வணக்கம் பிள்ளையள் என்ன மாதிரி எல்லாரும் சுகமா இருக்கிறியளே?
சுகமாத்தான் இருப்பியள் எண்டு நினைக்கிறன். எனக்கு பாருங்கோ பிள்ளையள் இந்தக் குளிர் ஒத்துவருகுதில்லை. அதாலை ஒரே உடம்பு நோவும் தடிமனும் காச்சலும். சரி ஒருக்கா மருந்தெடுத்துக் கொண்டு வருவம் எண்டு வந்தன். ஆஸ்பத்திரியாலை வெளியிலை வந்தால் எங்கடை பெடியள் நாலைஞ்சுபேர் உதிலை நிண்டாங்கள்; என்னைக் கண்டோன்ணை ஓடியந்து ஐயா நாங்கள் ஒரு ரேடியோ நடத்திறம் நீங்களும் வந்து அதிலை உங்கடை கருத்துகளை சொல்ல வேணும் எண்டு நிண்டாங்கள். சரி எங்கடை பொடியள்தானே அவங்கள் செய்யிற நல்ல விசியங்களுக்கு ஆதரவு குடுக்கிறது தானே எங்கடை கடமை எண்டு நினைச்சுப்போட்டு எட தம்பியவை என்னெடா நான் செய்ய வேணும் எண்டு கேட்டன். சரி ஐயா பொங்கல் வந்தது அதைப் பற்றி ஏதன் சொல்லுங்கோவன் எண்டாங்கள். எனக்கும் பிள்ளையள் மைக்கிலை கதைக்கிறதெண்டா வலு புழுகம் பாருங்கோ. கிடைச்ச மைக்கை ஏன் விடுவான் எண்டுபோட்டு இப்ப உங்களோடை கதைக்க வெளிக்கிடுறன். விடுப்புச் சுப்பர் கதைச்சா அது சில நேரம் விவகாரமாகிப் போயிடும்.
அதைவிட்டுட்டு பிள்ளையள் விசியத்துக்கு வருவம். எல்லாருக்கும் முதலிலை என்ரை பொங்கல் வாழ்த்துக்கள். என்ன மாதிரி பிள்ளையள் பொங்கல் எல்லாம் எப்பிடிப் போச்சுது. நல்லாத்தான் கொண்டாடி இருப்பியள் எண்டு நினைக்கிறன்.
பொங்கல் எண்டோன்ணைதான் எனக்கு ஒரு விசியம் ஞாபகத்துக்கு வருகுது. அண்டைக்கு இப்பிடித்தான் பொங்கலண்டு என்ரை பேத்தி வந்து என்னைக் கேட்டாள் ஏன் பொங்கல் கொண்டாடுறது எண்டு நான் சொன்னன் சூரியனுக்கு நன்றி செலுத்துறதுக்குதான் பிள்ளை கொண்டாடுறது எண்டு. பின்னை அவள் கேட்டாள் அப்பிடியெண்டா என்னத்துக்கு தாத்தா எங்கடை அம்மா படத்தட்டிலை இருக்கிற பிள்ளையாருக்கும் லக்சுமிக்கும் முருகனுக்கும் பொங்கிப் படைச்சவா எண்டு. எனக்கு என்ன சொல்லுறதெண்டே தெரியேல்லை பிள்ளையள் உங்களிலை ஆருக்கன் பதில் தெரிஞ்சா எழுதியனுப்புங்கோவன்.
இப்பிடித்தான் அண்டைக்கு பொங்கலுக்கு முதல்நாள் என்ரை மோள் சொன்னாள் உதிலை தமிழ்க் கடையிலை போய் பொங்கல் சாமான் எல்லாம் வாங்கியாங்கோ எண்டு அங்கை போனன் பொங்கல் புதிரோ புதினமோ எண்டு ஒரு பொட்டீக்கை ஒரு சட்டி அதுக்கை எல்லாம் பொட்டலம் பொட்டலாமா கொஞ்சம் கொஞ்சமா கட்டி நல்ல சுகமான வேலை பாருங்கோ பொங்கல் சாமான் தேவையெண்டா தேடி மினைக்கெடாமல் அந்தப் பெட்டியிலை ஒண்டை தூக்கியர வேண்டியதுதான்.
ஊரிலை பாருங்கோ பொங்கலெண்டு சொன்னா அது பெரிய கொண்டாட்டம் பாருங்கோ. ஒரு கிழமைக்கு முன்னமே ஊரே அல்லோலை கல்லோலைப் பட்டுப்போகும். பொங்குறத்துக்கு மண்வெட்டி புது அடுப்புச் செய்து பாத்துப் பாத்து தட்டித் தட்டி பாணை வேண்டி. சுன்னாகச் சந்தைக்கோ மருதனாமடச் சந்தைக்கோபோய் நல்ல பிலாப்பழமாப் பாத்தெடுத்து பளையில இருந்து வியாபாரிமார் கொண்டாற தேங்காய் பாத்து தட்டி நல்ல முடி பாத்து வேண்டியந்து மஞ்சள் இஞ்சி இலை தேடி எடுத்து மாவிட்டபுரத்து கொழுந்து வெத்திலை தெரிஞ்செடுத்து வெடி கொழுத்தி பொங்குற திசை பாத்து பொங்கலை கொண்டாடிப்போட்டு இஞ்சை வந்து காஸ் அடுப்பிலையும் கறண்ட் அடுப்பிலையும் நாலு சுவத்துக்குள்ளை கொண்டாடிக் கொண்டு இருக்கிறம்.
ஏதோ பிள்ளையள் இஞ்சினை இப்பிடி இந்தளவுக்கெண்டாலும் பொங்கலைக் கொண்டாடுறது மகிழ்ச்சி பாருங்கோ. இந்த நடமுறையளும் இஞ்சினை இல்லையெண்டா இன்னும் கொஞ்சக்காலத்திலை சூரிய வடிவிலை ஐசிங்கிலை கேக் செய்து கத்தியாலை வெட்டி கரண்டியாலை சாப்பிட்டுத்தான் எங்கடை வருங்காலச் சந்ததி பொங்கல் கொண்டாடுங்கள். சரி பிள்ளையள் அப்ப பிறகென்ன இனி அடிக்கடி சந்திப்பம்தானே அப்ப கனங்க விடுப்புகளை கலந்து பேசுவம். சரி பிள்ளையள் அப்ப நான் வரப்போறன்.
பிள்ளையள் இஞ்சை உரை நடை ஒலிச் சித்திரத்தின்ரை ஒலிவடிவத்தையும் கேக்கலாம்.கேட்டுட்டு உங்கடை கருத்துகளையும் பதிஞ்சு விடுங்கோ.