Pages

February 11, 2022

ஆச்சியும் அப்புவும்

 


ஆச்சிக்கு எப்பவுமே

அப்பு நினைப்புத்தான்

கொண்டாடி வாழ்ந்த வாழ்வென்று

சொல்லிச் சொல்லி மனுசி குதூகலிக்கும்


பேச்சுக்கு துணைக்கு ஆரன் கிடைச்சால் போதும்

பெரியபுராண படலம் போல சொல்லிச் சிவக்கும்

கண்ணீர்த் துளி மெல்ல வழிந்து

காஞ்ச தோலில் ஈரம் கசியும்


சனிக்கிழமை எண்ணை தேச்சு முழுக வாத்து

சாராயம் கொஞ்சம் குடிக்கத்தந்து  

தலை கோதித் தூங்க வைத்ததும்

நாச்சார் வீட்டில் ஓடி விளையாடிய காலம் பற்றியும்

நாளாந்தம் இரை மீட்டல் நடங்கும்


அப்பு எப்பிடி எணை உன்னைப் பாத்தவர் என்று கேட்டால் 

கதை சூடு பிடிக்கும்

உங்களைப் போலதான் 

உந்த திண்ணையே கதி என்று வந்து இருந்து குந்து உரஞ்சி உரஞ்சியே என்னைப் பாத்தவர்

கண்ணாலை கதை பேசினவர் 

கருந் தேகமும் களையான முகமும் 

அந்த நாளையான் ஆணழகன் 

இப்ப மட்டுமென்ன கிழவன் இருந்தால்

நீங்கள் எல்லாம் கிள்ளுக் கீரையள் என்று

சொல்லும் போதே ஆச்சி முகத்தில

ஆயிரம் சூரிய ஒளித்தெறிப்போடு 

வெக்கம் வந்து கசியும்


கொண்டாடி வாழ்ந்த வாழ்வென்று

கொப்பாட்டப்பிள்ளை கண்ட பிறகும்

ஆச்சி சொல்லி மகிழும் போது 

அப்பு மேல எனக்கும் பொறாமை வந்து போகும்...


#ஈழத்துப்பித்தன்


2003களில் ஊர் போனபோது ஆச்சிமாரோடு பறைஞ்ச பொழுதில் அவை பறைஞ்சதில் இருந்து...