90களின் முற்பகுதியில் எழுத்து தமிழ் ஊடகங்களின் வளர்ச்சி ஐரோப்பாவில் கோலோச்சிய காலம். செய்திகளை அறிந்து கொள்வதற்கான ஒரே வழியாக எழுத்து ஊடகங்களும் அந்தந்த நாடுகளில் இயங்கிய புலிகளின் கிளைகளினால் இயக்கப்பட்டு வந்த தொலைபேசி வாயிலான செய்திச் சேவையுமே இருந்து வந்தன.
அத்தகைய காலத்தில் பல வார, மாத சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் வெளிவந்த போதிலும் பரிசிலிருந்து வெளிவந்த 'ஈழநாடு' 'ஈழமுரசு' ஆகிய பத்திரிகைகள் அதிகளவு வாசகர்களைக் கொண்ட செய்தித்தாள்களாக இருந்து வந்தன.
ஒவ்வொரு பதன் கிழமையும் இவ்விரு செய்தித்தாள்களும் அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும். பெரும்பாலும் மாலைக்குள் செய்தித்தாள் விற்றுத் தீர்ந்து விடும். நேரம் தவறிப்போனால் செய்தித்தாள் கிடைக்காது ஏமாற்றத்தோடு திரும்ப வேண்டியதுதான்.
அப்படி வெளிவரும் இவ் இரு சஞ்சிகைகளிலும் வெளிவரும் பலதரப்பட்ட சிறப்பு ஆக்கங்களாலும் கவரப்பட்டு நானும் நிரந்தர வாசகனாக இருந்தேன். குறிப்பாக ஈழநாட்டில் வரும் ஊர்க்குருவியும் ஈழமுரசில் வரும் ஆருக்குச் சொல்லி அழவும் அதிகம்பேரை கவர்ந்த ஆக்கங்களாகும். இதில் ஊர்க்குருவியை எழுதியவர் இன்று எனது நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கும் Kailase Kanagaratnam என்பதை அண்மையில்தான் அறிந்தேன். அதே போல் ஆருக்கு சொல்லி அழ பகுதியை ஈழமுரசின் ஆசிரியர் மறைந்த கஜன் அவர்கள் எழுதுவார். ஐரோப்பாவின் அவலங்களை ஈழத்து மொழி வழக்கிலே ஆசைத்தம்பி எனும் பெயரில் எழுதி வந்தார். இதை முதலே வாசித்துவிட வேண்டுமென்பதற்காக செவ்வாய் இரவு பாசல் வரும் தொடருந்தில் வரும் ஈழமுரசை பெற்றுக்கொள்ள பாசல் தொடருந்து நிலையத்துக்கே சென்று விடுவேன். இந்த ஆசைதம்பி பாத்திரமே பின்னை நாளின் எனது விடுப்புச் சுப்பர் பாத்திரத்திரப் படைப்புக்கும் உந்துகோலாய் அமைந்தது.
கஜனின் மறைவுக்குப் பின் ஆசைத்தம்பியால் எழுதப்பட்ட ஆருக்கு சொல்லி அழ நூல் உருப்பெற்று வந்திருந்தது. அதன் மீள்வாசிப்போடு இன்றைய பொழுது.