Pages

October 28, 2025

பாறணை சோறு

 


எங்கட வீட்டு பாறணை என்பது குடும்பம் ஒருங்கிணையும் கொண்டாட்டம்.

எங்கள் வீட்டு வாண்டுகள் எல்லாம் அந்த நாளுக்காக காத்திருப்பார்கள். இரவு எல்லோரும் சேர்ந்து கதை பேசி உறங்குவதில் அவர்களுக்கு பேரானந்தம். 

காலையில் வாழையில் பந்தியில் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவதில் அவ்வளவு மகிழ்வு.

எல்லோருமே முதன் நாள் இரவு சூரன் போர் பார்த்துவிட்டு அம்மா வீட்டுக்கு சென்றுவிடுவோம். இப்போ பிள்ளைகள் எல்லாம் வளர்ந்துவிட்டாலும் அவர்களுக்கான பாடசாலை ஆரம்பமாகும் நேரத்துக்கு முன்னதாகவே காலை பாறணையை முடித்துவிட்டு பாடசாலைக்கு செல்வோர் சென்றுவிடுவார்கள்.


இன்று மருமகன் அகரனுக்கு பாடசாலையால் ஒரு சிறு சுற்றுலா அதனால் அவன் வரமுடியாத நிலை இருந்தது. இந்த வாரம் நிலவும் சீரற்ற காலநிலையால் அவனது அந்தச் சுற்றுலா நேற்று திடீரென நிறுத்தப்பட அவனும் நேற்று இரவே வரமுடிந்தது. வந்தவன் சொன்னான் தான் ஒவ்வொருநாள் இரவு படுக்கபோகும் போதும் முருகனை கும்பிடுவேன் இந்தச் சுற்றுலா எப்படியாவது நிறுத்தப்பட வேணும் அப்பதான் நான் அத்தான் மச்சாளாக்களோட குஸ்தி அடிக்கலாம் என்று. 


இந்த ஆண்டு இனியாவும் எங்களுடன் சேர்ந்திருக்கின்றாள். நிச்சயம் அடுத்த ஆண்டு வாழையிலை இட்டு எங்களோடு சரிக்கு சரியாக அமர்ந்து 

அவளும் பாறணைச் சோற்றுக்கு அட்டகாசம் செய்வாள்.


October 12, 2025

அந்தக் கண்கள்


மெல்லிய இரவின் நிழல் போல
மென்மையாய் பேசும் அந்தக் கண்கள்,
நிசப்தத்தின் மொழியை கற்றுத் தந்தது
நிதானமான சுவாசத்தின் உயிர் திசுக்களாய்

ஆழமாய் துடிக்கும் ஒவ்வோர் அலையிலும்
சிறு உணர்வுகளாய் தோன்றித் திரிந்தது 
அந்தக் கண்கள் பேசும் போது,
சொற்களே மௌனமாகி விடுகின்றன

புன்னகையின் வெளிச்சத்தில் நெளியும் போது,
அவைகள் ஒரு விடியலின் துளி போல 
உறங்கிய கனவுகளை விழித்தெழச் செய்கின்றன,
மனம் முழுவதும் ஒளிரும் ஒளியாக.

அந்தக் கண்கள் ஒரு உலகம் தானே
அதன் ஆழத்தில் மறைந்திருக்கும்
காதலும் கண்ணீரும், கனவுகளும் 
அனைத்தும் பேசாத சொற்களாய் நிற்கின்றன

எத்தனை முறை பார்த்தாலும்,
அந்தக் கண்கள் புதிதாகவே தோன்றுகின்றன 
அவற்றில் ஒளிந்து பிரதிபலிக்கிற
முழு உயிரின் உணர்வும் அழகும்.

#இணுவையூர்_மயூரன்
12.10.2025