Pages

September 17, 2015

கிணத்தடிப் பிள்ளையார்


இண்டைக்கு பிள்ளையாருக்கு பிறந்தநாளாம். நாங்களும் எங்கடை கிணத்தடிப் பிள்ளையாரைப் பற்றி நாலு வசனம் எழுதுவம்.
எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலை இருந்து பிள்ளையார் எங்கடை பக்கத்து வீட்டுக்காரன்.

எங்கடை வீட்டுக்கு மேற்குப்பக்கத்து காணீக்கை பிள்ளையார் குடியிருக்கிறார். எங்கடை வீட்டைச் சுத்தியிருக்கிற பத்துப் பதினைஞ்சு வீடுகளுக்கான பொதுக்கிணறு அங்கைதான் இருக்கு அந்தக் கிணத்துக்கு காவலா இவர் எப்பவும் அதிலை இருப்பர்.

ஒவ்வருதரும் குளிச்சிட்டு வரேக்கை இவருக்கும் ஒரு வாளி தண்ணி அள்ளி ஊத்திட்டுத்தான் போவினம். அதாலை பிள்ளையாருக்கும் அண்டண்டு குளிக்கிறவையின்ரை தொகையைப் பொறுத்து குளிப்புத்தொகை மாறுபடும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எங்கடை அயலிலை உள்ள ஒவ்வொருத்தரும் குழைசாதம் காச்சி செல்வண்ணை தலமையிலை சிவபுராணம் முதல் பிள்ளையார் பாட்டுகள் எல்லாம்பாடி கூட்டுப்பிராத்தனை முடிச்சு கூடியிருந்து சாப்பிட்டு கலைவம்.

அதைவிட நவராத்திரி, திருவம்பா, பிள்ளையார்கதை, ஆவணி ஓணம், சதுர்த்தி, பொங்கல் அப்பிடி விஷேசநாள் எல்லாத்துக்கும் அந்தந்தகாலத்துக்கான பாடல்களோடை கூட்டுப்பிராத்தனையும் அவல், கடலை, மோதகம், வடையோடை களை கட்டும். சிவராத்திரிக்கு நித்திரை முழிப்பும் சித்திராக் கஞ்சியும் சிறப்பாயிருக்கும் இளையாம்பி ஆச்சி இல்லாட்டி அப்பமாச்சி எண்டு நாங்கள் செல்லமா கூப்பிடுற ஈரோஸ் தலைவர் இரத்தினசபாபதி அவர்களின் தாயாரின் தலமையில் கஞ்சி காச்சி ஊத்தப்படும். அந்தக் கஞ்சிக்காகவே எங்கடை அயலைவிட்டு போய் வேறை இடங்களிலை குடியேறினவையெல்லாம் அண்டைக்கு பிள்ளையாரை தேடிவருவினம். அப்பிடி ஒரு சுவையான கஞ்சி குடிச்சு இருவத்தைஞ்சு வருசமான பிறகும் அந்த வாசமும் ருசியும் இப்பவும் நெஞ்சுக்கை நிக்குது.

அப்பிடி ஒரு சித்திராப்பறுவநாளிலை எங்கடை அயலுக்கை உள்ள பத்துப் பதினொரு வயசுப்பெடியள் நான், சுதா,ரமேஷ் கண்ணா, நந்தன்(இப்ப கனடாவில் பிரபல தாளவாத்திய கலைஞன்) இன்னபிற எங்கடை வயசு மட்டங்கள் எல்லாம் சேந்து முடிவெடுத்தம் ஒரு கலை நிகழ்ச்சி செய்வமெண்டு (அந்த நிகழ்சிபற்றி வேறோர் பதிவில் விரிவா எழுதுறன்) அந்தக் கலைநிகழ்ச்சிதான் எனக்கு களம் தந்த முதல்மேடை.

விசேசநாள்களை விட ஒவ்வொருநாளும் பின்னேரம் அம்மாக்கள் கும்பிட்டுட்டு இருந்து ஊர்க்கதை பேச பிள்ளையள் சேந்திருந்து விளையாடுற இடமாயும் இந்த கிணத்தடிப் பிள்ளையாரே இருந்தார்.

எங்கடை வீட்டைச் சுத்தி பல பிரபல கோயிலுகள் இருந்தாலும் எங்கடை வீடுகளிலை நடக்கிற விசேசங்கள் எல்லாம் இவருக்கு முன்னாலைதான் குடிபூர்தலுக்கு படம் வைச்சு எடுக்கிறது காது குத்தல், சோறு தீத்தல் எல்லாம் இஞ்சைதான் நடக்கும். ஐயர் இல்லாமல் உண்டியல் இல்லாமல் எங்கடை குடும்பத்தில் உள்ள ஒருத்தனோடை உள்ள உறவுபோல எங்களுக்கும் எங்கடை கிணத்தடிப் பிள்ளையாருக்குமான உறவு எண்டைக்கும் நிலைச்சிருக்கும். இண்டைக்கும் நாங்கள் ஊர்போனா வீட்டுக்கை நுழைய முன்னம் பிள்ளையாரை பாத்திட்டு வீட்டுக்கை போறதுதான் வழக்கம்.

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.