Pages

July 3, 2014

என்ன தவறு நான் இழைத்தேன்
























குடமுழுக்கு காணுகின்ற இணுவைக் கந்தா
மனம் முழுக்க உன் நினைப்பில் தவிக்கிறேன் நான்
காட்சிகள் ஒவ்வொன்றும் கணனித் திரை முன்னே
சாட்சியாய் விரிகையிலே மனசெல்லாம் ஒரு தவிப்பு
மஞ்சமதில் ஏறிவரும் மால் மருகா
நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்கும் பேரழகா
என்ன தவறு நான் இழைத்தேன்;
எழிலோடு உருவான உன் கோவில் படி ஏறி
கும்ப நீரில் நீ குளிக்கும் கோலம்
கண்ணாரக் காணுகின்ற பேறிழந்து
கண்ணீர் மல்கி நிற்கின்றேன் நாம்.
தொலை தூரம் வாழ்வதனால்
தொலைந்ததுவே எல்லாம்
கடல் கடந்து வாழ்ந்தாலும்
கந்தா உனை மறவேன் - உங்கு
வந்து விடும் வரம் எனக்களித்தால்
வாசல் தேடி வந்து கும்ப விழா கண்டிடுவேன்.

April 8, 2014

அவள் வருவாளா?

அவள் வருவாளா?


அண்மைய நாட்களாய்
அவள் வருவாள் வருவாள் என
ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன்
அவள் நிச்சயம் வருவாள் என
அதி நம்பிக்கை கொண்டிருந்தேன்
நீண்ட நாட்களின் பின்னரான அவளின் மீள் வரவு - எனை
நிச்சயம் மகிழ்விக்கும் என நம்பினேன்

காலை எழுந்து கண் விழித்த போது
அவளின் வரவு உறுதியாய் இருந்தது
மதியம் வரையும் அவள் வரவு
மறு பரிசீலனைக்கு வாய்பின்றி
மாற்றம் ஏதுமின்றி உறுதியாய்தான் இருந்தது

இடையே என்ன நடந்ததோ தெரியலை
இடையூறாய் அவள் அண்ணன்தான் வந்து நின்றான்.

நிச்சயம் இன்னொரு நாள் அவள் வருவாள்.....


#ஈழத்துப்பித்தன்

March 20, 2014

வசந்தம் வந்தது




வண்ணக் கதிரவன் ஒளியொடு
வான் உயர்ந்த மரமெல்லாம்
வான் மறைந்துத் துளிர்த்து நிற்ப
வசந்தம் வந்தது
வண்ணக் கதிரவன் ஒளியொடு

பூ மகள் மேனிதனை
பூக்கள் மறைத்து நிற்க
பாரே அழகில் மிதக்குது
பகலவன் சிந்தும் புன்னகையில்

இத்தனையும் பார்க்கையிலே
மனசெல்லாம் ஒரு தவிப்பு - எம்
தாய்மண்ணின் பிறந்ததற்காய்
தம் வசந்தம் தொலைத்து வாழும் - எம்
தொப்புள் கொடி உறவுகள் வாழ்வில்
தொலைந்த வசந்தம் வீசும் நாள் எந்நாளோ???
.

March 18, 2014

தடம் மாறிப் போகோம்.

தடம் மாறிப் போகோம்.


தமிழனாய் பிறந்ததால் - நாம்
தடம் மாறிப் போகோம்
நல் தலைவனை
நம் வழிகாட்டியாய் கொண்டதால்
நாம் என்றும் வழி மாறி
நகரோம்
நாட்டினை பிரிந்து வாழ்ந்தாலும்
நாட்டிய ஆணிவேர்
இன்னும் உக்காமல்
ஆழமாய் அங்குதான்
அகல வேர் பரப்பி நிற்கின்றது.
ஆதலால்
நரை வீழ்ந்து
நடை தளர்ந்து போனாலும்- நாம்
தடம் மாறிப் போகோம்.

18.03.2014
‪#‎ஈழத்துப்பித்தன்‬