வரும் மார்ச் 27 (பங்குனி 13) அன்று குடமுழுக்காடவுள்ள இணுவை மண்ணின் சக்தி பீடமாக விளங்கும், சீர் இணுவைத் திருவூரின் சிதம்பரவளவுறை அருள்மிகு சிவகாமி அம்மன் திருக்கோவில்.
இந்தக் கோவிலிலும் கோவில் வீதியிலும் தேர்முட்டி படிகளிலும் எங்கள் தடங்கள் பதியாத இடங்கள் இல்லை.
இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு காலத்தில் எமக்கு அடைக்கலம் தந்து காத்த இடம். பல இரவுகள் பாதுகாப்புக்காக ஒட்டு மொத்த கிழக்கு இணுவை மக்களும் இந்த கோவிலின் உட்புறத்திலேயே தங்கி உறங்கினோம்.
இணுவை மக்களின் உணர்வுகளுடன் இரண்டறக் கலந்து "ஆச்சி" என்று அழைக்கப்படும் உறவுமுறைக்கு சொந்தக்காரி.
யாழ்ப்பாண இராட்சியத்தின் 12 பேரூர்களில் ஒன்றாக இணையிலி (இணுவில்) விளங்கிய காலத்தில் மண்ணை ஆண்ட பேராயிரமுடையானால் சிதம்பரத்தில் இருந்து சிவகாமி அம்மையின் சிலை கொண்டு வரப்பட்டு நிறுவப்பட்டது.
சிதம்பரத்துக்கும் இணுவை மண்ணுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நான் சிதம்பரம் சென்றபோது சிதம்பரத்திலுள்ள சைவ சமய பாடசாலையை அமைப்பதற்கு கூரைக்கு தேவையான பனஞ் சிலாகைகளும் தீராந்திகளும் இணுவிலில் இருந்தே சென்றதாக அறிந்தேன்.
பேராயிவன் எடுத்த பெருங்கோவிலை பின் ஆட்சித் தலைவனாக இருந்த காலிங்கராஜன் சிறப்பாய் முன்னெடுத்தான். அவனைத் தொடர்ந்து இணுவை மண்ணை நிர்வகித்த அவனது மகனான இளந்தாரி என அழைக்கப்படும் கைலாயநாதனால் தேரேற்றி உலா வரச் செய்யப்பட்டாள்.
போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தில் எல்லாக் கோவில்களும் போலவே இணுவில் சிவகாமி அம்மன் கோவிலும் இடித்தளிக்கப்பட்டது. சுமார் 150 ஆண்டுகளாக உணர்வுகளூடாக கடத்தப்பட்ட அம்மையின் வழிபாடு பின் வந்த ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் பிற் பகுதியில் உருவ வழிபாடாக மாற்றம் பெற்றது.
ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் தவறான குற்றச்சாட்டொன்றின் பெயரில் இணுவை சின்னத் தம்பி புலவர் சிறையில் அடைக்கப்பட்டபோது சிறையில் இருந்து அம்மனை வழிபட்டு அவள் அருளாலே சிறை மீள, அன்னையின் புகழ் எங்கும் பரந்தது.
சிறை மீன்ட சின்னத்தம்பி புலவர் சிவகாமி மீது "சிறை நீங்கு பதிகம் பாடினார். அதே போல் இணுவை சிவகாமி அம்மை மீது சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ், சிவகாமியம்மை துதி, இணுவைச் சிவகாமசுந்தரி பதிகம் என்பனவற்றையும் பாடியுள்ளார்.
இணுவை சிவகாமி அம்மன் திருக்கோவில் வளாகம் சைவத்தை மட்டும் வளர்க்காமல் இயல்,இசை,நாடகம் எனும் முத்தமிழையும் வளர்த்தெடுக்கும் பணியினையும் ஒல்லாந்தர் காலத்தில் இருந்தே மேற்கொண்டு வருகின்றது.
இங்கு நவராத்திரி, ஆடிப்பூரம், வருடாந்த பெருந் திருவிழா, திருவெம்பாவை ஆகியன மிகச் சிறப்பாக நடைபெறும்.
நவராத்திரியின் ஒன்பதாம் நாள் நடைபெறும் மகிசாசுரன் போரும் பத்தாம் நாளான விஜயதசமியன்று கிழக்கு இணுவிவில் இருந்து மேற்கு இணுவிலில் அமைந்துள்ள கந்தசுவாமி கோவில சென்று கந்தசுவாமி கோவில் வளாகத்தில் நடைபெறும் மானம்பூ வாழை வெட்டு நிகழ்வு மிகவும் சிறப்பாக இருக்கும். கிழக்கு, மேற்கு என இணுவை மக்கள் பிரிந்து போகாமல் இருப்பதற்காக பரந்த நோக்கோடு எம் மூதையர்களால் அன்றே விழாக்கள் இவ்வாறு திட்டமிடப்பட்டன.
ஆடிப்பூரத் திருவிழா காணக் கண் கோடி வேண்டும். பூந் தண்டிகையில் அம்மாளாச்சி உலா வர கோவில் வீதி முழுதும் கற்பூரச் சட்டியின் ஒளியில் மிளிர்ந்து நிற்கும்.
வருடாந்தத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பங்குனி உத்திர நாளில் தீர்த்த திருவிழாவுடன் நிறைவுபெறும்.
திருவெம்பாவை வேளை சிதம்பரேசனுக்கும் சிவகாம சுந்தரிக்கும் திருவிழா நடைபெற்று அதிகாலையில் தேர்த் திருவிழா நடைபெற்று திருவாதிரையில் தீர்த்த திருவிழாவுடன் நிறைவுபெறும்.
ஆறு ஆண்டுகளாக காத்திருந்த பெருவிழாவான அம்மனின் குடமுழுக்கு விழா நடைபெற அருள் கூடியுள்ளது.
அவள்
கட்டும் சேலை அழகினிலே
கட்டுண்டு நின்றிருப்பேன்
பட்டுப் போன்ற அவள் வதனம்
பார்த்து (தினம்) பசி மறப்பேன்
#இணுவையூரான்
#ஈழத்துப்பித்தன்