Pages

October 30, 2018

கலாச்சார விருது 2018

சுவிற்சர்லாந்தின் பாசல் மாநில அரசின் இவ்வாண்டுக்கான கலாச்சார விருது  எங்கள் தாய்க் கலையகமான Radio xற்கு வழங்கப்பட்டது.

விருது வழங்கும் நிகழ்வு இன்று பாசல் மாநில பாராளுமன்ற பேரவையில் நடைபெற்றது.

பலநூற்றாண்டுகளைக் கடந்த தொன்மைமிகு பாராளுமன்றக்கட்டம் இன்னமும் அந்த தொன்மைகள் அழியாவண்ணம் காக்கப்படுகின்றது.

28 ஆண்டுகளாக இந்த மாநிலத்தில் வாழ்ந்தாலும் இதுவரை பேரவையை சென்று பார்க்க முயற்சித்ததில்லை. உத்தியோகபூர்வ அழைப்போடு நாம் சார்ந்த விருதுக்காக உள் நுழைந்தபோது பெருமையாகவும் மகிழ்வாகவும் இருந்தது.

இந்நிகழ்வினை பாசல் மாநில முதல்வர் ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் பேரவை முதல்வர் மற்றும் பேராசிரியர்களும் ஊடகத்துறையினரும் நடுவர்களாகப் பங்குபற்றியோரும் கலந்துகொண்டார்கள்.

விருதினை மாநில முதல்வர் வழங்க எங்கள் வானொலியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெற்றுக்கொண்டார்.

இவ் விருதினைப் பெறுவதற்கு முக்கிய காரணியாக அரபு மற்றும் தமிழ்ச் சேவைகள் இருந்துள்ளதாக பாசல் மாநில கலாச்சார அமைச்சின் விருதுக்குழுவின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் உட்பட 13 மொழிச் சேவைகளும் 12 இசை இளையோர்சார் சேவைகளுமாக 25 சேவைகள் இவ் வானொலியூடாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விருதாக வழங்கப்பட்ட இருபதாயிரம் சுவிஸ் பிராங்கில் அரைப் பங்கு புதிய இணைய வடிவமைப்புக்கும் கால்ப்பங்கு 25 சேவைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதோடு மிகுதித்தொகை வானொலியின் நிகழ்வுசார் செயற்பாடுகளுக்கும் செலவளிக்கப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டது.

நிறைவாக மாநில அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறு விருந்தும் நடைபெற்றது.

29.10.2018

September 11, 2018

வேலூர் பொற்கோவில்

2015 தமிழ்நாடு சென்றிருந்தபோது நாட்டின் பல முக்கிய தலங்களையும் சென்று பார்வையிட்டிருந்தேன். திருநெல்வேலியை சேர்ந்த ஜெயமுருகன் என்பவர் வழிகாட்டியாகவும் சாரதியாகவும் இருந்தார். மிகவும் கலகலப்பான மனிதர்.

ஒருநாள் கேட்டார் "அண்ணா வேலூரில் ஒரு பொற்கோவில் இருக்கு போய் பாத்திட்டு வந்திடுவமா? காலையில புறப்பட்டா சாயங்காலமே வந்திடலாம் என்று ஆசையை கூட்டினார்.

சரி என்று புறப்பட்டு வேலூருக்கு நுழைந்து இரு பக்கமும் புளியமரம் குடை பரப்பும் வீதியூடாய் சிறைச்சாலை சுற்று மதிலையும் தாண்டி சிலோன்காரங்க ஊர் என்று செல்லப்படும் அரியூர்  நோக்கி பயணித்தோம்.

சாஸ்திரி - சிறீமா ஒப்பந்த அடிப்படையில்  மலையகத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழும் பகுதியாக இப்பகுதி உள்ளதால் இப்பகுதி சிலோன்காரங்க ஊர் என அழைக்கப்படுகின்றது.  அந்த ஊரின் மலைகோடி என்ற இடத்தில்தான் பொற்கோவில் அமைந்துள்ளது. இன்று அந்த இடம் சிறீபுரம் என அழைக்கப்படுகின்றது.

பொற்கோவில் தக தக என்று மின்னியபடி ஒரு பெருவீதிக்கரையில் இருக்குமென்ற எதிர்பார்ப்போடு போனால் ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு சாதாரண நுழைவாயிலில் வழமையான உடற்சோதனை முடித்து உள் நுழைந்தபோதும் கோவிலை காண முடியவில்லை. நட்சத்திர வடிவிலான ஒரு பாதையே காணப்பட்டது. 1500 ஏக்கர் பரப்பளவான கோவில் வளாகத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் நட்சத்திர  வடிவிலான வீதி அமைப்புடன் நடுவில் பொற்கோவில் அமைந்துள்ளது. அந்த நட்சத்திர வீதியின் முழுமையான நீளம் சுமார் இரண்டு கிலோ மீட்டர் அந்த வீதியை முழுமையாக நடந்து முடித்தால் பொற்கோவிலினுள் நுழைய முடியும். கூரையோடு அமையப்பட்ட நட்சத்திர வீதி சுத்தமாகப் பேணப்படுகின்றது. இயற்கை கொஞ்சும் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தின் நட்சத்திர வீதியில் நடப்பதென்பது அப்படியொரு ரம்யமாயிருக்கும் இயற்கை இருபக்கமும் பாய் விரித்திருக்கும் இயற்கை, நீர் ஊற்றுக்களும் நறுமணம் சொரியும் மலர்களுமாய் மனம் நிறையும். வெய்யில் சுட்டெரித்து பொட்டல்காடுகளாய் கிடக்கும் வேலூரில் இப்படி ஒரு இடமா பிரமிப்பாயிருந்தது. 

இந்தப் பகுதி முன்னர் அடர்ந்த காடாகவும்  சித்தர்களும் முனிவர்களும் உலவிய தியானம் செய்த பகுதியெனவும் அந்த இடத்தில் நாராயணி அம்மனை நினைந்து சக்தி அம்மா எனப்படும், ஆலய தர்மகர்த்தா தியானமிருந்து அருள்பெற்று இந்த கோவிலை கட்டினார். இந்த கோவில் அமைவதற்கான இடத்தினை அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி வழங்கினார்.   

நட்சத்திர வடிவ வீதியின் நிறைவில் கதிரவனின்ஒளி பட்டு தெறித்து மின்னும் தங்கக்கோவிலின் நுழைவை அடைந்தோம்.  நாராயணி அம்மன் மூலவராய் தங்கவர்ணத்தில் ஒளிபரப்பும் அற்புதக்காட்சியை அருகிருந்து தரிசித்தோம். சுமார் 1500 கிலோ தங்கத்தில் தூண் சுவர்கள் உட்பட முழுமையாய் அமைந்துள்ள கோவிலின் வனப்பை கோவிலின் உட்பகுதி வரை சென்று தரிசிக்க முடியும், எவரும் சுவரைகூட தொட்டுப்பார்க்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிலை சூழவும் அகழி அமைக்கப்பட்டு நீர் நிரப்பப்பட்டுள்ளது. 

கோவில் தரிசனம் முடிந்து வெளியேறி வரும்போது அன்னதானசேவை இடம்பெறும் இடமுள்ளது. அறுசுவை மிகு அன்னதானம் சுத்தமான சூழலில் வழங்கப்படுகின்றது. கோவிலில் உண்டியல் எதையும் காணவில்லை. காணிக்கை செலுத்த விரும்புவோர் அதற்கென குறிக்கப்பட்ட இடங்களில் செலுத்தி பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம். அன்னதானத்திற்கு பொருட்களை தானம் செய்ய விரும்புவோர் அங்கேயே நியாய விலையில் வாங்கி தானமாக கொடுத்து பற்றுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

கோவில் வளாகத்தின் வெளியே 150 நோயாளர் தங்கக்கூடிய மருத்துவமனை உள்ளது. வெறும் 500 ரூபாயோடு பிரசவம் பார்க்கப்படுகின்றதாம். பல நூற்றுக்கணக்கான குழந்தைகள் அங்கு பிறந்ததாக பணியாளர் ஒருவர் கூறினார். மேலும் பல உதவித் திட்டங்கள் ஆலயதால் முன்னெடுக்கப்படுவதையும் அறிய முடிந்தது.

ஆலய சூழல் முழுவதும் சக்தி அம்மா எனப்படும் ஆலய தர்மகர்த்தாவின் படம் நாராயணி அம்மனைவிடவும் அதிகளவு ஒளிர்வோடு பிரகாசித்தது. அது மனதுக்கு சற்று நெருடலாக இருந்தது. 

இந்தியாவின் இரண்டாவது பெரிய பொற்கோவிலை தரிசித்த நிறைவோடு எமது வாகனம் புளியமரச் சாலையூடாய் 150 கிலோமீற்றர் தொலைவிலிருந்த சென்னை நோக்கிப் பறந்தது.

#உலாத்தல் 2015


May 20, 2018

உலாத்தலும் உறவுகளும்

ரூபனுடன் ஒரு சந்திப்பு
********************



ரூபன் 2002களிலிருந்து அறிந்த நண்பர். நான் "குருத்து" இதழின் ஆசிரியராக இருந்த சமகாலத்தில் ரூபன் நோர்வேயிலிருந்து "இளம்பரிதி" என்ற சஞ்சிகையை வெளியிட்டுக்கொண்டிருந்தார். அன்றைய காலத்தில் கனடாவிலிருந்து வந்து அனைத்துலக இளையதலைமுறையினரை ஒருங்கிணைந்த பார்த்தீபனூடாக ரூபனும்  இளம்பரிதி இதழும் அறிமுகமாகின.

எழுத்துத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சம வயதினராய் அறிமுகமான ரூபனை 2003 யூலை மாதம் வன்னியிலுள்ள பாண்டியன் எனப்படும் தமிழீழ அரசின் விருந்தினர் விடுதியில் சந்திக்க முடிந்தது ஒரு சுவையான அனுபவம்.

ஏற்கனவே ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகியிருந்தாலும் ஒருவர் முகம் ஒருவருக்கு  தெரியாது. பாண்டியன் விருந்தினர் விடுதிக்கு சென்று நுழைந்த என்னை வாசல் வந்து வாங்கோ மயூரன் என்று வரவேற்றுக் கொண்டவர் ரூபன் பின்னே நோர்வேயை சேர்ந்த குயின்ரன் அண்ணா. ஆச்சரியமாய் இருந்தது நான் கேட்பதற்குள் ரூபனே முந்திக்கொண்டு இன்று நீங்கள் வருவதாக முன்னரே அறிவித்தல் வந்தது என்று என் ஆச்சரியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேலாக தமிழீழ அரசின் விருந்தினர்களாக அங்கே ஒன்றாகத் தங்கியிருந்தோம் மூன்று உணவுவேளைகள் மற்றும்  இரவு வேளைகளில் அதிகம் பேச முடிந்தது. சேர்ந்திருந்து போராளிகளிடம் போரியல் அனுபவங்களை கேட்டறிந்தது தமிழீழத் திரைப்படப்பிரிவினால் ஈழத்தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட வெளிநாட்டு திரைப்படங்களை சேர்ந்து பார்த்ததென நிறைந்த பொழுதுகளாய் ரூபனோடு கழிந்தது.

பின்னர் பேஸ்புக் மீண்டும் ரூபனுடனான நட்பைப் புதுப்பித்தது. இம்முறை திடீர் குறுகிய கால நோர்வே பயணம் ரூபனை சந்திக்கும் காலத்தை ஏற்படுத்தித்தருமென  நான் நினைக்கவில்லை. ஆனாலும் ரூபனை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பின் ரூபனோடு சில மணித்துளிகள் அளவளாவ முடிந்தது மகிழ்வு. நிறைய விடயங்கள் உரையாட முடிந்தது. விரைவில் ரூபனின் கவிதைத் தொகுப்பொன்றும் நூல் உருவில் வரவுள்ளதாக அறிந்தேன். வாழ்த்துகள் ரூபன்.

#உலாத்தலும்_உறவுகளும்

May 14, 2018

உலாத்தலும்_உறவுகளும்

கோப்பி வித் குகன் அண்ணா
************************


பேஸ்புக்கூடாய் அறிமுகமாகி எங்களோடு சரிக்கு சரி பம்பலடிக்கும் அன்பு உள்ளம். எங்களோட பம்பலடிச்சு திரியிறதாலை ஆளும் எங்களை மாதிரி ஒராள் எண்டு நினைச்சா அது தவறு ஆள் ஆளுமையான மனிதன். அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய விடயங்கள் கொட்டிக் கிடக்கின்றது.

பரணி அண்ணாவின் பிறந்தநாள் அன்று அவரது நட்பு வட்டத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட அவரது இசைப்பேழை வெளியீடு மற்றும் மதிப்பளிப்பு நிகழ்வுக்கு அவருக்கு தெரியாமல் சென்று இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்து நான் ஒஸ்லோ பயணப்பட முடிவெடுத்தபோது குகன் அண்ணாதான் நினைவுக்கு வந்தார். அவரை தொடர்புகொண்டு எனது வரவு பற்றி சொன்னபோது தானே விமான நிலையம் வந்து அழைத்துச் செல்வதாய் உறுதியளித்தார்.

அதேபோல் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று இன்முகத்தோடு கவிதாக்காவின் கைவண்ணத்தில் அருமையான மதிய உணவு வடை பாயாசத்தோடு தந்து திக்குமுக்காட வைத்து விட்டார்.  அவரது வீட்டில் தங்குவதற்கான அத்தனை ஒழுங்குகளையும் அவர் செய்துதந்தபோதும் பரணி அண்ணாவின் உரிமைப்போரினால் அது சாத்தியப்படாது போய்விட்டது.

ஆளுமைமிகு வானொலி ஒலிபரப்பாளரான குகன் அண்ணா இருபது ஆண்டுகளுக்கு மேலாக நோர்வேயிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழ்முரசம் வானொலியின் ஒலிபரப்பாளராக சேவை புரிந்துவருகின்றார் வானொலியின் இன்றைய சந்திப்பு நிகழ்வில் என்னையும் அழைத்துக் கௌரவப்படுத்தியிருந்தார்.

ஒரு வானொலி அறிவிப்பாளரான எனக்கு ஒலிபரப்புத்துறை சார்ந்து அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் கிடைத்தன. பேஸ்புக் தந்த பெயர் சொல்லும் சில நட்புக்களில் அவரும் ஒருவரானது மனநிறைவைத் தருகின்றது.

#உலாத்தலும்_உறவுகளும்

April 26, 2018

''தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகங்களின் பங்கு"


இன்று (22.04.2018)  ஊடகவியலாளர் சண் தவராஜாவின் ''தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகங்களின் பங்கு" எனும் கட்டுரைத் தொகுப்பு சுவிஸ் நாட்டின் பேர்ண் நகரில் வெளியிடப்பட்டது.
அகரம் சஞ்சிகையில் தொடர்ச்சியாக வெளிவந்த அவரது எழுபது கட்டுரைகளில் 25 தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலுருவாக்கம் பெற்றிருந்தது.
சிலவற்றில் எனக்கு முரண்பாடு இருந்தாலும் ஊடகவியலாளராக அவரின் பட்டறிவுகளூடான பார்வையென்று பார்க்கின்றபோது காலத்துக்கு தேவையான ஒரு படைப்பாக இது இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
சிறப்பான முறையில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இந் நிகழ்வு மிகச் சரியாக குறித்த நேரத்துக்கு ஆரம்பமானது. அதுமட்டுமல்லாமல் நீண்ட காலத்துக்கு பின் மண்டபம் நிறைந்து சுமார் 500ற்க்கும் மேற்பட்ட மக்களோடு ஒரு வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது குறிப்பிடத்கது. ஊடகவியலாளர் தயானந்தா மற்றும் முன்னாள் எரிமலை ஆசிரியர் கவிஞர். பாலகணேசன் அகரம் ஆசிரியர் ரவி ஆகியோரது சிறப்புரைகள் காலத்துக்கு தேவையானதாக இருந்தது.
நீண்டகாலத்தின் பின் பலதுறைகளையும் சார்ந்த நண்பர்களை சந்தித்து அளவளாவ முடிந்ததில் பெருமகிழ்வு.

சட்டி சோறு

சட்டி சோறு
************

மலேசியாவின் கோலாலம்பூர் நகரின் மையப்பகுதி தமிழர்களின் ஆளுகைக்குள் கட்டுண்டு கிடக்கின்றது.

எப்படி பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகரின் வடபரிஸ் தொடருந்து நிலைய வாசலில் வெளியேறியதும் சோறு வாசம் கமகமக்குமோ அப்படித்தான் கோலாலம்பூர் நகரின் பிரதான தொடருந்து நிலைய வாசலை விட்டு வெளியேற தமிழ்ப்பெயர்ப்பலகைகளும் சோறு வாசமும் கண் சிமிட்டும்.

மலேசியாவில் எங்கும் கிடைக்காத சட்டி சோறு எனப்படும் சிறப்பு உணவு இந்த ஏரியாவில்தான் கிடைக்கும். அதுவும் ஒரே ஒரு கடையில்.

சுபிரமணிய பிரபா சட்டி சோறு சாப்பிடுவம் என்றபோது அந்த சட்டி சோறு என்ற சொல்லே ஒரு ஈர்ப்பையும் சாப்பிட வேணும் என்ற விருப்பையும் ஏற்படுத்தியது.

கடையை தேடிப்பிடித்து போனபோது சோத்துப்பிரியர்களால் கடை நிரம்பிக் கிடந்தது. ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டுமென்று கடை உரிமையாளர் சொன்னபோது சிறுகுடலை பெருங்குடல் தின்று தீர்த்துவிடுமளவு பசியின் வேகம் அதிகரித்துப்போயிருந்தது.

நண்டு, கோழி, றால், ஆடு, மீன் என சட்டிச்சோறு பல வித சுவையோடு உடனுக்குடன் சமைக்கப்பட்டு அதே மண் சட்டியோடு பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தது.

கறிகளை உடனுக்குடன் சமைத்து அதற்குள் அரிசியையும் சேர்த்து அவியவிட சுவையான சட்டி சோறு யாழ்ப்பாண வாசத்தோடும் சுவையோடும் தயாராகியிருக்கும். அப்பிடி ஒரு சுவை.

குடிப்பதற்கு ஆவரம்பூ மற்றும் நற்சீரகம் அவித்த தண்ணீரும் தரப்பட்டது.

நாக்கை விட்டகலாத சுவை இன்னொரு முறை வாய்ப்பிருந்தால் சுவைக்க வேணும்.

உணவகத்தை அறிமுகப்டுத்தி சட்டி சோறு போட்ட சுபிக்கு நன்றி.



உலாத்தலும் உறவுகளும்

உலாத்தலும் உறவுகளும்
****************************


சிங்கப்பூர் போகத் திட்டமிட்டதும் அப்படியே மலேசியாவுக்கும் போய்வர வேண்டுமென திட்டமிட்டிருந்தோம்.
சிங்கப்பூரில் தங்குமிட ஒழுங்குகளை இணையமூடாக செய்துவிட்டு மலேசிய சுற்றுலா மற்றும் தங்குமிடம் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடியபோது சுவிஸ் பாதுகாப்பு அமைச்சின் மலேசிய சுற்றுலா ஆபத்தானது என்ற அறிக்கை அடிக்கடி கண்சிமிட்டி பயம்காட்டியது.
மலேசியா என்றதும் உடன் நினைவுக்கு வருபவர் பாடகர் ராஜ ராஜ சோழன் தான். அடிக்கடி சுவிஸ் வந்து போகும் இவர் நெருங்கிய நண்பராக அன்போடு பழகும் ஒருவர், மலேசியா வாங்கோ நானே எல்லா இடமும் கூட்டிக்கொண்டு போவேன் என அடிக்கடி அழைப்பை விடுத்துப்போகும் ஒருவர். கடந்த ஆண்டு ஏற்பட்ட மாரடைப்பு அவரை காவுகொண்டிருந்தது. இந் நிலையில் அறிந்தவர் யாருமில்லாமல் மலேசியாவில் எப்படி தங்குமிடம் பற்றிய தகவல்களை அறிவதென குழம்பிப்போயிருந்தேன்.
அந்தவேளையில்தான் பேஸ்புக்கூடாக அறிமுகமான தோழி யோகி நினைவுக்கு வந்தார். ஏற்கனவே தனது மலேசிய பயண அனுபவம் பற்றி என்னோடு உரையாடிய நிவேதாக்காவும் தன் பயணவேளையில் யோகி பல வழிகளிலும் உதவியதாக குறிப்பிட்டிருந்தா. சுற்றுலா மற்றும் இலக்கியதுறைகளில் மிகுந்த ஈடுபாடுகொண்டவர் யோகி.
யோகியோடு தொடர்புகொண்டு நம்பிக்கையான தங்குமிடம் பற்றிய தகவல் வேண்டுமென கேட்டிருந்தேன். உடனடியாகவே யோகியிடமிருந்து பதிலும் கிடைத்தது. தான் ஒரு சுற்றுலாப் பயணிகள் தங்குமிடத்தில்தான் பணிபுரிவதாகவும் படங்களை அனுப்புகிறேன் பிடித்திருந்தால் அங்கேயே பதிவுசெய்யலாமென்றும் கூறியிருந்தார். இரட்டிப்பு மகிழ்வாயிருந்தது. விடுதி எனக்கும் பிடித்துப் போனது. நகரின் மையத்தில் அந்த அழகானவிடுதி அமைந்ததால் அங்கிருந்து எமது சுற்றுலாவை திட்டமிடவும் இலகுவாயிருந்தது.
விடுதிக்கான கட்டணம் எதையும் இப்போ கட்டத்தேவையில்லை வரும்போதே நேரில் செலுத்திக்கொள்ளுங்கோ என்று நம்பிக்கையோடு கூறி தன்பெயரிலேயே எமக்கான அறைகளையும் பதிவுசெய்து வைத்திருந்தார்.
மலேசியாவில் ஒரு ஆத்மார்த்தமான உறவு இருக்கின்றது என்ற நம்பிகையோடு பயணப்பட்டோம் அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.
அங்கு போன எமக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. விடுதிக்கான கட்டணம் கூட யோகியின் செல்வாக்கால் வழமையான கட்டணத்தையும் விட குறைவாகவே எம்மிடம் அறவிடப்பட்டது.
போக்குவரத்து பற்றிய தகவல்கள் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றிய விபரம் மருத்துவதேவை என அனைத்து தேவைகளுக்கும் மின்னல்போல தகவல்களைத் திரட்டித்தந்து யோகியின் பேருதவியால் எங்களின் சுற்றுலாசார் திட்டமிடல்களும் சுலபப்பட்டன.
மலேசியாவிலும் ஒரு தங்கை இருக்கிறாள் என்ற நிறைந்த மனதோடு திரும்பினோம்.
பேஸ்புக் இப்படியான ஆத்மார்த்தமான உறவுகளை தந்தே நகர்கின்றது.

January 30, 2018

குழந்தைகளின் கல்வி

குழந்தைகள் 1
****************

இப்போ எங்கள் தாயகத்தின் கல்விமுறை ஒரு காட்சிப்படுத்தலாக  குருவி தலையில் பனங்காயை சுமக்க்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு குழந்தையாக முதல்நாள் பள்ளி போகும் நாளிலிருந்தே பிள்ளை தன் இயல்பைத் தொலைத்ததாக மாற்றப்படுகின்றது. இது ஒரு ஆரோக்கியமான சூழலல்ல; தாயகம் செல்லும் காலங்களில் அங்குள்ள பெற்றோர்கள் பிள்ளைகளின் படபடப்பை திட்டமிட்ட மிகைப்படுத்தப்பட்ட கல்விமுறையை கண்டு கொதிப்புற்றிருக்கிறேன். நாம் எட்டுப்பாடக் கல்வியைக்கொண்டு சத்தியம் பண்ணிய காலத்திலேயே இயல்பைத் தொலைக்காமால்தான் இருந்தோம். ஆனால் இன்று பிள்ளையின் பள்ளி ஆரம்பநாளே கால்கோள் விழா எனும் பெரும் ஆர்ப்பாட்டத்தோடுதான் ஆரம்பிக்கின்றது. அதன் பின் கண்பாடம் கட்டிய குதிரைகள்போல் தாய்மொழியை புறந்தள்ளிய கல்விச் சூழலுக்குள் இயற்கையை மறந்த இயற்கையிலிருந்து புறந்தள்ளிய கல்விச் சூழலுக்குள் பத்து வயதாவதற்குள் புலமைப்பரிசில் பரீட்சை என்ற ஒரு தராதரத் தெரிவுக்கான ஓட்டத்தினுள் தம்மை தொலைக்கின்றார்கள். குழந்தைகளாய் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அந்த வயதுக்கான அத்தனையையும் இழந்து நிற்கின்றார்கள். இந் நடைமுறை ஒரு ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை கட்டியெழுப்புமா என்பது கேள்விக்குறியே?

இந்தவேளையில் சுவிற்சர்லாந்தின் பாசல் மாநிலத்தில் பின்பற்றப்படும் கல்விமுறை பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

 சுவிற்சர்லாந்தைப் பொறுத்தவரை ஐந்து வயதில்தான் Kinder Garten மழலைப் பள்ளிக்கு போகவேண்டும். அந்த வயது கணிப்பிடும் இறுதிநாளான யூன் 30ந் திகதியாகும். யூலை 15 க்குள் பிறந்ததோர் விருப்பத்தெரிவில் ஓராண்டுக்கு முன்னரே பள்ளியில் இணைய முடியும். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி  ஓராண்டுக்கு முன்னரே மழலை பள்ளியில் சேர்த்துவிடலாம்.

 ஆனால் மூன்று வயதிலிருந்து Spiel Gruppe என்று சொல்லப்படும் இருநாட்கள் விளையாட்டு குழுவுக்கு செல்ல வேண்டும். இது முன்னர் கட்டாயமில்லை. வெளிநாட்டு மாணவர்கள் மொழிப் பரீட்சியத்தை முன்னரே பெற்றுக்கொள்வதற்காய்
இப்போ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான சந்திப்பிற்கு செல்லும் வெளிநாட்டு பெற்றோருக்கு ஒரு விடயம் கண்டிப்பாக சொல்லப்படும் நீங்கள் உங்கள் வீட்டில் பிள்ளையுடன் தாய்மொழியில் பேசுங்கள். பிள்ளைக்கு பிராந்திய மொழியை கற்பிக்காதீர்கள். அவர்கள் வாழும் சூழலிலிருந்து அந்த மொழியை கற்றுக்கொள்வார்கள்.

சுவிற்சர்லாந்தைப் பொறுத்தவரை ஆறு வயதுக்கு பின்னர்தான் பிள்ளைகளுக்கு எழுதப்பழக்க வேண்டும். அதுவரை வாழும் சூழலுக்கேற்ப அவர்களின் எண்ண ஓட்டத்துக்கு அமைவாக கல்விமுறை அமைந்திருக்கும்.

குறிப்பாக விளையாட்டு குழுவில் பலதரப்பட்ட உள்ளக வெளிப்புற விளையாட்டுகளும் வர்ணங்களும் தாள்களும் இருக்கும். ஒன்பது மணிக்கு ஆரம்பமாகி இரண்டு முதல் மூன்று மணி வரை நடைபெறும் இக் குழுவில் இவர்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. ஒன்பது மணிக்கு இவர்கள் உள் நுழைந்ததும் வர்ணம் தீட்ட விரும்புவோர் வர்ணம் தீட்டலாம் கடை விளையாட்டு விளையாட விரும்புவோர் தாமகவே இணைந்து கடை விளையாட்டையோ சமையல் விளையாட்டையோ அல்லது அங்குள்ள அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டை விளையாடலாம். அல்லது குட்டித் தூக்கம்போட விரும்புவோர் அதையும் செய்து கொள்ளலாம். காலநிலை எப்படி இருந்தாலும் அதற்கான உடைகளோடு அவர்கள் கொஞ்சநேரம் வெளிப்புறத்திலும் விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த காலம் நிறைவடைந்து மழலைப் பாடசாலை ஆரம்பமாகும். இது இரண்டு ஆண்டுகள் நீடிக்கும். சாதாரணமாக 5. வயதிலிருந்து 7 வயது வரை, இது காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகும். கொஞ்சம் களைப்பாவோ எழும்ப பஞ்சியாவோ இருந்தால் 8.30 வரையும் செல்லலாம். இங்கும் விளையாட்டு குழுவில் இருக்கும் நடைமுறைதான். ஆனால் இங்கு இவை திட்டமிட்டு பகுக்கப்படும். வர்ணம் தீட்டவோ படம் கீறவோ ஒரு குறிப்பிட்ட நேரமும் விளையாட்டுக்கு என ஒரு நேரமும் பாடல் பாடவென ஒரு நேரமும் பகுக்கப்படும். இது ஒரு திட்டமிட்ட ஒழுங்குமுறையில் நடைபெறும். காலநிலைக்கேற்ப இயற்கையை பற்றிய அறிதலை நேரில் அழைத்துச் சென்று கற்பிதல் இல்லாது அவர்கள் கண்வழி உள்வாங்க வைத்து சிந்தனையை தூண்டுவார்கள். இந்த மழலைப் பாடசாலை காலத்திலிருந்து ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனியான கோப்பொன்று ஆசிரியரால் தயாரிக்கப்படும் அது தொடர்ச்சியாக மேல் வகுப்பு செல்லும் வரை அம் மாணவர் பற்றிய தரவுகளோடு ஆசிரியர்களூடாக கைமாறும். இவர்களின் நடவடிக்கை ஈடுபாடுகளைகளை வைத்து அவர்கள் பற்றிய கணிப்பீட்டு வரைபை மழலைப் பாடசாலை கணிப்பிட்டு எழுதும். அதன் அடிப்படையில் ஏனைய வகுப்புக்களுக்கு செல்லும்போது  அம் மாணவருக்கான கற்பித்தல் நடைபெறும்.

ஏழுவயதில் முதலாம் வகுப்புக்கு  முதலாம் வகுப்புக்கு செல்ல முன்னர் பெற்றோர்களுடனான ஒன்றுகூடல் ஒன்று நடைபெறும். இது மிக முக்கியமான ஒன்றுகூடலாகும்...

தொடரும்....

#இணுவையூர்_மயூரன்

#குழந்தைகளும்_கல்வியும்

நீண்டகாலமாக எழுத நினைத்த இத் தொடரை எழுத ஊக்கியாய் இருந்த சங்கீர்த்தனனுக்கு நன்றி.