April 26, 2018
''தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகங்களின் பங்கு"
சட்டி சோறு
************
மலேசியாவின் கோலாலம்பூர் நகரின் மையப்பகுதி தமிழர்களின் ஆளுகைக்குள் கட்டுண்டு கிடக்கின்றது.
எப்படி பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகரின் வடபரிஸ் தொடருந்து நிலைய வாசலில் வெளியேறியதும் சோறு வாசம் கமகமக்குமோ அப்படித்தான் கோலாலம்பூர் நகரின் பிரதான தொடருந்து நிலைய வாசலை விட்டு வெளியேற தமிழ்ப்பெயர்ப்பலகைகளும் சோறு வாசமும் கண் சிமிட்டும்.
மலேசியாவில் எங்கும் கிடைக்காத சட்டி சோறு எனப்படும் சிறப்பு உணவு இந்த ஏரியாவில்தான் கிடைக்கும். அதுவும் ஒரே ஒரு கடையில்.
சுபிரமணிய பிரபா சட்டி சோறு சாப்பிடுவம் என்றபோது அந்த சட்டி சோறு என்ற சொல்லே ஒரு ஈர்ப்பையும் சாப்பிட வேணும் என்ற விருப்பையும் ஏற்படுத்தியது.
கடையை தேடிப்பிடித்து போனபோது சோத்துப்பிரியர்களால் கடை நிரம்பிக் கிடந்தது. ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டுமென்று கடை உரிமையாளர் சொன்னபோது சிறுகுடலை பெருங்குடல் தின்று தீர்த்துவிடுமளவு பசியின் வேகம் அதிகரித்துப்போயிருந்தது.
நண்டு, கோழி, றால், ஆடு, மீன் என சட்டிச்சோறு பல வித சுவையோடு உடனுக்குடன் சமைக்கப்பட்டு அதே மண் சட்டியோடு பரிமாறப்பட்டுக்கொண்டிருந்த
கறிகளை உடனுக்குடன் சமைத்து அதற்குள் அரிசியையும் சேர்த்து அவியவிட சுவையான சட்டி சோறு யாழ்ப்பாண வாசத்தோடும் சுவையோடும் தயாராகியிருக்கும். அப்பிடி ஒரு சுவை.
குடிப்பதற்கு ஆவரம்பூ மற்றும் நற்சீரகம் அவித்த தண்ணீரும் தரப்பட்டது.
நாக்கை விட்டகலாத சுவை இன்னொரு முறை வாய்ப்பிருந்தால் சுவைக்க வேணும்.
உணவகத்தை அறிமுகப்டுத்தி சட்டி சோறு போட்ட சுபிக்கு நன்றி.
உலாத்தலும் உறவுகளும்
January 30, 2018
குழந்தைகளின் கல்வி
****************
இப்போ எங்கள் தாயகத்தின் கல்விமுறை ஒரு காட்சிப்படுத்தலாக குருவி தலையில் பனங்காயை சுமக்க்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு குழந்தையாக முதல்நாள் பள்ளி போகும் நாளிலிருந்தே பிள்ளை தன் இயல்பைத் தொலைத்ததாக மாற்றப்படுகின்றது. இது ஒரு ஆரோக்கியமான சூழலல்ல; தாயகம் செல்லும் காலங்களில் அங்குள்ள பெற்றோர்கள் பிள்ளைகளின் படபடப்பை திட்டமிட்ட மிகைப்படுத்தப்பட்ட கல்விமுறையை கண்டு கொதிப்புற்றிருக்கிறேன். நாம் எட்டுப்பாடக் கல்வியைக்கொண்டு சத்தியம் பண்ணிய காலத்திலேயே இயல்பைத் தொலைக்காமால்தான் இருந்தோம். ஆனால் இன்று பிள்ளையின் பள்ளி ஆரம்பநாளே கால்கோள் விழா எனும் பெரும் ஆர்ப்பாட்டத்தோடுதான் ஆரம்பிக்கின்றது. அதன் பின் கண்பாடம் கட்டிய குதிரைகள்போல் தாய்மொழியை புறந்தள்ளிய கல்விச் சூழலுக்குள் இயற்கையை மறந்த இயற்கையிலிருந்து புறந்தள்ளிய கல்விச் சூழலுக்குள் பத்து வயதாவதற்குள் புலமைப்பரிசில் பரீட்சை என்ற ஒரு தராதரத் தெரிவுக்கான ஓட்டத்தினுள் தம்மை தொலைக்கின்றார்கள். குழந்தைகளாய் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அந்த வயதுக்கான அத்தனையையும் இழந்து நிற்கின்றார்கள். இந் நடைமுறை ஒரு ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை கட்டியெழுப்புமா என்பது கேள்விக்குறியே?
இந்தவேளையில் சுவிற்சர்லாந்தின் பாசல் மாநிலத்தில் பின்பற்றப்படும் கல்விமுறை பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
சுவிற்சர்லாந்தைப் பொறுத்தவரை ஐந்து வயதில்தான் Kinder Garten மழலைப் பள்ளிக்கு போகவேண்டும். அந்த வயது கணிப்பிடும் இறுதிநாளான யூன் 30ந் திகதியாகும். யூலை 15 க்குள் பிறந்ததோர் விருப்பத்தெரிவில் ஓராண்டுக்கு முன்னரே பள்ளியில் இணைய முடியும். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஓராண்டுக்கு முன்னரே மழலை பள்ளியில் சேர்த்துவிடலாம்.
ஆனால் மூன்று வயதிலிருந்து Spiel Gruppe என்று சொல்லப்படும் இருநாட்கள் விளையாட்டு குழுவுக்கு செல்ல வேண்டும். இது முன்னர் கட்டாயமில்லை. வெளிநாட்டு மாணவர்கள் மொழிப் பரீட்சியத்தை முன்னரே பெற்றுக்கொள்வதற்காய்
இப்போ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான சந்திப்பிற்கு செல்லும் வெளிநாட்டு பெற்றோருக்கு ஒரு விடயம் கண்டிப்பாக சொல்லப்படும் நீங்கள் உங்கள் வீட்டில் பிள்ளையுடன் தாய்மொழியில் பேசுங்கள். பிள்ளைக்கு பிராந்திய மொழியை கற்பிக்காதீர்கள். அவர்கள் வாழும் சூழலிலிருந்து அந்த மொழியை கற்றுக்கொள்வார்கள்.
சுவிற்சர்லாந்தைப் பொறுத்தவரை ஆறு வயதுக்கு பின்னர்தான் பிள்ளைகளுக்கு எழுதப்பழக்க வேண்டும். அதுவரை வாழும் சூழலுக்கேற்ப அவர்களின் எண்ண ஓட்டத்துக்கு அமைவாக கல்விமுறை அமைந்திருக்கும்.
குறிப்பாக விளையாட்டு குழுவில் பலதரப்பட்ட உள்ளக வெளிப்புற விளையாட்டுகளும் வர்ணங்களும் தாள்களும் இருக்கும். ஒன்பது மணிக்கு ஆரம்பமாகி இரண்டு முதல் மூன்று மணி வரை நடைபெறும் இக் குழுவில் இவர்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. ஒன்பது மணிக்கு இவர்கள் உள் நுழைந்ததும் வர்ணம் தீட்ட விரும்புவோர் வர்ணம் தீட்டலாம் கடை விளையாட்டு விளையாட விரும்புவோர் தாமகவே இணைந்து கடை விளையாட்டையோ சமையல் விளையாட்டையோ அல்லது அங்குள்ள அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டை விளையாடலாம். அல்லது குட்டித் தூக்கம்போட விரும்புவோர் அதையும் செய்து கொள்ளலாம். காலநிலை எப்படி இருந்தாலும் அதற்கான உடைகளோடு அவர்கள் கொஞ்சநேரம் வெளிப்புறத்திலும் விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த காலம் நிறைவடைந்து மழலைப் பாடசாலை ஆரம்பமாகும். இது இரண்டு ஆண்டுகள் நீடிக்கும். சாதாரணமாக 5. வயதிலிருந்து 7 வயது வரை, இது காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகும். கொஞ்சம் களைப்பாவோ எழும்ப பஞ்சியாவோ இருந்தால் 8.30 வரையும் செல்லலாம். இங்கும் விளையாட்டு குழுவில் இருக்கும் நடைமுறைதான். ஆனால் இங்கு இவை திட்டமிட்டு பகுக்கப்படும். வர்ணம் தீட்டவோ படம் கீறவோ ஒரு குறிப்பிட்ட நேரமும் விளையாட்டுக்கு என ஒரு நேரமும் பாடல் பாடவென ஒரு நேரமும் பகுக்கப்படும். இது ஒரு திட்டமிட்ட ஒழுங்குமுறையில் நடைபெறும். காலநிலைக்கேற்ப இயற்கையை பற்றிய அறிதலை நேரில் அழைத்துச் சென்று கற்பிதல் இல்லாது அவர்கள் கண்வழி உள்வாங்க வைத்து சிந்தனையை தூண்டுவார்கள். இந்த மழலைப் பாடசாலை காலத்திலிருந்து ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனியான கோப்பொன்று ஆசிரியரால் தயாரிக்கப்படும் அது தொடர்ச்சியாக மேல் வகுப்பு செல்லும் வரை அம் மாணவர் பற்றிய தரவுகளோடு ஆசிரியர்களூடாக கைமாறும். இவர்களின் நடவடிக்கை ஈடுபாடுகளைகளை வைத்து அவர்கள் பற்றிய கணிப்பீட்டு வரைபை மழலைப் பாடசாலை கணிப்பிட்டு எழுதும். அதன் அடிப்படையில் ஏனைய வகுப்புக்களுக்கு செல்லும்போது அம் மாணவருக்கான கற்பித்தல் நடைபெறும்.
ஏழுவயதில் முதலாம் வகுப்புக்கு முதலாம் வகுப்புக்கு செல்ல முன்னர் பெற்றோர்களுடனான ஒன்றுகூடல் ஒன்று நடைபெறும். இது மிக முக்கியமான ஒன்றுகூடலாகும்...
தொடரும்....
#இணுவையூர்_மயூரன்
#குழந்தைகளும்_கல்வியும்
நீண்டகாலமாக எழுத நினைத்த இத் தொடரை எழுத ஊக்கியாய் இருந்த சங்கீர்த்தனனுக்கு நன்றி.
September 11, 2017
போர்க்கால நினைவுகள்
September 4, 2017
சாதீ
ஆவணப்படுத்தப்படுகின்றது
ஒழிக்கப்பட வேண்டிய விடயம்
ஊதி பெருசாக்கப்படுகின்றது
தேவை இதுதான் என்று திடமாய்
தீர்மானமாய் திணிக்கப்படுகின்றது
கண்களின் முன்னே திரையிடப்பட்டு
காட்சிகள் நகர்த்தப்படுகிறன
திரைக்கு பின்னே என்ன
தெரிந்தும் தெரிய விரும்பாதவராய்
முதுகுப் புண்ணை சொறிந்து
சொறிந்து சிற்றின்பம் காண்கிறோம்
அரிப்பு அகலப்படும்
அது அடுத்த சந்ததியையும்
காவுகொள்ளும்
அறியாத மூடர்களா நாம்
எவனோ ஆட்டுவிக்கின்றான்
ஆடிக்கொண்டிருக்கின்றோம்
முடிவு எதுவென்று
முழுதாய் தெரிந்த பின்னும்
அற்ப சுகங்களுக்காய்
புசத்திக் கொள்கின்றோம்
தெளிவு பெறாத வரை
தீர்வு இல்லை.
04.09.2017
May 10, 2017
சிந்தையிலை வந்து போகுது
பண்ணை கடல் வெளி
வண்ண விளக்குகளால்
மின்னி மினுங்குதாம்
அள்ளி வந்து அதை
திரைகளில் நிரப்பி
துள்ளி மகிழுது
எம் தமிழ் தும்பிகள்
பட்டி தொட்டி எங்கும்
படோபாகார அலங்காரங்களாம்
பகிடியும் பம்பலுமாய்
பொழுதுகள் கழிவதாய்
புழுகித் தள்ளுகிறான்
பள்ளித் தோழன் ஒருவன்
அவித்த கிழங்கும்
அரைச்ச சம்பலும்
ஆமி தந்தவன்
அமிர்தமாய் இனித்ததாம்
சொல்லிப் போகிறான்
பிள்ளை பருவத்தோழன்
ஆமத்துறுக்கள் கைகளில்
கட்டிடும் நூல் பெரும்
பாதுகாப்பு கவசமாம்
வைரவர் கோயில் பூசாரியின் மகன்
வியந்து சொல்கிறான்
வெள்ளிக் கிழமை தோறும்
சிங்களப் பெட்டையள்
சுற்றுலா வந்து
சுழட்டியடித்து போகிறாளவையாம்
ஆரியகுள சந்தி
அல்லோல கல்லோல பட்டு போகுதாம்
பாவி எனக்கு மட்டும்
கொள்ளி வைக்க ஆள் இன்றி
கொன்று குவித்து
சீன அமிலம் தின்று தீர்த்தும்
சிவந்து கிடக்கும் மண் ஏனோ
சிந்தையிலை வந்து போகுது...
#ஈழத்துப்பித்தன்
10.05.2017
March 7, 2017
சுவிசில் பூமிஅதிர்வு
நேற்று (06.03.2017) இரவு 21 மணி 12 நிமிடமளவில் சுவிற்சர்லாந்தின் கிளாறோஸ் பகுதியில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சி தென் சுவிற்சர்லாந்து மற்றும் கிழக்கு, வடக்கு சுவிற்சர்லாந்துப் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இது றிக்றர் அளவுகோலில் 4.6 அளவில் பதிவாகியுள்ளது. எவ்வித உயிர் சேதமும் ஏற்படாதபோதிலும் பல பகுதிகளிலும் சிறு அளவிலான பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள சுவிசின் பிரபல சஞ்சிகையான பிளிக் அடுத்த பெரும் அதிர்வு எப்போ என கேள்வியை எழுப்பியுள்ளது.
சுவிற்சர்லாந்தின் ஏதோ ஒரு பகுதியில் ஆண்டுதோறும் நில அதிர்வு இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதுவரை சுவிற்சர்லாந்தில் ஏற்பட்ட நில அதிர்வுகளில் 1356ம் ஆண்டு ஒக்டோபர் 18 ந் திகதி ஏற்பட்ட அதிர்ச்சியே அதிக அழிவுகளை ஏற்படுத்திய அழிவாகும்.
இவ் அதிர்வு பாசல் மாநிலத்தின் றைனாக் பகுதியில் 7 றிக்டர் அளவில் ஏற்பட்டு பல பகுதிகளை பேரழிவுக்கு உள்ளாக்கியதோடு 2000 பேர் வரையில் இறந்ததாகவும் பதிவுகள் உள்ளன. றைனாக் பகுதியில் இறந்தவர்களின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள சிலுவை இன்னமும் உள்ளது.
பாசல் நகரின் மையத்திலுள்ள முன்ஸ்ரர் தேவாலயமும் பேரழிவுக்கு உள்ளானதாகவும் எட்டு நாட்கள் வரையில் நகரின் பல பகுதிகள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டேயிருந்ததாகவும் பதிவுகள் உள்ளன.
மீண்டும் ஒரு பேரழிவை சுவிற்சர்லாந்து எதிர்கொள்ளலாம் என நிலவியல் நிபுணர்களின் ஆய்வுகள் சொல்கின்றன.
படம் 1
சுவிற்சர்லாந்தில் பூமிஅதிர்ச்சி நடைபெற வாய்ப்புள்ள பிராந்தியங்கள்.
படம் 2
06.03.2017 இரவு பூமிஅதிர்ச்சி ஏற்பட்ட பகுதி.
படம் 3
1356 இல் ஏற்பட்ட பூமி அதிர்ச்சி பற்றி சொல்லும் ஓவியம்.
படம் 4
1356 இல் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியில் கொல்லப்பட்டோருக்காக றைனாக் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிலுவை.
படம் 1 இல் வட பகுதியில் நான் வாழும் பாசல் மாநிலம் எச்சரிக்கைக்கு உரியபகுதியாகும்.
#ஈழத்துப்பித்தன்
February 26, 2017
எங்கள் தேசக்குயில்
இந்திய இராணுவ வெளியேற்றத்துக்கு பிறகு எங்கள் ஊர்கள் மீண்டும் புதுப்பொலிவுபெற்று கொண்டாட்டமும் கும்மாளமுமாய் ஆனது. பின்னேரம் அஞ்சு மணிக்கு முன்னமே முடிங்கிக் கிடந்த எங்கள் ஊர்களின் கோவில்களில் இரவுத் திருவிழாக்கள் களை கட்டத் தொடங்கின.
சிவகாமி அம்மனின் சின்னத்தம்பிப்புலவர் அரங்கும் காரைக்கால் சிவனின் முன் வீதியும் இரவுத் திருவிழாக்களில் களை கட்டும். அருணா கோஷ்டி வருகுதெண்டா எல்லார் மனங்களும் புழுகத்தில் துள்ளும் எஸ்பிபி மனோ இவையையெல்லாம் நாங்கள் அறியமுன்னமே நாங்கள் அறிஞ்ச பாடகன் சாந்தன். அந்தப்பாடல் எனக்கு சரியா நினைவில்லை ஆனா அந்தப்பாட்டை சாந்தனும் சுகுமாரும் சேர்ந்து பாடியிருந்தவை எண்டது மட்டும் நல்ல நினைவு. சிவகாமி அம்மன் கோயில் சின்னத்தம்பி புலவர் அரங்கின் வலப்பக்கமா இருக்கும் நிழல்மரவள்ளிப் பக்கமா சாந்தன் கையை காட்டிபாடி முடிக்க சுகுமார் பாடுவார் இப்பிடித்தான் அந்தக்காட்சி அந்த வயசிலை என்ரை மனசிலை பதிஞ்சது. தன் கணீர் காந்தக் குரலால் எங்கள் இதயங்களிலெல்லாம் குடியேறுகின்றான்.
இந்தமண் பாடலை சாந்தன் பாடமுன் புலிகளால் தமிழகக்கலைஞர்கள் மூலம் வெளியிடப்பட்ட பாடல்தொகுப்புகளில் வெளிவந்த பாடல்களில் தீயினில் எரியாத தீபங்களே போன்ற பாடல்களை அரங்கிலே பாட அம்மனின் வீதிகள் அழுதுறையும்.
அதன் பின்னைய காலங்களில் இந்த மண் எங்களின் சொந்தமண், எதிரிகளின் பாசறையை தேடிப் போகிறோம் போன்ற பாடல்கள் எங்கள் தேசியகீதமாய் வாய்களில் முணுமுணுக்கத் தொடங்கின.
1991 தாயகத்தை பிரிந்து சுவிஸ் வந்த பின்னும் அந்தப் பாடல்கள் என் தாயகத்துக்கும் எனக்குமான பாலமாய் மனவெளியெல்லாம் வியாபித்தேயிருந்தது. இங்கு வந்தபோது அந்தப்பாடல்களை கேட்கவேண்ட்மென மனம் ஏங்கினாலும் அது எனக்கு கிடைக்கவில்லை. அப்போ எங்கள் மாநிலத்தின் இயக்கப் பொறுப்பாளரா இருந்த தினேஷ் அண்ணாட்டை என்ரை விருப்பத்தை சொல்ல அவர் அந்த இசைப் பேழைகளை கொண்டு வந்துதந்தார். உண்மையில் என்ரை வாழ்கையில் அதியுச்ச மகிழ்ச்சியில் திழைத்த நாட்களில் அந்த ஒன்று. தொடரும் நாட்களின் இரவு பகல் பள்ளியின் இடைவேளை நேரங்களில் எல்லாம் பாடகர் சாந்தன் என்னோட உறவாடத்தொடங்கினார். பல்லாண்டு காலம் திரையிசைப்பாடல்களை காட்டிலும் தாயகப்பாடலுக்கும் எனக்குமான நெருக்கம் அதிகமாக இருந்தது.
ஆனையிறவு கைப்பற்றப்பட்டபோது வந்த இசைப்பேழையில் இடம்பெற்றபாடல்களில் சாந்தனின் குரலில் வந்த பாடல்கள் மனதில் நீங்க இடத்தைப் பிடித்து எங்கள் திருமண ஒளிப்பதிவுப் பிரதிகளிலும் இடம்பிடித்தன.
2003 சமாதானகாலத்தில் சுவிற்சர்லாந்துக்கு தமிழீழ இசைக்குழு வந்தபோது மிக மகிழ்வாயிருந்தது. முதன்நாள் நிகழ்வுகள் சுவிசின் பிறிபேர்க் நகரில் நடைபெற்றது எனக்கு நுழைவாயில் பகுதியில் பணி தரப்பட்டதால் இசை நிகழ்வை அனுபவித்து ரசிக்க முடியாது போனது. பின் நடந்த இரு நிகழ்வில் நான் எவ்வித பணியையும் ஏற்காது முழுமையான நிகழ்வையும் பார்த்து லயிக்க முடிந்தது. நேர்காணலும் செய்ய முடிந்தது.
அதன் பின்னையகாலம் பாலா அண்ணா மற்றும் தமிழ்ச்செல்வன் அண்ணாவுக்கான இரங்கல் பாடல்கள் எங்கள் விழிகளையும் மனங்களையும் கசிய வைத்தது.
2009 இறுதி யுத்தம். 2010 பிற்பகுதியில் ஒருநாள் சாந்தன் குடும்பத்துடன் விடுதலையானார் என்ற செய்தி வந்தது. இரு பிள்ளைகளை மாவீரராய் கொடுத்து பலநூறு பாடல்களை பாடி விடுதலைக்கு நீர்பாய்ச்சிய ஒரு கலைஞன் பலராலும் துரோகியாய் பார்க்கப்பட்டான். அதன் பின் வெற்றிலைக்காய் பாடியபோது இன்னும் விமர்சனத்துக்கு உள்ளானான். அவனின் அன்றைய சூழல் அவனிடத்தில் யார் இருந்தாலும் அதுதான் நிலை. மீண்டும் ஒரு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் பாடலூடாய் சாந்தனின் கணீர் குரல் மனதை நிறைத்தது. தொடர்ந்து பல ஆலயங்களின் இசைத்தொகுப்புக்களிலும் சாந்தனின் குரலில் பாடல்கள் வரத்தொடங்கின எங்கள் ஊர் சிவகாமி மீதிலும் சில பாடல்களை பாடினார். விரைவில் எனது வரியில் வரவுள்ள இசைப்பேழையில் ஒரு பாடலை சாந்தன் அண்ணா மூலம் பாடவைக்க விரும்பியபோது இசையமைப்பாளர் உமா சதீஸ் சாந்தன் அவர்களோடு கதைத்தபோது அவரும் உடன்பட்டிருந்தார் முன்பைப்போல வீரியமாக பாடமுடியாது மெல்லிசையாக வடிவமைக்குமாறும் கேட்டிருந்தார். அதற்கான ஏற்பாட்டை செய்தபோதுதான் கடந்தமாதமளவில் அறிந்துகொண்டோம் இனி அவரால் தற்போதைக்கு பாடமுடியாதென அது எனது துர்திஸ்டமே. ஆனால் இவ்வளவு விரைவாக இனி எப்போதும் பாடமுடியாத நிலையை அடைவார் என எவரும் எதிர்பார்காகவில்லை.
அவரது பேரிழப்பின் வலி சுமந்து நிற்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் அன்னாரின் பிரிவுத்துயரிலிருந்து மீண்டெழும் வரத்தை காலமும் இயற்கையும் தந்தருளட்டும்.
February 8, 2017
பாதைகள் மாறாது
இலக்கில் மாற்றமில்லை
தேவைகள் ஆயிரம்
திடம் தனை குலைத்தாலும்
ஆவி அடங்கும் வரை
அவள் நினைப்பே
தீயிட்டு எரித்து
சிறு சாம்பல் துகளாய்
சிதறிப் பறக்கையிலும்
சீமாட்டி உன் நினைப்பே
சிந்தை எங்கும்
சீராக நிறைந்திருக்கும்
பக்கம் வந்து
பாசத்தோடு ஆசை தீர
அள்ளி முத்தமிட்டு
அழுது தீர்த்துவிட
பத்திரம் இல்லாததால்
பரி தவித்து நிற்கின்றேன் நான்.
#ஈழத்துப்பித்தன்
08.02.2017
படம்: யாழ் - கொழும்பு பயணத்தடம், டிசம்பர் 2015
கானா பிரபா அண்ணா யாழ் பயணத்தடத்தின் படம் போட்டு கடுப்பேத்தியதன் விளைவு. Kana Praba :)
February 7, 2017
**********************
நாகரீக உச்சம் தொட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் பட்டியலிலும் உலகில் தனிமனித சுதந்திரம் மதிக்கப்படும் நாடுகள் பட்டியலிலும் நடுநிலைகொள்கைபேண் நாடுகள் பட்டியலிலும் முதன்மைத் தெரிவாய் உள்ள நாடு சுவிற்சர்லாந்து.
ஐரோப்பிய வரலாற்றில் பெண்களுக்கான வாக்குரிமையை இறுதியாக வழங்கிய நாடுகள் வரிசையில் போர்த்துகல் மற்றும் சுவிற்சர்லாந்து பதிவாகியுள்ளன.
பெண்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களும் விடாமுயற்சியும் இன்று 46 ஆண்டுகளுக்கு முன் இதேநாளாளில் (07.02.1971) பெண்களுக்கான வாக்குரிமை பெற்றுக்கொடுத்த நாள்.
சுவிற்சர்லாந்து பெண்களுக்கான வாக்குரிமையை அளிப்பதற்கு பதினொரு ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் முதலாவது பெண்பிரதமரை ஆட்சிக்கட்டில் இருத்தி அழகுபார்த்த தேசம் இலங்கைத்தீவு என்பது குறிப்பிடத்தக்கது.
November 26, 2016
தமிழ் இன அரணே போற்றி!!!
காப்பு
சீர் மேவும் ஈழ திருநாட்டு மன்னவன்
பார் வாழும் தமிழர் இல்லத்து பகலவன்
கார் இருளகற்றும் கரிகாலன் மீதினிலே
ஈழத்துப்பித்தன் இவன் போற்றி பாடி புகழ்பரப்ப
விதைத்த புலி மறவர் மீதினிலே காப்பதாமே....
தமிழ் இன அரணே போற்றி!
தாய்த் தமிழ் தளிரே போற்றி!
வாய்த்த நம் வளமே போற்றி!
வரலாற்றின் பேர் ஒளியே போற்றி!
வல்வை இன் செல்வா போற்றி!
வளம் மிகு வளவா போற்றி!
ஈடிலா அரும் பொருளே போற்றி!
ஈகைக்கு மறுசொல்லே போற்றி! போற்றி!
தமிழ்க் குடி காத்தோய் போற்றி!
தன் குடி ஈந்தோய் போற்றி!
கடல்தனை ஆண்டோய் போற்றி!
காற்றிலும் பறந்தோய் போற்றி!
மாதர் தம் மடமையை உடைத்தோய் போற்றி!
மாசில்லா மன்னவா போற்றி!
தேற்றுவார் இல்லா இனத்தின் தேவனே போற்றி!
தேசியத்தலைவனெனும் பெரோளியே போற்றி! போற்றி!
மாறில்லா கொள்கை கொண்டோய் போற்றி!
மனிதத்தின் மான்புறு வடிவே போற்றி!
செந்தளிர்கள் காத்தோய் போற்றி!
செஞ்சோலை தனை அமைத்தோய் போற்றி!
செங்கொடி கண்ட செல்வனே போற்றி!
அன்பு இல்லம் கண்டோய் போற்றி!
அனாதை என்ற சொல்லை அழித்தோய் போற்றி!
எத்திக்கும் புகழ் கொண்ட எந்தையே போற்றி! போற்றி!
முப்படை கண்ட தமிழா போற்றி!
மூவுலகிலும் காணாத புண்ணியா போற்றி!
இந்தியப் படைகளை எதிர்த்தோய் போற்றி!
இரும்பின் திடம் கொண்டோய் போற்றி!
கரும்பினை ஒத்த குணத்தோய்போற்றி!
கார் இருள் அகற்றிய கதிரே போற்றி!
நெருங்கும் பகையை நீர்த்தாய் போற்றி!
நேரிய பார்வை கொண்ட மன்னவா போற்றி!போற்றி!
நெருப்பினை ஒத்த விழியோய் போற்றி!
நிலவினை ஒத்த முகத்தோய் போற்றி!
நீறு பூத்த நெருப்போய் போற்றி!
காவல் துறை கண்டோய் போற்றி!
ஏவல் துறைகளை அழித்தோய் போற்றி!
நிழல் அரசு கண்டோய் போற்றி!
நீதியை நிலை நாட்டினாய் போற்றி!
நின்மதி தந்த நித்திலா போற்றி! போற்றி!
கல்விக் கழகம் கண்டோய் போற்றி!
கண்ணெனத் தமிழை காத்தோய் போற்றி!
கலைகளை வளர்த்த காவியா போற்றி!
விலைபேச முடியா வீரியா போற்றி!
அலைதனை ஆண்ட அண்ணனே போற்றி!
நிலை தவறாத நீதியனே போற்றி!
குலையாத அரசின் கோவே போற்றி!
தலையான எங்கள் தலைவா போற்றி! போற்றி!
வேலுப்பிள்ளையின் மைந்தனே போற்றி
வீரச்சேனையின் அதிபதியே போற்றி
வித்தகனே தத்துவனே வீரனே போற்றி
விடுதலைப் புலி அமைத்த வீரியமே போற்றி
பார்வதி அம்மா தம் பாலகா போற்றி
பாரில் தமிழர் தம் பகலவா போற்றி
பாசம் கொண்ட தலைவா போற்றி போற்றி
உலகம் வியக்கும் உன்னதமே போற்றி
ஊராண்ட தமிழின மாண்பே போற்றி
தீரனே! தேசக் காவலனே போற்றி
தீச்சுவாலையை முறியடித்தோய் போற்றி
தீந்தமிழை அரசாள வைத்தோய் போற்றி
துயிலும் இல்லங்கள் அமைத்தோய் போற்றி
தொலை நோக்கம் கொண்டோய் போற்றி
தூய தமிழ் தன் காவலா போற்றி போற்றி
சூரியத் தேவனே சுந்தரா போற்றி!
சூழ்ந்த தொல்லைகள் சுட்டெரித்தோய் போற்றி!
கானகம் ஆண்ட காவலனே போற்றி!
இணுவை மண்ணில் பிறந்தோய் போற்றி!
இன்னல்கள் யாவும் களைந்தோய் போற்றி!
புங்கை மண்ணில் மணந்தோய் போற்றி!
புத்தொளி எமக்கு பாய்ச்சினோய் போற்றி!
மலரும் ஈழத்தின் மான்பே போற்றி! போற்றி!
மீன்மகள் தேசத்தின் சூரியா போற்றி!
தேன்மலர் காட்டின் தெய்வமே போற்றி!
முல்லை மண்ணை மீட்டோய் போற்றி!
மூத்த குடிக்காய் இல்லம் அமைத்தோய் போற்றி!
ஓயாமல் சுழன்ற அலையே போற்றி!
நெருப்பாற்றில் நீந்திக் கடந்தோய் போற்றி
ஒருதாய் மக்களாய் எமை இணைத்தோய் போற்றி! போற்றி!
காத்திகை மைந்தனே கதிரோனே போற்றி!
காலம் தந்த காவியனே கரிகாலனே போற்றி!
நீல வான எல்லை தனை அளந்தோய் போற்றி!
நித்திலம் முழுதும் புகழ் பெற்றோய் போற்றி!
எம் தமிழ் குலத்தின் கொழுந்தே போற்றி.!
ஏற்றம் கண்ட மாபெரும் மன்னவா போற்றி!
காற்றென பகை சாடி காத்தோய் போற்றி!
ஊற்றென எழும் எங்கள் உணர்வே போற்றி போற்றி!
கரிகால வளவனே காவியனே போற்றி!
வழிகாட்டி வலுச் சேர்க்கும் வல்லவா போற்றி!
புறநானூற்றுப் போர்ப் புலியே போற்றி!
அகம் யாவும் நிறைந்த ஐயனே போற்றி!
அகிலத் தமிழரை ஆண்டவா போற்றி!
பெருமையில்லாப் பேரரசே போற்றி!
பிரபாகரன் என்னும் பெருநிதியே போற்றி!
ஈழத்தின் தலைவா போற்றி! போற்றி!
#ஈழத்துப்பித்தன்
26.11.2015 - 2016
#HBDtamiltiger
#HBD_tamiltiger
#பிரபாகரன்
தமிழ் இன அரணே போற்றி!!!
*********************************************
அந்த அதுதான் அந்த இணையத்திலை இப்பிடி தலைப்புக்குடுத்ததும் ஓடிப்போய் பாக்கிற மாதிரி இதையும் பாப்பியள் எண்ட ஒரு நப்பாசையில்....
முன்னொரு காலத்திலை எப்பிடி ரலி சைக்கிள், சொனி ரீவி, மான் மார்க் குடை, குடை மார்க் ஓடு, பனசொனிக் ரேடியோ, பைனியர் செற் எல்லாம் பிரபலமானதா இருந்ததோ அப்பிடித்தான் நொக்கியா போனும் இருந்தது.
1997 ஆம் ஆண்டு ஓரளவுக்கு கைப்பேசியள் புளக்கத்துக்கு வந்திட்டாலும் அது சாதாரண மக்களின்ரை பாவனைக்கு வரேல்லை. நொக்கியா, மொத்ரெல்லா எண்ட இரண்டு நிறுவங்கள்தான் முதலிலை கைபேசிகளை அறிமுகப்படுத்தியிருந்தன. கிட்டத்தட்ட ஒரு மூடி வைச்ச வெத்திலை பெட்டி அளவிலை அந்த கைபேசிகள் இருக்கும். கதைக்கேக்கை ஏரியலை இழுத்து விட்டுத்தான் கதைக்க வேணும்..
முதலிலை வந்த கைபேசிகளுக்கு இப்ப மாதிரி சிம் போடுற நடைமுறையில்லை. தொலைபேசியை வேண்டி சுவிஸ்கொம்மிலை கொண்டே குடுத்தா அவை அதுக்கு இணைப்பை குடுத்து தருவினம் அந்த இணைப்புக்கு நாத்தல் சீ எண்டு பேர். அதிலை கதைக்கலாம் குறுந்தகவல் அனுப்பிற வசதியோ மணிக்கூடு நாட்காட்டி வசதியளோ இல்லை. ஏன் ஆர் தொடர்புகொள்ளினம் எண்டதுகூட தெரியாது.
பிறகு நாத்தல் டீ எண்ட புது இணைப்பு அறிமுகமாச்சுது அதுக்கு இப்ப உள்ள சிம்காட் போடுற மாதிரியான நடைமுறை அந்த காட் இப்ப உள்ள கடன் அட்டையின்ரை அளவு. அதிலைதான் முதன் முதலா அழைப்பவரின் இலக்கம் திரையில் விழும் நடைமுறை வந்தது. அழைப்பவரின் தொடர்பை எடுத்து அவர் தன்னை அறிமுகப்படுத்த முன்னமே சொல்லுங்கோ அத்தான் எண்டோ சொல்லுங்கோ குமார் அண்ணை எண்டோ சொல்லி இன்ப அதிர்ச்சி குடுக்கிற ஒரு தனிச்சுகம். நான் அறிய பாசல் மாநிலத்திலை அஞ்சு தமிழாக்களிட்டைதான் கைபேசி இணைப்பே இருந்தது. கைபேசி வைச்சிருந்தவைங்கு அது ஒருவித கெத்தாவும் இல்லாதவைக்கு வைச்சிருக்கிறவை ஒரு தேசத் துரோகி மாதிரியும் தெரிவினம். நானறிய பாசலிலை வைச்சிருந்தவையில ஒருத்தருக்கு எங்கையன் கொண்டாட்டங்களிலை நிண்டா அடிக்கடி கைபேசி அழைப்பு வரும். எழும்பி ஓடிப்போய் ஆக்கள் கூடுதலா உள்ள இடமாப் பாத்து ஆள் நிண்டு பிலத்து கதைக்கும். பிறகுதான் ஒருநாள் என்னெண்டு விசாரிச்சா இவரே நண்பர் ஒருத்தரிட்டை காசை குடுதுவிட்டு தன்னை தொடர்புகொள்ளச் சொல்லுறது தெரிய வந்துது.
இப்பிடியான 1997ம் ஆண்டு சுவிசின் மிகச் சிறந்த நிறுவனமான நோவார்த்திஸ் நிறுவனத்திலை நானும் தொழிற்கல்வி படிச்சுக்கொண்டிருந்தன். அப்ப அங்கை வேலை செய்யிற எங்கள் பிரிவிலுள்ள எல்லாருக்கும் கீழை படத்திலை காணப்படுற கைபேசி தரப்பட்டுது. அதாவது எமது பிரிவுக்கு நிறுவனத்தின் அனைத்துப்பகுதிகளிலையும் நாங்கள் வேலை செய்யிறதாலை எங்கையன் நாங்கள் குந்தியிருந்து கதைச்சுக்கொண்டிருந்தா தேடிப்பிடிக்கதான் இந்தக் கரிசனை.
உந்தக் கைப்பேசி கிட்டத்தட்ட முக்காக்கிலோ தேறும். ஆனாலும் அழைப்பு வரேக்கை அந்த ஏரியலை இழுத்து விட்டுட்டு கதைக்கிறதிலை ஒரு கெத்துதான். அதிலை இருந்து ரலி சைக்கிள் காரர் மாதிரி நானும் நொக்கியாவின் தீவிர விசிறியாப் போனன்.
பிறகு பனசொனிக் முதன் முதலா சத்தத்தை நிப்பாட்டி வைக்க உதறக்கூடிய கைப்பேசிய அறிமுகப்படுத்தேக்கை அங்காலை மனம் நாடினாலும் நொக்கியா என்ற அந்த தனிக்கௌரவம் மாறவிடேல்லை. பிறகு நொக்கியா கமராவோட அறிமுகப்படுத்தின 7100 முதல் இணையம் பாவிக்க கூடியதாய் அறிமுகப்படுத்தின N95 வரைக்கும் அதனோட உறவு தொடர்ந்தது.
முதன் முதலா கமராக்கு பிளாசோட அறிமுகப்படுத்தினது மொட்ரோலா 2004 இல் அந்த கைபேசி அறிமுகமாக அதுக்கு மாறிப்பாத்தன் நம்மை கொஞ்சம் நிறமாக்காட்டுமெண்டு ஆனாலும் அதன் உள்ளமைப்பு பிடிக்காததால ஒரு வாரத்திலை திரும்பவும் மாறியாச்சு.
அதன் பின்னரான தொழில் நுட்பத்தில் நொக்கியா பின் நிற்க அப்பிளின் கவர்சிகர விளம்பரம் உள்புகுந்து கொண்டது. ஐபோன் 5 வரையில் அப்பிளுடனான உறவு நீடித்த பொழுதிலும் இரு தொலைபேசி பாவனையால் கலக்சியும் s2 இல் இருந்து உள் நுழைந்து இன்று s7 வரை தொடர்கிறது. அப்பிளின் செயற்பாடு நேர்த்தியானதாக இருந்த போதிலும் எனக்கு பிடித்த பொழுதுபோக்கான படம் பிடித்தலை கலக்சி சிறப்பாக செய்து தருவதால் தொடர்கிறது உறவு...
July 25, 2016
மண்ணகத்தில் உள்ள மட்டும் மறந்திடுமோ....
பச்சை பசுமை தனைக் காணுகையில் - என்
தாய்நாட்டு நினைவு வந்து
தாலாட்டிச் செல்லுதம்மா
மாமர நிழலினிலே ஊஞ்சல் கட்டியாடி
மனம் மகிழ்ந்த நாட்களெல்லாம்
மனத்திரையில் வந்து
மதி மயக்கி நிற்குதம்மா
வேப்ப மர நிழலிலே
பாய் விரித்துப் படுத்த நாட்கள்
பசு மரத்து ஆணி போல
பதிந்த நெஞ்சு விம்மி விம்மி அழுகுதம்மா
பள்ளிப் பருவமதில்
பகிடியாய் கடந்த நாட்கள்
பாலர் வகுப்பினிலே
பாட்டி வடை சுட்ட கதை
படித்து பகுத்தறிய மறந்த நாட்கள்
பக்கம் வந்து சீண்டுதம்மா
புளியடிப் பள்ளியிலே
புழுகத்தோடு பயின்ற நாட்கள்
புட்டும் முட்டைப்பொரியலும்
பிரட்டிக் குழைத்து தின்ற நாட்கள்
புரையேறி நெஞ்சமெங்கும்
புத்துணர்வாய் கிடக்குதம்மா
அம்மன் கோவிலிலே
அழகான விழாநாளில்
ஊர் கூடி இழுத்த தேர் இன்று
ஊர் காவல் படை இழுக்க
உள்ளமெல்லாம் உருக்குலைந்து
உணர்வற்று தவிக்குதம்மா
புலம் பெயர்ந்தோர் வாழ்வு
புகழ் மிக்க வாழ்வு என்று
புகழ்ந்து பேசுவோர் பலரும்
புண்பட்டும் கிடக்கும் எம்
உணர்வுகளை அறிவாரோ?
#ஈழத்துப்பித்தன்
2003 - 2016
படம்: சுவிற்சர்லாந்தின் எல்லையில் அமைந்துள்ள பிரெஞ்சு தேசத்துக் கிராமமொன்றில் அதிகாலைப்புலர்வு.
June 10, 2016
வாழும் போதே கௌரவிப்போம் 2
Rajeevan Ramalingam ரஜீவன் அண்ணா றெயின் இஞ்சினிலை முதல்ப்பெட்டியா Kogulan Kandasamy கோகுலனை கொழுவிவிட கோகுலன் Robert Thiru றொபேட் அண்ணாவை கொழுவ றொபேட் அண்ணா என்னை கொழுவிவிட்டிருக்கிறார். இது யாரும் கழன்று போய்விட முடியாமல் தொடர வேண்டிய ஒரு பிணைப்பு. இதில் நான் மதிக்கும் ஒரு பல்துறைக் கலைஞனாக இருக்கும் றொபேட் அண்ணா என்னையும் ஒருவனாய் மதித்து அழைத்திருப்பது மகிழ்ச்சியே. இதில் வியப்பு என்னவென்றால் முதல் நாள் இரவு றொபேட் அண்ணா என்னை இதில் இணைத்துவிடுவதுபோல் கனவு காண்கிறேன் விடிந்து பார்த்தால் அப்படியே நடந்திருக்கின்றது.
முதலில் இத்தகைய முயற்சியை ஆரம்பித்த ரஜீவன் அண்ணாக்கு மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும். வாழும் போதே எமது கலைஞர்கள் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்ற நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் கோட்பாட்டை முடிந்த வரை பின்பற்றி வருபன் என்ற வகையில் இத் திட்டம் மன நிறைவைத் தருகின்றது. றொபேட் அண்ணா யாரையாவது பற்றி எழுதுமாறு முழுச் சுதந்திரத்தை எனக்கு வழங்கியுள்ளார். அவரது வேண்டுகோளின்படி பிரான்சிலுள்ள எனக்கு மிகவும் பிடித்த கலைஞர் ஒருவர் பற்றி தொடர்கிறேன். இணைந்திருங்கள்.
ஆம், நான் குறிப்பிடப் போகும் நபர் வேறு யாருமல்ல சாட்சாத் றொபேட் அண்ணாவேதான். இரண்டாயிரங்களின் முற்பகுதியில் புத்தொளி வீசி ரீரீஎன் தொலைக்காட்சி தோற்றம்பெறுகின்றது. பலதரப்பட்ட நிகழ்வுகளோடு உதயமான தொலைக்காட்சியில் புதிதாய் மலங்க மலங்க முழியை உருட்டியபடி ஒருவர் அறிமுகமாகிறார், குறிப்பாக செய்தி மற்றும் மனங்கவர் நிகழ்வான தாயகவலம் வேறும் பல நிகழ்வுகளில் றொபேட் அண்ணா அடிக்கடி தோன்றுவார். இதில் தாயகவலம் நிகழ்வுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பிருந்தது. அதாவது காசியானந்தன் சொன்ன "நீ பனை மரத்தை என் தேசத்தில் காண்கிறாய் நான் பனைமரத்தில் என் தேசத்தைக் காண்கிறேன்" என்ற கூற்றுப்போல் இந் நிகழ்வும் அமைந்தது. அதாவது தாயகத்துக்கும் புலம்பெயர் தமிழருக்குமான தொடர்புகள் மிக இறுக்கமான காலத்தில் தாயகத்தின் காட்சிகளைத் தரிசிக்கும் பெரும் வரமாக அந் நிகழ்வு இருந்தது. அந் நிகழ்வின் தொகுப்பாளராய் இவர் இருந்ததால் மக்களால் "தாயகத்தம்பி" என அன்பாக அழைக்கப்படும் ஒருவரானார். இதை நானே பல இடங்களில் நேரில் கண்டுள்ளேன்.
சமகாலத்தில் ஐபிசி தமிழ் வானொலியும் ரீரிஎன் தமிழ் ஒளியும் சகோதர நிறுவனங்களாக இணைந்த சேவையில் இருந்தன. இவ் இரண்டு ஊடகங்களையும் இணைத்து சுவிசில் இயங்கிய கலையகத்தில் இரு ஊடகங்களிலும் நானும் பணி புரிந்திருந்ததால் றொபேட் அண்ணாவை பல தடவைகள் சந்திக்க முடிந்தாலும் நெருங்கிப் பழக்க கிடைத்த வாய்ப்புகள் மிக குறைவே.
2005 இல் மகிந்த அரசுடனான முதலாங்கட்டப் பேச்சுவார்த்தைகள் ஜெனிவாவில் நடைபெற்ற காலப்பகுதியில் றொபேட் அண்ணா ரீரிஎன்னுக்காகவும் நான் ஐபிசி தமிழுக்காகவும் செய்தி சேகரிக்கச் சென்றிருந்தோம். அந்தக் காலப்பகுதியில்தான் றொபேட் அண்ணாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிட்டியது. தான் இருக்கும் சூழலை எந் நேரமும் மகிழ்ச்சிகரமாக வைத்திருப்பதில் வல்லவர். அந்த மூன்று நாட்கள் அதிக பொழுதை அவருடன் கழிக்க முடிந்தபோதுதான் ரீவியில் முழி உருட்டும் றொபேட் என்ற நிகழ்ச்சித் தொகுப்பாளனுக்கும் றொபேட் என்ற கலையுணர்வுமிக்க கலைஞனுக்கும் இடையே நிறைய விடயங்கள் உள்ளமை புலப்பட்டது.
கால ஓட்டத்தில் ரீரிஎன் என்ற சாம்ராஜ்ஜியம் சரிய நானும் தற்போது பணியாற்றும் வானொலியின் பொறுப்புக்களுள் நுழைய றொபேட் அண்ணாவுடனான தொடர்புகள் அற்றுப்போனது. மீண்டும் 2011இல் சுவிசில் நடைபெற்ற "LIFT" நிறுவனத்தின் முதலாவது குறும்பட திரையிடல் நிகழ்வுக்குப் போனபோது றொபேட் அண்ணாவை மீண்டும் கண்டு அழவழாவ முடிந்தது. அன்றைய நாளில்தான் அவரது இயக்குனர் என்ற அவதாரம் பற்றியும் அறிய முடிந்தது. அந்தத் திரையிடல் நிகழ்வில் இவரது இயக்கத்தில் வெளிவந்த "குருவிச்சை" என்ற குறும்படமும் திரையிடப்பட்டது. மிகச் சிறந்த இயக்குனராக மிளிர்ந்தார். அந்த குறும்படம் பற்றிய கருத்தை முதலில் பதிவாக்கிய பெருமை என்னைச் சாரும்.
அக் குறும்படம் பற்றி அன்று பின்வருமாறு பதிவு செய்தேன்.
"அடுத்து குருவிச்சை இது அகரம் தயாரிப்பில் றொபேட்டின் இயக்கத்தில் வெளியான குறும்படம் இன்று எம்மவர் மத்தியில் மட்டுமல்ல உலகின் அனைத்து தரப்பினராலும் உபயோகப்படுத்தும் முகப்புத்தகம் பற்றிய ஒரு குறும்படம் அழகான ஒளிப்பதிவுடன் கதை அழகாக நகர்த்தப்பட்டிருந்தது. திரைக்கதையிலும் நகர்விலும் ஒளிப்பதிவிலும் அதி அக்றை காட்டிய இயக்குனர் ஒலிப்பதிவை கவனிக்கத் தவறிவிட்டார். அதை அவரும் ஒப்புக் கொண்டிருந்தார். குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்பட்டதால் அந்தக் குறையை பெரிது படுத்தாமல் பார்த்தால் அற்புதமான படைப்பு."
அந்த விழா பற்றிய பதிவின் பின்னர் றொபேட் அண்ணாவுடனான முகப்புத்தக நட்புக் கிடைத்தது. அவரைப் பற்றியும் அவரது தனித் திறன்கள் பற்றியும் பல விடயங்களை அறிய முடிந்தது. ஓவியர், பத்திரிகையாளர், எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், இசைக்கலைஞர் என பல்துறை சார்ந்த திறன்களையும் கொண்டவராகவும் அன்பான தந்தை, துணைவன், குடும்பத் தலைவன் என்ற அவதாரங்களைக் கொண்டவராகவும் காணமுடிந்தது.
ஈழநாதம், ஈழநாடு பத்திரிகைகளில் ஆசிரியர் பீடத்தில் பணிபுரிந்ததோடு பல புனைபெயர்களில் பல ஆக்கங்களையும் எழுதித்தள்ளியிருக்கிறார். மனோரஞ்சிதன் என்ற புனைபெயரில் இவர் எழுதிய 'நாதவலை' என்ற சிறுகதையொன்றை அண்மையில் வாசிக்கமுடிந்தது. இத்தகைய பல்துறை ஆளுமை மிகு கலைஞனிடம் நான் அறிந்த வரை குறையை தேடித் தேடிப் பார்க்கிறேன் எதுவும் கிடைக்கவில்லை. இத்தனை ஆளுமை கொண்ட ஒருவர் எவ்வித ஆர்ப்பாட்டமுமில்லாமல் இருப்பதே அவரது + & - . அவரது அடையாளமான குழந்தைத்தனமான கல கல என்ற சிரிப்பு களங்கமில்லாமல் தொடரவேண்டும் எனக் கேட்டு நிறைவுக்குள் வருகிறேன்.
நான் அவர் பற்றி சொல்லாமல் விட்டவை பல அதையெல்லாம் கருத்தெழுதும் உறவுகள் நிவர்த்தி செய்வார்கள். பிரான்சிலிருந்து பிரித்தானியா போய் மீண்டும் பிரான்ஸ் வந்து சுவிசில் நிற்கும் இந்த தொடர்வண்டியை அடுத்த பெட்டி கொழுவ பல்லாயிரம் மைல்கள் தாண்டி எங்கள் தாயகம் நோக்கித் திருப்புகிறேன். நான் பெரிதும் மதிக்கும் இன்னொரு பல்துறைக் கலைஞன். எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு செயற்படும் ஒரு கலைஞனான MaThi Sutha மதிசுதாவை அழைக்கிறேன். என்னைப்பற்றி எழுதித் தொடர...
May 31, 2016
அறிவுத் தேடல் அழிக்க முடியாததே
ஒற்றைப் புத்தகம் வைச்ச இடம் மறந்தாலே
உள்ளம் பதை பதைக்கும்
எங்கள் ஊரின் மொத்தப் புத்தகமும்
அங்கைதான் குவிச்சுக் கிடந்ததாம்
ஓலைச்சுவடி முதல்
ஊர்களின் வரலாறும் தொன்மையும்
சொல்லும் அத்தனை நூலும்...
குறிப்பா இலங்கைத் தீவே தமிழன்ரை
எண்டதை பொழிப்பாச் சொல்லுற ஆவணமெல்லாம்
தென்னாசியாவிலை பெரிய நூலகம்
இதுவெண்டு எல்லாரும்
புழுகமாச் சொல்லிச் சொல்லி
செருக்குப் படுறவையாம்
கல்வி அறிவிலை உலக அறிவிலை
தமிழன் கொடி கட்டிப் பறக்க
இதுதான் காரணமெண்டதை
எல்லாரும் அறிஞ்சதாலை
எப்பவும் அதுக்கு தனி மவுசுதானாம்
கல்வி அறிவைச் சிதைச்சால்
கண்டபடி தமிழனாலை வளரேலாது
எண்டு கற்பனை கட்டின சிங்களம்
இரவோடு இரவா வந்து உயிரோடை
கொள்ளி வைச்சுப் போனதாம்
அப்பிடிச் செய்து அரிய பொக்கிசத்தை
அழிச்சு ஒழிச்சாலும் தமிழன்ரை
அறிவுத் தேடலை அழிக்க முடியாமல்
தோத்தது சிங்களம் எண்டது உண்மையே
எரிஞ்ச அந்தச் சாம்பல் மேட்டிலை இருந்து
இண்டைக்கு உலகமெங்கும்
தமிழன் வாழுற நாடுகளிலை எல்லாம்
புத்தக வெளியீடும் நூலகமும்
வீட்டுக்கு வீடு புத்தக்க் களஞ்சியமுமா
உருவங்கொண்டு எழும்பி நிக்குது
ஆயிரந்தான் கிடந்தாலும்
தமிழன்ரை அறிவுத்தேடல் அழிக்க முடியாததே.
#ஈழத்துப்பித்தன்
31.05.2016
May 23, 2016
விதம் விதமா வாழைமரம்
அழகழகா வாழைமரம்
அடுத்தடுத்து குலை சாய்சிருக்கு
விதம் விதமாய் உருவம் கொண்டு
விரும்பும் சுவையில் பழுத்திருக்கு
மாப் பிடிப்பாய் கப்பல்
மனம் பிடித்த இதரை
தேன் இனிக்கும் கதலி - தின்னத்
தெகிட்டாத செவ்வாழை
வெட்டிப் பொரித்துண்ண
விருந்து சிறக்கும் மொந்தனதால்
இத்தனை இனம் இருக்கு எம் தேசத்தில்
அத்தனையும் தொலைத்தோம்
அகதிகளாய் அடுத்தவன் நாடு புகுந்து
அன்னியமண் வாசம் நுகர்வதனால்...
#ஈழத்துப்பித்தன்
22.05.2016
May 20, 2016
பொய்த்துத்தான் போகாயோ..
*******************************
சத்தம் இன்றி - பெரும்
யுத்தம் இன்றி
சலசலப்பு ஏதுமின்றி
சிணுங்கி வழிகிறாள்
சிலநாளாய் வானமகள்
முன்பெல்லாம்
அவள் வரவு கண்டு
ஆனந்தித்த பொழுதுகள்
அளவுக்குள் அடக்க முடியாதவை
மனம் ஆனந்தப்பூங்காற்று பாடி
மமதையிலே திழைத்திருக்கும்
மண் மணம் நாசி ஊடு புகுந்து
மண்ணில் வாழ்ந்த நாளை
மறுபடியும் மறுபடியும் கிளறி நிற்கும்
ஊர் போய் வந்த பின்னர்
உறவுகள் நிலை கண்ட பின்னர்
பெய்யெனப் பெய்யும் மழை
பிய்ந்த கூரை வழி வழிந்து
நிறைவில்லா வீடுகளை
நிறைத்து நின்றதனை கண்டதனால்
நீ எம்மவர் நிலை மாறுமட்டும்
பொய்த்துத்தான் போகாயோ எனும்
பெரும் ஏக்கம் நெஞ்சமெங்கும்...
#ஈழத்துப்பித்தன்
01.02.2016
May 13, 2016
முள்ளிவாய்க்கால் பேரவலம்
முள்ளிவாய்க்கால் பேராவலம்
முடிவில்லா ஓர் அவலம்
பன் நாட்டுப்படை புகுந்து
பல்லாயிரம் உயிர் தின்று
சொல்லாத கதை கோடி
சுமந்து கிடக்கும் மண்ணது
வில்லாண்ட இனம் ஒன்று
வீறுகொண்டு போர் கண்டு
விடுதலைக்காய் வேள்வியொன்றை
விருப்புடனே நடத்தியதையை
கண் காணச் சகிக்காத
காடையர்கள் கூட்டிணைவில்
இனம் ஒன்று அழிந்ததுவே
ஈரல் குலை அறுந்ததுபோல் தவித்தோமே
பல தேசம் வாழ்ந்தோம்
பார் எங்கும வீதி வழி குவிந்தோம்
பலனேதும் கிடைக்காமல்
பரிதவித்து பைத்தியமானோம்
இனப்படுகொலை ஒன்றை
இரக்கமின்றி சத்தமின்றி அரங்கேறி
இந்தியப் பெருங்கடலும் செந்நிறமாக
இடி வீழ்ந்துபோல் கிடந்தோமே
இமை மூட மறந்தோமே
ஆண்டுகள் ஏழு
அனல் இடை கரைந்து
அரவணைக்க ஆரும் இன்றி
அரற்றிக் கிடக்கிறோம் நாம்
எங்கள் இரத்த உறவுகளே!
ஆறாக உங்கள் இரத்தம்
அலை புரண்டு ஓடி
ந்ந்திக் கடல்
செங்கடல் ஆனபோதும்
அகிலம் முழுதும்
பரந்து கிடந்த எம்மால்
எதுவுமே செய்ய
முடியவில்லையே
என்ற குற்ற உணர்வும்
இயலாமையும்
கண்களைக்குளமாக்க
உங்களை இழந்த நினைவுகளோடு....
எங்கள் உரிமையை வென்று
உலக அரங்கில்
எமக்கான நீதியைப்பெற
அணிதிரள்வோம்
அலை அலையாய்....
ஓரணியில்..
#ஈழத்துப்பித்தன்
02.05.2016









