Pages

November 26, 2016

முதன் முதலா காதோரம் கிசு கிசுத்தவள்....
*********************************************

அந்த அதுதான் அந்த இணையத்திலை இப்பிடி தலைப்புக்குடுத்ததும் ஓடிப்போய் பாக்கிற மாதிரி இதையும் பாப்பியள் எண்ட ஒரு நப்பாசையில்....

முன்னொரு காலத்திலை எப்பிடி ரலி சைக்கிள், சொனி ரீவி, மான் மார்க் குடை, குடை மார்க் ஓடு, பனசொனிக் ரேடியோ, பைனியர் செற் எல்லாம் பிரபலமானதா இருந்ததோ அப்பிடித்தான் நொக்கியா போனும் இருந்தது.

1997 ஆம் ஆண்டு ஓரளவுக்கு கைப்பேசியள் புளக்கத்துக்கு வந்திட்டாலும் அது சாதாரண மக்களின்ரை பாவனைக்கு வரேல்லை. நொக்கியா, மொத்ரெல்லா எண்ட இரண்டு நிறுவங்கள்தான் முதலிலை கைபேசிகளை அறிமுகப்படுத்தியிருந்தன. கிட்டத்தட்ட ஒரு மூடி வைச்ச வெத்திலை பெட்டி அளவிலை அந்த கைபேசிகள் இருக்கும். கதைக்கேக்கை ஏரியலை இழுத்து விட்டுத்தான் கதைக்க வேணும்..

முதலிலை வந்த கைபேசிகளுக்கு இப்ப மாதிரி சிம் போடுற நடைமுறையில்லை. தொலைபேசியை வேண்டி சுவிஸ்கொம்மிலை கொண்டே குடுத்தா அவை  அதுக்கு இணைப்பை குடுத்து தருவினம் அந்த இணைப்புக்கு நாத்தல் சீ எண்டு பேர். அதிலை கதைக்கலாம் குறுந்தகவல் அனுப்பிற வசதியோ மணிக்கூடு நாட்காட்டி வசதியளோ இல்லை. ஏன் ஆர் தொடர்புகொள்ளினம் எண்டதுகூட தெரியாது.

பிறகு நாத்தல் டீ எண்ட புது இணைப்பு அறிமுகமாச்சுது அதுக்கு இப்ப உள்ள சிம்காட் போடுற மாதிரியான நடைமுறை அந்த காட் இப்ப உள்ள கடன் அட்டையின்ரை அளவு. அதிலைதான் முதன் முதலா அழைப்பவரின் இலக்கம் திரையில் விழும் நடைமுறை வந்தது. அழைப்பவரின் தொடர்பை எடுத்து அவர் தன்னை அறிமுகப்படுத்த முன்னமே சொல்லுங்கோ அத்தான் எண்டோ சொல்லுங்கோ குமார் அண்ணை எண்டோ சொல்லி இன்ப அதிர்ச்சி குடுக்கிற ஒரு தனிச்சுகம்.  நான் அறிய பாசல் மாநிலத்திலை அஞ்சு தமிழாக்களிட்டைதான் கைபேசி இணைப்பே இருந்தது. கைபேசி வைச்சிருந்தவைங்கு அது ஒருவித கெத்தாவும் இல்லாதவைக்கு வைச்சிருக்கிறவை ஒரு தேசத் துரோகி மாதிரியும் தெரிவினம். நானறிய பாசலிலை வைச்சிருந்தவையில ஒருத்தருக்கு எங்கையன் கொண்டாட்டங்களிலை நிண்டா அடிக்கடி கைபேசி அழைப்பு வரும். எழும்பி ஓடிப்போய் ஆக்கள் கூடுதலா உள்ள இடமாப் பாத்து ஆள் நிண்டு பிலத்து கதைக்கும். பிறகுதான் ஒருநாள் என்னெண்டு விசாரிச்சா இவரே நண்பர் ஒருத்தரிட்டை காசை குடுதுவிட்டு தன்னை தொடர்புகொள்ளச் சொல்லுறது தெரிய வந்துது.

இப்பிடியான 1997ம் ஆண்டு சுவிசின் மிகச் சிறந்த நிறுவனமான நோவார்த்திஸ் நிறுவனத்திலை நானும் தொழிற்கல்வி படிச்சுக்கொண்டிருந்தன். அப்ப அங்கை வேலை செய்யிற எங்கள் பிரிவிலுள்ள எல்லாருக்கும் கீழை படத்திலை காணப்படுற கைபேசி தரப்பட்டுது. அதாவது எமது பிரிவுக்கு நிறுவனத்தின் அனைத்துப்பகுதிகளிலையும் நாங்கள் வேலை செய்யிறதாலை எங்கையன் நாங்கள் குந்தியிருந்து கதைச்சுக்கொண்டிருந்தா தேடிப்பிடிக்கதான் இந்தக் கரிசனை.

உந்தக் கைப்பேசி கிட்டத்தட்ட முக்காக்கிலோ தேறும். ஆனாலும் அழைப்பு வரேக்கை அந்த ஏரியலை இழுத்து விட்டுட்டு கதைக்கிறதிலை ஒரு கெத்துதான். அதிலை இருந்து ரலி சைக்கிள் காரர் மாதிரி நானும் நொக்கியாவின் தீவிர விசிறியாப் போனன்.

பிறகு பனசொனிக் முதன் முதலா சத்தத்தை நிப்பாட்டி வைக்க உதறக்கூடிய கைப்பேசிய அறிமுகப்படுத்தேக்கை அங்காலை மனம் நாடினாலும் நொக்கியா என்ற அந்த தனிக்கௌரவம் மாறவிடேல்லை. பிறகு நொக்கியா கமராவோட அறிமுகப்படுத்தின 7100 முதல் இணையம் பாவிக்க கூடியதாய் அறிமுகப்படுத்தின  N95 வரைக்கும் அதனோட உறவு தொடர்ந்தது.

முதன் முதலா கமராக்கு பிளாசோட அறிமுகப்படுத்தினது மொட்ரோலா 2004 இல் அந்த கைபேசி அறிமுகமாக அதுக்கு மாறிப்பாத்தன் நம்மை கொஞ்சம் நிறமாக்காட்டுமெண்டு ஆனாலும் அதன் உள்ளமைப்பு பிடிக்காததால ஒரு வாரத்திலை திரும்பவும் மாறியாச்சு.

அதன் பின்னரான தொழில் நுட்பத்தில் நொக்கியா பின் நிற்க அப்பிளின் கவர்சிகர விளம்பரம் உள்புகுந்து கொண்டது. ஐபோன் 5 வரையில் அப்பிளுடனான உறவு நீடித்த பொழுதிலும் இரு தொலைபேசி பாவனையால் கலக்சியும் s2 இல் இருந்து உள் நுழைந்து இன்று s7 வரை தொடர்கிறது. அப்பிளின் செயற்பாடு நேர்த்தியானதாக இருந்த போதிலும் எனக்கு பிடித்த பொழுதுபோக்கான படம் பிடித்தலை கலக்சி சிறப்பாக செய்து தருவதால் தொடர்கிறது உறவு...


No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.