சிங்கப்பூர் போகத் திட்டமிட்டதும் அப்படியே மலேசியாவுக்கும் போய்வர வேண்டுமென திட்டமிட்டிருந்தோம்.
சிங்கப்பூரில் தங்குமிட ஒழுங்குகளை இணையமூடாக செய்துவிட்டு மலேசிய சுற்றுலா மற்றும் தங்குமிடம் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடியபோது சுவிஸ் பாதுகாப்பு அமைச்சின் மலேசிய சுற்றுலா ஆபத்தானது என்ற அறிக்கை அடிக்கடி கண்சிமிட்டி பயம்காட்டியது.
மலேசியா என்றதும் உடன் நினைவுக்கு வருபவர் பாடகர் ராஜ ராஜ சோழன் தான். அடிக்கடி சுவிஸ் வந்து போகும் இவர் நெருங்கிய நண்பராக அன்போடு பழகும் ஒருவர், மலேசியா வாங்கோ நானே எல்லா இடமும் கூட்டிக்கொண்டு போவேன் என அடிக்கடி அழைப்பை விடுத்துப்போகும் ஒருவர். கடந்த ஆண்டு ஏற்பட்ட மாரடைப்பு அவரை காவுகொண்டிருந்தது. இந் நிலையில் அறிந்தவர் யாருமில்லாமல் மலேசியாவில் எப்படி தங்குமிடம் பற்றிய தகவல்களை அறிவதென குழம்பிப்போயிருந்தேன்.
அந்தவேளையில்தான் பேஸ்புக்கூடாக அறிமுகமான தோழி யோகி நினைவுக்கு வந்தார். ஏற்கனவே தனது மலேசிய பயண அனுபவம் பற்றி என்னோடு உரையாடிய நிவேதாக்காவும் தன் பயணவேளையில் யோகி பல வழிகளிலும் உதவியதாக குறிப்பிட்டிருந்தா. சுற்றுலா மற்றும் இலக்கியதுறைகளில் மிகுந்த ஈடுபாடுகொண்டவர் யோகி.
யோகியோடு தொடர்புகொண்டு நம்பிக்கையான தங்குமிடம் பற்றிய தகவல் வேண்டுமென கேட்டிருந்தேன். உடனடியாகவே யோகியிடமிருந்து பதிலும் கிடைத்தது. தான் ஒரு சுற்றுலாப் பயணிகள் தங்குமிடத்தில்தான் பணிபுரிவதாகவும் படங்களை அனுப்புகிறேன் பிடித்திருந்தால் அங்கேயே பதிவுசெய்யலாமென்றும் கூறியிருந்தார். இரட்டிப்பு மகிழ்வாயிருந்தது. விடுதி எனக்கும் பிடித்துப் போனது. நகரின் மையத்தில் அந்த அழகானவிடுதி அமைந்ததால் அங்கிருந்து எமது சுற்றுலாவை திட்டமிடவும் இலகுவாயிருந்தது.
விடுதிக்கான கட்டணம் எதையும் இப்போ கட்டத்தேவையில்லை வரும்போதே நேரில் செலுத்திக்கொள்ளுங்கோ என்று நம்பிக்கையோடு கூறி தன்பெயரிலேயே எமக்கான அறைகளையும் பதிவுசெய்து வைத்திருந்தார்.
மலேசியாவில் ஒரு ஆத்மார்த்தமான உறவு இருக்கின்றது என்ற நம்பிகையோடு பயணப்பட்டோம் அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.
அங்கு போன எமக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. விடுதிக்கான கட்டணம் கூட யோகியின் செல்வாக்கால் வழமையான கட்டணத்தையும் விட குறைவாகவே எம்மிடம் அறவிடப்பட்டது.
போக்குவரத்து பற்றிய தகவல்கள் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றிய விபரம் மருத்துவதேவை என அனைத்து தேவைகளுக்கும் மின்னல்போல தகவல்களைத் திரட்டித்தந்து யோகியின் பேருதவியால் எங்களின் சுற்றுலாசார் திட்டமிடல்களும் சுலபப்பட்டன.
மலேசியாவிலும் ஒரு தங்கை இருக்கிறாள் என்ற நிறைந்த மனதோடு திரும்பினோம்.
பேஸ்புக் இப்படியான ஆத்மார்த்தமான உறவுகளை தந்தே நகர்கின்றது.