Pages

May 9, 2020

சாமைச்சோறு

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பாரம்பரியமான உணவு கட்டாயம் இருக்கும். அவை மறைந்து இன்று கொத்து ரொட்டிதான் ஈழத்தமிழரின் பாரம்பரியமான உணவு என உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

அனேகமாக அன்றைய காலத்தில் அந்தந்த ஊர்களில் கிடைக்கும் மூலப் பொருட்களை கொண்டே தத்தமது உணவுத் தேவைகளை ஒவ்வொரு பிராந்தியத்தினரும் நிவர்த்தி செய்து வந்தார்கள். ஈழத்தில் தென்மராட்சி தொடக்கம் வன்னிப் பிராந்தியம் தாண்டிய தமிழர்களின் பிரதான உணவாக அரிசிச்சோறு இருந்த போதிலும் நெல் விளையாத யாழ்ப்பாணத்தின் ஏனைய பிராந்திய மக்களின் உணவுத்தேவையின் பெரும் பகுதியை சிறு தானியங்களே நிவர்த்தி செய்து வந்தன.

குறிப்பாக பணப்பயிராக புகையிலையையும் உணவுத் தேவைக்காக சாமை, குரக்கன், பயறு போன்ற தானியங்களையும் பிரதானமாக மரவள்ளி கருணை கிழங்குகளோடு ஏனைய மரக்கறிகளையும் பயிரிட்டு விளைவிக்கும் பகுதியாக இணுவில் கிராமம் இருந்து வந்தது.

நான் சிறு வயதாக இருந்தபோது மஞ்சள் வர்ணத்தில் கொத்தாக தலை சாய்த்து ஆடும் சாமைக் கதிர்களையும் குவிந்து குறண்டிய கரம்போன்று ஆடும் குரக்கன் கதிர்களையும் இணுவில் பகுதிகளில் அதிகம் கண்டிருக்கிறேன். சாமைக் கதிர்களை உருவி அதனுடன் கூடிய தும்புகளை ஊதித் தள்ளிவிட்டு அப்படியே வாயில்போட்டுச் சப்ப அபரிதமான சுவையாயிருக்கும. சாமைக்க கதிர் பற்களுக்குள் அரைபட்டு பால்போல கடவாய்களால் வழியும்.

அதே போல ஓங்கி வளர்ந்து உயர்ந்து நிற்கும் மரவள்ளிச் செடிகள் அந்தக்காலத்தில் நாம் ஒழித்துப் பிடித்து விளையாடும் இடங்களாயிருந்தன. நிரை நிரையாக உயர்ந்து வளர்ந்து மூடி நிற்கும் அந்தச் செடிகளிடையே ஒழித்து ஓடுவது இனிதாயிருக்கும். மரமிருக்க கிழங்குகளை பிடுங்கிச் சுட்டுத் தின்ற வரலாறுகள் பல இணுவிலாரின் மறைக்கப்பட்ட பக்கங்களுக்குள் முடங்கியிருக்கின்றது.

ஒரு காலத்தில் இணுவிலாரின் பிரதான உணவுத் தேவைகளை இந்த சாமை, குரக்கனும் மரவள்ளியுமே தீர்த்து வந்தன.

எழுபதுகள் வரை பிரதான மதிய உணவாக சாமைச் சோறும் மரவள்ளிக் கிழங்குமே இருந்து வந்தது. நெல் அரிசிச் சோறு என்பது எப்போதாவது அபூர்வமாக உண்ணும் ஒரு உணவாகவே தமக்கு இருந்ததாக அப்பா அடிக்கடி சொல்வார்.

கூப்பன் அரிசி, கூப்பன் மாக்களின் வரவு சாமை, குரக்கன்களை ஓரங்கட்டி இன்று வழக்கொழியச் செய்துள்ளது.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் எப்போதாவது ஓரிரு தடவை அபூர்வமாக சாமைச் சோறு சாப்பிட்டிருக்கிறேன். சத்து மிக்கதும் சுவையானதுமாகும்.

சாமைச்சோறும் மீன் குழம்பும் மரவள்ளி கிழங்கு தூள் போட்ட கறியும் இணுவை மண்ணின் பாரம்பரியமான உணவாகும். இன்று எத்தனை பேருக்கு இது தெரியுமோ தெரியாது.

அந்த கையில் இன்று எங்கள் ஊரின் பாரம்பரிய உணவான சாமைச்சோறும், விளைமீன் குழம்பும், மரவள்ளி கிழங்கு கறியும் அத்தோடு நெத்தலி, விளைமீன் பொரியலும்.

இதைப் பார்த்து கஸ்ரப்பட்டவன் யாராவது கலங்கி சாமை விதைக்க திடசங்கற்பம் பூண்டால் பெரிதும் மகிழ்வேன்.

#இணுவையூர்_மயூரன்
#நளபாகம்

பி.குறிப்பு: இந்த சாமை அரிசி சுவிசில் தமிழ்க் கடைகளில் கிடையாது. இந்த நாட்டின் பிரபலமான வர்த்தக நினுவனங்களான கோப், மிக்கிறோஸ், மனோர் போன்ற கடைகளில் கிடைக்கின்றது. Hirse எனும் பெயரில் கிடைக்கும்.