Pages

January 13, 2011

எனது அன்புக்குரிய ஆசான்

1991ம் ஆண்டு சுவிற்சர்லாந்துக்கு சுழலும் கால ஓட்டத்துக்கு ஏற்ப நானும் அழைத்து வரப்பட்டேன். அப்போ எனக்கு 11 வயது. புலம்பெயர்ந்து இங்கு வந்ததும் எனக்கும் என் தாய்த் தமிழுக்கும் இடையேயான உறவு இனி இல்லை. என் தமிழைப் படிக்கின்ற பேறு எனக்கு இல்லை. அப்படியான ஒரு நிலை. அந்த வேளையில்தான் நான் சுவிற்சர்லாந்தில் குடிபுகுந்து மூன்று மாத காலத்தில்  பாசல் மாநிலத்தில் முதலாவது தமிழ்ப் பாடசாலை ஆரம்பமாகின்றது. முதல் நாள் வகுப்பில் கல்வி கற்க வந்த முப்பது மாணவர்களுடன் நானும் ஒருவனாய் அமர்கின்றேன். 
நீங்கள் ஊரிலை எத்தினையாம் வகுப்பு வரைக்கும் படிச்சனீங்கள் என அன்பான குரல் ஒன்று என்னை வினவுகிறது. ஆண்டு 6 வரைக்கும் படிச்சனான் என்று நான் சொல்ல இனி நீங்கள் என்னட்டைதான் தமிழ் படிக்கப் போறீங்கள் என்று அந்த அன்பான அமைதியான குரல் எனக்கு சொல்லிவிட்டு பாடம் நடத்தத்  தொடங்கியது.

அன்று முதல் அந்த அன்பான குரலுக்குரியவர் என் ஆசானாய் மட்டும் இருந்து தாய்மொழியை மட்டும கற்பிப்பதோடு நின்றுவிடாது என் தனிப்பட்ட வாழ்விலும் நான் சிறந்து விளங்க வேண்டும் என்பதை கருத்திற் கொண்டு என்னை செதுக்குகின்ற சிற்பியாயும் திகழ்ந்தார்.
அன்போடு ஒரு நண்பனைப் போல அருகிருந்து அறிவுயை  கூறிடுவார். பதின்ம வயதில் இளையோர் பாதைமாறிப் போவது இயல்பு அந்த வயதில் என்னை தமிழ் மீது பற்றுக்கொள்ள வைத்து என்னை சிறந்த இளவலாய் என்னையொத்தவர் மத்தியில் சீர்தூக்கி வைத்த ஒரு சிறந்த பண்பாளன். அது மட்டுமன்றி அந்த பாடசாலைக்கு நிர்வாகமொன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்காத காலத்தில் அந்த பள்ளியின் அனைத்து நிர்வாகப் பணிகளையும் தன்னோடு இணைந்து நிர்வகிக்கின்ற பெரும் நிர்வாகப் பணியையும் பதின்ம வயதிலேயே எனக்கு தந்து என்னுள்ளே நிர்வாகத் திறனினையும் வளர்த்தெடுத்தார் அந்த அன்புக்குரியவர். பின்னை நாளில் என்னால் பலவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்குரிய ஆளுமையை என்னுள் வளரத்தெடுத்தவர் அந்த அன்புக்குரியவர்.

தமிழ் மொழியில் எழுத்துப் பிழைகளை நான் விடுவது மிகவும் அரிது. ஒரு நாள் தமிழ் இலக்கணம் படிக்கின்ற வேளையில் திணைகளைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்தோம் அப்போது உயர்திணை என்பதை உயர்தினை என எழுதிவிட்டேன். அதை கவனித்த எனது ஆசான் 100 தடவைகள் உயர்திணை என சரியாக எழுதுமாறு தண்டனை வழங்கி விட்டார். பின்னர் தனிப்பட்டரீதியில் என்னை அழைத்து இனிவரும் காலங்களில் தமிழ்மொழியில் எழுத்துப் பிழை  விடக்கூடாது அதற்காகத்தான் அந்தத் தண்டனையை வழங்கினேன் எனக் கூறினார்.

எங்கள் பாடசாலையால் நடாத்தப்படும் வாணி விழா மிகவும் முக்கியமானது. ஏனெனில் பாசல் மாநிலத்தில் சிறுவர்களின் நிகழ்வுகளை உள்ளடக்கி நடைபெற ஆரம்பி;த்த முதலாவது நிகழ்வு இதுவாகும். வாணி விழா காலம் நெருங்க நெருங்க எங்கள் மனங்கள் விழாக் கோலம் பூணும். ஓவ்வொரு ஆண்டும் எங்களோடு கலந்தாலோசித்த பின்னர்தான் நிகழ்வுகளுக்கான எற்பாடுகளை செய்வார். நிகழ்வுகள் எங்களால் தயாரிக்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாய் இருப்பார். ஒரு முறை எங்கள் பள்ளியில் நாடகம் ஒன்றை நாமே எழுதி நடிக்க வேண்டும் என அவர் விரும்பினார். அந்த நேரத்தில் எங்கள் பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் நாடகம் ஒன்றை எழுதியிருந்தார். நானும் ஒரு நாடகத்தை எழுதியிருந்தேன் தவறுகள் என்ற பெயரில் அந்த நாடகத்தை பார்த்த எனது ஆசான் என்னை அழைத்து பாராட்டி  எனது நாடகத்தையே தெரிவு செய்து தானும் அந்த நாடகத்தில் சில திருத்தங்களைச் செய்து எம்மை நடிக்க வைத்து எம்மை கௌரவப்படுத்தினார். ஒரு பதினாறு வயது இளைஞன்தானே இவனுக்கு நான் ஏன் மதிப்புக் கொடுப்பான் என்று எண்ணாமல் எங்களுக்குள் இருந்த திறமைகளை இனங்கண்டு தட்டிக்கொடுத்து வெளிக்கொணர்வதில் அந்த அன்புக்குரியவர் ஆற்றிய பணிகள் அளவிடமுடியாதவை.
  
அப்படி எனக்கு தமிழ்மொழி மீது பற்றுதலை ஏற்படுத்திய எனது அன்புக்குரிய ஆசான் தனது சுயவிருப்பில் பாடசாலை நிர்வாகத்திலிருந்து வெளியேறிக் கொண்டார்.

பின்னர் அவரைச் சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு குறைந்து போயிற்று. எங்காவது அவரை காண்கின்ற போதினில் தாய்ப்பசுவைக் கண்ட கன்று போல் என் மனம் மகிழந்து .துள்ளும் பதிலுக்கு அவரிடமிருந்து எனக்கு கிடைக்கும் அவரின் நிரந்தர அடையாளமான உதடு விரியாத புன்னகையும் அன்பான பேச்சும். என்றும் அவர் அதிர்ந்து பேசி நான் அறிந்;ததில்லை.
கடந்த பல மாதங்களாக என் அன்புக்கினிய ஆசானை நான்  காணவில்லை. கடந்த சில நாட்களாக ஏதோ இனம்புரியாமல் என் ஆழ் மனம் என் ஆசானை தேடியது. தற்போது நான் பணியாற்றம் வானொலியினால் நடாத்தப்படுகின்ற ஆண்டு விழாவின் வேலைத் திட்டங்களை என் தலையில் சுமந்திருப்பதால் நிகழ்வு முடிவடைந்ததும் என் ஆசானை சந்திக்க வேண்டும் என்ற பேரவாவோடு உறங்கப் போயிருந்தேன.; மறுநாள் காலை என்றும் போல் புலரவில்லை. என்னை துயிலெழுப்பிய தொலைபேசி அழைப்பு எனக்காய் காவி வந்த சேதி என் அன்புக்கினிய என் ஆசான் நல்லதம்பி தயாபரன் தன் 45ம் வயதில் மாரடைப்பால் மாண்ட சேதி. உண்மையில் விக்கித்துப் போனேன்.

மனித வாழ்வில் இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அது நித்தமும் நிகழ்கின்றது. எம்மோடு  நெருங்கிய பழகிய பலரது மரணம் உடன் எமக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும் பின்னர் இயற்கையின் நியதியென்று எம்மை நாமே தேற்றிக் கொள்ளும் மனத் தைரியத்தை எமக்கு வழங்கி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பச் செய்துவிடும்.

ஆனால் சிலரது மரணமோ எம் ஆழ் மனம் வரை நுழைந்து இயற்கையின் நியதியென்பதையும் ஏற்றுக் கொள்ளாது எமக்குள் இனம் புரியாத சோர்வை தாக்கிக் கொள்ள முடியாத வலியை தந்து விடுவதுண்டு.

அப்படி என்னைப் பாதித்த மரணத்தின் கதைதான் இன்றைய பதிவு.

2 comments:

ம.தி.சுதா said...

வாழ்வின் நினைவுகளை திரும்பிப் பார்க்கிறீர்கள் அதுவே பெரியதொரு அசான் அண்ணா... தொடருங்கள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..

mainthan said...

ஒரு ஆசானை நினைவு படுத்தியும் பார்க்கின்றீர்கள், நல்லதொரு ஆசானை இழந்தும் தவிக்கின்றீர்கள் உங்கள் மனநிலையை என்னால் புரியக் கூடியதாகவுள்ளது.
உங்களது திறமையை ஆரம்பத்திலையே இனங் கண்டுகொண்ட உங்களது ஆசானுக்கு நன்றியும், உங்களது இந்தத ஆக்கத்திற்கு பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.