Pages

September 11, 2017

போர்க்கால நினைவுகள்

ஆண்டு ஐந்து தமிழ்ப்புத்தகத்தில்

"அம்மா நான் விளையாடப் போறேன்
அன்புடன் பட்சணம் தந்தனுப்பென்னை
சும்மா நான் உக்கார மாட்டேன்
நல்ல தோழர் அழைக்கின்றார்
நாழிகை ஆச்சு

பூப்பறித்தாடலாம் பூரதம் கட்டலாம்.....

இப்படித் தொடங்கும் பாடலொன்று பாடமாக இருந்தது. இதன் முழுமைவடிவத்தை கூகிள் ஆண்டவரிடம் நேர்த்தி வைச்சு தேடினேன் கிடைக்கவில்லை நினைவில் இருந்ததை எழுதியுள்ளேன் மிகு நினைவுள்ளவர்கள் தொடர்ந்து எழுதவும்.

அந்தகால கட்டம் போர் எம்மை தின்றுகொண்டிருந்த காலம். அதனால் விளையாட்டுகள் எம் அன்றாடச் செயற்பாடுகள் சிந்தனை அத்தனையிலும் போரும் அதன் தாக்கமும் பரவிக்கிடந்தது.

கள்ளன் பொலிஸ் விளையாட்டு ஆமி புலி என்றானது. கிறிக்கட் பற் வெட்ட பயன்படுத்திய தென்னம்மட்டைகளிள் AK 47 உருவானது. பப்பாக்குழனின் உதவியோடு மிசின் கண் உருவானது. எங்கள் ஊரின் புகையிலை குடில்கள் பாதுகாப்பு அரண்களாகவும் புகையிலை கிடங்குகள் பதுங்குகுழிகளாகவும் ஆகின. கோட்டையை பிடித்தல். பலாலியை பிடித்தல் என விளையாட்டின் எல்லைகள் நிர்ணயிக்கப்படும். கொப்பேகடுவாவும் கிட்டுவும் விளையாட்டு வீரர்களின் பெயராகும். விளையாட்டுக்கூட போர்க்கால சிந்தனையை கொண்டிருந்த காலம்.

பாடல்கள் கூட மாற்றியமைக்கப்பட்டு போர்க்கால எண்ணங்களோடு பாடப்பட்ட காலம். அந்தக்காலப் பகுதிகளில் மேற் கூறிய பாடலும் எம்மால் காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்படது.

"அம்மா நான் போராடப் போறன்
கையில் ஆம்சொடு கிறினெட்டும் தந்தனுப்பென்னை
சும்மா நான் உக்காரமாட்டேன்
நாலு ஆமியை சுடுகின்ற நேரம் இதுவெல்லோ...."

#போர்க்கால_நினைவுகள்

September 4, 2017

சாதீ

அழிக்கப்பட வேண்டிய விடயம்
ஆவணப்படுத்தப்படுகின்றது
ஒழிக்கப்பட வேண்டிய விடயம்
ஊதி பெருசாக்கப்படுகின்றது
தேவை இதுதான் என்று திடமாய்
தீர்மானமாய் திணிக்கப்படுகின்றது
கண்களின் முன்னே திரையிடப்பட்டு
காட்சிகள் நகர்த்தப்படுகிறன
திரைக்கு பின்னே என்ன
தெரிந்தும் தெரிய விரும்பாதவராய்
முதுகுப் புண்ணை சொறிந்து
சொறிந்து சிற்றின்பம் காண்கிறோம்
அரிப்பு அகலப்படும்
அது அடுத்த சந்ததியையும்
காவுகொள்ளும்
அறியாத மூடர்களா நாம்
எவனோ ஆட்டுவிக்கின்றான்
ஆடிக்கொண்டிருக்கின்றோம்
முடிவு எதுவென்று
முழுதாய் தெரிந்த பின்னும்
அற்ப சுகங்களுக்காய்
புசத்திக் கொள்கின்றோம்
தெளிவு பெறாத வரை
தீர்வு இல்லை.

May 10, 2017

சிந்தையிலை வந்து போகுது


பண்ணை கடல் வெளி
வண்ண விளக்குகளால்
மின்னி மினுங்குதாம்
அள்ளி வந்து அதை
திரைகளில் நிரப்பி
துள்ளி மகிழுது
எம் தமிழ் தும்பிகள்
பட்டி தொட்டி எங்கும்
படோபாகார அலங்காரங்களாம்
பகிடியும் பம்பலுமாய்
பொழுதுகள் கழிவதாய்
புழுகித் தள்ளுகிறான்
பள்ளித் தோழன் ஒருவன்
அவித்த கிழங்கும்
அரைச்ச சம்பலும்
ஆமி தந்தவன்
அமிர்தமாய் இனித்ததாம்
சொல்லிப் போகிறான்
பிள்ளை பருவத்தோழன்
ஆமத்துறுக்கள் கைகளில்
கட்டிடும் நூல் பெரும்
பாதுகாப்பு கவசமாம்
வைரவர் கோயில் பூசாரியின் மகன்
வியந்து சொல்கிறான்
வெள்ளிக் கிழமை தோறும்
சிங்களப் பெட்டையள்
சுற்றுலா வந்து
சுழட்டியடித்து போகிறாளவையாம்
ஆரியகுள சந்தி
அல்லோல கல்லோல பட்டு போகுதாம்
பாவி எனக்கு மட்டும்
கொள்ளி வைக்க ஆள் இன்றி
கொன்று குவித்து
சீன அமிலம் தின்று தீர்த்தும்
சிவந்து கிடக்கும் மண் ஏனோ
சிந்தையிலை வந்து போகுது...

#ஈழத்துப்பித்தன்
10.05.2017

March 7, 2017

சுவிசில் பூமிஅதிர்வு


நேற்று (06.03.2017) இரவு 21 மணி 12 நிமிடமளவில் சுவிற்சர்லாந்தின் கிளாறோஸ் பகுதியில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சி தென் சுவிற்சர்லாந்து மற்றும் கிழக்கு, வடக்கு சுவிற்சர்லாந்துப் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இது றிக்றர் அளவுகோலில் 4.6 அளவில் பதிவாகியுள்ளது. எவ்வித உயிர் சேதமும் ஏற்படாதபோதிலும் பல பகுதிகளிலும் சிறு அளவிலான பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள சுவிசின் பிரபல சஞ்சிகையான பிளிக் அடுத்த பெரும் அதிர்வு எப்போ என கேள்வியை எழுப்பியுள்ளது.

சுவிற்சர்லாந்தின் ஏதோ ஒரு பகுதியில் ஆண்டுதோறும் நில அதிர்வு இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதுவரை சுவிற்சர்லாந்தில் ஏற்பட்ட நில அதிர்வுகளில் 1356ம் ஆண்டு ஒக்டோபர் 18 ந் திகதி ஏற்பட்ட அதிர்ச்சியே அதிக அழிவுகளை ஏற்படுத்திய அழிவாகும்.

இவ் அதிர்வு பாசல் மாநிலத்தின் றைனாக் பகுதியில் 7 றிக்டர் அளவில் ஏற்பட்டு பல பகுதிகளை பேரழிவுக்கு உள்ளாக்கியதோடு 2000 பேர் வரையில் இறந்ததாகவும் பதிவுகள் உள்ளன. றைனாக் பகுதியில் இறந்தவர்களின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள சிலுவை இன்னமும் உள்ளது.

பாசல் நகரின் மையத்திலுள்ள முன்ஸ்ரர் தேவாலயமும் பேரழிவுக்கு உள்ளானதாகவும் எட்டு நாட்கள் வரையில் நகரின் பல பகுதிகள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டேயிருந்ததாகவும் பதிவுகள் உள்ளன.

மீண்டும் ஒரு பேரழிவை சுவிற்சர்லாந்து எதிர்கொள்ளலாம் என நிலவியல் நிபுணர்களின் ஆய்வுகள் சொல்கின்றன.

படம் 1

சுவிற்சர்லாந்தில் பூமிஅதிர்ச்சி நடைபெற வாய்ப்புள்ள பிராந்தியங்கள்.

படம் 2

06.03.2017 இரவு பூமிஅதிர்ச்சி ஏற்பட்ட பகுதி.

படம் 3

1356 இல் ஏற்பட்ட பூமி அதிர்ச்சி பற்றி சொல்லும் ஓவியம்.

படம் 4

1356 இல் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியில் கொல்லப்பட்டோருக்காக றைனாக் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிலுவை.

படம் 1 இல் வட பகுதியில் நான் வாழும் பாசல் மாநிலம் எச்சரிக்கைக்கு உரியபகுதியாகும்.

#ஈழத்துப்பித்தன்

February 26, 2017

எங்கள் தேசக்குயில்



இந்திய இராணுவ வெளியேற்றத்துக்கு பிறகு எங்கள் ஊர்கள் மீண்டும் புதுப்பொலிவுபெற்று கொண்டாட்டமும் கும்மாளமுமாய் ஆனது.  பின்னேரம் அஞ்சு மணிக்கு முன்னமே முடிங்கிக் கிடந்த எங்கள் ஊர்களின் கோவில்களில் இரவுத் திருவிழாக்கள் களை கட்டத் தொடங்கின.

சிவகாமி அம்மனின் சின்னத்தம்பிப்புலவர் அரங்கும் காரைக்கால் சிவனின் முன் வீதியும் இரவுத் திருவிழாக்களில் களை கட்டும். அருணா கோஷ்டி வருகுதெண்டா எல்லார் மனங்களும் புழுகத்தில் துள்ளும்  எஸ்பிபி மனோ இவையையெல்லாம் நாங்கள் அறியமுன்னமே நாங்கள் அறிஞ்ச பாடகன் சாந்தன்.  அந்தப்பாடல் எனக்கு சரியா நினைவில்லை ஆனா அந்தப்பாட்டை சாந்தனும் சுகுமாரும் சேர்ந்து பாடியிருந்தவை எண்டது மட்டும் நல்ல நினைவு. சிவகாமி அம்மன் கோயில் சின்னத்தம்பி புலவர் அரங்கின் வலப்பக்கமா இருக்கும் நிழல்மரவள்ளிப் பக்கமா சாந்தன் கையை காட்டிபாடி முடிக்க சுகுமார் பாடுவார் இப்பிடித்தான் அந்தக்காட்சி அந்த வயசிலை என்ரை மனசிலை பதிஞ்சது. தன் கணீர் காந்தக் குரலால் எங்கள் இதயங்களிலெல்லாம் குடியேறுகின்றான்.

இந்தமண் பாடலை சாந்தன் பாடமுன் புலிகளால் தமிழகக்கலைஞர்கள் மூலம் வெளியிடப்பட்ட பாடல்தொகுப்புகளில் வெளிவந்த பாடல்களில் தீயினில் எரியாத தீபங்களே போன்ற பாடல்களை அரங்கிலே  பாட அம்மனின் வீதிகள் அழுதுறையும்.

அதன் பின்னைய காலங்களில் இந்த மண் எங்களின் சொந்தமண், எதிரிகளின் பாசறையை தேடிப் போகிறோம் போன்ற பாடல்கள் எங்கள் தேசியகீதமாய் வாய்களில் முணுமுணுக்கத் தொடங்கின.

1991 தாயகத்தை பிரிந்து சுவிஸ் வந்த பின்னும் அந்தப் பாடல்கள் என் தாயகத்துக்கும் எனக்குமான பாலமாய் மனவெளியெல்லாம் வியாபித்தேயிருந்தது. இங்கு வந்தபோது அந்தப்பாடல்களை கேட்கவேண்ட்மென மனம் ஏங்கினாலும் அது எனக்கு கிடைக்கவில்லை. அப்போ எங்கள் மாநிலத்தின் இயக்கப் பொறுப்பாளரா இருந்த தினேஷ் அண்ணாட்டை என்ரை விருப்பத்தை சொல்ல அவர் அந்த இசைப் பேழைகளை கொண்டு வந்துதந்தார். உண்மையில் என்ரை வாழ்கையில் அதியுச்ச மகிழ்ச்சியில் திழைத்த நாட்களில் அந்த ஒன்று. தொடரும் நாட்களின் இரவு பகல் பள்ளியின் இடைவேளை நேரங்களில் எல்லாம் பாடகர் சாந்தன் என்னோட உறவாடத்தொடங்கினார். பல்லாண்டு காலம் திரையிசைப்பாடல்களை காட்டிலும் தாயகப்பாடலுக்கும் எனக்குமான நெருக்கம் அதிகமாக இருந்தது.

ஆனையிறவு கைப்பற்றப்பட்டபோது வந்த இசைப்பேழையில் இடம்பெற்றபாடல்களில் சாந்தனின் குரலில் வந்த பாடல்கள் மனதில் நீங்க இடத்தைப் பிடித்து எங்கள் திருமண ஒளிப்பதிவுப் பிரதிகளிலும் இடம்பிடித்தன.

2003 சமாதானகாலத்தில் சுவிற்சர்லாந்துக்கு தமிழீழ இசைக்குழு வந்தபோது மிக மகிழ்வாயிருந்தது. முதன்நாள் நிகழ்வுகள் சுவிசின் பிறிபேர்க் நகரில் நடைபெற்றது எனக்கு நுழைவாயில் பகுதியில் பணி தரப்பட்டதால் இசை நிகழ்வை அனுபவித்து ரசிக்க முடியாது போனது. பின் நடந்த இரு நிகழ்வில் நான் எவ்வித பணியையும் ஏற்காது முழுமையான நிகழ்வையும் பார்த்து லயிக்க முடிந்தது. நேர்காணலும் செய்ய முடிந்தது.

அதன் பின்னையகாலம் பாலா அண்ணா மற்றும் தமிழ்ச்செல்வன் அண்ணாவுக்கான இரங்கல் பாடல்கள் எங்கள் விழிகளையும் மனங்களையும் கசிய வைத்தது.

2009 இறுதி யுத்தம். 2010 பிற்பகுதியில் ஒருநாள் சாந்தன் குடும்பத்துடன் விடுதலையானார் என்ற செய்தி வந்தது. இரு பிள்ளைகளை மாவீரராய் கொடுத்து பலநூறு பாடல்களை பாடி விடுதலைக்கு நீர்பாய்ச்சிய ஒரு கலைஞன் பலராலும் துரோகியாய் பார்க்கப்பட்டான். அதன் பின் வெற்றிலைக்காய் பாடியபோது இன்னும் விமர்சனத்துக்கு உள்ளானான். அவனின் அன்றைய சூழல் அவனிடத்தில் யார் இருந்தாலும் அதுதான் நிலை. மீண்டும் ஒரு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் பாடலூடாய் சாந்தனின் கணீர் குரல் மனதை நிறைத்தது. தொடர்ந்து பல ஆலயங்களின் இசைத்தொகுப்புக்களிலும் சாந்தனின் குரலில் பாடல்கள் வரத்தொடங்கின எங்கள் ஊர் சிவகாமி மீதிலும் சில பாடல்களை பாடினார். விரைவில் எனது வரியில் வரவுள்ள இசைப்பேழையில் ஒரு பாடலை சாந்தன் அண்ணா மூலம் பாடவைக்க விரும்பியபோது இசையமைப்பாளர் உமா சதீஸ் சாந்தன் அவர்களோடு கதைத்தபோது அவரும் உடன்பட்டிருந்தார் முன்பைப்போல வீரியமாக பாடமுடியாது மெல்லிசையாக வடிவமைக்குமாறும் கேட்டிருந்தார். அதற்கான ஏற்பாட்டை செய்தபோதுதான் கடந்தமாதமளவில் அறிந்துகொண்டோம் இனி அவரால் தற்போதைக்கு பாடமுடியாதென அது எனது துர்திஸ்டமே. ஆனால் இவ்வளவு விரைவாக இனி எப்போதும் பாடமுடியாத நிலையை அடைவார் என எவரும் எதிர்பார்காகவில்லை.

அவரது பேரிழப்பின் வலி சுமந்து நிற்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் அன்னாரின் பிரிவுத்துயரிலிருந்து மீண்டெழும் வரத்தை காலமும் இயற்கையும் தந்தருளட்டும்.

February 8, 2017

பாதைகள் மாறாது

பாதைகள் வளைந்தாலும்
இலக்கில் மாற்றமில்லை
தேவைகள் ஆயிரம்
திடம் தனை குலைத்தாலும்
ஆவி அடங்கும் வரை
அவள் நினைப்பே

தீயிட்டு எரித்து
சிறு சாம்பல் துகளாய்
சிதறிப் பறக்கையிலும்
சீமாட்டி உன் நினைப்பே
சிந்தை எங்கும்
சீராக நிறைந்திருக்கும்

பக்கம் வந்து
பாசத்தோடு ஆசை தீர
அள்ளி முத்தமிட்டு
அழுது தீர்த்துவிட
பத்திரம் இல்லாததால்
பரி தவித்து நிற்கின்றேன் நான்.

#ஈழத்துப்பித்தன்
08.02.2017

படம்: யாழ் - கொழும்பு பயணத்தடம், டிசம்பர் 2015

கானா பிரபா அண்ணா யாழ் பயணத்தடத்தின் படம் போட்டு கடுப்பேத்தியதன் விளைவு. Kana Praba :)

February 7, 2017

வரலாற்றில் இன்றையநாள்
**********************



நாகரீக உச்சம் தொட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் பட்டியலிலும் உலகில் தனிமனித சுதந்திரம் மதிக்கப்படும் நாடுகள் பட்டியலிலும் நடுநிலைகொள்கைபேண் நாடுகள் பட்டியலிலும் முதன்மைத் தெரிவாய் உள்ள நாடு சுவிற்சர்லாந்து.

ஐரோப்பிய வரலாற்றில் பெண்களுக்கான வாக்குரிமையை இறுதியாக வழங்கிய நாடுகள் வரிசையில் போர்த்துகல் மற்றும் சுவிற்சர்லாந்து பதிவாகியுள்ளன.

 பெண்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களும் விடாமுயற்சியும் இன்று 46 ஆண்டுகளுக்கு முன் இதேநாளாளில் (07.02.1971) பெண்களுக்கான வாக்குரிமை பெற்றுக்கொடுத்த நாள்.

சுவிற்சர்லாந்து பெண்களுக்கான வாக்குரிமையை அளிப்பதற்கு பதினொரு ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் முதலாவது பெண்பிரதமரை ஆட்சிக்கட்டில் இருத்தி அழகுபார்த்த தேசம் இலங்கைத்தீவு என்பது குறிப்பிடத்தக்கது.