இது வரை என் வாழ்வில் ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட பல கலைநிகழ்வுகளில் பார்வையாளனாக, பங்காளனாக ஏன் ஏற்பாட்டா -ளனாகக் கூட இருந்திருக்கிறேன். ஆனால் இன்று(26.02.2011) சுவிற்சர்லாந்தில் நடைபெற்று நிறைவடைந்திருக்கக் கூடிய ஓர் நிகழ்வு எனக்கு மிகுந்த மனநிறைவையும் மகிழ்வையும் தந்திருக்கின்றது.
ஆம் லிப்ட் எனப்படும் பிரான்சை தலைமையகமாய் கொண்டியங்கும் ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் சுவிற்சர்லாந்தின் சூரிக் மாநிலத்தில் முதற் தடவையாக குறும்பட திரையிடல் நிகழ்வொன்றினை நடாத்தியிருந்தது.
இந் நிகழ்வில் ஈழத் திரைத் துறை சார்ந்த இயக்குனர்கள், நடிகர்கள், பின்னணியில் நின்றோர் என பல படைப்பாளிகள் கலந்து தங்கள் குறும்படங்களை திரையிட்டிருந்தனர்.
பல உருவங்களிலும் பல வகைகளிலும் ஈழத்தமிழர்களின் திரைப்பட முயற்சி காலத்துக்கு காலம் தோற்றம் பெற்று பொருளாதாரரீதியில் முடங்குப்பட்டு வந்தாலும் இன்று நடைபெற்று நிறைவடைந்திருக்கக்கூடிய இந்த நிகழ்வு ஈழத்தமிழர்களில் திரைப்பட சங்கத்தின் பெயருக்கேற்ப (LIFT) படைப்பாளிகளை இனங்கண்டு மேலுயர்த்தும் பணி;யை சிறப்பாகச் செய்யும் என்ற நம்பிக்கையை தந்திருக்கின்றது.
அந்த நிகழ்வு ஆரம்பித்து மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்ட பின்னர்தான் என்னால் அந்த நிகழ்வில் பங்கேற்க முடிந்தது. ஆதனால் முழுமையாக அங்கே திரையிடப்பட்ட குறும்படங்களை காண்கின்ற பேறு எனக்கு கிட்டவில்லை. ஆனால் ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல நான் பார்த்த குறும்படங்களை வைத்துக் கொண்டே ஏனைவை பற்றிய கருத்தையும் நாம் கணித்துக் கொள்ளலாம்.
முதலாவதாக நான் பார்த்த குறும்படம் அவதாரம் நிறுவனத்தின் தயாரிப்பில் சதா பிரணவனின் இயக்கத்தில் வெளிவந்திருந்த தினப்பயணம் - பயம் என்கின்ற குறும்படம் பார்த்த அனைவர் முகத்திலும் ஈழத் தமிழரின் திரையுலகம் என்கின்ற கனவுலகம் வெகு தொலைவிலில்லை அதன் வாயில் தாண்டி உள் நுழைந்துவிட்டோம் என்ற நம்பிக்கை ஒளியினைக் காணமுடிந்தது,
ஆம் அந்த குறும்படம் மிகுந்த நகைச்சுவை உணர்வோடு பிரான்சில் நடைபெறும் ஒரு சம்பவத்தை மையக்கருவாக்கொண்டு பல விடயங்களை உணர்த்தி நின்றது. சிரிக்க வைத்ததோடு தமிழரின் இன்றைய ஒரே இலக்குக்காய் பல கோணங்களில் பிரிந்துகிடக்கும் நிலையைபற்றி சிந்திக்கவும் வைத்தது.
அடுத்து றமணாவின் இயக்கத்தில் செம்மலையான். போராளிகளுக்கும் இராணுவத்துக் இடையே நடைபெறுகின்ற போர்களக் காட்சியொன்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படம். ஆழகிய காட்சிப்பதிவும் கதை நகர்த்தலும். பிரான்சு தேசத்தின் காடொன்றில் தத்ரூபமான காட்சிப்படுத்தல் மேலைத்தேய தொழில்நுட்பத்துக்கு நிகராக குறைந்த வளங்களைக்கொண்டு எம்மாலும் முடியும் என்பதை நிரூபித்து நின்றது.
அடுத்து மின்படிமங்களின் தயாரிப்பில் தயாளனின் இயக்கத்தில் வெளிவந்த குட்டி இதயம் இது அனைவர் இதயங்களை தொட்டுச் சென்றது. கள்ளம் கபடிமில்லாத வெள்ளைமனம் கொண்ட குழந்தைகளின் உள்ளத்தோடு நாமும் சேர்ந்து அந்த குழந்தைகளாகினோம் அந்த நிமிடங்களில்.
அடுத்து குருவிச்சை இது அகரம் தயாரிப்பில் றொபேட்டின் இயக்கத்தில் வெளியான குறும்படம் இன்று எம்மவர் மத்தியில் மட்டுமல்ல உலகின் அனைத்து தரப்பினராலும் உபயோகப்படுத்தும் முகப்புத்தகம் பற்றிய ஒரு குறும்படம் அழகான ஒளிப்பதிவுடன் கதை அழகாக நகர்த்தப்பட்டிருந்தது. திரைக்கதையிலும் நகர்விலும் ஒளிப்பதிவிலும் அதி அக்றை காட்டிய இயக்குனர் ஒலிப்பதிவை கவனிக்கத் தவறிவிட்டார். அதை அவரும் ஒப்புக் கொண்டிருந்தார். குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்பட்டதால் அந்தக் குறையை பெரிது படுத்தாமல் பார்த்தால் அற்புதமான படைப்பு.
இறுதியாக திரையிடப்பட்ட பாஸ்கரின் எனக்கும் உனக்கும் குறும்படம் கதையல்ல உண்மையில் நிஜம். எங்கள் தாயகத்தில் நடைபெறுகின்ற கொடுமைகளை அழகான திரை நகர்வுடன் சொல்லியிருந்தார். அங்கு நடைபெறும் கொடுமை இங்கே எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. போரின் வலி தாயகத் தமிழனே உனக்கு மட்டுமல்ல புலம்பெயர்ந்து வாழும் எமக்கும்தான் என்பதை உனக்கும் எனக்கும் திரைப்படம் வலியோடு உணர்த்தி நின்றது.
மண்டபம் நிறையவில்லை. ஆனால் வந்தவர்கள் மனம் நிறைந்திருந்தது. ஒரு தமிழக திரைப்படக் கலைஞர் கலந்து கொள்கின்ற நிகழ்வெனில் முண்டியடித்து கலந்து கொள்ளும் எம்மவர்கள் எங்கள் மத்தியில் தோற்றம் பெறும் எங்களின் கலைஞர்களின் படைப்புகளுக்கு ஆக்கபூர்வமான ஆதரவினை வழங்க பின் நிற்பது மனதுக்கு வலியை தந்தது.
ஒரு தமிழக நடிகன் ஒரு நடிகையுடன் விடுமுறை சென்றான் என்றால் அதையே பெரிய செய்தியாக்கும் எமது ஊடகங்கள் எங்களின் கலைஞர் ஒரு படைப்பை வெளியிட்டான். ஒரு குளும்படத்தை திரையிட்டான் என்ற செய்திகளை வெளிக்கொணர்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நிலை மாறும் காலம் தொலைவிலில்லை. ஈழத்தமிழர் மத்தியில் பல முழுநீளத் திரைப்படங்கள் குறுகிய காலத்துக்குள் வரும் என்கின்ற நம்பிக்கையையும் அந்த நிகழ்வு தந்திருந்தது.