Pages

Showing posts with label வாழும் போதே கௌரவிப்போம்.. Show all posts
Showing posts with label வாழும் போதே கௌரவிப்போம்.. Show all posts

June 10, 2016

வாழும் போதே கௌரவிப்போம் 2


Rajeevan Ramalingam ரஜீவன் அண்ணா றெயின் இஞ்சினிலை முதல்ப்பெட்டியா Kogulan Kandasamy கோகுலனை கொழுவிவிட கோகுலன் Robert Thiru றொபேட் அண்ணாவை கொழுவ றொபேட் அண்ணா என்னை கொழுவிவிட்டிருக்கிறார். இது யாரும் கழன்று போய்விட முடியாமல் தொடர வேண்டிய ஒரு பிணைப்பு. இதில் நான் மதிக்கும் ஒரு பல்துறைக் கலைஞனாக இருக்கும் றொபேட் அண்ணா என்னையும் ஒருவனாய் மதித்து அழைத்திருப்பது மகிழ்ச்சியே. இதில் வியப்பு என்னவென்றால் முதல் நாள் இரவு றொபேட் அண்ணா என்னை இதில் இணைத்துவிடுவதுபோல் கனவு காண்கிறேன் விடிந்து பார்த்தால் அப்படியே நடந்திருக்கின்றது.

முதலில் இத்தகைய முயற்சியை ஆரம்பித்த ரஜீவன் அண்ணாக்கு மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும். வாழும் போதே எமது கலைஞர்கள் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்ற நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் கோட்பாட்டை முடிந்த வரை பின்பற்றி வருபன் என்ற வகையில் இத் திட்டம் மன நிறைவைத் தருகின்றது. றொபேட் அண்ணா யாரையாவது பற்றி எழுதுமாறு முழுச் சுதந்திரத்தை எனக்கு வழங்கியுள்ளார். அவரது வேண்டுகோளின்படி பிரான்சிலுள்ள எனக்கு மிகவும் பிடித்த கலைஞர் ஒருவர் பற்றி தொடர்கிறேன். இணைந்திருங்கள்.

ஆம், நான் குறிப்பிடப் போகும் நபர் வேறு யாருமல்ல சாட்சாத் றொபேட் அண்ணாவேதான். இரண்டாயிரங்களின் முற்பகுதியில் புத்தொளி வீசி ரீரீஎன் தொலைக்காட்சி தோற்றம்பெறுகின்றது. பலதரப்பட்ட நிகழ்வுகளோடு உதயமான தொலைக்காட்சியில் புதிதாய் மலங்க மலங்க முழியை உருட்டியபடி ஒருவர் அறிமுகமாகிறார், குறிப்பாக செய்தி மற்றும் மனங்கவர் நிகழ்வான தாயகவலம் வேறும் பல நிகழ்வுகளில் றொபேட் அண்ணா அடிக்கடி தோன்றுவார். இதில் தாயகவலம் நிகழ்வுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பிருந்தது. அதாவது காசியானந்தன் சொன்ன "நீ பனை மரத்தை என் தேசத்தில் காண்கிறாய் நான் பனைமரத்தில் என் தேசத்தைக் காண்கிறேன்" என்ற கூற்றுப்போல் இந் நிகழ்வும் அமைந்தது. அதாவது தாயகத்துக்கும் புலம்பெயர் தமிழருக்குமான தொடர்புகள் மிக இறுக்கமான காலத்தில் தாயகத்தின் காட்சிகளைத் தரிசிக்கும் பெரும் வரமாக அந் நிகழ்வு இருந்தது. அந் நிகழ்வின் தொகுப்பாளராய் இவர் இருந்ததால் மக்களால் "தாயகத்தம்பி" என அன்பாக அழைக்கப்படும் ஒருவரானார். இதை நானே பல இடங்களில் நேரில் கண்டுள்ளேன்.

சமகாலத்தில் ஐபிசி தமிழ் வானொலியும் ரீரிஎன் தமிழ் ஒளியும் சகோதர நிறுவனங்களாக இணைந்த சேவையில் இருந்தன. இவ் இரண்டு ஊடகங்களையும் இணைத்து சுவிசில் இயங்கிய கலையகத்தில் இரு ஊடகங்களிலும் நானும் பணி புரிந்திருந்ததால் றொபேட் அண்ணாவை பல தடவைகள் சந்திக்க முடிந்தாலும் நெருங்கிப் பழக்க கிடைத்த வாய்ப்புகள் மிக குறைவே.

2005 இல் மகிந்த அரசுடனான முதலாங்கட்டப் பேச்சுவார்த்தைகள் ஜெனிவாவில் நடைபெற்ற காலப்பகுதியில் றொபேட் அண்ணா ரீரிஎன்னுக்காகவும் நான் ஐபிசி தமிழுக்காகவும் செய்தி சேகரிக்கச் சென்றிருந்தோம். அந்தக் காலப்பகுதியில்தான் றொபேட் அண்ணாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிட்டியது. தான் இருக்கும் சூழலை எந் நேரமும் மகிழ்ச்சிகரமாக வைத்திருப்பதில் வல்லவர். அந்த மூன்று நாட்கள் அதிக பொழுதை அவருடன் கழிக்க முடிந்தபோதுதான் ரீவியில் முழி உருட்டும் றொபேட் என்ற நிகழ்ச்சித் தொகுப்பாளனுக்கும் றொபேட் என்ற கலையுணர்வுமிக்க கலைஞனுக்கும் இடையே நிறைய விடயங்கள் உள்ளமை புலப்பட்டது.

கால ஓட்டத்தில் ரீரிஎன் என்ற சாம்ராஜ்ஜியம் சரிய நானும் தற்போது பணியாற்றும் வானொலியின் பொறுப்புக்களுள் நுழைய றொபேட் அண்ணாவுடனான தொடர்புகள் அற்றுப்போனது. மீண்டும் 2011இல் சுவிசில் நடைபெற்ற "LIFT" நிறுவனத்தின் முதலாவது குறும்பட திரையிடல் நிகழ்வுக்குப் போனபோது றொபேட் அண்ணாவை மீண்டும் கண்டு அழவழாவ முடிந்தது. அன்றைய நாளில்தான் அவரது இயக்குனர் என்ற அவதாரம் பற்றியும் அறிய முடிந்தது. அந்தத் திரையிடல் நிகழ்வில் இவரது இயக்கத்தில் வெளிவந்த "குருவிச்சை" என்ற குறும்படமும் திரையிடப்பட்டது. மிகச் சிறந்த இயக்குனராக மிளிர்ந்தார். அந்த குறும்படம் பற்றிய கருத்தை முதலில் பதிவாக்கிய பெருமை என்னைச் சாரும்.

அக் குறும்படம் பற்றி அன்று பின்வருமாறு பதிவு செய்தேன்.

"அடுத்து குருவிச்சை இது அகரம் தயாரிப்பில் றொபேட்டின் இயக்கத்தில் வெளியான குறும்படம் இன்று எம்மவர் மத்தியில் மட்டுமல்ல உலகின் அனைத்து தரப்பினராலும் உபயோகப்படுத்தும் முகப்புத்தகம் பற்றிய ஒரு குறும்படம் அழகான ஒளிப்பதிவுடன் கதை அழகாக நகர்த்தப்பட்டிருந்தது. திரைக்கதையிலும் நகர்விலும் ஒளிப்பதிவிலும் அதி அக்றை காட்டிய இயக்குனர் ஒலிப்பதிவை கவனிக்கத் தவறிவிட்டார். அதை அவரும் ஒப்புக் கொண்டிருந்தார். குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்பட்டதால் அந்தக் குறையை பெரிது படுத்தாமல் பார்த்தால் அற்புதமான படைப்பு."

அந்த விழா பற்றிய பதிவின் பின்னர் றொபேட் அண்ணாவுடனான முகப்புத்தக நட்புக் கிடைத்தது. அவரைப் பற்றியும் அவரது தனித் திறன்கள் பற்றியும் பல விடயங்களை அறிய முடிந்தது. ஓவியர், பத்திரிகையாளர், எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், இசைக்கலைஞர் என பல்துறை சார்ந்த திறன்களையும் கொண்டவராகவும்  அன்பான தந்தை, துணைவன், குடும்பத் தலைவன் என்ற அவதாரங்களைக் கொண்டவராகவும் காணமுடிந்தது.

ஈழநாதம், ஈழநாடு பத்திரிகைகளில் ஆசிரியர் பீடத்தில் பணிபுரிந்ததோடு பல புனைபெயர்களில் பல ஆக்கங்களையும் எழுதித்தள்ளியிருக்கிறார். மனோரஞ்சிதன் என்ற புனைபெயரில் இவர் எழுதிய 'நாதவலை' என்ற சிறுகதையொன்றை அண்மையில் வாசிக்கமுடிந்தது. இத்தகைய பல்துறை ஆளுமை மிகு கலைஞனிடம் நான் அறிந்த வரை குறையை தேடித் தேடிப் பார்க்கிறேன் எதுவும் கிடைக்கவில்லை. இத்தனை ஆளுமை கொண்ட ஒருவர் எவ்வித ஆர்ப்பாட்டமுமில்லாமல் இருப்பதே அவரது + & - . அவரது அடையாளமான குழந்தைத்தனமான கல கல என்ற சிரிப்பு களங்கமில்லாமல் தொடரவேண்டும் எனக் கேட்டு நிறைவுக்குள் வருகிறேன்.

நான் அவர் பற்றி சொல்லாமல் விட்டவை பல அதையெல்லாம் கருத்தெழுதும் உறவுகள் நிவர்த்தி செய்வார்கள். பிரான்சிலிருந்து பிரித்தானியா போய் மீண்டும் பிரான்ஸ் வந்து சுவிசில் நிற்கும் இந்த தொடர்வண்டியை அடுத்த பெட்டி கொழுவ பல்லாயிரம் மைல்கள் தாண்டி எங்கள் தாயகம் நோக்கித் திருப்புகிறேன். நான் பெரிதும் மதிக்கும் இன்னொரு பல்துறைக் கலைஞன். எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு செயற்படும் ஒரு கலைஞனான MaThi Sutha மதிசுதாவை அழைக்கிறேன். என்னைப்பற்றி எழுதித் தொடர...

January 4, 2011

வாழும் போதே கௌரவிப்போம்.

நூலகவியலாளர் என்.செல்வராஜா பல தடவை என்னோடு உரையாடிய போதிலும் எமது குருத்து இதழுக்கு ஆக்கங்கள் எழுதிய போதிலும் மறக்காமல் குறிப்பிடும் ஒரு விடயம் வாழும் போதே கௌரவிப்போம். அது தான் இன்றைய என் பதிவின் தலைப்பும் உள்ளடக்கமும்.

மகாகவி பாரதியின் இறப்பின்போது வெறும் பதின்நான்கு பேர்தான் அவனது இறுதி ஊர்வலத்தில். ஆனால் இன்று மகாகவி இன்று வாழ்ந்திருந்தானானால் அவன் காலடியில் இந்த வையகம்.

வாழும் போது ஒருவன் செய்த இழி செயலுக்காய் தூற்றுகிறோமோ அதைவிட ஒருவன் செய்யும் நல்ல விடயங்களை சீர் தூக்கிப் பார்த்து அவனுக்குரிய கௌரவத்தை அவன் வாழும் காலத்திலேயே அவனுக்கு கொடுக்க வேண்டும். ஏன்ற நூலகவியலாளரின் கருத்தோடு என்றும் எனக்கு ஒத்த கருத்துண்டு.

அதனால்தான் எத்தனையோ பாரிய வேலைப்; பழுக்களுக்கு மத்தியில் இந்தப் பதிவை எழுதுகிறேன். $

அண்மையில் சுவிற்சர்லாந்திலிருந்து வெளிவந்திருக்கக் கூடிய ஓர் இசைப்பேழை சூரியோதயம். இது ஒரு ஈழத்தமிழ் மற்றும் தமிழக கலைஞர்களின் கூட்டு வெளியீடு.

இதில் வெயிவந்திருக்கும் பாடல்களை ஜோதி அவர்கள் எழுதி தமிழக பின்னணிப்பாடகர்கள் திரு. ஏச். ஆனந்தநாராயணன், திருமதி ராதா பத்ரி ஆகியோர் பாடியுள்ளார்கள். வேங்கடசுப்பிரமணியன் என்பவர் இசையமைத்துள்ளார். சுவிஸ் அன்னை வெளியீட்டகத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்த இசைப்பேழையில் வெளிவந்த பாடல்களை யாத்த கவிஞர்  ஏற்கனவே இரண்டு இசைபேழைகளை வெளியிட்டிருக்கின்றார். அவை இரண்;டும் பக்திரசம் சொட்டும்  பாடல்களை உள்ளடக்கியவையாக இருந்திருக்கின்றன. இந்த இசைப்பேழையோ அவற்றிலிருந்து சற்று வேறுபட்டு தமிழை துதிப்பனவாக தமிழுக்காய் தம் உயிர் தந்தவர்களை நினைப்பவையாக அமைந்துள்ளன.

குறிப்பாக இந்த இசைப் பேழையின் அனைத்துப் பாடல்களும் அனைவரையும் ஈர்க்கும்வகையில் அமைந்திருந்தாலும் எனது கண்ணோட்டத்தில் சில பாடல்களை கோடிட்டுக்காட்ட முடியும்.
குறிப்பாக இரண்டாவது பாடலான வந்தனங்கள் சொல்லி எனத் தொடங்கும் பாடல் என் மனதில் மட்டும் அல்ல பலரது மனங்களிலும் நீண்ட காலமாக இருந்து வந்த ஓர் இடைவெளிளை நிரப்பியிருக்கின்றது. அதாவது எம்மவர்களின் கலை நிகழ்வுகள் பலவற்றிலும் சம்பந்தமில்லாத பாடல்களே வரவேற்புப்பாடலாக ஒலிபரப்பாகியிருக்கின்றன. அந்தக் குறையை தீர்க்கும் முகமாக தேன்தமிழ் வரிகளில் இனிய தமிழிசையூட்டலுடன் அந்தப்பாடல் உருவாகியிருக்கின்றது. இனி நடைபெறும் தமிழர் நிகழ்வுகளில் அந்தப் பாடலே வரவேற்புப்பாடலாகவோ அல்லது வரவேற்பு நடத்துக்குரிய பாடலாகவோ இருக்கக்கூடியதென முன்மொழிகிறேன்.

அதே போல் ஆறாவது பாடல் நான் ஒரு பொம்மை என்கின்ற பாடல் மெல்லிய இளையோடிய சோகத்தோடு ஈழத்தமிழரின் வாழ்வியலை ஜந்து நிமிடத்துக்குள் அளந்திருக்கிறார். இந்தப் பாடல் குறளுக்கு ஒப்பானது.
புத்தாவது பாடல் இது வடிவேலனை காணாமல் தேடும் பக்தர்களின் குரலாய்  ஈழத்தமிழரின் இன்றைய எதிர்பார்ப்பை மனோநிலையை பிரதி பலிக்கின்ற பாடல்.

பதினொராவது மற்றும் பதின்நான்காவது பாடல் எங்களின் குழந்தைகளுக்கான பாடல் இலகு தமிழில் இனிய இசையில் குழந்தைகளுக்கு ஏற்றால்போல் அமைக்கப்ட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரையும் கவரவேண்டும் என்ற கவிஞரின் எண்ணம் நிறைவேறியுள்ளது.

கவிஞரின் பிறந்த மண்ணின் இயல்பான சிறப்பு அவரின் கவிவரிகளில் இழையோடியுள்ளது. ஆம் செந்தமிழ் செழித்தோங்கும் இணுவை மண்ணின் உலகம் போற்றும் உத்தமக் கவிஞன் வித்துவான் வீரமணி ஐயரின் அயல்வீட்டவர் என்பதை இவரின் வரிகள் உணர்த்திநிற்கின்றன.