Pages

March 22, 2020

கொரோனா தந்த வாழ்வு



கடந்த பத்து நாட்கள் ஏதோ நகர்கிறது என்ற ரீதியில் வாழ்க்கை நகர்கின்றது.

காலை வேலை தபாற்துறை சார்ந்த வேலை என்பதால் கட்டாயம் செல்ல வேண்டும். அதன் பின் வீடும் சமையல், சாப்பாடும் இடைக்கிடை வாசிப்பும் தமிழ்கன் புண்ணியத்தால் புதுப்படங்களும் பிள்ளைகளுடன் குதூகலிப்புமாய்  பொழுது கழிகின்றது.

இடையில் இரு நாட்கள் அத்தியாவசிய பொருட் கொள்வனவு, அதுவும் காலை 9.00 மணிக்கு எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள கடைக்கு சென்றால் பால், முட்டை, மா, இறைச்சி வகை அத்தனையும் முடிந்திருக்கும். இன்றுவரை அப்படித்தான்.

பொதுப் போக்குவரவு ஊர்திகளில் இப்போ நாம் அழுத்தாமல் அதுவாகவே கதவை திறக்கும். அப்படியே முட்டாமல் ஏறி வடிவேலு பயணஞ் செய்ததுபோல கம்பிகளில், கைபிடிகளில் பிடிக்காமல் ஆடி அசைந்து ஒருவாறு இலக்கை எட்டி வேறு பிராந்தியங்களிலுள்ள கடைகளில் தேவையானவற்றை வாங்க முடிகின்றது. சிலவேளை கடையின் அளவுக்கேற்பதான் உள்ளே அனுமதிப்பார்கள் இலக்கம் பெற்று காத்திருந்து உள் சென்று பொருட்களை எடுத்து வந்து பணஞ் செலுத்த வந்தால் அங்கும் குறைந்தது இரண்டு மீற்றர் இடைவெளி விட்டு காத்திருந்துதான் பணம் செலுத்தி வரலாம்.

ஒருவர் முகத்திலும் மகிழ்ச்சியில்லை. தென்னாலி கமல் சொன்னது போல எதைப் பார்த்தாலும் பயம் யாரைப் பார்த்தாலும் பயம் யாராவது செருமினாலும் பயம் அருகே வந்தாலும் பயம் கதவு கைபிடி தொடப் பயம் இப்படி நூறு பயம்.

ஊரே சா விழுந்த வீடுபோல மயான அமைதி. நித்தம் என் பொழுதுக்கு விருந்தாகும் எங்கள் வீதி பிரான்சையும் சுவிசையும் இணைக்கும் பிரதான வீதி. எப்போதும் கல கலப்பாயிருக்கும். இப்போ தன் சோபை இழந்து கிடக்கிறது.

பத்து நாட்களுக்கு முன் பள்ளி விட்டு வீடு வந்த பிள்ளைகள் இன்னும் படி தாண்டி வெளியே செல்லவில்லை. இந்த மாதம் அவர்கள் பெரும் எதிர் பார்ப்போடு ஆறு மாதங்களாய் காத்திருந்த மாதம். வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கும் சிறார்களுக்கு சிறகு முளைக்கும் மாதம் இது. குளிர் முடிந்து வசந்தம் வீசத் தொடங்கிவிட்டது செரி மரங்களும் மங்கோலியன் மரங்களும் மரம் தெரியாமல் பூத்துக் கிடக்கின்றன. குங்கும மலர்களும் ஈஸ்ரர் மணி மலர்களும் போட்டி போட்டு நிலபாவாடை விரித்து நிற்கின்றன. இந்த அழகை ரசிக்க காத்திருந்த எவரிடமும் இன்று அந்த மனநிலை இல்லை.

சில நூறு மீற்றர் தொலைவில் வசிக்கும் அம்மா அப்பாவை சென்று பார்க்கவும் சட்டமில்லை. பேரமக்களை பார்க்க வேண்டும் என்று நித்தம் அவர்கள் வெளிப்படுத்தும் ஆசையையும் தீர்க்க முடியவில்லை. பயத்தை தின்றவர்கள் நாம் என்று போலியாய் ஒரு முகமூடி தரித்து வலிந்து சிரிக்கிறோம்...

சிலபேர் முள்ளிவாய்க்காலுக்கும் இதுக்கும் முடிச்சுப் போடுகிறார்கள் அது வேறு இது வேறு என்பதை உணராமல்

நம்பிக்கை இன்னமும் உள்ளதால் நகர்கிறோம்...

#இணுவையூர்_மயூரன்

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.