Pages

May 31, 2016

அறிவுத் தேடல் அழிக்க முடியாததே



ஒற்றைப் புத்தகம் வைச்ச இடம் மறந்தாலே
உள்ளம் பதை பதைக்கும்
எங்கள் ஊரின் மொத்தப் புத்தகமும்
அங்கைதான் குவிச்சுக் கிடந்ததாம்
ஓலைச்சுவடி முதல்
ஊர்களின் வரலாறும் தொன்மையும்
சொல்லும் அத்தனை நூலும்...
குறிப்பா இலங்கைத் தீவே தமிழன்ரை
எண்டதை பொழிப்பாச் சொல்லுற ஆவணமெல்லாம்
தென்னாசியாவிலை பெரிய நூலகம்
இதுவெண்டு  எல்லாரும்
புழுகமாச் சொல்லிச் சொல்லி
செருக்குப் படுறவையாம்
கல்வி அறிவிலை உலக அறிவிலை
தமிழன் கொடி கட்டிப் பறக்க
இதுதான் காரணமெண்டதை
எல்லாரும் அறிஞ்சதாலை
எப்பவும் அதுக்கு தனி மவுசுதானாம்
கல்வி அறிவைச் சிதைச்சால்
கண்டபடி தமிழனாலை வளரேலாது
எண்டு கற்பனை கட்டின சிங்களம்
இரவோடு இரவா வந்து உயிரோடை
கொள்ளி வைச்சுப் போனதாம்
அப்பிடிச் செய்து அரிய பொக்கிசத்தை
அழிச்சு ஒழிச்சாலும் தமிழன்ரை
அறிவுத் தேடலை அழிக்க முடியாமல்
தோத்தது சிங்களம் எண்டது உண்மையே
எரிஞ்ச அந்தச் சாம்பல் மேட்டிலை இருந்து
இண்டைக்கு உலகமெங்கும்
தமிழன் வாழுற நாடுகளிலை எல்லாம்
புத்தக வெளியீடும் நூலகமும்
வீட்டுக்கு வீடு புத்தக்க் களஞ்சியமுமா
உருவங்கொண்டு எழும்பி நிக்குது
ஆயிரந்தான் கிடந்தாலும்
தமிழன்ரை அறிவுத்தேடல் அழிக்க முடியாததே.

#ஈழத்துப்பித்தன்
31.05.2016

May 23, 2016

விதம் விதமா வாழைமரம்


அழகழகா வாழைமரம்
அடுத்தடுத்து குலை சாய்சிருக்கு
விதம் விதமாய் உருவம் கொண்டு
விரும்பும் சுவையில் பழுத்திருக்கு
மாப் பிடிப்பாய் கப்பல்
மனம் பிடித்த இதரை
தேன் இனிக்கும் கதலி - தின்னத்
தெகிட்டாத செவ்வாழை
வெட்டிப் பொரித்துண்ண
விருந்து சிறக்கும் மொந்தனதால்
இத்தனை இனம் இருக்கு எம் தேசத்தில்
அத்தனையும் தொலைத்தோம்
அகதிகளாய் அடுத்தவன் நாடு புகுந்து
அன்னியமண் வாசம் நுகர்வதனால்...

#ஈழத்துப்பித்தன்
22.05.2016

May 20, 2016

பொய்த்துத்தான் போகாயோ..

பொய்த்துத்தான் போகாயோ
*******************************
சத்தம் இன்றி - பெரும்
யுத்தம் இன்றி
சலசலப்பு ஏதுமின்றி
சிணுங்கி வழிகிறாள்
சிலநாளாய் வானமகள்
முன்பெல்லாம்
அவள் வரவு கண்டு
ஆனந்தித்த பொழுதுகள்
அளவுக்குள் அடக்க முடியாதவை
மனம் ஆனந்தப்பூங்காற்று பாடி
மமதையிலே திழைத்திருக்கும்
மண் மணம் நாசி ஊடு புகுந்து
மண்ணில் வாழ்ந்த நாளை
மறுபடியும் மறுபடியும் கிளறி நிற்கும்

ஊர் போய் வந்த பின்னர்
உறவுகள் நிலை கண்ட பின்னர்
பெய்யெனப் பெய்யும் மழை
பிய்ந்த கூரை வழி வழிந்து
நிறைவில்லா வீடுகளை
நிறைத்து நின்றதனை கண்டதனால்
நீ எம்மவர் நிலை மாறுமட்டும்
பொய்த்துத்தான் போகாயோ எனும்
பெரும் ஏக்கம் நெஞ்சமெங்கும்...

#ஈழத்துப்பித்தன்
01.02.2016

May 13, 2016

முள்ளிவாய்க்கால் பேரவலம்


முள்ளிவாய்க்கால் பேராவலம்
முடிவில்லா ஓர் அவலம்
பன் நாட்டுப்படை புகுந்து
பல்லாயிரம் உயிர் தின்று
சொல்லாத கதை கோடி
சுமந்து கிடக்கும் மண்ணது
வில்லாண்ட இனம் ஒன்று
வீறுகொண்டு போர் கண்டு
விடுதலைக்காய் வேள்வியொன்றை
விருப்புடனே நடத்தியதையை
கண் காணச் சகிக்காத
காடையர்கள் கூட்டிணைவில்
இனம் ஒன்று அழிந்ததுவே
ஈரல் குலை அறுந்ததுபோல் தவித்தோமே
பல தேசம் வாழ்ந்தோம்
பார் எங்கும வீதி வழி குவிந்தோம்
பலனேதும் கிடைக்காமல்
பரிதவித்து பைத்தியமானோம்
இனப்படுகொலை ஒன்றை
இரக்கமின்றி சத்தமின்றி அரங்கேறி
இந்தியப் பெருங்கடலும் செந்நிறமாக
இடி வீழ்ந்துபோல் கிடந்தோமே
இமை மூட மறந்தோமே
ஆண்டுகள் ஏழு
அனல் இடை கரைந்து
அரவணைக்க ஆரும் இன்றி
அரற்றிக் கிடக்கிறோம் நாம்

எங்கள் இரத்த உறவுகளே!
ஆறாக உங்கள் இரத்தம்
அலை புரண்டு ஓடி
ந்ந்திக் கடல்
செங்கடல் ஆனபோதும்
அகிலம் முழுதும்
பரந்து கிடந்த எம்மால்
எதுவுமே செய்ய
முடியவில்லையே
என்ற குற்ற உணர்வும்
இயலாமையும்
கண்களைக்குளமாக்க
உங்களை இழந்த நினைவுகளோடு....
எங்கள் உரிமையை வென்று
உலக அரங்கில்
எமக்கான நீதியைப்பெற
அணிதிரள்வோம்
அலை அலையாய்....
ஓரணியில்..

#ஈழத்துப்பித்தன்
02.05.2016

May 11, 2016

சாவுக்கு அழுவதற்கேனும் சமத்துவம் காணுவோம்


மீண்டும் மீண்டும் உருவேற்றி
மீளவும் நினைவில் பெருந்தீ மூட்டி
சொல்லவும் மெல்லவும் முடியாமல் 
உள்ளத்தில் அனல்கின்ற சிறுபொறியை
அணையாமல் காப்பது நம் கடனே
அடையாளம் அத்தனையும் தொலைத்து
அடுத்தவனின் கருச் சுமந்து கிடக்கிறாள்
எங்கள் அன்னைத் தமிழீழ பூமி
உள்ளத்தில் சுழன்றாடும் சிறு நெருப்பை
உருவேற்றி கடத்துவோம் நாளை உலகுக்கு
இனம் ஒன்று அழிந்ததன் அடையாளம்
இல்லாமல் செய்தனர் அதைக் கூட
தினம் அங்கு தடம் அழித்து அழித்து
திருவிழா பூமியாய் மிளிருது இன்று
பட்ட துயர் பகிருவோம் நாளை தலைமுறைக்கு
கொத்துக் கொத்தாய் குதறி எடுத்த
கொத்துக் குண்டின் தடம் கூட இல்லாமல் போனது
செத்துக் கிடந்தவர் பிணம் கூட
சிதை மூட்ட ஆளின்றி சீன அமிலம் தின்று தீர்த்தது
முத்தான எம் முகவரி முடிந்து போனதை பதிந்து வைப்போம்
மலை மலையாய் குவிந்த எம்மவர் மண்டை ஓடுகள் மேல்
மலையாய் எழுந்து நிற்குது ஆக்கிரமிப்பின் சின்னம் அங்கு
மாண்டவர் வரலாற்றை எம்மினமே மறுதலித்துக் கிடக்குது இன்று
ஆண்ட தமிழினத்தின் அரச முடி நிலம் சரிந்து
மீள முடியா அடிமையான கதை சொல்லி உனை உருவேற்று
இன அழிப்பின் ஆதாரமாய் எஞ்சிக் கிடப்பது மே 18 மட்டுமே
உன்னுள் தீ மூட்டி உனை உருவேற்றி உலகுக்கு அதை காட்டு
பேதங்கள் ஆயிரம் எம்மை பிரித்துக் கிடந்தாலும்
சாவுக்கு அழுவதற்கேனும் சமத்துவம் காணுவோம்
இன அழிப்பின் அடையாளம் மே 18 அதை இறுகப் பற்றுவோம்.
(படங்கள் பறந்த வாகனத்துள் இருந்து மனம் கனத்துச் சுட்டவை.)

May 6, 2016

செவ்வண்ணமேனியாள்.


நெஞ்சம் எங்கும்
நினைவாலே நிலைத்தவள்
நித்தம் என் நினைப்பினில்
நீர்க்கமற நிறைந்தவள்
உடல் முழுதும் தழுவி
உவகை தருபவள்
உதடுகளின் இடை புகுந்து
உல்லாசமாய் நுழைந்தவள்
நாசி வழி புகுந்து
நாபிக் கமலத்தை நிறைப்பவள்
துள்ளி ஓடும் குருதியிலும்
தீர்க்கமாய் நிறைந்தவள்
அள்ளி ஆசையோடு முத்தமிடும்
அழகுச் செவ்வண்ண மேனியாள்
நிகரில்லா அவள் வனப்பின்
நினைவுகளைச் சுமக்கிறேன்
நித்தமும் அவள் மடி துயிலவே
தகிக்கிறேன் தவிக்கிறேன்
நாடிச் சென்று அவள் மேனி தழுவ
நாதியற்று நிற்கிறேன்...

#ஈழத்துப்பித்தன்
06.05.2016