இன்று நள்ளிரவு 23.59 (24.01.2022) க்கு கடந்த 8 நாட்களாக எனக்கிருந்த தனிமைப்படுத்தல் நிறைவடைகின்றது.
கடந்த வாரம் சோதனை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டதால் குடும்பமாக சோதனைக்கு உட்படுத்திக்கொண்டோம். எனக்கு Negative என்றும் மனைவி பிள்ளைகளுக்கு Positive என்றும் சோதனை முடிவுகள் வந்து சேர்ந்தது.
பிள்ளைகளுக்கு அதற்கான அறிகுறிகள் இரண்டு நாட்கள் இருந்து குணமானார்கள். மனைவியை கொஞ்சம் அதிகமாகவே வாட்டி எடுத்துவிட்டது. எனக்கு Negative என முடிவுகள் வந்தபோதும் ஒரு கொரோனா தாக்கத்துக்கு உள்ளானவருக்கு ஏற்படும் அனைத்து அறிகுறிகளும் இருந்தது. அடித்துப் போட்டது போன்ற உடல் நோ, குனிந்து நிமிர, இருந்து எழும்ப வயிறு மற்றும் நாரிப் பகுதிகளில் கொழுவி இழுத்தது. மூட்டு நோ, கை விரல்களில் உழைவு.
மனைவி பிள்ளைகளுக்கு Positive என்ற முடிவு வந்ததாலும், நான் இரண்டாவது தடுப்பூசியை எடுத்து 4 மாதங்களை கடந்து விட்டதாலும் அவர்களை விட ஓரிருநாள் அதிகமாக என்னை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டேன். கடந்த வாரத்தின் நடுப்பகுதியில் மீண்டும் சோதனைக்கு அழைக்கப்பட்டேன் அப்போதும் Negative என்றே முடிவு வந்தது.
ஒடியல்கூழ், ரசம், புளிக்கஞ்சி போன்ற உணவுகளை எடுத்துக்கொண்டோம். சிறந்த நிவாரணியாக இருந்தது.
வார இறுதில் உடல் ஓரளவு இயல்புக்குத் திரும்பத் தொடங்கியது.
இப்போ அனைவரும் ஓரளவு இயல்புக்கு திரும்பிவிட்டோம். மனைவிக்கு மட்டும் இன்னும் இடைக்கிடை காய்ச்சல் காய்கின்றது. தொடர்ச்சியான மருத்துவருடான ஆலோசனைகளை பெற்று வருகின்றோம். சிலருக்கு ஓரிரு நாளில் சரியாகிவிடும். சிலருக்கு சில வாரங்கள் கூடச் செல்லுமாம்.
கடந்த 2019 ஒக்டோபர் கம்போடியா சென்று வந்த பின் தொடர்ச்சியான கொரோனாக்காலங்களால் விடுமுறைகள் எதையும் எடுக்கவில்லை. எட்டு நாட்கள் அதிகாலை துயிலெழுப்பி இல்லாத உறக்கம். எம்மை மீட்டெடுக்க இயற்கை வழங்கிய காலம் இது.