Pages

October 18, 2021

இணுவையின் பெருவிழா

 

1960களில் எடுக்கப்பட்ட இணுவில் சிவகாமி அம்மன் கோவிலின் மானம்பூ வாழை வெட்டு உலாவின் நிழற்படம் இது.

இணுவில் நடைபெறும்  நடைமுறையிலான வாழை வெட்டு நிகழ்வு இணுவில் தவிர்ந்து வேறு பகுதிகளில் நடைபெறுவதாக நான் அறியவில்லை.

இணுவில் சிவகாமி அம்மனின் மானம்பூத் திருவிழா என்பது இணுவில் கிழக்கு மற்றும் இணுவில் மேற்கு எனும் இருப்பகுதிகளையும் இணைக்கும் பெருவிழாவாகும்.

இயல்பிலேயே இணுவில் கிழக்கு/மேற்கு என நிலவும் பனிப்போரை கருத்தில்கொண்டு அவற்றைக் களையும் முகமாகவே இருபகுதியையும் தொடர்புபடுத்தியே இணுவிலின் கோவில் திருவிழாக்கள் பண்டைய நாட்களில் திட்டமிடப்பட்டன. அவற்றில் பல நடைமுறைச் சிக்கல்களால் கால ஓட்டத்தில் வழக்கொழிந்து போனாலும் இணுவைக் கந்தனின் வேட்டைத் திருவிழா, இணுவை சிவகாமி அம்மனின் மானம்பூத் திருவிழா ஆகியன பண்டைய மரபு மாறாமல் தொடர்கின்றது.

இணுவிலில் உள்ள எல்லாக் கோவில்களிலும் வாழைவெட்டு நடைபெற்று நிறைவடை இருள் சூழும் நேரத்தில் அன்றைய நாளில் தீவெட்டிகள் புடைசூழ இன்று மின்னொளி ஒளி வீச பாயும் குதிரையில் சிவகாமி அம்மன் உலா வரப் புறப்படுவாள். இணுவில் கிழக்கில் இருந்து காங்கேசன்துறை வீதி கடந்து மேற்கு இணுவிலில் அமைந்துள்ள கந்த சுவாமி கோவில் சென்று, அங்கு அங்கு அழகுற அமைக்கப்பட்ட பெரு வாழையை வெட்டிச் சாய்த்த பின் மேற்கு இணுவை மக்களால் வழங்கப்படும் மரியாதையை ஏற்றுக் கொள்வாள். இரவிரவாக கலை நிகழ்வுகளும் சுடச் சுட பால்க்கோப்பியும் பலவிதமான பலகாரங்களில் பகிரலும் என விழா களை கட்டும் அதிகாலை நெருங்கும் வேளையில் அங்கிருந்து அம்பாள் புறப்பட்டு அன்றைய அமெரிக்கன் மிசன் பாடசாலை வீதியூடாக கிழக்கு இணுவிலுக்குள் நுழைந்து கோவிலை வந்தடைவாள். வீதிகள் தோறும் ஒவ்வொரு வீட்டுவாசலிலும் எல்லைமானப் பந்தல் அமைத்து நிறைகுடம் வைத்து அம்மனை வரவேற்று மகிழ்ந்து களிப்பார்கள்.


முதன் முதலாக 1987ம் ஆண்டு இந்திய இராணுவக்காலத்தில் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. பின்னர் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த விழா கடந்த சில ஆண்டுகளாக சிவகாமி அம்மனின் திருப்பணிகள் நடைபெறுவதால் நடைபெறவில்லை.

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.