Pages

July 25, 2016

மண்ணகத்தில் உள்ள மட்டும் மறந்திடுமோ....



பச்சை பசுமை தனைக் காணுகையில் - என்
தாய்நாட்டு நினைவு வந்து
தாலாட்டிச் செல்லுதம்மா
மாமர நிழலினிலே ஊஞ்சல் கட்டியாடி
மனம் மகிழ்ந்த நாட்களெல்லாம்
மனத்திரையில் வந்து
மதி மயக்கி நிற்குதம்மா
வேப்ப மர நிழலிலே
பாய் விரித்துப் படுத்த நாட்கள்
பசு மரத்து ஆணி போல
பதிந்த நெஞ்சு விம்மி விம்மி அழுகுதம்மா
பள்ளிப் பருவமதில்
பகிடியாய் கடந்த நாட்கள்
பாலர் வகுப்பினிலே
பாட்டி வடை சுட்ட கதை
படித்து பகுத்தறிய மறந்த நாட்கள்
பக்கம் வந்து சீண்டுதம்மா
புளியடிப் பள்ளியிலே
புழுகத்தோடு பயின்ற நாட்கள்
புட்டும் முட்டைப்பொரியலும்
பிரட்டிக் குழைத்து தின்ற நாட்கள்
புரையேறி நெஞ்சமெங்கும்
புத்துணர்வாய் கிடக்குதம்மா
அம்மன் கோவிலிலே
அழகான விழாநாளில்
ஊர் கூடி இழுத்த தேர் இன்று
ஊர் காவல் படை இழுக்க
உள்ளமெல்லாம் உருக்குலைந்து
உணர்வற்று தவிக்குதம்மா
புலம் பெயர்ந்தோர் வாழ்வு
புகழ் மிக்க வாழ்வு என்று
புகழ்ந்து பேசுவோர் பலரும்
புண்பட்டும் கிடக்கும் எம்
உணர்வுகளை அறிவாரோ?

#ஈழத்துப்பித்தன்
2003 - 2016

படம்: சுவிற்சர்லாந்தின் எல்லையில் அமைந்துள்ள பிரெஞ்சு தேசத்துக் கிராமமொன்றில் அதிகாலைப்புலர்வு.

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.