Pages

April 26, 2020

யாழ்ப்பாண வேலி

என்னவோ சொல்ல வெளிக்கிட்டு கடைசியா
*******************************************
#என்ரகத


இந்த வேலிகளை பார்க்கையில் பலருக்கும் பல நினைப்புகள் வந்து போகும்.

இந்த வேலிகளுக்கு நிறைய வரலாறுகள் உண்டு. நிறைய விடயங்களுக்கு இந்த வேலிகளே தூதாகவும் ஏன் சாட்சியாகவும் கூட இருந்துள்ளது. சில விடயங்களுக்கு இந்த வேலிகளே குறியீடாகவும் இருக்கின்றன. எல்லாத்துக்கும் மேலாக இந்த வேலிகளால் சண்டைகள் ஏற்படாத வீடுகளே இல்லை எனலாம்.

வேலி உயர்த்திக் கட்டிய வீடுகளில் குமர்கள் உண்டு என்பதும் சீற் உயர்த்தி சைக்கிள் பெடியள் அடிக்கடி வந்து போனால் மறுநாளே ஒரு அடுக்கு கிடுகு உயர்வதும் யாழ்ப்பாண வேலிகளுக்குள்ள முக்கிய அடையாளமாகும்.

இந்த வேலிகளில் பலவிதமான வேலிகள் உண்டு. கிடுகு வேலி, மட்டை வேலி, ஓலை வேலி, தகரவேலி,கம்பி வேலி, அலம்பில் வேலி, தூண் நிறுத்திய முள்க்கம்பி வேலி போன்றவை இதில் முக்கியமானவையாகும்.

இதில் கிடுகு வேலிகள் பின்னப்பட்ட தென்னோலைகளால் அடைக்கப்படும். ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி குத்தூசியால் கயிறு கொண்டு கட்டி இவ்வேலி அமைக்கப்படும். இது கொஞ்சம் செலவு குறைவு பாவனை காலமும் குறைவு. அடுத்து ஓலை வேலிகள், இந்த ஓலை வேலிகள் மிதித்து நேராக்கப்பட்ட்ட பனையோலைகளை குறுக்காக சரிவாக வைத்து அடைக்கும் முறை, இதன் ஆயுள்காலம் கிடுகு வேலியின் ஆயுட்காலத்தைவிட அதிகமானாலும் யாழ்ப்பாணத்தார் அதிகம் விரும்புவது என்னவோ கிடுகு வேலிகளைத்தான். அடுத்து மட்டை வேலிகள் இவை மூரி வேலிகள் என்றும் சொல்லப்படுவதுண்டு. இந்த மூரி வேலிகள் பனையோலை நீக்கப்பட்ட மட்டைகளை ஒன்றோடு ஒன்று அடுத்தடுத்து அடுக்கி கம்பியால் வரித்துக்கட்டப்படும். இது நீண்ட கால ஆயுளைக்கொண்டது. செலவு கொஞ்சம் அதிகமானது. அந்தநாட்களில் பெரும்பாலும் வசதி படைத்தவர்களின் வேலிகளே மட்டைவேலியாக வரியப்படும். இந்த மட்டை வேலிகளின் மீது சில அடுக்கு கிடுகுகளால் வரிந்துவிட்டால் கொள்ளை அழகாக இருக்கும். இந்த மட்டை வேலிகளின் கீழ்ப்பகுதியை கறையான் அரிக்காதவாறு கழிவு எண்ணையால் வர்ணம்போல் தீட்டிவிடுவோரும் உண்டு.

இந்த வேலிகளில் யாழ்ப்பாணத்து வேலிகள் எப்போதுமே தனி அழகுதான். பிரதேசவாதம் என்று ஆரன் கிழம்பி வந்தாலும் அதுதான் உண்மையும், அதற்கு அந்தக் காணிகளின் அளவுகளே முக்கிய காரணம். யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் காணிகள் இரண்டு முதல் ஆகக்கூடியது ஐந்து பரப்பு வரைதான் இருக்கும். அப்படியான அளவைக்கொண்ட காணிகளை அச்சறுக்கையான அழகான வேலிகளை அமைத்து பராமரிப்பது சுலபம்.

இந்த வேலி அடைப்புக்கும் சில விதிமுறைகள் உண்டு. இரண்டு காணிகளுக்கு நடுவேயுள்ள வேலியை அடைக்கும்போது அரைவாசி வேலியை ஒரு காணிக்காரரும் மறுபாதி காணியை ஒரு காணிக்காரருமாக அடைப்பார்கள். அப்படி அடைக்கப்படும் போது அரைவாசி வேலி ஒருகாணியின் உட்புறமாயும் மறுபாதி வேலி வெளிப்புறமாயும் இருக்கும்.

அனேகமான யாழ்ப்பாணத்து வேலிகளை கிளுவங் கதியால்களே அலங்கரித்து இருக்கும். முன்னர் பூவரசு, வாதராணி, முள்முருங்கை, சீமையில் கிளுவை போன்றவை அதிகளவில் இடம்பிடித்திருந்தன. இந்த வாதராணி இலை புளியம் இலை சாயலில் இருக்கும் அந்த இலை மருத்துவ குணம் மிக்கதென்று அம்மா அடிக்கடி அதில் வறை வறுப்பா. பூவரசும் வாதராணியும் விரைவாக மொத்தித்துவிடும், முள்முருங்கை மற்றும் பூவரசில் மயிர்க்கொட்டிகளின் தொல்லை என்பதாலும் காலப்போக்கில் அவை வெகுவாக குறைவடைந்துவிட்டன. இந்த கிளுவை நீண்டகாலத்துக்கு சிம்ரன் போல இருக்கும் என்பதால் பிற்காலத்தில் கிளுவை முற்றுமுழுதாக ஆக்கிரமித்துக் கொண்டது. எல்லைகளை நிர்ணயிக்கும் பகுதிகளில் தொடர்ச்சியாக பூவரசுகளே நிலைத்திருந்தன.

புகையிலை பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் ஊர்களின் வேலிகளில் அதிகளவு பூவரச மரங்கள் இருந்தன. ஐப்பசி கார்த்திகை மாதங்களில் இந்த பூவரசங் கிளைகள் வெட்டப்பட்டு தோட்டக்காணிகளில் குழைகள் பசளைக்காக தாழ்க்கப்படும். பின்னர் புகையிலை நட்டு வளர்ந்து வெட்டிய பின் அந்த குழைகள் உக்க மிஞ்சிக் கிடக்கும் தடிகள் கிழறி எடுக்கப்படும். அப்பம்மா வீட்டடியில் இலைகள் வெட்டிய பின் சாற்றிக் கிடந்த பூவரசந் தடிகளால் அருளானந்தத்தார் இந்திய இராணுவத்தால் நையப்புடைக்கப்பட்டது இன்னமும் கண்களில் நிழலாடுகின்றது.

நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது எங்கள் பகுதிகளில் இந்த வேலி அடைத்தல் காலம் வரும்போது எமக்கெல்லாம் கொண்டாட்டமாயிருக்கும். நாங்களும் பங்காளர்களாக இருப்போம். அனேகமாக கூலிக்கு ஆள்ப்பிடிப்பதெல்லாம் கிடையாது. எங்கள் பகுதியில் பெண்கள் இணைந்துதான் வேலி அடைப்பார்கள். வேலிகளை பார்த்து சரிந்த கதியால்களை நேராக்கி புதிய கதியால் இட வேண்டிய இடங்களுக்கு புதிய கதியாலிட்டு வேலி அடைக்கப்படும். அடைத்த வேலிகளில் சிறு பொட்டு அமைத்து குறுக்குப்பாதைகள் அமைக்கப்படும். எங்கள் பிராந்தியத்தவர்கள் சிவகாமி அம்மன் கோயிலுக்கு விரைவாகப் போவதற்கான பொட்டு எங்கள் வேலியில் அமைந்திருந்தது. நாம் சிறுவர்களாக இருந்தபோது சில அப்புமார் பொட்டுக்குள் குனிந்து போவதை பின்னுக்கு நின்று வாய்பிழந்து பார்த்து சிரிப்பம். பொட்டுக்குள் பூந்த புழுக்கொட்டி துரையப்பரின் வாயிலிருந்து புழுக்கொட்டியதைப்போல் விழுந்த செந்தமிழ் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம்...

சரி விடயத்துக்கு வாறன் என்னவோ சொல்ல வெளிக்கிட்டு கடைசியா இவ்வளவு நீட்டி முழங்கீட்டன். இந்த வேலிகள் சார்ந்து பலருக்கும் பலவிதமான அனுபவங்கள் இருக்கும்.

எனக்கு மட்டைவேலிகளை கண்டா தடியாலை இழுத்துக்கொண்டு ஓடுவதென்றா கொள்ளை விருப்பம். தட தட என்ற அந்த சத்தத்துக்காக திரும்ப திரும்ப என்று பல தரம் இழுப்பேன். பதினொரு வயது வரை ஊரிலை இருந்த உனக்கு வேலிதாண்டின காதல் கதையோ இருக்குமென்று நீங்கள் முனுமுனுப்பது கேக்குது.

பதினொரு வயதில் ஊரை விட்டு சுவிசுக்கு புலம்பெயர்ந்த நான் என் அஞ்ஞாதவாசம் முடித்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின் என் 23 வது வயதில் ஊரில் கால்பதித்தபோது பாதைகள் எல்லாம் ஒடுங்கி வேலிகள் வீதியின் நடுப்பகுதிகள் வரை வந்திருந்தை கண்டபோது அதிசயமாக இருந்தது. பூமி சுற்றுவது உண்மைதான் என்பதை உறுதியாய் நம்ப ஆரம்பித்தேன்.

அப்படி ஊரில் நின்ற ஒரு நாளில் இரவு ஒன்பது மணியிருக்கும் இணுவில் அங்களப்பாயில் உள்ள அத்தை வீட்டிலிருந்து இருந்து எங்கள் வீட்டுப் பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்தேன். தர்மலிங்கத்தாரின் கடைக்கு அருகே இருந்த ஒழுங்கைக்குள் நுழைந்து நடக்க மட்டை வேலியொன்று தென்பட்டது நிலத்தில் ஒரு தடி 80களின் திரைப்படங்களில் வருவதுபோல என் கண்கள் மட்டை வேலியையும் தடியையும் மாறி மாறி பார்த்தது. உருக்கொண்டவன் போல குனிந்து தடியை எடுத்து தட தடவென இழுத்துக்கொண்டு ஓடத்தொடங்கினேன். அந்த வீட்டு நாய் வேலியையும் தாண்டி குரைத்துக்கொண்டு கலைக்கத் தொடங்கியபோதுதான் சுயநினைவுக்குத் திரும்பினேன். தண்டவாளக் கரை வரை ஓட்டம் தொடர்ந்தது.

இப்ப ஊருக்கு போனாலும் மட்டை வேலியை கண்டால் கை துருதுருப்பது தவிர்க்க முடியாதது. கடந்த பயணத்தில் மகளுக்கு சின்ன வயசில் நாங்கள் இப்படித்தான் என்று தடிகொண்டு இழுத்துக்காட்டி என் அவாவை தீர்த்துக்கொண்டேன். அனேகமாக பேரப்பிள்ளையோடு போகும் காலத்திலும் இது தொடரும் போல... அதற்கு வேலியும் இருக்க வேண்டுமே...:

#இணுவையூர்_மயூரன்
25.04.2020

மட்டை வேலியில் தட்டி மகிழ்ந்ததும்
தகரப் படலையில் தடிகொண்டு அடித்ததும்
பொட்டுப் பிரித்து மரவள்ளி கிளப்பியதும்
பூவரசந் தடியால் அடிதர அம்மா கலைத்ததும்
பொக்கிசமாய் இன்னும் நினைவில் கிடப்பன...

(ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம் நூலின் கவிதையொன்றிலிருந்து )

வேலி சார்ந்த உங்கள் அனுபவங்களையும் எடுத்து வாருங்கள்.

April 13, 2020

சித்திரை தமிழ்ப் புத்தாண்டு

இன்று மாலை ஐரோப்பிய நேரம் 15.56க்கும் இலங்கை இந்திய நேரம் 19.26க்கும் வீறியெழல் (சார்வரி) ஆண்டு பிறக்கின்றது.

தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்லப்படும் இந்த சித்திரைப்புத்தாண்டானது சித்திரை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகின்றது. பண்டைய காலத்தில் உலகம் முழுவதும் சித்திரை மாதமே புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வந்தமைக்கு பல சான்றுகள்  எச்சங்களாக உள்ளது.

குறிப்பாக 16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பியர் கூட ஏப்ரல் முதலாந் திகதியைதான் புத்தாண்டாகக் கொண்டாடி வந்துள்ளார்கள்.

1562 ம் ஆண்டளவில் அன்றைய போப்பாண்டவர் கிரகரி  பழைய ஆண்டுக்கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகரியன் முறையை நடைமுறைப்படுத்தினார். அதன் படி ஜனவரி 1 புத்தாண்டு நாளாக மாற்றம் பெற்றது.

எனினும் இந்தப் புதிய புத்தாண்டு நாளை ஐரோப்பிய தேயங்களும், அவற்றின் மக்களும் உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் பல காலம் ஆனது. பிரான்ஸ் 1852 ஆம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660 ஆம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700 ஆம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752 ஆம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு நாளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

இந்த புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதலாந்திகதி புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைத்தார்கள். இதலிருந்து ஏப்ரல் முதலாந்திகதி முட்டாள்கள் நாள் என மாற்றம்பெற்றதாக பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

முட்டாள்கள் என்ற பழிப்புக்கு ஆளாகாமல் இருக்க உலக மக்கள் ஜனவரி முதலாந்திகதியை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டார்கள்.

இன்றும் இலங்கை, தமிழ்நாடு, மலேசிய தமிழர்கள், சிங்கப்பூர் தமிழர்கள், மொறீசியஸ் தமிழர்கள். கம்போடியர்கள், தாய்லாந்து நாட்டவர்கள், பர்மா, வியட்நாமியர்கள் சித்திரை முதல்நாளைதான் தமது புத்தாண்டுநாளாக கொண்டாடி வருகின்றார்கள். இந்த நாடுகள் பல்லவ/சோழ அரசுகளின் ஆளுகைக்குள்ளோ ஆட்சிக்குள்ளோ உட்பட்டிருந்த தேயங்களாகும்.

புத்தாண்டு பற்றிய கதைகள் பல இடைச்செருகல்களாக வந்து போனாலும் தமிழர்களும் ஏன் உலகமக்களும் பன்னெடுங்காலமாக சித்திரை/ஏப்ரல் முதல்நாளையே தமது புத்தாண்டாக கொண்டாடி வந்துள்ளார்கள்.

கடிகாரத்தின் இரண்டு முட்களும் இணையும் நள்ளிரவு 12 மணியை நாளின் துவக்கமாகக் கொள்வதுபோல் 5122 ஆண்டுகளுக்கு முன் சூரியனும் பிற கிரகங்களும் நேர்கோட்டில் வந்த காலத்தில் துவங்கியது மேட ராசி வரும் சித்திரை ஆண்டுக்கணக்கு.

சூரியனின் சுழற்சியை (360 பாகை) ஆட்டை வட்டம் என்பார்கள். இந்த வட்டம் எந்த இடத்தில் எந்த மாதத்தில் ஆரம்பிக்கிறது என்பதுதான் இங்கு முக்கியம்.

சூரியனின் சுழற்சியில் முதலில் வருவது மேட ராசி வரும் சித்திரை என்கிறது தமிழ் இலக்கியம்.

இந்த மேட வருடை என்பது ஒரு மலை ஆட்டின் பெயர்.

பரிபாடல் 11-
 ‘வருடையைப் படி மகன் வைப்ப’ என்கிறது.

இதன் பொருள்: வருடை என்னும் மேட ராசியில் சூரியன் நுழைகிறது.

மேட ராசி என்பது சித்திரை மாதத்தில் வரும் ராசி.

இதனை நெடுநல்வாடை வரி 160-161 மேலும் தெளிவாக சொல்கிறது:  

“திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து “

இதன் பொருள். ஆட்டினைத் தலைமையாகக்கொண்டு சூரியன் விண்ணைச்சுற்றி வருகிறான் என்று.

இந்த வருடை ஆடு என்பது மலை ஆடு.

இதையொட்டியே  ஆண்டின் காலம் வருடம் என அழைக்கப்படுகிறது.

தமிழக அரசின் மாநில விலங்கு வருடை ஆடு, அந்த ஆடு இதனைத்தான் குறிக்கின்றது.

பண்டைய நாகரீகங்களையும் வரலாற்று தொன்மங்களையும் காவி வருபவர்கள் தமிழர்களே ஆதலால் தமிழர் புத்தாண்டு சித்திரை ஒன்றுதான்.

கொண்டாட்டங்கள் மனதுக்கு மகிழ்வை தருபவை. இந்த இடர்காலத்தில் கொண்டாடி மகிழ்ந்து மனம் கனக்கும் துன்பங்களுக்கு விடை கொடுப்போம்.

அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு  (நல்வாழ்த்துகள்.  (5122 ம் ஆண்டு)

தொகுப்பு
#இணுவையூர்_மயூரன்