ஆழிப் பெருந் தாண்டவம்
அயலில் நடந்தேகிய போதும்
ஊழிப் பெருந் தாண்டவம்
உன் முற்றத்திலே நடந்த போதும்
கண் திறந்து பாராமல்
கண் மூடி கண்ணகியே!
கண் துயின்று கிடந்தாயே?
பார் ஆண்ட தமிழினம்
பாழ்பட்டு அழிந்தொழிய
பார்த்திருந்து நீயும்
பதிலுக்கு ஏதும் செய்யாமல்
பல்லாயிரம் உயிர் தின்று - உன்
பசி தீர்த்துக் கொண்டாயோ?
நந்திக் கடல் நீரால்
நாளும் உன் விளக்கெரியும்
விளக்கெரியும் தண்ணீரில்
வித்தாக தமிழர் உயிர்
விதைத்தேதான் போனாராம்
வீறுகொண்டு காக்காமல் - உன்
வீதிக்கு காவலுக்கு எம்
கண்ணகியரை கசக்கியெறிந்த
காமுகரை நிறுத்தி வைக்க நினைத்தாயோ?
அள்ளி முடிந்த கொண்டை
அவிழ்த்தெறிந்து - உன்
பிள்ளைக்கறி திண்டோரை
பலியெடுக்க வாராமல்
பட்டுடுத்தி நீ மட்டும்
பத்திரமாய் இருந்தாயோ?
கருணையின் வடிவென்றும் - எமை
காத்திருக்கும் தாய் என்றும்
கண் கலங்கித் தொழுதோரை
கடைசி வரை காத்தருள வாராமல்
கயவர்க்கு அருள் சொரிந்து எமை
காணாது கிடந்தாயோ?
வரலாற்றில் துடைத்தழிக்க முடியா
வடுச்சுமந்து
வற்றாப்பளையில் இன்னமும்
வாழ்கிறாளாம் கண்ணகி...
#ஈழத்துப்பித்தன்
09.03.2016