Pages

December 2, 2024

பவள விழா மலர் - புதுவை இரத்தினதுரை

 அறிமுக உரை




மூத்த குடியின் முதன் மொழி மகளே!

ஆதி முகாந்தரமாய் தோன்றிய முகிதல் இல்லாத முத்துக் குளிக்கும் கடலே

என் தமிழ் திருவே! உன் மலரடிக்கே

என் முதல் வணக்கம்.


தமிழன் என்ற நிமிர்வைத் தந்தவனையும்

தமிழ் வாழத் தம்முயிர் தந்த மானமாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி அனைவரையும் வணங்குகின்றேன்.


தன் வரலாற்றை பதியாத, தன் வரலாற்றை போற்றாத எந்த ஒரு இனமும் நீடித்து நிலைப்பது கிடையாது.

2009 மே 18 யுத்தம் முடிவடைந்த போது ஒரு சூன்ய மனநிலைக்குள் நாமெல்லாம் ஆட்பட்டிருந்தோம். பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக நாம் இருந்தோம். அடுத்து என்ன செய்வது எப்படி நகர்வது என தெரியாது விழித்தோம். 


எம் முன் இருந்த பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க முடியாது முட்டி மோதி வெளிக்கிளர முயன்று  கொண்டிருக்க, சிறீலங்கா அரசும் அதனுடன் சேர்ந்து இயங்கும் அமைப்புக்களும் விலை போனவர்களும் புலிநீக்க அரசியலையும், எமது உண்மை வரலாறுகளை அழிக்கும் திரிபுபடுத்தும் பணிகளை மிகத் திறம்படச் செய்துகொண்டிருந்தார்கள். இது எம்மை அச்சம் கொள்ளச் செய்தது. 


எங்கள் படைப்புகள், எங்கள் ஆவணங்கள், எங்கள் வரலாறுகள் பேணிப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினரின் கரங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் அதுவே எம் முன் உள்ள முதற்பணி என நம்பினோம். ஆனால் அன்று அதனை நடைமுறைப்படுத்துவதில் பல சவால்கள்.  


ஆனால் இன்று அண்மையகாலங்களில் எமது விடுதலைப் போராட்ட காலத்து ஆவணங்களும் படைப்புக்களும் பலராலும் தொகுக்கப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றது. 


அந்த வகையில் அவற்றின் தொடர்ச்சியாக எமது தமீழீழத் தேசியக் கவிஞர் பெருமதிப்பிற்குரிய புதுவை இரத்தினதுரை அவர்களின் பவள விழாவை முன்னிட்டு கடந்த ஆண்டு பிரான்சு தேசத்தில் வெளியீடு கண்ட பவள விழா சிறப்பு மலரின் இரண்டாம் பதிப்பு  இன்று சுவிற்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் அறிமுகமாகின்றது. 


இந்த நூலுக்கான அறிமுக உரையினை வழங்கும் பணியினை விழா ஏற்பாட்டாளர்கள் எனக்கு தந்துள்ளார்கள்.


சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் 2005ம் ஆண்டு சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற  “பூவரசம் வேலியும் புலுனிக்குஞ்சுகளும்” நூலின் அறிமுக உரையை வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. அதே போல் இந்து அந்தக் கவிஞனின் புகழ்பாடும் இந்த நூலின் அறிமுக உரையினை வழங்கும் பேறு கிடைத்துள்ளது. மகிழ்ச்சி!


அறிமுக உரை என்பது அந்த நூலின் நாயகன் மற்றும் நூல் பற்றி விதந்து உரைத்து அறிமுகப்படுத்துதலாகும்.


இந்த நூலின் நாயகனை நான் அறிமுகப்படுத்துவது என்பது ஒரு சிற்றெறும்பு இந்தப் பிரபஞ்சத்தையே தன் சிறுகைகளை விரித்து அடக்கி அளப்பதற்கு ஒப்பானது. இருந்தாலும் தந்த பணியை தலைமேற் சுமக்கின்றேன்.


வரதபாக்கியனாக, சிறிரஞ்சினி இரத்தினமாக, மாலிகாவாக, கமலக்கன்னியாக, இளவரதனாக, வியாசனாக, புதுவை இத்தினதுரையாக எம்மத்தியில் ஆயிரக்கணக்கான படைப்புகளை விதைத்த

எம் தேசியக் கவிஞனின் புகழ்தனை பதிவாக்கி ஆவணப்படுத்தி ஒரு பெரும் பொக்கிசமாக இந் நூல் விரிகின்றது.


எங்கள் தேசத்தின் போரை, போரின் எழுச்சியை  போரின் வலியை மட்டும் கவிஞர் புதுவை இரத்தின துரை அவர்கள் பாடவில்லை. எங்கள் மண்ணை, மண்ணின் வாழ்வியலை மனித மனங்களை, இயற்கையையை, இறையை என எல்லாவற்றையுமே சாதாரண மனித மனங்களின். உணர்விலிருந்து பாடியுள்ளார். ஈழத்தின் பண்பாட்டு அசைவுகளை புதுவை தன் வரிகளில் அரிதாரம் பூசாது அப்படியே சொல்லியிருப்பார். அவை அலங்கரித்த தேராக எம் மனங்களில் உலா வருகின்றது.


எனக்கு விருத்தெரிந்த காலங்களில் இருந்து்ஈழத்திலும் சரி புலம்பெயர்ந்து இங்கு வந்த பின்னரும் சரி அதிகளவில் தாயகப்பாடல்களை கேட்டும் சூழலே இருந்தது. காட்சி ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தாத அந்தக்காலங்களில் எம் மனக்கண்களில் காட்சிகளை விரிய வைக்கும் வல்லமை கொண்டவையாக புதுவையரின் வரிகள் என் மனங்களில் பதிவாகிக் கொண்டது. புலம்பெயர்ந்து வளர்ந்த எனக்குள் என் தேசத்தை என்மொழியை என் தேச வாழ்வியலை அப்படியே பதிவாக்கிய ஒரு காரணியாக புதுவையரின் வரிகளும் இருந்தன என்றால் மிகையாகாது.


புதுவையரின் கவிதைகள் பற்றி எனக்குள் இருக்கும் அதே உணர்வை புதுவையரின் கவிதைகள் பற்றிய தனது பார்வையில் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் “புதுவை இரத்தினதுரை அவர்களின் கவிதைகள் காண்பிய தன்மையுடையனவாக உள்ளன   என உறுதிப்படுத்துகின்றார். 


புலம்பெயர்ந்தோர் மன உணர்வை


“உடல் பனி விழும் தேசத்தில் என்றாலும்

மனம் இன்னும் முற்றத்து மாமரத்தைச் சுற்றியே

அந்தரிப்பதை அறிந்துகொண்டேன்”


என பதிவாக்கிய கவிஞர்,


வாய்க்கு ருசியாய் தின்றதை


வடித்து இறக்கினால் 

ரோஜா நிறத்தில் பூத்திருக்கும்

“பூநகரி” மொட்டைக் கறுப்பன் சோறு

கரைத்துக் காய வைத்த 

களிமண் போல் 

பசைப் பிடிப்பாய்க் குழையும்

பலாலி மரவள்ளிக் கிழங்கு கறி 

பொன்னாலை பாலத்து சிறு திரளிக் குழம்பு 

எல்லாமே குழைத்து ஒரு கவளம்

செத்தவன் நாக்கிலும் நீரூறும். 


இன்னொரு கவிதையில் 


இரவு மின் விளக்குகள் கண்ணடிக்கும்

மேளமும் நாதஸ்வரமும்

இணுவிலில் இருந்து இறக்குமதியாகும்

ஒட்டகத்தை கட்டிக்கோ

பாட்டுக்காரர் பாடத் தொடங்குவார்

இளசுகள் 

எதிற்பாற்காரரை ஓர விழியால் உண்ணத் தொடங்குவார். 


பின்னைப் பாருங்கோவன் பிறகெப்பிடி புதுவையை பிடிக்காது போகும்?


அதனால்தான் புதுவை எம் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார். 


ஏறுது பார் கொடி 

தமிழன் என்ற திமிரையும் எங்கள் கொடி என்ற பெருமித உணர்வையுல் தந்து போகும் பாடல். 


மாவீரர் நாளின் தாரகப் பாடலான தாயக கனவுடன் பாடல் எமக்குள் ஆனந்தமும் வலியும் கூடிய உணர்வை ஏற்படுத்தி வித்தான எங்கள் மாவீரக் கண்மணிகளை மனக்கண்களுக்குள் கொண்டு வந்து உறவாட வைக்கின்ற அற்புத நர்த்தனத்தை நிகழ்த்தும் வல்மையைக் கொண்டது. 


மாவீரர் விதைப்பின்போது பாடப்படும் 

சூரியத் தேவனின் வேருகளே 


ஒட்டுமொத்த ஆன்மாவையும் உருக்கும் வல்லமை கொண்டது. 


“இந்தமண் எங்களின் சொந்தமண்”

ஒரு வித மிடுக்கை எம் தாய் மண் இது என்ற உணர்வை எமக்குள் தந்துபோகும் திறன் கொண்டது.


“வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்” 

மீனவர்களின் வாழ்வையும் வலியையும் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்ற ஒரு பாடல்.


பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது 


பிள்ளைகளை புலம்பெயர் தேசங்களுக்கு அனுப்பிவிட்டு தனிமையில் வாடும் பெற்றோரின் உணர்வுகளின் பிரதிபலிப்பு.


பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது 


யாழ் இடப்பெயர்வை அதன் வலியை பிரதிபலிக்கும் பாடல். இந்தப் பாடல் பிபிசியினால் 2005ம் ஆண்டு நடத்தப்பட்ட உலகின் சிறந்த பத்து தமிழ்ப்பாடல் போட்டியில் ஐந்தாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. 


நல்லை முருகன் மீதான பாடல்கள், திசை எங்கும் இசைவெள்ளம் என்ற இசைப்பேழை யூடாக ஈழத்தின் பெரும்பாலான கோவில்கள் மீதான பாடல்கள். சுவிற்சர்லாந்தின் சூரிச் சிவன் கோவில் மீதான இசைப்பேழை, சுவிசின் செங்காளன் மாநில கதிர்வேலாயுத சுவாமி மீது பாடப்பட்ட தொகுப்பு. 


இப்படி கவிஞரின் ஒவ்வோரு படைப்பைப் பற்றியும் சிலாகித்து சொல்லிக்கொண்டே போகலாம்.


கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் சந்தம்மிகு சொல் அடுக்குகள் வாசிக்க வாசிக்க உளம் எங்கும் பரவி தமிழ் மீது காதல் கொள்ளச் செய்யும் வல்லமை நிறைந்தது. 


வியாசனின் "உலைக்களம்" ஊரில் விடுதலைப்புலிகள் பத்திகையூடாகவும் புலம்பெயர் தேசங்களில் களத்தில் பத்திரிகையூடாகவும் வெளிவந்து எம் கரம் சேர்ந்தது.


அந்த வியாசன் எப்படி பாரதப் போரை பதிவாக்கினாரோ அதே போல் எங்கள்  வியாசன் ஈழப்போரை பதிவாக்கியவராவர்.


2002 ஈழத்தில் ஏற்பட்ட சமாதான காலம் கவிஞரை புலம் பெயர் தேசங்களுக்கு அழைத்து வந்தது. இங்குள்ள மக்களுடனெல்லாம் உறவு பாராட்ட வைத்தது. அவர் தொழில் நிமிர்த்தமாக பல தேசங்களுக்குச் சென்றிருந்தாலும் படைப்பாளியாக உறவுகளுடன் உறவுவாடவென முதன் முதலாக கால் பதித்த புலம்பெயர் தேசம் எனும் பெருமை இந்த சுவிற்சர்லாந்துக்கு அதுவும் இந்த சூரிச் நகருக்கு உண்டு. இன்று அவர் முதன் முதலாக கால்பதித்த புலம்பெயர் தேச நகரான சூரிச் நகரில் அவரது புகழைக் கூறும் பவள விழா மலர் வெளியீடு காண்பதென்பது ஏதேட்சையான நிகழ்வல்ல. 


சுவிற்சர்லாந்தின் மாவீரர் நாளிலே சிறப்புரையாற்ற வந்த கவிஞர் இங்கு உரை முடிந்ததும் உடனடியாகவே ஜேர்மனியில் நடைபெற்றுக்கொண்டிருந்த மாவீரர் நாளிலே உரையாற்ற செல்ல வேண்டும். இங்கு மேடையில் உரை முடித்ததும் உடனடியாக சிறப்பு விமானம் மூலம் ஜேர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த மாவீரர் நாளிலே உரையாற்றி விட்டு சில நாட்களின் பின் மீண்டும் சுவிஸ் வந்திருந்தார். ஒரு நாள் நாங்களெல்லாம் அவருடன் அமர்ந்திருந்து உரையாடிக்கொண்டிருந்தபோது அந்த சம்பவத்தைப் பற்றி இப்படி விபரித்தார் “பிரபாகரப பேரரசின் குறுநிலமன்னர்களாக இருக்கும் இவர்கள்” என அன்று சுவிஸ் கிளையின் பொறுப்பாளராக இருந்த குலமண்ணாவை காட்டி இந்த புலவன் என்னை வான் ஊர்தி ஏற்றி அங்கும் இங்கும் பரிமாறிக்கொண்டார்கள்.  என்றார். அனைவருமே கலகலத்து இரசித்தோம்.


மாணவர் அமைப்பு மற்றும் ஊடகத்துறை சார்ந்த பணிகளில் செயற்பட்டதால் பல தடவைகள் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவருடன் அளவளாவிய பொழுதுகள் கிடைத்தற்கரிய அரும்பொழுதுகள்.


இந்தக் கரங்களைப் பற்றி என்ர குஞ்சு "ஏதோ நினைத்து வந்தேன் 

என் எண்ணமெல்லாம் தவிடு பொடியானதெடா " 

நாங்கள் ஓய்ந்தாலும் 

நீங்கள் ஓயமாட்டியள் 

இந்தச் செய்தியை என் தலைவனிடம் போய்ச் சொல்வேன் என்ற நம்பிக்கையோடு போனவனுக்கு இன்று நாங்களெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கும் செய்தி என்ன?


பொது எதிரியோடு அடிபட்ட நாங்கள் இப்ப எங்களுக்குள் அடிபடுகின்றோம் என்றா?


கவிஞருடன் நெருங்கிய தொடர்பைக்கொண்ட சுவிஸ் மண்ணில் வெளியீடு காணும் இந்த நூலானது மிகவும் சிறப்பு மிக்க ஒரு நூலாகும்.


ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் அவர் தம் வாழ்வின் பொன்னான தருணங்கள் பற்றியும் அறியும் அவா எங்களுக்கெல்லாம் இருப்பது இயல்பான ஒன்றே. அந்த வகையிலே கவிஞர் புதுவை இரத்தினதுரை பற்றிய பல சுவையான தகவல்கள் இந்த நூல் முழுதும் கொட்டிக் கிடக்கின்றது. 


தமிழர் கலை. பண்பாட்டுக்கழகம் - பிரான்ஸ்

சங்கநாதம் கலைக் குமுமத்தினரின் அயராத உழைப்பின் பயனாக இந்த நூல் உருக்கொண்டுள்ளது.  


அழகான தரமான வடிவமைப்பில்  460 பக்கங்களைக் கொண்ட இந்த நூலிலே பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழீழத் தேசியத் தலைவர் உட்பட தமிழீழ நிழலரசின் பல்வேறு துறைகளின் பொறுப்பாளர்கள் கவிஞரின் திறன் பற்றி வியந்து எழுதிய உரைகளும் சமகாலத்தில் அவருடன் பழகிய, பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் அவர் பற்றிய அனுபவக் குறிப்புகள் அடங்கிய கதைகளாக பதிவாகியிருக்கின்றது.


இதே வேளை கவிஞரின் சில படைப்புகளும், நேர்காணல்களும், அவர் பற்றிய பார்வைகளும் பிரெஞ்சு, ஜேர்மன், ஆங்கிலம்  போன்ற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு இணைக்கப்படுள்ளமை மிகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கின்றது.


இந்நூல் கவிஞர் பற்றி இன்னும் அறிந்துகொள்ள விரும்புவோருக்கு தீனி போடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


கவிஞரைப் பற்றியும் அவர் தம் படைப்புகள் இந்த நூல் பற்றியும் பேச நிறைய விடயங்கள் உண்டு. காலமும் நேரமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் நிறைவுக்கு வருகின்றேன். இங்கே நூல் பற்றியும் தேசியக் கவிஞர் பற்றியும் பல சிறப்பான விடயங்களை எடுத்துவர சிறப்பான பேச்சாளர்கள் எல்லாம் காத்திருக்கின்றார்கள். 


கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் 


மண்ணை நேசிக்கும்

மண்ணை சுவாசிக்கும்

 ஒவ்வொருவனுக்குள்ளும் இருந்து புதுவை கிழர்ந்தெழுவான். 


இன்று இந்த அரங்கிலே புதுவை இரத்தின துரை அவர்களின் வாழ்வும் வரலாறும் பதிவாகி அறிமுகமாகின்றது. 


இதே போல் ஒவ்வொரு போராளிகளினதும், படைப்பாளிகளினதும் வரலாறுகளும் ஆவணப்படுத்தப்படல் வேண்டும்.  அதற்கான ஒத்துழைப்புகளை சுவிற்சர்லாந்தின் சைவநெறிக்கூடத்தின் தமிழர் கலரியும் சுவிற்சர்லாந்தின் ஆவணக்காப்பகமும் ஏற்கனவே செய்து வருகின்றார்கள்.  


தனியே போராளிகள், படைப்பாளிகள் வரலாறு மட்டுமல்ல ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வரலாறை ஏதோ ஒரு வகையில் பதிவாக்க வேண்டும்.  

எங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு கதையுள்ளது. 


நான் 

பென்னம் பெரும் கவிஞனல்ல

பெயர் சொல்லும் புலவனல்ல

எண்ணக் கருக்களை 

வண்ணத் தமிழ்ப்படுத்தும் சின்னப்பெடி இவன்

தவறிருக்கும், தமிழால் பொறுத்தருள்க.


வாய்ப்புக்கு நன்றி! வணக்கம்!


இணுவையூர்_மயூரன்

ஈழத்துப்பித்தன்

November 14, 2024

தமிழர் புலனாய்வு நாயகன் - நூல் வெளியீடு

 தமிழர் புலனாய்வு நாயகன் பொட்டு அம்மான் 
எழுத்தும் பேச்சும் 


கடந்த 10.11.2024 ஞாயிற்றுக்கிழமை சுவிற்சர்லாந்தின் பாசல் மாநிலத்தில் சுவிஸ் ஆவணக் காப்பகம் தமிழர் புலனாய்வு நாயகன் பொ_ட்_டுஅம்மான் அவர்களின் எழுத்தும் பேச்சும் என்ற நூலை அறிமுகம் செய்து வைத்திருந்தது.  


இந்த நூலை தமிழகத்தில் வாழும் திரு. மே. வி. குமார் அவர்கள் தொகுத்திருந்தார்.


குறுகிய நேர அட்டவணைக்குள் மட்டுப்படுத்தப்பட்டு நடைபெற்ற இந்நிகழ்வு மாலை 15:00 மணிக்கு ஆரம்பித்து 18:00 மணியளவில் நிறைவு கண்டது.


நிகழ்வினை இணுவையூர் மயூரன் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார்.


விழாச் சுடரினை பாசல் இந்து ஆலயத்தின் பிரதமகுரு சிவஶ்ரீ சந்தான கிருஷ்ணக்குருக்களும்,

திருமதி குருபரன் வதனகுமாரி பாசல் தமிழ்மன்றம் ஆசிரியர்.

திரு. தர்மலிங்கம் சுதர்னன் அமுதசுரபி தமிழர் ஒன்றியம்.

திரு அரசரத்தினம் திருநாவுக்கரசு தமிழ் நீலப்பறவைகள்  விளையாட்டுக்கழகம்.

திரு. அமரதாஸ் ஆவணப் படப்பிடிப்பாளர். ஆகியோர் ஏற்றி வைத்திருந்தனர்.





மா வீரர்களுக்கான ஈகைச் சுடரினை திரு இரத்தினம் சிவசேகரன்  அவர்கள் ஏற்றி வைத்தார்.



வரவேற்புரையினை செல்வி தர்சிகா தர்மகுலசிங்கம் அவர்களும்,

ஆசியுரையினை  அருள்மிகு இந்து ஆலய பிரதமகுரு சிவ சிறீ  சிவசந்தான  கிருஸ்ணக் குருக்களும் ஆற்றியிருந்தார்கள்.



நூல் அறிமுகம் மற்றும் வெளியீட்டுரையினையும் ஆவணக்காப்பகத்தின் செயற்திட்டங்கள் தொடர்பான உரையினையும்  தமிழர் ஆவணக்காப்பகம் சுவிற்சர்லாந்தின் ஒருங்கிணைப்பாளர் திரு மகாலிங்கம் முருகன் ஆற்றியிருந்தார்.



தொடர்ந்து கலாநிகேதன் நடனாலய மாணவிகள்

ச. பொட்டு அம்மான் இயற்றிய வெஞ்சமர் கொல்லாத புலியானவன் என்ற பாடலைக்கு எழுச்சி நடனமொன்றை வழங்கியிருந்தார்கள்.




எழுச்சி நடனத்தைத் தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது. 


முதற்பிரதியினை தமிழர் ஆவணக்காப்பகம் சுவிற்சர்லாந்தின் ஒருங்கிணைப்பாளர் திரு மகாலிங்கம் முருகன் வெளியிட்டு வைக்க தர்மேந்திரா கலையக போராளிக்கலைஞர் திரு மகாதேவன் கிருபாகரன் பெற்றுக்கொண்டார்.


சிறப்புப் பிரதிகளை 


சிவ சிறீ   சிவ சந்தான  கிருஸ்ணகுமார குருக்கள்- அருள்மிகு இந்து ஆலய பிரதமகுரு

திரு இரத்தனம் சிவசேகரன் சேகர் பதிப்பகம்

திரு செல்வராசா கண்ணதாசன்.

திரு சின்னத்தம்பி குகதாசன் பாசல் தமிழ்மன்றம்

திரு குமாரசண்முகம் செல்வமோகன் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள்.


அதனைத் தொடர்ந்து சிறு சிற்றுண்டி இடைவேளை.


இடைவேளை நிறைவடைய ஊடகவியலாளர்  திரு. கனகரவி  நூல் பற்றிய மதீப்பீட்டுரையினை வழங்கியிருந்தார். 


அவர் தனது மதிப்பீட்டுரையில் நூலின் உள்ளார்ந்த விடயங்கள் பற்றியும் தியாகங்கள் பற்றியும் சிலாகித்துப் பேசியிருந்தார்.  பெயரோ புகழோ் எதிர்பாராது மறைமுக போராளிகளாய்  உயிர்க்கொடை தந்தவர்களின் ஈகங்களை மறந்து  இன்று நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்ற கேள்வியை முன் வைத்திருந்தார்.



மதிப்பீட்டுரையினைத் தொடர்ந்து விடுதலைப் பற்றாளர் திரு. நிவேதன் நந்தகுமார் புலனாய்வு மற்றும் தமிழர் தேசத்தின் அவசியம் புலம்பெயர் தேசங்களிலுள்ள மறைமுக இனப்பாகுபாடு சார்நது உரையொன்றினை நிகழ்த்தியிருந்தார்.



திரு்  அருளானந்தம் துஷ்யந்தன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.


 இணுவையூர் மயூரன்

14.11.2024

November 13, 2024

வாய்ப்பாட்டு இசை அரங்கேற்றம்

 கலாநிகேதன் நடனாலய அதிபர் திருமதி. கிருஸ்ணபவானி சிறீதரன், திரு. தங்கராஜா சிறீதரன் தம்பதிகளின் புதல்வனும் சங்கீதாலய நிறுவுநர் “இசைக்கலைமணி” திரு.செகசோதி ஆறுமுகம் “கலை வித்தகர்” திரு.நீருஜன் செகசோதி ஆகியோரின் மாணவனுமான செல்வன் சிறீதரன் ஹரீஷ் அவர்களின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம் கடந்த 05.10.2024 அன்று சுவிற்சர்லாந்தின் பாசல் மாநிலத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பொதுச் சுடரினை திரு.குலம் அவர்களும் மங்கல விளக்கினை சுவிற்சர்லாந்தின் கலை ஆசிரியர்களும் ஹரீஷ் அவர்களின் வளர்ச்சியில் வழிகாட்டிகளாக திகழ்ந்தோரும் ஏற்றிவைத்து சிறப்பாக ஆரம்பித்து வைத்தனர்.

நிகழ்வின் பிரதம நிகழ்ச்சித் தொகுப்பாளராக இணுவையூர் மயூரன் அவர்களும் இணை நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக இசைகலைமணி, இசைக்குயில் செல்வி அஜானா தயானந்தன் மற்றும் திருமதி அனீனா மதிவண்ணன் ஆகியோரும் தொகுத்து வழங்கினர். பிரதமவிருந்தினராக “சங்கீத வித்துவான்” பராசக்தி விநாயக தேவராசா சக்தி சங்கீதா அக்கடமி,கனடா அவர்களும்
சிறப்பு விருந்தினராக “நவயுக நந்தி” Dr.பத்திரி சதீஸ் குமார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

வரவேற்புரையினை ஹரீஷ் அவர்களின் தாயாரும் நடன ஆசியருமான
திருமதி. கிருஷ்ணபவானி சிறீதரன் அவர்கள் திகழ்த்தினார். ஆசியுரைகளை சுவிற்சர்லாந்து பாசல் மாநிலத்தின் இந்து ஆலய பிரதம குரு சிவஶ்ரீ சந்தானக்கிருஷ்ணக் குருக்கள் அவர்களும் சுவிற்சர்லாந்தின் ஆரம்பகால குருவான சிவஶ்ரீ பாலா கிருஷ்ணகுமாரக் குருக்கள் அவர்களும் வழங்கியிருந்தனர்.

அணிசேர் கலைஞர்களாக
* வயலின் –
கலைவித்தகர்
திரு.நீருஜன் செகசோதி

* மிருதங்கம் –
மிருதங்க வித்துவான்
Dr.பத்திரி சதீஸ் குமார்

* கடம் –
வித்துவான்
R.N.பிரகாஷ்

* தம்புரா –
கலைவித்தகர்
சயந்தவி கேதீஸ்வரன்
மதுவந் மகேஸ்வரன்
யதீஸ்வரந் மகேஸ்வரன்

ஆகியோர் பங்கேற்று ஹரீஷ் அவர்களின் ஒவ்வொரு உருப்படிகளுக்கும் மெருகூட்டியிருந்தனர்.

புலம்பெயர் தேசங்களில் இளைய தலைமுறையினர் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கலை கலாச்சாரம் என்பவற்றை வேறு கலாச்சார முறைகளுக்குள் சிதைந்துபோக விடாது எமது கலாச்சாரத் தனித்துவத்தோடு பேணிப் பாதுகாத்து வருகின்றமை பெரிதும் போற்றுதலுக்குரியதாகும். அவ்வாறான இளைய தலைமுறையினருள் பெற்றோரின் விடா முயற்சியாலும் குருவானவர்களின் அதீத பயிற்றுவிப்பாலும் அரங்கேற்ற நாளில் தொடக்கம் முதல் முடிவு வரை நிகழ்வரங்கையும் வருகை தந்த இரசிகர் குழாமையும் தன்பால் ஈர்த்துவைத்திருந்தார் செல்வன் சிறீதரன் ஹரீஷ் அவர்கள்.

“இசையே நம் உலகின் முதன்மையே அகவிம்பம் காட்டும் ஒலியே” என்ற தோடி இராகம் பஞ்சமுகி திஸ்ரதிரிபுடை தாள பல்லவியை தானே இயற்றி அரங்கத்தில் பாடி இசை இரசிகர்களையும் ஆர்வலர்களையும் வியப்பில் ஆழ்த்தினார். இது இவரது இசைப் பயணத்தின் வீரியத்தை மேலும் முரசறைந்து நின்றது.

வாணி சரஸ்வதியின் கலை அருளும், திருவருள்கடாட்சமும், பரந்த இசைஞானமும் இருந்தால் மட்டுமே இவ் இசைக்கலை கைகூடும். இந்நிகழ்வில் பெற்றோரையும் குருவானவர்களையும் மகிழ்வித்து தன் இசை அரங்கேற்றத்தை இனிதே நிறைவு செய்தார் ஹரீஷ்.

பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர் உரைகளைத் தொடர்ந்து அணிசேர் கலைஞர்கள் மற்றும் இசை ஆசிரியர்கள் மதிப்பளிப்பு நடைபெற்றது. நிகழ்வின் நன்றியுரையினை ஹரீஷ் அவர்களின் சகோகரி காயத்திரி சிறீதரன் அவர்கள் வழங்கியிருந்தார்.

இந்நிகழ்வில் பெருந்திரளான கலை இலக்கிய ஆர்வலர்கள், இசை இரசிகர்கள், சக இசைக் கலைஞர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நன்றி: து.திலக் கிரி யாழ் உரும்பையூர் மற்றும் வீரகேசரி 

நிகழ்ச்சித் தொகுப்பைச் செய்யும் வாய்பைத் தந்த பவானி அன்ரி பாபு மாமாவுக்கு நன்றி சொல்வது தாய்ப்பாலைக் குடித்துவிட்டு வாயைத் துடைத்துக்கொண்டு தாய்க்கு குழந்தை நன்றி சொல்லும் செயலுக்கு ஒப்பானது.

இன்று சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் 1995 இல் கலாநிகேதன் நடனாலயத்தின் “நாட்டியாஞ்சலி” எனும் சுவிற்சர்லாந்தின் முதலாவது முழுநேர நாட்டிய நிகழ்வில் நடனாலயம் சார்பான நன்றியுரையை வழங்கும் வாய்ப்பை 15 வயதுப் பெடியான என்னை நம்பித் தந்து நம்பிக்கையூட்டியவர். 

இந்த அன்பும் ஆசிகளும் என்றும் தொடர வேண்டுகின்றேன். 


அன்புடன்

இணுவையூர் மயூரன்

November 5, 2024

அமரன்


 அமரன் திரைப்படைத்தையும் இராணுவ வீரனின் கடமை உணர்வையும் காதலையும் எம்மவர்கள் சிலரும் ஆங்காங்கே கொண்டாடித் தீர்ப்பதை காண முடிகின்றது.

ஊதியம் பெற்று தேசக் கடமையாற்றும் இராணுவ வீரர் முன் தேசத்துக்காய் எந்த ஒரு எதிர்பார்ப்பு மற்று தங்கள் உயிரை தந்த பல்லாயிரம் போராளிகளின் கதை இரத்தமும் சதையுமாய் எங்கள் கண் முன்னே உள்ளது.

தங்கள் காதலன் கணவன் போர்க்களத்தில் என்பதை அறிந்து தாமும் தம் துணையின் இலட்சியத்துக்காக தாமும் போராளிகளாகி களம் சென்ற கதைகளுண்டு.

உண்மைக் கதைகளாக பல பதிவாக்கப்பட்டுள்ளன.

படைப்பாளி வெற்றிச் செல்வியின் “போராளியின் காதலி”படைப்பாளி லதா உதயனின் “அக்கினிச் சிறகுகள்”

போரையும் போராளிகளின் காதலையும் பேசும் இரு போராளிகளின் உண்மைக்கதைகள்.

*எங்கள் ஊருக்குள் நடந்த முதற்சண்டை.

*நான் நினைவு தெரிந்து கண்ட முதற் கொலை.

*முதல் இடப்பெயர்வு.

*இரவுகளில் நின்மதி அற்ற தூக்கம். 

*எங்கள் நெருங்கிய உறவுகளுக்குள் பல இழப்புகள்

  என் வயதை ஒத்த பலர் கொல்லப்பட்டும் காயப்பட்டும்.

*யாழ் மருத்துவமனை படுகொலை. அதற்குள் இருந்து தப்பித்து இன்றும் நேரடிச் சாட்சிகளாய் இருக்கும் என் மாமாவும் மச்சான்மாரும்.

*அச்சமூட்டும் பள்ளிக்கும் வீட்டுக்கும் இடையேயான பயணவழி. 8-9 வயதான எங்களைக் கூட மறித்து வைத்து பாடு ஆடு முழங்காலில் நில் என மிரட்டும் சீருடை.

இவை அத்தனையும் பசுமரத்தாணிபோல் பதிந்து இன்றும் பல இரவுகளில் அச்சமூட்டிப் போகும்.  இந்திய இராணுவ பிரதாபங்களை் கொண்டாடக் கூடிய மனநிலையில் நான் இல்லை.


இணுவையூர் மயூரன்

05.11.2024