92களில் அவர் ஒரு முரட்டு மனிதன். முன் கோபக்காரன்;. வணக்கம் சொன்னால் உன்னை நான் வணக்கம் கேட்னானோ? என சினப்பார் இப்படித்தான் என் முன் அறிமுகமாகின்றார் அதனால் அவரோடு நான் என்றும் பேசியதில்லை. 1998ம் ஆண்டு காலப்பகுதிகளில் பாசல் தமிழ் மன்றத்தினால் மணிமேகலைப்பிரசுரத்தின் புத்தகக் கண்காட்சியை ஒழுங்குபடுத்தி நடாத்தியிருந்தோம். இக் கண்காட்சி 2000ம் ஆண்டு காலப்பகுதி வரை நான்கு தடவை நடாத்தப்பட்டது. நான்கு தடவைகளும் தவறாமல் கண்காட்சிக்கு சமூகமளித்து புத்தகங்களை கொள்வனவு செய்யும் முக்கிய நபர்களில் இவர் முதன்மையானவராக இருந்தார். அவரோடு சற்றுப் பேச்சுக் கொடுத்தபோது அவரது ஆழ்ந்த தொலைநோக்குக் கொண்ட சிந்தனையும் தேடலைப் பற்றியும் சற்று அறிந்து கொண்டேன்.
இச் சம்பவம் அவர் மீது எனக்கிருந்த அபிப்பிராயத்தை சற்றுப் புரட்டிப் போட்டது. அதன் பின் காண்கின்ற போது புன்முறுவல் இடையிடையே வணக்கம் இப்படி தொடர்ந்தது அவருடனான எனது நட்பு.
2002களின் செப்டம்பர் பிற்பகுதி குருத்து மாதஇதழின் முதலாவது இதழை வெளியிட்டு வைக்கின்றோம். முதல் இதழின் வரவு நாம் எதிர்பார்த்தகைக் காட்டிலும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. பலர் எம்மோடு இணைந்து செயற்பட ஆர்வம்கொண்டு எம்மோடு இணைந்து கொண்டனர்.
அப்போது எமது இதழின் இணையாசிரியர் செந்தூரன் என்னோடு தொடர்பு கொண்டு சொன்னார். ஒரு அண்ணை உங்களை சந்திக்க வேண்டுமென்று சொன்னவர் என்று சரி வரேக்கை கூட்டியாங்கோ என்றுவிட்டு அடுத்த இதழின் வடிவமைப்பில் மூழ்கிப்போகின்றேன். அன்று மாலை செந்தூரன் என்னை சந்திக்க வந்தபோது கூடவே அவரும் வருகின்றார். இதழ் தொடர்பில் பல விடயங்கள் உள்ளடக்கம் பற்றியெல்லாம் பல விடயங்களை உரையாடினோம்.
குருத்தின் சிறுவர் பகுதி முதல் இதழிலே சிறுவர் தோப்பு என அறிமுகமாகி வெளிவந்திருந்தது, அதனை அரும்பு என பெயர் மாற்றம் செய்தால் அழகாகவும் பொருள் நிறைந்ததாகவும் இருக்கும் என ஆலோசனை தந்து அப் பகுதியில் புதிதாய் இணைக்கப்பட வேண்டியவிடயங்களையும் தானே தொகுத்துத் தருவதாகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். அதோடு மட்டும் நின்றுவிடாமல் எம் சமூகத்தில் புகுந்துகிடக்கும் மூடநம்பிக்கைகளையும் அறியாமைகளையும் கண்மூடித்தனங்களையும் நக்கலாக தோலுரித்துக் காட்டும் நோக்கோடு தத்துவத்தார் எனும் பகுதியொன்றினையும் தானே எழுத முன்வந்தார். அவர் செயற்பாடுகளில் முண்டாசுக் கவிஞனை நான் காண்கின்றேன்.
அவரது வரவு எமது இரண்டாவது இதழ் பல மாற்றங்களோடும் புதுப்பொலிவோடு வெளிவந்தது. எமக்கு பல தரப்பட்டோரிடமிருந்து பாராட்டுக்கள் வந்து குவிந்தன. தத்துவத்தார் பகுதி பெரு வரவேற்பினைப் பெற்றது. அன்று முதல் எனக்கும் அவருக்கும் இடையேயான உறவு வலுப்படத் தொடங்கியது.
இதழ் சிறப்பான ஆக்கங்களைத்தாங்கி வெளிவரத் தொடங்கியபோது சிறுவர்களுக்கான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடாத்தத் தீர்மானித்தேன். 2003ம் ஆண்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. 2004ம் ஆண்டு இரண்டாவது தடவையாக நாம் போட்டிகளை நடாத்தத் தீர்மானித்தபோது, அதிகூடிய புள்ளிகளைப் பெறும் மாணவருக்கு எமது சிறுவர்பகுதியின் பெயரான அரும்பு எனும் பெயரிலே விருது ஒன்றினை வழங்குவோம் என்ற ஆலோசனையை முன்வைத்தார். அதன்படி 2004ம் ஆண்டு சகானா வசந்தன் என்ற மாணவிக்கு குருத்தின் உயரிய சிறுவர் விருதான முதலாவது அரும்பு விருது வழங்கப்பட்டது. தான் மட்டும் ஒத்துழைப்பு வழங்கினால் போதாதென்று தனது மனைவியையும் எமது இதழூடாக தொடர் கதையொன்றினை எழுதவைத்து ஒத்துழைப்பினை வழங்கினார்.
இலக்கியத்தால் ஏற்பட்ட நட்பு என்பதற்கும் அப்பாற்பட்டு ஒரு அண்ணணாக என்னோடு கூட இருந்து எனது சரி, பிழைகளை நேருக்கு நேர் சுட்டிக்காட்டுவார். அவர் இது தவறு என சுட்டிக்காட்டிய சில தவறுகளை அன்று நான் திருத்திக் கொள்ளத்தவறியதால் பின்னாளில் அது குருத்து இதழின் வரவு தடைப்படும் நிலைக்குச் சென்றமை மறுக்க முடியாத உண்மை.
2004களின் நடுப்பகுதியில் குருத்து இதழை வெளியிட முடியாத அக புறச்சூழல்கள் எமக்கு ஏற்பட்டது. பின்னர் 2010ம் ஆண்டின் ஜனவரி வரையிலும் குருத்தின் செயற்பாடுகளுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு மீள துயிர்க்கும் நோக்கோடு குருத்து TRX தமிழ் காற்று வானொலியின் இரண்டாவது அகவை நிறைவை முன்னிட்டான சிறப்பிதழாக வெளிவந்தது. அந்த இதழிலும் அவர் காத்திரமாகப் பணியாற்றினார். தொடர்ச்சியாக காலாண்டு சஞ்சிகையாக குருத்தினை நாம் வெளிக்கொண்டுவர நான் முடிவெடுத்தபோது என் கரம்பற்றி நின்று வலுச்சேர்த்தார். இதழ் வெளிவர அகச்சூழல் சரியாக இருந்தபோதும் புறச்சூழலில் சில முட்டுக்கட்டைகள் விழ சற்றுப் பொறுத்திருந்தேன். இதேவேளை குருத்து இதழ் ஊடக மையமாக உருப்பெற்று பல துறைகளிலும் செயற்படத் தொடங்கியது. 2010 முதல் மாணவர்களுக்கான போட்டிகள் மீள நடாத்தப்படத் தொடங்கியது. 2010இல் தனியே பேச்சுப் போட்டி மட்டுமே நடாத்தப்பட்டமையால் அரும்பு விருதினை வழங்க முடியாது போனது. 2011 முதல் பல தரப்பட்ட போட்டிகள் புதிதாக இணைக்கப்பட்டு அரும்பு விருதுக்கான போட்டிகள் சிறப்பாக நடாத்தப்பட்டது. 2010ம் ஆண்டு இரண்டாவது அரும்பு விருதினை செல்வி சௌமியா சத்தியபாலா அவர்கள் பெற்றுக் கொண்டார். அந்த விருதினை அரும்பு விருதின் தந்தையே வழங்கிக் கௌரவித்தார்.
குருத்து இதழை இனி வெளியிடுவதில்லை என்ற முடிவான முடிவோடு நான் இருக்க என்னை தொடர்புகொண்டு இப்ப எனக்கு ஓய்வாக நிறைய நேரம் இருக்கிறது. 2012ம் ஆண்டு குருத்து வெளிவந்த பத்தாவது அகவை நிறைவு நாம் ஏன் 2012ம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு ஒரு இதழையாவது வெளியிடக்கூடாது எனக் கேட்டார். சரி வெளியிடுவோம் என அவரின் ஒத்துழைப்போடு பத்தாம் அகவை மலரின் பூர்வாங்க நடவடிக்கைகளிலே இறங்கியிருந்தேன். நாளை (11.12.2011) நாம் சந்தித்து இதழ் தொடர்பான மேலதிக விபரங்கள் பற்றி உரையாடிக் கொள்வோம். என்று என்னை சந்திக்க நேரம் ஒதுக்கிக் கொண்டார். அப்படி இருந்த வேளையில் இன்று (10.12.2011)என் தொலைபேசி தாங்கி வந்த சேதி என் அன்புக்குரிய அண்ணன், எமது இதழின் ஆலோசகன், அரும்பின் தந்தை, எமுத்தாளன் தத்துவத்தார் என்றும் சோழியூர் ஸ்ரீ என்றும் எங்கள் வாசக நெஞ்சங்களோடு உறவாடிய ஸ்ரீ துரைராஜ் மாரடைப்பால் மாண்டார் என்ற சேதி. விக்கித்துப்போய் நிற்கின்றோம். அன்பு அண்ணனை ஆற்றல் மிகு ஆலோசகனை புலமை மிகு எழுத்தாளனை சமூகப் பணியாளனை இழந்து தவிக்கின்றோம். நாம்.
4 comments:
இவரது ஆத்மா சாந்தியடை நாம் எல்லோரும் வேண்டிக்கொள்வோம்.
இவரது ஆத்மா சாந்தியடை நாம் எல்லோரும் வேண்டிக்கொள்வோம்.
துயர் தரும் இப்பகிர்வினைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி மயூரன் .அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறவனைப் பிரார்த்திப்போம்!.....
இனிய ஒரு அனுபவப் பகிர்வு இவ்வளவு சோகமாக முடியும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. சோழியூர் ஸ்ரீ என்ற ஸ்ரீ துரைராஜ் அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்.அவரைப்பிரிந்து துக்கத்தில் வாடும் அவரது குடும்ப உறவுகளிற்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Post a Comment
தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.