஒரு முக்கியமான பயணம் அது. அந்த எண்ணம் மனதில் மகிழ்ச்சியையும், அதே நேரத்தில் பிரிவின் சுமையையும் ஏந்தியிருந்தது.

அந்த நாட்களில், போரின் நிழலில் வாழ்ந்த நினைவுகள் மனதில் ஆழமாக பதிந்து இருந்தன. போர் விமானங்களின் இரைச்சலும், குண்டுத் தாக்குதல்களின் சத்தங்களும், ஒரு சிறுவனான என்னுள் ஆழ்ந்த அச்சத்தை விதைத்திருந்தன. வானத்தில் பறக்கும் எதையும் பயத்துடன் பார்த்த பழக்கம், அன்று முதன்முறையாக பயணமாக வானத்தை நோக்கி உயர்ந்தபோது, அந்த அச்சத்தோடு கலந்த ஒரு புதிய நம்பிக்கையாக மாறியது.

விமான நிலையத்தின் பரபரப்பும், கையில் கிடைத்த முதல் விமானச் சீட்டும், ஏர்லங்கா (Air Lanka) வானூர்தியின் படிக்கட்டுகளில் காலடி வைத்த அந்தக் கணமும் இன்னும் நினைவில் தெளிவாக நிற்கிறது. விமானம் வானத்தைத் துளைத்து எழுந்தபோது, கீழே சுருங்கிக் கொண்டிருந்த பூமியுடன் சேர்ந்து, போரின் சத்தங்களும், அச்சங்களும் மெதுவாக பின்னால் விடுபட்டதுபோல் உணர்ந்தேன்.

அபுதாபியில் இருந்த இடைநிறுத்தமும், அதன் பின் சூரிச் நோக்கிய பயணமும், ஒவ்வொரு நிமிடத்திலும் ஒரு புதிய உலகத்திற்குள் என்னை அழைத்துச் சென்றது. அந்த முதல் விமானப் பயணம், வெறும் இடமாற்றம் அல்ல; பயத்தின் வானத்திலிருந்து நம்பிக்கையின் வானத்துக்கான ஒரு பயணம்.

இன்று பல விமானப் பயணங்கள் செய்திருந்தாலும், 29.09.1991 அன்று Air Lanka வானூர்தியில் தொடங்கிய அந்தப் பயணம், ஒரு சிறுவனின் அச்சத்தையும், எதிர்பார்ப்பையும், வாழ்வின் புதிய தொடக்கத்தையும் ஒன்றாகக் கட்டியெழுப்பிய ஒரு மறக்க முடியாத நினைவாகவே என்றும் மனதில் நிலைத்து நிற்கிறது.

#இணுவையூர்_மயூரன்

#Airlanka #colombo #srilanaka #swiss #kloten #zürich #flight #facebookpost #viralchallenge

Meine erste Flugreise – eine Reise voller Angst und Hoffnung

Eines der unvergesslichsten Erlebnisse meines Lebens ist meine erste Flugreise. Sie fand am 29.09.1991 statt. Die Reise begann in Colombo, Sri Lanka, und führte über Abu Dhabi nach Zürich – eine lange und bedeutungsvolle Reise.

Diese Reise war keine gewöhnliche. Es war eine lebensverändernde Reise, unternommen, um nach sieben Jahren meinen Vater wiederzusehen und fortan mit ihm zusammenzuleben. Dieser Gedanke erfüllte mein Herz zugleich mit Freude und mit dem Gewicht der Trennung.

Damals waren die Erinnerungen an das Leben im Schatten des Krieges noch tief in meinem Inneren verankert. Das Dröhnen der Militärflugzeuge und die Explosionen hatten bei mir als Kind tiefe Ängste hinterlassen. Die Angewohnheit, alles am Himmel mit Furcht zu betrachten, verwandelte sich an diesem Tag, als ich zum ersten Mal in ein Flugzeug stieg und in den Himmel blickte, in eine neue Hoffnung.

Die Hektik des Flughafens, das erste Flugticket in meiner Hand und der Moment, als ich die Stufen des Air-Lanka-Flugzeugs betrat, sind mir bis heute klar in Erinnerung geblieben. Als das Flugzeug abhob und die Erde unter mir kleiner wurde, schien es, als ließen die Geräusche des Krieges und die Angst langsam hinter sich.

Der Zwischenstopp in Abu Dhabi und die anschließende Weiterreise nach Zürich führten mich mit jeder Minute in eine neue Welt. Diese erste Flugreise war nicht nur ein Ortswechsel, sondern eine Reise vom Himmel der Angst zum Himmel der Hoffnung.

Auch wenn ich heute viele Flugreisen unternommen habe, bleibt die Reise am 29.09.1991 mit Air Lanka eine unvergessliche Erinnerung, die die Ängste, Erwartungen und den Neubeginn eines Kindes zu einer einzigen Erfahrung vereinte und für immer einen besonderen Platz in meinem Leben einnimmt.

#Inuvaiyur_Mayuran


#Airlanka #colombo #srilanka #swiss #kloten #zürich #flight #facebookpost #viralchallenge

December 10, 2025

எயார் சிலோன் முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வரை

 எயார் சிலோன் முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வரை – 78 ஆண்டுகளாக நீளும் இலங்கைத் தீவின் வான்வழிப் பயண வரலாறு



இன்று 78 ஆண்டுகளுக்கு முன்பு, 1947 ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று, இலங்கையின் வான்வழிப் போக்குவரத்து வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள் எட்டப்பட்டது. அன்றுதான் இலங்கையின் தேசிய விமான சேவையான எயார் சிலோன் (Air Ceylon) தனது முதல் சர்வதேச வணிக விமானப் பயணத்தை மேற்கொண்டது.

சீதா தேவி – இலங்கை வானம் கடந்த முதல் சர்வதேச தூதர்

எயார் சிலோனின் டகோட்டா DC–3 வகை விமானமான “சீதா தேவி” ரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் வழியாக இந்தியாவின் சென்னை (Madras) நோக்கிப் புறப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் 16 பயணிகள் பயணித்தனர்.

விமானத்தை இயக்கியவர் கப்டன் பீட்டர் பெர்னாண்டோ இலங்கை விமானப் பண்பாட்டின் ஆரம்பகால முன்னோடிகளில் ஒருவர்.

1947 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா அரசு மூன்று DC-3 விமானங்களைப் பெற்றது. அவற்றுக்கு சீதா தேவி, விகாரமஹாதேவி, சுனேத்ராதேவி என வரலாற்று சிறப்புமிக்க பெயர்கள் சூட்டப்பட்டன. இவை இலங்கையின் முதல் சிவில் விமானப்படையின் அடித்தளத்தை அமைத்தன.

எயார் சிலோனில் இருந்து ஏர்லங்கா வரை

எயார் சிலோன் பல ஆண்டுகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச சேவைகளை வழங்கியபோதிலும், 1978–79 காலத்தில் அதன் சேவைகள் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து, 1979 ஆம் ஆண்டு, புதிய தேசிய விமான சேவையாக Airlanka (ஏர்லங்கா) நிறுவப்பட்டது. இது இலங்கையின் வான்வழி தொடர்புகளை சர்வதேச அளவில் மறுபடியும் எழுச்சி பெறச் செய்தது.

ஏர்லங்காவிலிருந்து இன்றைய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

1998 ஆம் ஆண்டு, ஏர்லங்கா நிறுவனம் Emirates உடன் இணைந்து, அதன் பெயரை “SriLankan Airlines” என மாற்றிக் கொண்டது.

புதிய பெயர், புதிய அடையாளம், மேம்பட்ட விமானப் படை, வலுவான சர்வதேச நெட்வொர்க்—all contributed to making SriLankan Airlines the national carrier recognized across the globe.

வானில் எழுந்து 78 ஆண்டுகள் – ஒரு வாழும் வரலாறு

1947 இல் “சீதா தேவி” ஆக ஆரம்பித்த பயணம், இன்று நவீன ஏர்பஸ் விமானங்களுடன் உலகம் முழுவதும் பறக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வரை வளர்ந்து வந்துள்ளது.

ஒரு சிறிய தீவின் வான்வழிப் பயணக் கனவு, பல தலைமுறைகளின் உழைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் இலங்கையின் அடையாளப் பெருமையுடன் இன்றும் தொடர்கிறது.



#AirCeylon #Airlanka #SriLankanAirlines #AviationHistory #SriLankaAviation #SeethaDevi #DC3 #SriLanka #OnThisDay #AviationHeritage #CeylonHistory #தமிழ்

December 9, 2025

“பூங்கோதை”



பூங்கோதை என அறியப்படும் கலா சிறீரஞ்சன் பேஸ்புக் மூலம்தான் அறிமுகமாகினார். பிரித்தானிய வாசியான ஒரு சிறுவர் பள்ளியின் ஆசிரியராக தன்னம்பிக்கையுள்ள துணிவான பெண்மணி இப்படித்தான் அவரை அவரது பதிவுகள் எனக்கு இனங்காட்டியது. 

இலண்டனில் இலக்கியச் செயற்பாடுகளில் தன்னார்வத்தோடு செயற்திறன் மிக்கவராக செயற்பட்ட இவர் ஊர் மீதும் சமூகம் மீதும் இயற்கை மீதும் அழகியல் மீதும் பற்றும் ஈர்ப்பும் கொண்டவர்.

ஊர் பற்றிய வேரைத் தேடும் பதிவுகள் அவரையும் என்னையும் ஒரு கோட்டில் இணைத்தன. 

ஒரு நாள் தான் தீராத நோயில் இருந்து மீண்டு வந்தது பற்றி ஒரு பதிவு அந்தப் பதிவு அனுதாபம் தேடியதாக இல்லாமல் தற்துணிவைத் தருவதாக ஒரு பிரச்சனையில் இருந்து மீண்டு வரும் நம்பிக்கையை தருவதாக இருந்தது.

2022 ஏப்ரல் மாதம் நான் ஊர் போயிருந்த வேளையில் அவரும் ஊர் வந்திருந்தார். கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்ற அவரது “நிறமில்லா மனிதர்கள்” நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு வந்து சிறப்புப் பிரதியை பெறுமாறு அழைத்திருந்தார். சுவிசுக்கு மீண்டும் திரும்பும் நாளில் அவரது நிகழ்வு திட்டமிடப்பட்டிருந்தது. எனது விமானப்பயணத்துக்கு சிலமணிநேரத்துக்கு முன்னதாக அந்த நிகழ்வு, அவரது அன்பான அழைப்பை ஏற்று நிகழ்வுக்கு சென்று சிறப்புப் பிரதியை பெற்று நிகழ்வு முடிவடைவதற்கு முன்னதாகவே திரும்பியிருந்தேன்.

பின்னர் தொடர்புகொண்டு தன் அன்பையும் நன்றியையும் தெரிவித்து படங்களையும் அனுப்பி வைத்திருந்தார்.

தங்கள் ஊர் மாம்பழம் பற்றி அதனை இயற்கை முறையில் பழுக்க வைத்து உண்பதைப் பற்றி பதிவிட்டிருந்தார்.

2023 இல் நாம் ஊர்போயிருந்த போது தென்மராட்சியில் நின்றிருந்தா, முன்னர் ஒரு தடவை அவரது பதிவொன்றில் நான் சொன்னதை நினைவில் வைத்து, பிள்ளைகளையும் அழைத்து வாங்கோ மாம்பழம் இயற்கை முறையில் பழுக்க வைத்துள்ளேன் என்று படமும் அனுப்பியிருந்தார். தொடர் பயணங்களால் அந்தப் பயணத்தில் அவரை திட்டமிட்டு சந்திக்க முடியாது போய்விட்டது.

இன்று மதியம் வந்த செய்தி இயற்கையை நேசித்த பூங்கோதை அவருக்கு மிகவும் பிடித்த இயற்கையுடன் இரண்டறக் கலந்தார் என்ற செய்தி!

தனக்காக யாரும் அனுதாபப் படக்கூடாது என்று விரும்புவர்.

அவர் அவரது எண்ணப்படி பூக்களின் உலகில் பூங்கோதையாய் என்றும் அழகிய தேவதையாய் உலாவரட்டும்.


நினைவுகளுடன் 

இணுவையூர் மயூரன்

November 26, 2025

மண் காத்த பெருமானை கண்ணெதிரே கண்டேன்

அது 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் நாள் காலை. வன்னி மண்டலத்தின் விசுமடு கிராமம் வழமைபோல இயங்கிக்கொண்டிருந்து. மார்கழி மாத குளிரையும் பனித்துகிலையும் கிழித்துக்கொண்டு என்றும் இல்லாதளவு பிரகாசத்தோடு கதிரவன் அந்த நாளின் அதிகாலையிலேயே ஒளிபரப்பத் தொடங்கிவிட்டான். விசுவமடுவில் உள்ள கேணல் கிட்டு அரசறிவியல் கல்லூரி அந்த அதிகாலை வேளையிலும் என்றுமில்லாதவாறு மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. வழமையாக அங்கு உள்ளவர்களை விடவும் புதிதாகச் சிலர் வந்திருந்தனர். ஊடுருவி அனைத்தையும் ஆராய்ந்து கண்காணிக்கும் வல்லமை கொண்டவர்களாக அவர்களது தோற்றம் இருந்தது. அந்தப் பகுதி அந்தக் கணம் முதல் அவர்களின் முழுமையான கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் உள்ளது என்பதை தொடர்ந்த நடைமுறைகள் காட்டி நின்றன. நடைபெறுகின்ற செயற்பாடுகள் மனதுள் ஒருவித இனம் புரியாத மகிழ்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. என் மனதில் இருந்த உட்சபட்ச ஆசை இன்று எப்படியும் நிறைவேறும் என்ற நம்பிக்கை மனவெளியை நிறைத்து மகிழ்வைத் தந்தது.

அறியல் கல்லூரியின் அந்த கொட்டில் அறையில் அனைவரும் எங்கள் எங்கள் இருக்கைகளில் இருக்கின்றோம். காலை 9:00 மணி இருக்கலாம். கொட்டிலின் பின்புறத்தால் நுழைகின்றது அந்த உருவம். சாதாரண மனிதர்களைவிடவும் சற்று உயரம் குறைவு, உருண்ட கண்களில் பேரொளி கொண்ட பார்வை, உதடு பிரியாமல் மலர்ந்த மந்திரப் புன்னகை, ஒளி படர்ந்த பரந்த முகம் பின்னே ஒளி வட்டம் போன்ற பிம்பம் என் கண்களையே என்னால் நம்பமுடியாது விழிகளை அகல விரித்துப் பார்க்கின்றேன். ஓம்! அவரேதான். உலகத்தமிழர்கள் ஒருமுறையேனும் எட்ட நின்றேனும் கண்டு விட வேண்டும் என துடிக்கும் அவர் என் விழி வீச்சுக்குள் இதோ என் அருகே எனக்கும் அவருக்கும் இடையே ஒரு அடிக்கும் குறைவான இடைவெளி. விழிகளை மூடாது வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். தன் இருக்கையில் வந்து இருக்கின்றார். ஒவ்வொருவராக அறிமுகமாகி உரையாடுகின்றோம். என் முறை வழமையாக இத்தகைய சந்திப்புக்களில் தத்தளிக்கும் என் தமிழ் அருவி ஊற்றாய் தங்கு தடையின்றி வருகின்றது. “வணக்கம் அண்ணா” என்று அழைத்து அறிமுகமாகி உரையாடுகின்றேன். 

போரைப் பற்றி போர் வெற்றிகளைப் பற்றி வீரப் பிரதாபங்களைப் பற்றி அவர் பேசவில்லை. புலம்பெயர்ந்து போய் திரும்பி வந்த இளைஞர் கூட்டத்தோடு ஒரு இயல்பான உரையாடலை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றார். நாங்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் எந்தவொரு மிகைப்படுத்தலும் இல்லாமல் சாதாரணமாக பதில் சொல்லிக் கதைக்கிறார். 

அவருடனான காலை உணவுப் பொழுது. மிகவும் நிசப்தமாக நிகழ்ந்துகொண்டிருந்தது. அங்கு இருந்த ஒரு சிறுவன் மைலோவின் கடைசிச் சொட்டை ஊன்றி உள் இழுத்து உறுஞ்சுகின்றான். நிசப்தமாய் இருந்த அந்த இடத்தை அந்தச் சத்தம் நிறைக்கின்றது. அந்தத் தம்பியை திரும்பிப் பார்த்து இந்தத் தம்பி போலத்தான் எனக்கும் அந்த அடிச் சொட்டை உறுஞ்சிக் குடிக்க விருப்பம் சபை நாகரீகம் கருதி இருக்கிறேன் என்றார். சபை கலகலத்துச் சிரித்தது.

நிறைய விடயங்கள் உரையாடினோம். அவர் ஆசானாகவும் நாங்கள் மாணவர்களாவும் இருந்து கற்கும்

பலருக்கும் கிடைக்காத பேறு எனக்கு கிடைத்தது. 


“மண் காத்த பெருமானின் கண் எதிரே கண்டேன்

மாசற்ற திருவுருவின் முன் அமர்ந்து இருந்தேன்”

#ஈழத்துப்பித்தன்

November 20, 2025

பிராம்ப்டன் நகரம் தமிழ் ஈழ தேசியக் கொடியை அங்கீகரிப்பு



பிராம்ப்டன் நகரம் தமிழ் ஈழ தேசியக் கொடியை அங்கீகரிப்பு: தமிழர்களுக்கு ஒரு சிறு ஒத்தடம்

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் உள்ள பிராம்ப்டன் நகரம், தமிழ் ஈழ தேசியக் கொடியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. கலாச்சார மற்றும் சமூகப் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, உள்ளூர் தமிழ் சமூகத்தினரால் வரவேற்கப்பட்டுள்ளது.

இந்த அங்கீகாரம், அரசியல் ரீதியாக பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு தீர்மானமாக இல்லையெனினும், நீண்ட காலமாக துன்பங்களையும் துயரங்களையும் மனச்சோர்வையும் இயலாமையையும் அனுபவித்த தமிழர்களுக்கு ஒரு மனப்பூர்வமான ஆதரவாகக் கருதப்படுகிறது. உலகத் தமிழரின் சமூக, பண்பாட்டு அடையாளத்துக்கு மதிப்பளிக்கப்படும் ஒரு சிறிய படியாக பலர் இதைப் பார்க்கின்றனர்.

உள்ளூர் தமிழ் சமூகங்கள், தங்கள் வரலாற்று நினைவுகளும் துயர அனுபவங்களும் வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, தங்கள் சமூகத்தின் குரல் கேட்கப்படுகிறதென்பதை உணர்த்துவதாக தெரிவித்துள்ளனர்.

பிராம்ப்டனில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு இது ஒரு முக்கியமான குறியீட்டு வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

இணுவையூர் மயூரன் 
20.11.2025

#தமிழ் #தமிழீழம் #தமிழர்கள்அடையாளம் #TamilEelam #Brampton #TamilCommunity #CulturalRecognition
#தமிழர்பெருமை #தமிழ்புலம்பெயர் #EelamTamils #news #செய்தி #Canada #Brampton #BramptonCity
#CanadaTamils #TamilDiaspora்#TamilCommunity
#TamilEelam #தமிழீழம் #தமிழர்கள் #EelamTamils
#TamilIdentity #CulturalRecognition #TamilPride #TamilHistory #TamilRights #TamilInCanada

November 16, 2025

புத்தனின் ஆசை


 அசைவற்ற ஆசையை சொல்லி

அவா நீக்கப் போதித்தவர் - அவர் வழி

அந்த மார்க்கம் ஏந்தியவர்கள் இன்று

மண் ஆசை மாயையில் மிதக்கின்றனர்.


துறவின் தொண்டை தாங்கி வந்த கைகள்

தரையைத் தழுவி எதற்கோ ஏங்க,

அதே புத்தனின் பெயரைச் கொண்டு

ஆக்கிரமிப்பின் வழி அடியெடுத்து நிற்கின்றனர்


தியாகத்தின் தீபம் ஏற்ற வேண்டியோர்

தம் கொள்கைக்கே தீ வைத்ததுபோல்,

போதனையின் புனிதத்தை மறந்து

பொய்யான பேராசையில் கலந்து போகின்றனர்.


#ஈழத்துப்பித்தன்

16.11.2025


படம்: எங்கள் வீட்டின் வரவேற்பறையில் உள்ள புத்தரின் ஓவியம்.

“புத்தரைத் தமிழர்கள் யாரும் வெறுப்பதில்லை;

புத்தரின் பெயரும் சின்னமும் நிலப்பரப்பு ஆக்கிரமிப்புக்காக பயன்படுத்தப்படும்போதே அதற்கு எதிர்ப்புத் தோன்றுகிறது.”


#புத்தர்சிலை #திருகோணமலை #buddha #BreakingNews

November 15, 2025

சுவிஸ்ஸில் பிளாஸ்டிக் பாட்டில்களால் செய்யப்படும் வாடகை குடைகள் இருப்பது தெரியுமா?

 

நான் இன்று Kiosk-ல் பார்த்த ஒரு விடயம் எனக்கு பிடித்தது…” 

சுவிஸ் நாட்டில் உள்ள பல “Kiosk” கடைகளில் இத்தகைய வாடகைக் குடைகளை காணலாம்.

இவை வாடகைக்கு வழங்கப்படும் குடைகள்.

ஒரு சிறிய முற்பணமும் வாடகைக் கட்டணமும் செலுத்தி குடையை எடுத்துச் செல்லலாம். பின்னர், இதே முறையில் வாடகை வழங்கும் எந்தக் கடையிலும் குடையை திருப்பிக் கொடுத்து, நீங்கள் செலுத்திய முற்பணத்தை மீண்டும் பெறலாம்.

இந்தக் குடையின் சிறப்பு என்னவென்றால், இது மீள்சுழற்சி செய்யப்பட்ட நெகிழி போத்தல்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு குடை தயாரிக்க நான்கு PET போத்தல்கள் பயன்படுத்தப்படுகிறதாம். பிளாஸ்டிக் பயன்பாடு, மறுசுழற்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த திட்டம் இயங்குகிறது.

இந்த மாதிரி வாடகை முறை வேறு நாட்டிலும் உள்ளதா ?


— இணுவையூர் மயூரன்

#plastik #schirm #umbrella #recycling #followersreelsfypシ゚viralシ #viralシalシ  #Switzerland #Recycling #EcoFriendly #Umbrella #PlasticFree #Sustainability #தமிழ் #Environment #GreenLiving #Kiosk #PET #Reelsதமிழர் #TamilBlog

November 11, 2025

தேநீர்

தேநீர் பிரியனான எனக்கு “நாட்டில் இருந்து கொண்டு வந்தேன் குடித்துப்பார்” என எத்தியோப்பிய நாட்டுத் தோழி கடந்த கோடை விடுமுறையின் பின் ஒரு வகையான தேயிலையை கொண்டு வந்து தந்திருந்தாள்.

அதை மறந்தே போனேன். இன்றுதான் அதனை சுவைத்துப் பார்க்க நாள் கூடியது.

பொதியை திறந்தபோதே கதம்பமான வாசனை நாசியை நிறைத்தது. சுடுநீரில் ஏழு முதல் பத்து நிமிடம் வரை ஊற வைத்து அருந்துமாறு வழிகாட்டி சொன்னது. அதன் படி தேநீரை தயாரித்தேன். 

அந்தத் தேயிலை செந்நாரைக்கனிகள் (Rosehip), செவ்வரத்தம்பூ, அப்பிள், தோடம்பழத்தோல், இளஞ்சிப்பூண்டு (லெமன் கிறஸ்), பீற்றூட், சூரியகாந்தி இதழ்கள், செம்புற்றுச்செடியின்இலை, பூனைக்கால்மலர், கருந்தேணி/செந்தேணி இலைகள், புதினா இலைகள், நீலத்தாமரை மலர்கள் போன்ற பல விதமான பொருட்களை உலர்த்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

சீனீ சேர்க்காது கண்ணாடிக் கோப்பையில் தேநீரின் வாசனையை நுகர்ந்து வர்ணத்தை ரசித்து சுவைக்கவே எனக்குப் பிடிக்கும். 

இந்தத் தேநீரையும் அப்படித்தான் சுவைத்தேன். மிதமில்லாத புளிப்பும் துவர்ப்பும் கலந்த ஒரு வித சுவை. குடித்து முடித்த பொழுது ஒரு புத்துணர்சசி ஒட்டிக்கொண்டது.

#இணுவையூர்_மயூரன்

11.11.2025


#tea #நேநீர் #tee #followersreelsfypシ゚viralシfypシ゚viralシalシ #evning

November 8, 2025

மாற்றுத்திறன்

 

2003ம் ஆண்டு வன்னியை மையமாக கொண்டு தமிழர்களுக்கான ஒரு நிழல் அரசு நடந்துகொண்டிருந்த காலம்.

அந்த மண்ணிலே பல இல்லங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. தாய் தந்தையை இழந்த பிள்ளைகள், விழிக்கட்புலன், செவிக்கட்புலன், பேச்சுத்திறன், உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கான இல்லங்கள் இருந்தன. இதில் பெரும்பாண்மையான இல்லங்களுக்கு நான் நேரடியாகவே சென்றிருந்தேன்.

இந்த இல்லங்கள் எவற்றிலுமே சாதாரணமாக அன்று எம்மிடம் பேச்சு வழக்கில் இருந்த அனாதை, ஊமை, செவிடன், குருடன், வலதுகுறைந்தோர் என்ற சொற்பதங்களை பேச்சிலும் எழுத்திலும் நான் காணவில்லை. ஏன் அங்கு வாழ்ந்த மக்களிடமே அது பெருமாற்றத்தை கொண்டுவந்திருந்தது.

இவை அனைத்திலும் மனிதர்களை அவர்களின் குறைவால் அல்ல, அவர்களின் மனிதப்பண்பால் அடையாளப்படுத்தும் மொழி மாற்றம் ஏற்பட்டது.

அது ஒரு சாதாரண மாற்றமல்ல மரியாதை, கண்ணியம், மனித நிலையுணர்வு, மொழி விழிப்புணர்வு ஆகியவற்றின் வெளிப்பாடு.

தமிழ்நாட்டில் கூட இன்றுவரை அனாதை இல்லங்கள் என்றே இருக்கின்றன. அங்கு அன்றேஆதரவற்றோர், வலது குறைந்தோர் என்ற சொல்லுக்கு பதிலாக அவர்களின்்விழிக்கட்புலன், செவிக்கட்புலன், பேச்சுத்திறன், வலுவிழந்தோர், மாற்றுத்திறனாளிகள் போன்ற சொற்பதங்களே சாதாரண மக்கள் வரை பயன்பாட்டில் இருந்து. 

ஒருவரின் குறை அவரின் அடையாளம் அல்ல என்று கற்றுக்கொடுக்கப்பட்டது. மொழி என்பது நெறி என்பதை அவர்கள் நடைமுறையாகச் செய்தனர்.

“மாற்றுத்திறன்” என்ற சொல் அங்கிருந்தே பொதுவாகப் பரவியது.

அந்த பகுதிக்குள் வாழ்ந்ததாக கூறும், இன்று இடதுசாரிய அரசியலின் ஆட்சியில் ஒரு அங்கமாக தன்னை நிலைநிறுத்தி்நிற்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர், பள்ளி ஆசிரியராக பாடசாலை அதிபராக பல ஆண்டுகள் கடமையாற்றியவர், மொழிப்பயன்பாட்டில் நிச்சயம் முன்னோடியாக இருக்க வேண்டியவர். இருக்க வேண்டும்.


இணுவையூர் மயூரன்

08.11.2025

November 7, 2025

“ரீவிக்காரன் நல்ல யாவாரிதான்! -விடுப்பு_சுப்பர்

ரீவிக்காரன் -விடுப்பு சுப்பர்

சில ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் தமிழகத்தின் முன்னணித் தொலைக்காட்சியொன்று நவம்பர் 27 ந் திகதி ஒரு பிரமாண்ட நிகழ்வை சிங்கப்பூரில் செய்யவுள்ளதாக அறிவித்தல்விடுத்தது.  அறிவித்தல் வந்த நொடி முதல் சமூகவலைத்தலங்களில் அந்த அறிவித்தலை பகிர்ந்து எதிர்ப்பலை பெருமளவில் கிழம்பியது. கிட்டத்தட்ட இரண்டு வாரம் அந்த எதிர்ப்பு தொடர்ந்துகொண்டிருந்தது.

இரண்டு வாரங்களுக்கு பின்னர் அந்த தொலைக்காட்சி நிறுவனம் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த நிகழ்வை டிசம்பர் மாதத்துக்கு  பின்நகர்த்துவதாக அறிக்கையொன்றை வெளியிட்டது.

அறிக்கை வந்த மறுநொடியே எதிர்த்தவர்கள் எதிர்காதவர்கள் இரண்டு தரப்பையும் பார்வையாளர்களாக பார்த்தவர்கள் எல்லாம் அந்த அறிக்கையை பகிர்ந்தபடி “தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்த” தொலைக்காட்சி நிறுவனத்துக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள்.

“ரீவிக்காரன் நல்ல யாவாரிதான்! விமர்சிச்சவையை வைச்சே விளம்பரப்படுத்துறான்” 

இந்த ரீவிக்காரனுக்கு நவம்பர் 27 மாவீரர் நாள் எண்டதும் அது தமிழரின் உணர்வோட ரண்டறக் கலந்தது எண்டும் அதே நாளில் நிகழ்வை வைச்சால் பெரும் எதிர்ப்பு வரும் எண்டதும் முதலே தெரியாததே? அப்பிடித் தெரிஞ்சும் அந்தநாளை ஏன் தெரிவு செய்து எண்டத கதைக்க வேணும். இந்த தெளிவு வந்து அந்த யுக்தியைதான் எதிர்க்க வேணும். இல்லாட்டிப் போனால் இப்படியே எதிர்த்தும் அதுக்கு பிறகு ஆதரிச்சும் அதுக்கு நாங்களே விளம்பரம் செய்யிற நிலமைக்கு தள்ளப்படுவம். “விமர்சனத்தை உருவாக்கி அதை வைத்தே விளம்பரம் செய்யும் வியாபார யுக்தி” இது. என்றவாறு சுப்பர் இலையுதிர்கால மரங்கள் போல் இருந்த தன் மண்டையை குல்லாத் தொப்பியால் மறைத்தபடி நடக்கத் தொடங்கினார்.

#விடுப்பு #விடுப்பு_சுப்பர் #tvshow #hilights #followersreelsfypシ゚viralシfypシ゚viralシalシ

விடுப்பு_சுப்பர் ரசிகர்களும் உங்கள் போலதானே


 “ஈழத்துப் படைப்பு” என்று கூறிக்கொண்டு, அதன் தொடக்க நிகழ்வில் படக்குழுவே இந்தியக் கலைஞர்களை மட்டுமே சிறப்பு பிரதிநிதிகளாக நிறுத்தி, பார்வையாளர்கள் மட்டும் ஈழக் கலைஞர்களின் படைப்பை கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த அளவில் நியாயம்?

ரசிகர்களும், உங்களைப் போலவே, ஈழக் கலைஞர்களை புறக்கணித்து இந்தியக் கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிப்பது பிழையில்லைத்தானே? என்று கேட்டவாறு சுப்பர் குல்லாத் தொப்பியை இழுத்து காதை மூடியவாறு நடையைக் கட்டினார்.

#விடுப்பு_சுப்பர்

November 5, 2025

நினைவில் கொள்வோம்


சுவிற்சர்லாந்தில் சட்டரீதியாக தோற்றுவிக்கப்பட்ட முதன்மையான தமிழ்ப்பாடசாலை பாசல் தமிழ்ப்பாடசாலை ஆகும். 1992 ஆம் ஆண்டு Freiplatzaktion (FPA) உதவி அமைப்பினால் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் FPA அமைப்பு ஆதரவளித்த போதிலும், பாசல் தமிழ்ப்பாடசாலை சுயாதீனமாகத் தனது கல்வித்தொழிலை மேற்கொண்டு வந்தது.

காலந்தோறும் FPA அமைப்பிற்கும் தமிழ்ப்பாடசாலைக்கும் இடையில் தொடர்பாளர் நியமிக்கப்பட்டு, அந்த ஒத்துழைப்பும் பணித் தொடர்ச்சியும் பேணப்பட்டன.

அத்தகைய தொடர்பாளர்களில் ஒருவராகச் செயல்பட்டு, தமிழ்மாணவர்கள் தமது மொழிக் கல்வியை தொடர அரசமைப்பு, கல்வி மற்றும் சமூக மட்டங்களில் பல்வேறு உதவிகளை செய்து வந்தவர் திருமதி மீரியாம் (Miriam Solveig Forrer-Clauberg) ஆவார். 

இவர் தமிழ் மக்களின் இருப்பிற்கும் இளைய தலைமுறையினரின் வளர்ச்சியிலும் ஆழமான அக்கறையும் மேம்பாட்டிற்கும் உதவியுள்ளார். தனது இளமைக் காலத்திலேயே புலம்பெயர் சமூகம் தொடர்பாகவும் அகதிகளுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதிலும் பல தளங்களில் பணியாற்றியுள்ளார்.

தமிழ்மொழி கல்விக்கான அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்ட அவர், தமது 46 ஆவது வயதில் 22.10.2025 அன்று இயற்கை எய்தினார்.

தமிழர் கல்வி வளர்ச்சிக்கு அவர் வழங்கிய அருமையான பங்களிப்புகள் என்றும் நினைவில் நிலைத்திருக்கும். அவரின் சேவையை நெஞ்சில் நிறுத்தி மனமார்ந்த வணக்கத்துடன் நினைவு கூறுகின்றோம்.

நினைவுகளுடன்
இணுவையூர் மயூரன்

October 28, 2025

பாறணை சோறு

 


எங்கட வீட்டு பாறணை என்பது குடும்பம் ஒருங்கிணையும் கொண்டாட்டம்.

எங்கள் வீட்டு வாண்டுகள் எல்லாம் அந்த நாளுக்காக காத்திருப்பார்கள். இரவு எல்லோரும் சேர்ந்து கதை பேசி உறங்குவதில் அவர்களுக்கு பேரானந்தம். 

காலையில் வாழையில் பந்தியில் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவதில் அவ்வளவு மகிழ்வு.

எல்லோருமே முதன் நாள் இரவு சூரன் போர் பார்த்துவிட்டு அம்மா வீட்டுக்கு சென்றுவிடுவோம். இப்போ பிள்ளைகள் எல்லாம் வளர்ந்துவிட்டாலும் அவர்களுக்கான பாடசாலை ஆரம்பமாகும் நேரத்துக்கு முன்னதாகவே காலை பாறணையை முடித்துவிட்டு பாடசாலைக்கு செல்வோர் சென்றுவிடுவார்கள்.


இன்று மருமகன் அகரனுக்கு பாடசாலையால் ஒரு சிறு சுற்றுலா அதனால் அவன் வரமுடியாத நிலை இருந்தது. இந்த வாரம் நிலவும் சீரற்ற காலநிலையால் அவனது அந்தச் சுற்றுலா நேற்று திடீரென நிறுத்தப்பட அவனும் நேற்று இரவே வரமுடிந்தது. வந்தவன் சொன்னான் தான் ஒவ்வொருநாள் இரவு படுக்கபோகும் போதும் முருகனை கும்பிடுவேன் இந்தச் சுற்றுலா எப்படியாவது நிறுத்தப்பட வேணும் அப்பதான் நான் அத்தான் மச்சாளாக்களோட குஸ்தி அடிக்கலாம் என்று. 


இந்த ஆண்டு இனியாவும் எங்களுடன் சேர்ந்திருக்கின்றாள். நிச்சயம் அடுத்த ஆண்டு வாழையிலை இட்டு எங்களோடு சரிக்கு சரியாக அமர்ந்து 

அவளும் பாறணைச் சோற்றுக்கு அட்டகாசம் செய்வாள்.


October 12, 2025

அந்தக் கண்கள்


மெல்லிய இரவின் நிழல் போல
மென்மையாய் பேசும் அந்தக் கண்கள்,
நிசப்தத்தின் மொழியை கற்றுத் தந்தது
நிதானமான சுவாசத்தின் உயிர் திசுக்களாய்

ஆழமாய் துடிக்கும் ஒவ்வோர் அலையிலும்
சிறு உணர்வுகளாய் தோன்றித் திரிந்தது 
அந்தக் கண்கள் பேசும் போது,
சொற்களே மௌனமாகி விடுகின்றன

புன்னகையின் வெளிச்சத்தில் நெளியும் போது,
அவைகள் ஒரு விடியலின் துளி போல 
உறங்கிய கனவுகளை விழித்தெழச் செய்கின்றன,
மனம் முழுவதும் ஒளிரும் ஒளியாக.

அந்தக் கண்கள் ஒரு உலகம் தானே
அதன் ஆழத்தில் மறைந்திருக்கும்
காதலும் கண்ணீரும், கனவுகளும் 
அனைத்தும் பேசாத சொற்களாய் நிற்கின்றன

எத்தனை முறை பார்த்தாலும்,
அந்தக் கண்கள் புதிதாகவே தோன்றுகின்றன 
அவற்றில் ஒளிந்து பிரதிபலிக்கிற
முழு உயிரின் உணர்வும் அழகும்.

#இணுவையூர்_மயூரன்
12.10.2025

September 17, 2025

மாட்டுப் பேரணி


 கடந்த 15ந் திகதி சுவிற்சர்லாந்தின் பேர்ண் நகரில் நடைபெற்ற மாட்டுப் பேரணி.

ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் மாடுகளை பசுமையான மலை மேய்ச்சல் பகுதிகளுக்கு அழைத்துச் செல்வார்கள். அங்கு குளிர்ச்சியான காற்று, சுவையான புல் கிடைப்பதால் பால் அதிகம் தரும். செப்டம்பர் மாதத்தில் குளிர் தொடங்கும்போது, அந்த மாடுகளை கிராமங்களுக்கு திரும்பக் கொண்டு வருவார்கள்.

அந்த வருகை ஒரு விழாவாக கொண்டாடப்படுகிறது.

மாடுகளுக்கு அழகான மலர் மாலைகள், வண்ணமயமான அலங்காரங்கள், பெரிய மணி  அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்படுகின்றன.

மக்களும் இந்த நாளில் பாரம்பரிய உடையில் பங்கேற்பார்கள்.

இசை, நடனம், உள்ளூர் உணவுகள், சந்தை போன்றவற்றோடு கொண்டாட்டம் களை கட்டும். 

அதாவது, இது மாடுகளுக்கான நன்றி தெரிவிக்கும் விழா . இயற்கையிலிருந்து கிடைத்த பால், சீஸ், வெண்ணெய் போன்றவற்றுக்கு நன்றியை வெளிப்படுத்தும் ஒரு பழமையான சுவிஸ் மரபு.

சுவிற்சர்லாந்தின் மாடுகளின் பேரணி பாரம்பரியம், எங்களுடைய மாட்டுப்பொங்கலுடன்  ஒத்துப்போகும் ஒரு பண்டிகையாகும்.

இணுவையூர் மயூரன்

18.09.2025


#cowparade #SwissAlps #swiss #tamil #switzerland #news