Pages

October 27, 2010

இலையுதிர்காலத் திருவிழா

இப்போ ஒக்ரோபர் மாதத்தின் கடைசி வாரம் இது சுவிற்சர்லாந்தின் பாசல் மாநிலம் விழாக்கோலம் பூணும் நேரம். முதலாவது தடவையாகவோ அல்லது இரண்டாவது தடவையாகவோ அல்ல 540 வது தடவையாக. 540 தடவை என்கின்ற போது 540 ஆண்டு காலப் பாரம்பரியம் இந்த விழாக் கோலத்தின் பின்னே ஒழிந்து கிடக்கின்றது. கடந்த 20 ஆண்டு காலமாக இந்த விழாக்காலம் என் வாழ்வின் ஒரு பகுதியாக இணைந்து செல்வதால் அதைப்பற்றிய பதிவோடு உங்களோடு இணைகின்றேன்.

1991ம் ஆண்டு நல்லூர்த் திருவிழா முடிய சுவிசுக்கு போற புழுகத்தோடை ஊரைவிட்டு வெளிக்கிட்ட எனக்கு அப்ப பதினொரு வயசு. எல்லாரையும் போல வெளிநாடு போற புழுகமும் நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்பாவோடை சேந்து வாழப்போறன் எண்ட புழுகமும் சேர தாய்நாட்டையும் எங்கடை விழாக்களையும் விட்டுப் போறனே என்ற துளி கவலையும் இல்லாமல் சுவிசுக்கு வந்து சேந்த எனக்கு இஞ்சை வந்து சேந்த பிறகுதான் ஒரு விசியம் தெளிவாத் தெரிஞ்சுது. வெளிநாடு எண்ட மோகத்திலை எல்லாத்தையும் இழந்துபோய் வந்திருக்கிறன் எண்டு. ஒரு கொண்டாட்டமில்லை, புரியாத மொழி, வித்தியாசமான மனிதர், விசித்திமான கலாச்சாரம் இனி இஞ்சைதான் என்ரை வாழ்க்கை எண்ட போது நெஞ்சம் ஒரு முறை சுக்குநூறானது.

அப்பிடி இருக்கேக்கை நான் இஞ்சை வந்து ஒரு மாதத்திலை எங்கடை ஊர் திருவிழாவை ஞாபகப்படுத்திறமாதிரி  Herbstmäss எனப்படுற இலையுதிர்காலத் திருவிழா ஆரம்பமாச்சுது. ஏங்கடை ஊர் திருவிழாவிலை இருக்கிற மாதிரி இனிப்புக்கடை தும்புமுட்டாஸ் கச்சானுக்கு பதிலா Marroni எண்டுற ஒருவகை விதை (இது வறுக்ககப்பட்டு சுடச்சுட விக்கப்படும் குளிருக்கு இதமாகவும் நாவுக்கு சுவையாகவும் இருக்கும்) அதுமட்டுமில்லாமல் இராட்டினங்கள் அப்பிடி இப்பிடி இப்பிடி யெண்டு நிறைய விளையாட்டுகள். என்ரை மனசுக்கு அந்த நிகழ்வு பிடிச்சுப் போச்சு. தாயக தாகத்தோடை இருந்த எனக்கு என்ரை தாய்மண்ணிலை வாழ்ந்த காலத்தை நினைவுக்கு கொண்டு வந்ததாலை இந்த திருவிழா என்ரை வாழ்க்கையிலை ஒரு அம்சமாப் போச்சுது.






Marroni

சரி என்ரை கதையை விட்டுட்டு அந்த நிகழ்வைப் பற்றிச் சொல்லுறன். 540 ஆண்டுகால பாரம்பரிய நிகழ்வு எண்டு இதை சொன்னான் எல்லே ஒக்ரோபர் மாதம் சுவிசிலை இலையுதிர்காலம் குளிர் தொடங்கிற காலம் முந்தி அந்தநாளிலை குளிர் தொடங்கினால் சனம் வீட்டைவிட்டை வெளிக்கிடாதாம். அப்ப குளிர் காலத்திலை சனத்தை வீட்டை விட்டு வெளியை கொண்டாறதுக்கு என்ன செய்யலாம் எண்டு யோசிச்சு இந்த இலையுதிர் காலத்திருவிழாவை ஆரம்பிச்சினமாம். இப்பிடித்தான் வரலாறுகள் சொல்லுது. குளிர்காலத்திலை சனத்தை வெளியை வர வைச்சு குளிரைப்போக்கிற மாதிரி சுடச் சுட சாப்பாடுகளையும் Glüwein எண்டுற சூடான திராட்சைமதுவும் விற்பனை செய்யப்படுமாம். பிறகு ஆடிப் பாடி கழித்து மகிழ கையால் சுற்றப்படுகின்ற ராட்டினங்களும் விளையாட்டுக்களும் இருக்குமாம்.


இப்ப காலம் மாறிப் போச்சு மின் விளக்கு அலங்காரங்களும் நவீன விளையாட்டுக்களும் பல புதுப்புது உணவுகளும் சுவிசின் பாரம்பரிய உணவுகளோடையும் இந்த விழா ரண்டு கிழமைக்கு களை கட்டும். பெரியவைக்கு திண்டாட்டம் சிறுசுகளுக்கு கொண்டாட்டம். இது எனக்கு இருவதாவது திருவிழா எல்லே அப்ப எங்கடை அப்பா என்னோடை பட்ட பாட்டை இப்ப நான் படுறன்.   

5 comments:

ம.தி.சுதா said...

அனுபவங்கள் என்றும் வாழ்க்கையின் வழி காட்டிகள் தான்.... வாழ்த்துக்கள் தொடருங்கள்... என் வேண்டுகோளுக்கு செவி சாய்த்தமைக்கு மிக்க நன்றி..

மதுரை சரவணன் said...

வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றீ.

பொன்-சிவகௌரி. said...

கதையுடன் அந்த நாட்டின் பாரம்பரியத் திருவிழாவின் மகிமையையும் உங்கள் அனுபவங்களையும் சேர்த்து மிக அழகாக சுருக்கமாக தந்திருக்கின்றீர்கள்.நன்றி. வாழ்த்துக்கள்.

Inuvaijurmayuran said...

மிக்க நன்றி

அம்பாளடியாள் said...

அனுபவித்து எழுதிய ஆக்கம்
சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்!..

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.