Pages

December 6, 2013

கருப்புச் சூரியனே! போய் மீண்டும் வருக..

இருண்ட கண்டத்தின்
இருள் அகற்றிய கதிரவனே!
வெருண்டது வெண்ணினம் - உன்
வீர எழுச்சி கண்டு
தொலைந்தது நிறவெறி
தொடர்ந்த உன் பணியால்
கொத்தடிமைத் தனம் உடைத்து - உன்
குடி அரசாள வழி அமைத்தாய்
ஒடுக்கப்பட்ட இனங்களின்
ஒளி விளக்கானாய்
துடிக்கிறது எம் இதயம்
தூயவனே உன் சேதி கேட்டு
இரத்த உறவொன்றை
இழந்த உணர்வு
எங்கள் உதிரமெல்லாம்
பரந்து நிற்கின்றது
கருப்புச் சூரியனே! போய் மீண்டும் வருக..
கண்ணீரோடு காத்திருக்கின்றோம்
கலங்கரை விளக்கினைத் தேடி
இருண்ட கண்டத்தின் நாயகனே!
இருண்ட எம் வாழ்வில் ஒளி ஏற்ற
இனி எம் தேசத்தில் வந்து பிறந்துவிடும். - எம்
தலைவனுக்கு அடுத்து நாம்
துதிக்கின்ற பேரொளியே
துயில் எழும் ஞாயிறே
தூமணியே போய்வாரும்.
ஆண்டுகள் ஆயிரமாய்க் கடந்தாலும் - என்றும்
அகிலத்தில் ஆதவனாய் நீ திகழ்வாய்.

December 4, 2013

எனக்குள் ஒருவன் இருக்கின்றான்


எனக்குள் ஒருவன் இருக்கின்றான்
அதிகமாய் அவன்தான் என்னை ஆள்கின்றான்
அதிக தடவை அவனை ஆள நான் நினைத்ததுண்டு
அது நினைப்போடே போன சம்பவங்கள் நிறையவுண்டு

அவன் சொற்கேட்டு ஆடிய போதெல்லாம் - இந்த
அவனியே என் காலடியில்
அடைக்கலம் போல் தோன்றும்
அகங்காரம் நெஞ்சமெல்லாம் குடி கொள்ளும்

அவனை நான் எதிர்த்து ஆள முனைந்தபோது
அவனியில் புகழாலே ஓங்கியதுண்டு - என்
ஆழ் மனமும் ஆண்டவன் குடியிருக்கும்
ஆலயம் போல் அமைதியானதுண்டு.

01.06.2004

June 20, 2013

துன்பத்தை தந்தவனுக்கே திருப்பிக்கொடு


நீண்ட நாட்களின் பின்
நிலவு பூத்தது போல் இவ் இரவு
சொல்ல முடியாத மகிழ்ச்சி வெள்ளம்
சோகம் எல்லாம் மறைத்து நிற்க
மத்தாப்பு பூத்து
மனம் முழுக்க சிரித்து நிற்க
எத்தனையோ நாட்களாய்
ஏக்கத்தோடு உறங்காத கண்கள்
சேதி அறிந்த கணம் முதல்
சிலிர்த்து சொரிந்த கண்ணீரில்
உப்பு உறைக்கவில்லை
உதிரத்தில் கலந்த தமிழ்தான் இனித்தது

துன்பத்தை தந்தவனுக்கே
திருப்பிக்கொடு - என்று
சொன்னவன் வழி வந்த பிஞ்சுகள்
ஆடுகளத்தை அசர வைத்து
போர்க்களமாடி உலகமுன்றலில் - எங்கள்
கதை மீண்டும் கதையாகாமல்
கவனப்படுத்திய காட்சி கண்டு
உள்ளம் உவகை கொண்டு சிரிக்கின்றது
உளமார வாழ்த்துகின்றேன் வீரரே!!!

June 15, 2013

ஈழத்தமிழருக்கான குரல் ஒன்று ஓய்ந்து போனது

மணிவண்ணன் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டடாராம் செய்தி கேட்ட கணம் எங்கள் குடும்ப உறவொன்றை இழந்த உணர்வு.

இயக்குனராக வில்லனாக சிறந்த குணச்சித்திர நடிகராக நகைச்சுவை நடிகராக இன உணர்வாளராக ஈழத்தழிழருக்கான குரலாக உலகத்தமிழர் முன் அறிமுகமான அற்புதமான கலைஞன் ,  மனிதநேயம்மிக்க மனிதன்.

2001ம் ஆண்டு ஐபீசி வானொலியும் ரீரீஎன் தொலைக்காடசியும் இணைந்து சுவிற்சர்லாந்தில் நடாத்தியபுத்தாண்டே வருக என்ற அந்த நிகழ்வுக்காய் திரு. மணிவண்ணன் அவர்கள் வந்திருந்தார். அப்போது ஐபிசி தமிழின் சுவிஸ் செய்திப்பிரிவில் நான் பணியாற்றி வந்ததால் அவரது வரவு பற்றிய செய்தியை ஐபிசி தமிழ் ஊடாக எடுத்து வரவேண்டிய பணி எனது பணியாக இருந்தது. திரைத்துறை சார்ந்த ஒரு கலைஞரின் வரவை புகழ்ந்து சொல்லக்கூடிய மனநிலையில் நான் இருக்கவில்லை. அப்போது என்னோடு தொடர்பு கொண்ட அன்றைய ஐபிசியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் ஒருவரான பரா பிரபா அண்ணா மணிவண்ணன் அவர்களின் தழிழுணர்வு பற்றியும் ஈழத்தமிழர்பால் அவர்கொண்ட அன்பு ஆதரவுபற்றியும் விளக்கிக் கூறினார். அன்றுதான் அவரை அவர் திரைத்துறையையும் கடந்து ஒரு மனிதநேயம்மிக்க தமிழின உணர்வாளனாகக் கண்டேன்.

புத்தாண்டு நிகழ்வுக்காய் சுவிஸ் வந்த அவரை நிகழ்வுநாளன்று கவனிக்கின்ற பொறுப்பு எனக்கு இடப்பட்டிருந்தது. முழுநாளும் அவரோடு இருக்கக்கூடிய வாய்பு தமிழ் தமிழினம் திரையுலகம் என பல விடயங்கள் பற்றி நீண்டநேரம் உரையாடக்கூடிய வாய்ப்பு. மிகவும் அன்பான மனிதர். மனிதநேயம் மிக்க மனிதர். நிகழ்வு நாளன்று அவரது உடல்நிலை சரியில்லை ஆனபோதும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இசைவாக பல மணிநேரம் மேடையில் கழித்ததோடு மட்டுமல்லாமல் இளையதலைமுறை ரசிகர்களின் விருப்புக்கிசைவாக அவர்களோடு இணைந்து நடனமொன்றினையும் வழங்கியிருந்தார். திரையுலகிலிருந்து வரும் பலரும் நிகழ்வு நேரம் வரை எமக்கு மண்டபத்திற்கு அருகே நாம் ஓய்வெடுப்பதற்கு கண்டிப்பாக நட்சத்திரவிடுதில் அறை ஒதுக்க வேண்டும் என்று அடம்பிடிப்பவர்கள் மத்தியில் இவர் எங்களில் ஒருவராய் அந்த நிகழ்வுநாளில் ஒருங்கிணைந்திருந்தார்.

அநேகமாக அந்த நிகழ்வுக்குப் பின்னர்தான் அவரின் தமிழ் இன உணர்வும அறியப்பட்டு ஈழத்தமிழரின் அன்புக்குரியவராகவும் மாறிப்போனார். இராமேஸ்வரம் திரைப்படத்தில் ஈழத்தமிழனாகவே மாறிப்போனார்.

புத்தாண்டு நிகழ்வினைத் தொடர்ந்து மறுநாள் சுவிற்சர்லாந்து வாழ் கலைஞர்களுடனான சந்திப்பு ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. சுவிற்சர்லாந்து வாழ் ஈழத்தமிழர் பலரும் திரைத்துறையில் கால் பதிக்கும் நோக்கோடு குறும்படங்களை எடுக்கத் தொடங்கியிருந்த காலம். பல குறும்பட இயக்குனர்கள் பல நடிகர்கள் என பலரும் அந்த ஒன்றுகூடலில் பங்கேற்றிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களின் கருத்து நாங்கள் எடுக்கிற படங்களை மக்கள் விரும்பிப் பாக்கினம் இல்லை என்ற குற்றச்சாட்டை மக்கள் மீது வைத்திருந்தார்கள். அவர்களுக்கு தெளிவான விளக்கங்களை வழங்கியிருந்தார். மக்கறைக் குறை சொல்ல வேண்டாம் மக்கள் எதை விரும்புகின்றார்கள் என்பதை நாடி பிடித்துப் பார்த்து அவர்களுக்கு தேவையானதை கொடுப்பதுதான் கலைஞர்களான எமது கடமை என தெளிவுபடுத்தினார். நிச்சயமாக அவர் போன்றோரின் வழி காட்டல்களும் இன்றைய புலம்பெயர் ஈழத்தமிழரின் வெற்றிப்பாதை நோக்கிய திரைத்துறை முயற்சிகளுக்கு சான்றாக நிற்கின்றது.

ஒரு அற்புதக்கலைஞனை இனஉணர்வாளனை மனிதநேயம் மிக்க மனிதனை எங்கள் உறவை இழந்து நிற்கின்றோம். அவர் ஆத்மா அமைதியாய் உறங்க எமை ஆளும் சக்தியும் இயற்கையும் துணை நிற்கட்டும்.

March 17, 2013

மரணத்தறுவாயிலும் மறக்கோம் உங்களை...

  • முள்ளிவாய்க்காலோடை எல்லாம் முடிஞ்சுது - இனி
    முதுகு சொறியும் நிலைதான் தமிழர் நிலை என்றிருந்தோம்
    தம்பியர் தூண்டி விட்ட திரியில்
    துயருற்றிருந்த - எங்கள்
    மனங்களில் மத்தாப்பு பூக்கின்றது
    மலரும் எங்கள் தேசம் என்ற
    மமதையில் நிற்கின்றோம்.

    அள்ளி அணைத்து ஆதரிக்க எங்கள்
    அன்னை தமிழகம் இருக்கின்றது
    சுற்றி வரும் பகை யுடைத்து
    சுதந்திரத்தை பெற்றுத்தர - திலீபனின்
    வழியில் பல்லாயிரம் தம்பிகள் அங்கே
    விழி திறந்து விடுதலைக்காய்
    வழி திறந்து விட்டிருக்க
    வார்த்தைகள் ஏதுமின்றி மகிழ்கின்றோம்

    கந்தகக் களஞ்சியத்துள் வீழ்ந்திட்ட சிறுபொறிபோல் - அகிலத்தை
    கலங்கடிக்கும் அருஞ்செயல் கண்டு மீள நாம் துளிர்க்கின்றோம்
    கலங்கிக் கிடந்த எங்கள் கண்கள்
    கல்லூரி மாணவரே உங்கள் கரங்களால் துடைக்கப்படுகின்றது - எங்கள்
    திலீபனின் வழியில் நீங்கள் தொடுத்து நிற்கும் போர்
    தீச் சுவாலையாய் தமிழகம் தாண்டி
    தமிழன் வாழும் இடமெல்லாம் பரந்துவிட்டது

    எல்லாம் இழந்தோம் என்றிருந்தோம்
    உங்களைக் கை விடோம் நாம் இருக்கின்றோம் என்று
    உணவு தவிர்த்து உடல் வருத்தி நீவீர்
    உணர்வோடு காட்டுகின்ற அக்கறையில்
    உளம் மகிழ்ந்து நிற்கின்றோம்
    வார்த்தைகள் வரவில்லை
    வலுவிழந்த இனத்திற்கு வடிகால்களாய் நீங்கள்
    வந்தீர்கள் வான தூதர்களாய்
    மரணத்தறுவாயிலும் மறக்கோம் உங்களை...

January 1, 2013

நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2013


எண்கள் மாறும் வேளை - நம்
நெஞ்சங்களில் உள்ள
வஞ்சங்கள் தொலைந்து
எண்ணங்கள் செழுமைபெற்று
எண்ணிடும் கருமங்கள்
எண்ணம் போல் வெற்றி பெற்று
வண்ணமாய் வாழ்வு செழித்து
வரலாறு படைக்க வாழ்த்துகின்றேன்.

இணுவையூர் மயூரன்