Pages

March 28, 2021

இன்று உலக நாடக நாளாம்...

 இன்று உலக நாடக நாளாம்...


என் பத்தாவது வயதில் நானும் என் வயதை ஒத்த என் அயல் நண்பர்களும் இணைந்து போர்க்காலத்தில் குமணன் என்ற அரச நாடகத்தை நாமே பழகி நடித்தோம். அது ஒரு சித்திரா பௌர்ணமி நாள். எங்கள் கிணத்தடி பிள்ளையார் கோவிலில் எங்கள் அயலவர்களில் வீடுகளில் இருந்த கட்டில்களை மேடையாக்கி அம்மாக்களின் சேலைகளை திரைச்சீலைகளாக்கி அரங்கமைத்து அழகாய் நடந்து முடிந்தது.

நான், ராஜி, சுதா, அரவிந்தன், நந்தன் இன்னும் ஓரிருவர். நாங்கள் ஒவ்வொருவரும் மூன்று நான்கு பாத்திரங்களை ஏற்று மாறி மாறி நடித்தோம். 

அதன் தொடர்ச்சியாய் அதே நாடகத்தை எமது பள்ளியிலும் எமது வகுப்பினர் இணைந்து நடிக்க திட்டமிட்டோம். அதில் இளங்குமணனான நானும் குமணனாக ஞானசொரூபனும் நடிப்பதற்கான ஒத்திகைகளை செல்வராணி ஆசிரியரின் வழிநடத்தலில் ஆரம்பித்திருந்தோம். அந்தவேளையில் நான் சுவிற்சர்லாந்துக்கு புலம் பெயர வேண்டிய தேவை ஏற்பட அந்த நாடகம் அப்படியே விடுபட்டு போனது.

சுவிற்சர்லாந்துக்கு வந்த பின் சுவிற்சர்லாந்தில் சட்டரீதியாக உருவான முதலாவது தமிழ்ப்பாடசாலை எம்மையும் இணைத்து உருவானது. 1992 ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும்  நடாத்தப்படும் கலைவாணி விழா மேடையில் நாமே நாடகங்களை பழகி நடிக்கத் தொடங்கினோம். சுவிசில் முதல் மேடை நாடகமாக சரஸ்வதி சபதம் நாடகம்.

என் 16வது் வயதில் “தவறு” என்ற நாடகத்தை கதை அமைத்து நானே எழுதி என்னோடு படித்த நண்பர் நண்பிகளை இணைத்து நடித்து முடித்து அனைவரது பாராட்டையும் பெற்றோம்.

அந்த நாடகம் எங்களை பாடசாலை அரங்கு தாண்டி வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தியது.

அந்த நாடகத்தில் நடித்த அத்தனை பேரையும் இணைத்து அதே நாடகத்தை சிறு மாறுதல்களோடு  “யதார்த்தங்கள்” என பெயர் மாற்றி போட்டிக்கு அனுப்ப  எங்களை விட வயதில் மூத்த ஒருவருடன் சிலர் வந்தார்கள். எனது கதையமைப்பு எனது இல்லை என்றானது. அன்று அதை உறுக்கிக் கேட்கும் நிலையில் நான் வயதில் முதிர்ந்து இருக்கவில்லை. 

தொடர்ச்சியாக பல நாடகங்கள் போட்டிகளுக்காகவும் சுவிசின் பல பாகங்களிலும் நடைபெற்ற அரங்க நிகழ்வுகளுக்காகவும் நடிக்க தொடங்கினோம்.

அந்தவேளையில் சுவிற்சர்லாந்தின் நாடகத்துறையிலும் சுவிஸ் கலைபண்பாட்டுக் கழகத்தின் நாடகத்துறை பொறுப்பாளருமான சிறீ அண்ணாவின் கண்களில் நாம் தட்டுப்பட அவரது்நாடகங்களில் எனக்கும் நடிப்பதற்கான வாய்ப்புகள் அவர் மூலம் கிடைத்தது. எமது ஒரு நாடகம் மட்டும் சுவிசின் 13 மாநிலங்களில் மேடையேறியது.

நிறைவாக அனைவரும் ஒருமுறையாவது  ஏறிவிட வேண்டும் என ஏங்கும் மாவீரர் மேடையில் 2002 முதல்  நாடகம் நடிக்கும் பெருவாய்ப்பும் தொடர்ச்சியாய்க் கிடைத்தது. 

2012 வரை 50க்கும் மேற்பட்ட நாடகங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மேடைகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஊடகப் பதிகளால் தொடர்ந்து நாடகங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்புகள் அமையவில்லை. 

நாடகங்களின் தொடர்ச்சியாய் பல மேடைகளை உருவாக்கித் தந்த சிறி அண்ணா தனது  அடம்பன் திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தார்.  அவரது அடுத்த திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்புத் தந்துள்ளார் தற்போதைய இடர்காலத்தால் அதன் காட்சிப்படுத்தல்கள் தாமதித்துக் கொண்டிருக்கின்றன...

(இது 1997 இல் “தாய் மண்ணே தனி இன்பம்” எனும் நாடகத்தில்.. அற்றார் அழிபசி தீர்த்தல் போட்டி நிகழ்வில்... மீசை முளைக்காத வயதில் மீசையோடு)



March 9, 2021

பெண்ணே உசார்!!!


வாழ்த்துகள் தோழி என்று
வாயாரப் புகழ்ந்து நிற்பார்
பெண் இன்றி எதுவும் இல்லை என்று
பேசியே கழுத்தறுப்பார்
ஆணுக்கு பெண் நிகரல்ல
அதற்கும் மேல் என்பார்
வீட்டு வேலை எல்லாம் நீங்களா?
வீணாப் போன புருசனென்பார்
பிள்ளை குட்டி புருசனோடு மகிழ்வது - மனம்
பிடித்த வாழ்க்க இல்லை என்பார்
கட்டற்ற பாலியற் சுதந்திரமும்
கருத்துரிமையும் பெண்ணுக்கு உண்டென்பார்
மீட்பர் தாம் தான் என்று
மீண்டும் மீண்டும் கூறி நிற்பர்
வேட்டுகள் வைத்து உன் விருப்புடனே
வேட்டையாடி உன் வாழ்வை சிதைத்து விட்டு!
தன் வீட்டு பெண்ணை பூட்டி வைத்துவிட்டு
தரணிக்கே வகுப்பெடுப்பார்
பெண்ணியம் பேசும் ஆண்களிடம்
பெண்களே உசார்!
ஆணாதிக்கம் கொண்டோரை விட
அதிக விசம் இவர்கள்...

#ஈழத்துப்பித்தன்
09.03.2021