Pages

July 10, 2022

நயப்புரை - "சிவபுரத்தரசே சிவபெருமானே"



 நேற்று (09.07.2022) சூரிச் சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கம் நடாத்திய "சிவபுரத்தரசே சிவபெருமானே" எனும் இசை வெளியீட்டு நிகழ்வில் நயப்புரை ஆற்றும் வாய்ப்பினை சைவத் தமிழ்ச் சங்கமும் கவிஞர் வேலணையூர் சுரேஸ் அவர்களும் வழங்கியிருந்தார்கள். 

கவிஞர் வேலணையூர் சுரேஷ் அவர்களிடம் "அண்ணா மீண்டும் பெரும் பொறுப்பை தந்துள்ளீர்களே" என்ற பொழுது அவர் சொன்ன "இது அ( சி)வனின் அழைப்பு" ஒற்றை வரி நம்பிக்கையை தந்தது. அந்த நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டேன். அந்த நிகழ்வு பல நன்மைகளைத் தந்தது.

நயப்புரை

*********

மூத்த குடியின் முதன்மொழி மகளே!

ஆதி முகாந்திரமாய் தோன்றிய முகிதல் இல்லாத முத்துக் குளிக்கும் கடலே என் தமிழ்த் திருவே உன் மலரடிக்கே என் முதல் வணக்கம்.

சீர் மேவும் இணுவை சிவகாமி மைந்தன்

கார் எட்டும் பெருமஞ்ச நாயகன் சோதரன்

பார்  புகழும் இணுவை பர்ராசசேகரன் பதம் பணிந்து, சூரிச்சில் உறைகின்ற சுந்தரன் தாழ் பணிகின்றேன்.

அவன் அருளால் அவன்தாழ் வணங்கி அந்தணப்பெருமக்களுக்கும் ஐயனின் அடியவர்களுக்கும் என் தமிழால் அவன் புகழ் பாடி அரங்கேற்றி நிற்கும் கவிஞர் பெருமக்களுக்கும்  நுண் இசையால் சுவையூட்டிய இசையமைப்பாளர்களுக்கும் தம் குரலால் உயிர்கொடுத்து பாடி உரமேற்றிய பாடகர் குழாமிற்கும் சிவன் ஆலய நிர்வாகத்தினருக்கும் சைவத் தமிழ்ச் சங்கத்தினருக்கும் வணக்கம். 

சைவத் தமிழ்ச் சங்கம் மீண்டும் ஒரு தடவை குருவி தலையில் பனங்காயை ஏற்றி வைத்திருக்கின்றது. அதனைச் சுமக்கின்ற அடித்தளத்தையும் அவர்களே தந்ததாலும் அவன் அருளால் இந்தச் சந்தர்ப்பம் அமைந்ததாலும் அந்த துணிவோடு களம் இறங்குகிறேன்.

மிகச் சிறுவயதில் புலம்பெயர்ந்து வந்த நான் உட்பட இன்று வரை இங்கு பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் தமிழ்க் குழந்தைகள் ஏன் இந்த இசைப்பேழையில் பாடியிருக்க கூடிய அத்தனை பிள்ளைகளின் தாய்மொழி மற்றும் கலை வளர்ச்சியில் இந்த சூரிச் சிவன் ஆலயமும் சைவத் தமிழ்ச் சங்கமுமே அடிக்கற்களாக உள்ளது என்றால் மிகையாகாது. 

இன்று சுவிற்சர்லாந்தில் நாடளாவியரீதியில் இயங்கும் தமிழ்ப் பள்ளிகள் முதல் நாடளாவியரீதியில் நடைபெறும் பொதுத்தேர்வு வரை சைவத் தமிழ்ச் சங்கத்தால்தான் அறிமுகப்படுத்தி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

தாய்மொழித் தேர்வு, திருக்குறள் மனனப் போட்டி, பேச்சுப் போட்டி, நாடகப்போட்டி என என் திறன்களை காட்ட களம் தந்து எனை வளர்த்து இந்தச் சமூகத்துக்கு என்னை அறிமுகப்படுத்திய இந்தக் கூடம் தற்போது என் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் களம் தந்து நிற்கின்றது. அந்த நன்றி உணர்வோடு தொடர்கின்றேன்.

தவறுகள் இருப்பின் தமிழால் பொறுத் தருள்க.

இறைவனை பாடுதல் என்பது இன்று நேற்று ஆரம்பமானதல்ல. தமிழை அதன் சுவையை அதன் இலக்கண இலக்கிய தரங்களை வளர்த்த பெருமை தொன்று தொட்டே பக்தி இலக்கியங்களுக்கு உண்டு.  

ஈழத்து புலவர்களாலும் பல பக்தி இலக்கியங்கள் படைக்க கூடிய சூழல் உருவாகி அங்கொன்றும் இங்கொன்றுமாய் படைக்கத் தொடங்கிய காலத்தில் எங்கள் தேசத்தில் நிலவிய இன ஒடுக்குமுறையும் அதற்கெதிரான கிளர்வும் மண் மீட்பு போராக உருக்கொண்டு எம் தேசம் மீது கருமேகம் சூழ்ந்தது.  போர்ச்சூழல் புரவலர்களை பரணி பாட அழைப்பு விடுத்தது. எங்கள் தேசத்தின் வலியும் போரும் வெற்றியும் கருவாகி உருவாகின.

2009இல் எங்கள் வாழ்வும் வளங்களும் புரட்டிப்போடப்பட இயலாமையாலும் அச்சத்தாலும் எங்கள் படைப்பாளிகளின் குரல்களும் படைப்புக்களும் சுருங்கிப் போயின. 

 தன் உள உணர்வுகளை வடித்துக் கொட்ட வடிகால் தேடிக் கொண்டிருந்த பொழுதினில் மனம் முழுதும் நிறைந்த இயலாமையும் வெப்பியாரமும் ஏக்கமும் வடிகால் தேடி இறைவனை எம் மீட்பனாக கருதி தங்கள் வலிகளைச் சொல்லி  பாட அவை இறையருட் பாட்களாக மலரத் தொடங்கின.

அந்த வகையிலே அன்று முதல் இன்று வரை மக்களின் வலிகளை உணர்ந்து சிவபுரத்தின் அரசாக படியளந்துகொண்டிருக்கும் சூரிச்பதி உறை சுந்தரேசன் மீது தொடர்ச்சியாக பல பாடல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்று முத்தாரமாய் இரண்டு இசையமைப்பாளர்கள் இசை மீட்டி 12 கவிஞர்கள் பாடல் யார்த்து 19 பாடகர்கள் பாடி 16 பாடல்களுடன் வெளி வந்திருக்கின்ற "சிவபுரத்தரசே சிவபெருமானே" என்ற இந்த இசைப்பேழையின் இசை வெளியீடு ஒரு காலத்தின் பதிவாக சிறப்புப் பெறுகின்றது.

சுந்தரர் சம்பந்தர் பாடிய திருக்கோணேச்சரம் திருக்கேதீச்சரம் போல் எங்கள் புதுவையரால் பாடல் பெற்ற தலம் எனும் பெருமை மிகு சிவனாரை இன்று இத்தனை பேர் இணைந்து பாடியிருப்பது பெரும் சிறப்பாகும்.

பாடல்களுக்குள் நுழைய முன்னர் பாடல்களில் இருக்க வேண்டிய கவனிக்க வேண்டிய சில விடயங்களை குறிப்பிட்டுச் செல்லலாம் என நினைக்கின்றேன்.

ஒவ்வொரு படைப்பும் அந்த காலத்தை அந்தக் காலத்தில் வாழும் மனிதர்களின் உள உணர்வை, எதிர்பார்ப்பை, சூழலையும் பதிவாக்கி காலங்கள் கடந்தும் கடத்தும் வல்லமையை கொண்டனவாக உருவாக்கப்படுதல் வேண்டும். 

இன்று தேவாரங்களை வைத்து திருக்கோணேச்ரம் திருக்கேதீச்சம் பற்றி நாம் அளவிடுவதைப் போலவும் அந்தக் காலத்தை உணர்தலைப் போலவும் இருத்தல் இருத்தல் வேண்டும். அத்தகைய படைப்புக்களே காலங்கள் கடந்தும் நிலைபெறும். 

இவை பற்றி இன்னும் ஆழமாகப் பேசலாம். உங்கள் நேரத்தை நான் அதிகம் திருடிக்கொள்ள விரும்பவில்லை.

உள்ளே என்ன உள்ளது என பார்க்க வேண்டும் என்ற ஈர்ப்பை ஏற்படுத்துகின்ற அழகிய வடிவமைப்புடன் கூடிய இந்த இசைப் பேழை இசையமுதனின் முகவுரையுடன் விரிகின்றது.

இரு பக்கமும் மின்னொளி அலங்காரங்கள் ஒளி சுடர நடுவே செங்கம்பளம் விரிந்திருக்க வானவேடிக்கை முழங்க கரங்களை பிடித்து விழா மண்டபத்தினுள் அழைத்துச் செல்லும் உணர்வினை இசையமுதனின் முகவுரை தந்து பாடல்களை கேட்கும் மன நிலைக்கு எம்மை தயாராக்கி அழைத்துச் செல்கின்றது.

பதினாறு பாடல்களையும் கேட்டு முடித்த பொழுது கை நிறைந்து தேன் வழிந்து ஒழிகிடும் பஞ்சாமிர்தத்தை உண்டது போல் மனம் இனித்துக் கிடந்தது.

முதலாவது பாடலாக கவிஞர் இன்பம் அருளையாவின் வரிகளில் முகிலரசனின் இசையில் ஜனாவின் குரலில் உருவான முதற் பிள்ளை கணபதிக்கு என்ற பிள்ளையார் பாடல் பிள்ளையார் சுழி்போட்டு நல்லதை தொடங்கிவிடு என்ற பாடலுக்கு நிகரான இசையில் மனதோடு இணைந்துகொண்டது. 

முகிலரசனின் இசையில் 14 பாடல்கள் இசையமைக்கப்படுள்ளன அவை ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை அல்ல அத்தனை பாடல்களும் உணர்வோடு கலந்து சாமகானம் இசைத்தன.

இந்த பாடலை எழுதியிருக்கும்  கவிஞர் இன்பம் அருளையா அவர்கள்  இந்த இசைப்பேழையில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளன. இவரைப் பற்றி சொல்வதாயின் இன்று சுவிற்சர்லாந்தில் வாழும் கவிஞர்கள் மத்தியில் அதிக பாடல்களை புனைந்திருக்கும்  கவிஞர்  என்ற பெருமை இவருக்குண்டு. 

ஜனாவினுடை காந்தக்குரல் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றது.

இரண்டாவது பாடல் "மனமொழி மெய்ப்பால்" கவிஞர் வேலணையூர் சுரேஸ் அவர்களின் வரிகளில் ஆரபி திருநாமசிங்கம் அவர்களின் குரலில் இடம்பெற்றிருக்கின்றது.   கவிஞர் வேலணையூர் சுரேஸ் பற்றி சொல்லத் தேவையில்லை. அனைத்தையும் காப்பாற்று எம் இனத்தையும் காப்பாற்று என எங்கள் எதிர்பார்ப்பை சொல்லிச் செல்கின்றது. ஆரபியின் குரலில் நல்ல முதிர்ச்சி தெரிகின்றது. வருடிப் போகின்றது. 

மூன்றாவது பாடல் "உந்தன் பாதம் தஞ்சமென்று வந்தடைந்தோம் பரமனே" கவிஞர் மணிமொழியின் வரிகளில் அஜித்தா விஜயகுமார் பாடியிருக்கின்றார். 

இனி நீதான் எல்லாமே என அவன் பாதம் பணிந்து உருகின்ற வரிகள் மனதை பிசைந்து போகின்றது. சிறந்த பாடகியாக எங்கள் மனங்களில் பதிந்த மணிமொழி சிறந்த பாடலாசிரியை எனவும் நிரூபித்த பாடல் இது. அஜித்தாவின் குரல் எனக்கு மிகவும் பரீட்சயமான குரல். மனதோடு உறவாடிப் போகின்றது.

நான்காவது பாடலாக "காரிய காரணனே" கவிஞர். கு. வீரா அவர்களின் வரியில் வசீகரன் அவர்களின் இசையில் செல்லப்பா ஶ்ரீகந்தவேள் அவர்களின் குரலில் இன்றைய கால வலிகளை சொல்லும் பாடலாக அமைந்துள்ளது. கவிஞர் வீராவின் கவித்துவம் பற்றி சொல்லத் தேவையில்லை.

இசையமைப்பாளர் வசீகரன் இந்த இசைப்பேழையில் இரு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இரு பாடல்களும் வரிகளின் ஆழத்தை வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. 

ஐந்தாவது பாடலாக "ஆதியும் நீயே அந்தமும் நீயே" கவிஞர் இன்பம் அருளையாவின் வரிகளில் சாரங்கா வரதராஜனின் குரலில் அமைந்துள்ளது. விறுவிறுப்பாக அமைந்த இந்த பாடலில் பஞ்சபூதங்களை கட்டி ஆளும் சிவனின் அற்புதங்களையும் புலம்பெயர்வின் வலியையும் பேசும் வகையில் அமைந்துள்ளது. சாரங்கா வரதராஜன் இன்றைக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னரே நாம் கரம் பிடித்து மேடைகளில் ஏற்றிய சிறுமி. இன்று அற்புதமான மிளிர்ந்து பாடகியாக தன் குரலால் உயிர்கொடுத்துள்ளாள். 

ஆறாவது பாடலாக "அன்பே சிவமென்று" அகரப்பாவலனின் வரிகளில் மாதுமை மகேந்திரராஜாவின் குரலில் வெளிவந்துள்ளது.

அகரப்பாவலனின் வரிகள் மனதுக்கு பேரின்பத்தை தந்து போகின்றது. மாதுமையின் குரல் இனிக்கின்றது. மாதுமையின் குரலில் ஏன்கனவே கடந்த ஆண்டு ஒரு பாடலை கேட்டிருந்தேன். அதனிலிருந்து இந்தப்பாடலில் அனுபவ முதிர்ச்சி தெரிகின்றது.

ஏழாவது பாடலாக "ஆதி சிவபெருமானே"  மயிலையூர் இந்திரனின் வரிகளில் ஜீவனின் குரலில் உள்ளத்துள் ஊடுருவுகின்றது. "ஊரிழந்து உறவிளந்து படும் வலிகளை சிவனிடம் சொல்லி உருகும் இப்பாடலில் மூலம் சிறந்த படகராக எம் மத்தியில் நீண்டகாலமாக அறிமுகமான இந்திரன் தான் சிறந்த காலக் கவிஞன் என்பதை நிரூபித்துள்ளார். ஜீவனின் குரல் மனதைப் பிசைந்து வருடுகின்றது. 

எட்டாவது பாடலாக " அருணாச்சலனே" ஈழப்பிரியனின் வரிகளில் பிரியா முரளீஸ்வரனின் குரலில் இடம் பிடித்திருக்கின்றது. சந்தம் சிந்தும் ஈழப்பிரியனின் வரிகளுக்கு பிரியா இனிதாக உயிர் கொடுத்துள்ளார். 

கவிஞர் ஈழப்பிரியனின் கவித்துவம் பற்றி கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் முன்னதாகவே இனங்கண்டு பாராட்டியிருந்தேன். பிரியாவின் பாடும் திறனை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னரே பாசல் சங்கமம்  இசைக்குழுவின் மேடைகளில் கேட்டிருக்கிறேன். இங்கும் மிளிர்ந்திருக்கிறார்.

ஒன்பதாவது பாடலாக "அன்பே சிவமாய் அமர்ந்த நாதனே" கவிஞர் இன்பம் அருளையா அவர்களின் வரிகளில் திருமால் ஆர்த்திகன் டினுஜா முகிலரசன் பாடியிருக்கின்றார்கள். மழலைத் தமிழில் சிவன் நாமம் சிறந்திருந்தது.

பத்தாவது பாடலாக "சோதியே சுடரே" கவிஞர் நிர்மலாதேவி பரராஜசேகரம் அவர்களின் வரியில் பிரதீபா இராதாகிருஷ்ணனின் குரலில் இடம்பெற்றுள்ளது. 

பாரா முகமாய் உள்ள பாம்பணிந்த ஈசனை பாடித் தொழும் இப்பாடலின் கவித்துவம் தனித்துவமானது. கவிஞர் நிர்மலாதேவி சுவிற்சர்லாந்தில் பக்தி இலக்கியத்துக்கு வித்திட்ட கவிஞர்களில் முதன்மையானவர். பிரதீபா கவிஞரின் உணர்வை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

பதினொராவது பாடலாக பக்தருக்கு அருள் செய்வாய் கவிஞர் விவேகானந்தன் அவர்களின் வரிகளில் அபூர்வா செல்வச்சந்திரனின் குரலில் இடம்பெற்றுள்ளது. மிகுந்த ஆர்வத்தோடு கவிபுனையும் கவிஞர் விவேகானந்தனின் வளர்ச்சியின் மைல் கல்லாக இப்பாடல் அமைந்துள்ளது. ஆபூர்வாவின் மழலைத் தமிழ் எம்மையும் ஈர்த்துப் போகின்றது.

பன்னிரண்டாவது பாடலாக எத்திசையில் நான் கவிஞர் வெற்றி துஸ்யந்தனின் வரிகளில் ஆரூரன், அதிசயா திருநாமசிங்கம் பாடியுள்ளார்கள். எம் பிரானை நினைந்து உருகும் கவிஞரின் பாடல்வரிகள் எம்மையும் உருக்குகின்றது. ஆரூரன், அதிசயா இருவரின் குரல்களிலும் நல்ல முதிர்ச்சி தென்படுகின்றது. 

பதின்மூன்றாவது பாடலாக அப்பன் பரமேஸ்வரன் கவிஞர் இன்பம் அருளையா வரிகளில் வசீகரனின் இசையில் விஜிதா இலங்கேஸ்வரன் பாடியுள்ளார். சூரிச் சிவன் கோவிலில் உறைகின்ற கந்தனை பாடியுள்ள கவிஞரின் வரிகள் விஜிதாவின் குரலில் வருடுகின்றது.

பதின்நான்காவது பாடலாக காளியே சூலியே அகரப்பாவலனின் வரிகளில் அக்சயா இராதா கிருஸ்ணனின் குரலில் துள்ளலாக அமைந்துள்ளது. காவடிக்கு ஏற்ற பாடலாக சிறக்கிறது. 

பதினைந்தாவது பாடலாக அன்பே சிவமென்போம் கவிஞர் மூத்த படைப்பாளி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களின் வரிகளில் பெரியவர் சாம்பசிவம் அவர்களின் குரலில் ஓர் தத்துவப்பாடலை ஒத்து அமைந்திருந்தது. கவிஞர் ஆதிலட்சுமி அவர்கள் பற்றி சொல்வதாயின் எனது வயதையும் விட அவரது படைப்புலக அனுபவம் நீண்டது. பல படைப்புக்களை நூறு படைப்புக்களை வெளிக்கொண்டு வந்த ஒரு ஆளுமை.

ஐயா சாம்பசிவம் அவர்களின் குரலில் பாடல் உணர்வோடு கலக்கின்றது.

பதினாறாவது பாடலாக நடராஜர் சுவாமி கவிஞர் ஈழப்பிரியனின் வரிகளில் இன்பா இராதா கிருஷ்ணன்  மற்றும் சாயினி சுரேஸ்குமார் ஆகியோரின் குரலில் இடம்பெற்றுள்ளது. கவிஞரின் கவித்துவமான வரிகளுக்கு எம் இளந்தலைமுறை பாடகர்கள் இனிதாய் குரல் கொடுத்துள்ளார்கள். 

உண்மையில் இந்த இசைப்பேழையில் பாடியிருக்கும் பெரியவர்களைவிட பாடிய சிறார்கள் சிறப்பாக பாடியுள்ளார்கள். பெரியவர்கள் எப்படியோ மொழியை எமது தாயகத்தில் பயின்று வந்தவர்கள். இந்தச் சிறார்களோ இங்கு பிறந்து மொழியை இங்கே பயின்று இவ்வளவு தூரம் உச்சரிப்பு தெளிவாக பாடியிருப்பது பிரமிக்க வைக்கின்றது.

அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் உரித்தாக்கிக் கொள்கின்றேன். 

எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சைவத் தமிழ்ச் சங்கத்தினருக்கு எனது அன்பையும் நன்றியையும் உரித்தாக்கி விடைபெறுகின்றேன்.

அன்பே சிவம்

படங்களை அனுப்பி வைத்த சுதா அண்ணாவுக்கு நன்றிகள்.

பல வாசகிகள் தங்கள் கைப்பேசிகளில் படமாக்கி உள்பெட்டிகளை நிறைத்திருந்தார்கள். அனைவரது அன்புக்கும் நன்றி.