பூங்கோதை என அறியப்படும் கலா சிறீரஞ்சன் பேஸ்புக் மூலம்தான் அறிமுகமாகினார். பிரித்தானிய வாசியான ஒரு சிறுவர் பள்ளியின் ஆசிரியராக தன்னம்பிக்கையுள்ள துணிவான பெண்மணி இப்படித்தான் அவரை அவரது பதிவுகள் எனக்கு இனங்காட்டியது.
இலண்டனில் இலக்கியச் செயற்பாடுகளில் தன்னார்வத்தோடு செயற்திறன் மிக்கவராக செயற்பட்ட இவர் ஊர் மீதும் சமூகம் மீதும் இயற்கை மீதும் அழகியல் மீதும் பற்றும் ஈர்ப்பும் கொண்டவர்.
ஊர் பற்றிய வேரைத் தேடும் பதிவுகள் அவரையும் என்னையும் ஒரு கோட்டில் இணைத்தன.
ஒரு நாள் தான் தீராத நோயில் இருந்து மீண்டு வந்தது பற்றி ஒரு பதிவு அந்தப் பதிவு அனுதாபம் தேடியதாக இல்லாமல் தற்துணிவைத் தருவதாக ஒரு பிரச்சனையில் இருந்து மீண்டு வரும் நம்பிக்கையை தருவதாக இருந்தது.
2022 ஏப்ரல் மாதம் நான் ஊர் போயிருந்த வேளையில் அவரும் ஊர் வந்திருந்தார். கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்ற அவரது “நிறமில்லா மனிதர்கள்” நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு வந்து சிறப்புப் பிரதியை பெறுமாறு அழைத்திருந்தார். சுவிசுக்கு மீண்டும் திரும்பும் நாளில் அவரது நிகழ்வு திட்டமிடப்பட்டிருந்தது. எனது விமானப்பயணத்துக்கு சிலமணிநேரத்துக்கு முன்னதாக அந்த நிகழ்வு, அவரது அன்பான அழைப்பை ஏற்று நிகழ்வுக்கு சென்று சிறப்புப் பிரதியை பெற்று நிகழ்வு முடிவடைவதற்கு முன்னதாகவே திரும்பியிருந்தேன்.
பின்னர் தொடர்புகொண்டு தன் அன்பையும் நன்றியையும் தெரிவித்து படங்களையும் அனுப்பி வைத்திருந்தார்.
தங்கள் ஊர் மாம்பழம் பற்றி அதனை இயற்கை முறையில் பழுக்க வைத்து உண்பதைப் பற்றி பதிவிட்டிருந்தார்.
2023 இல் நாம் ஊர்போயிருந்த போது தென்மராட்சியில் நின்றிருந்தா, முன்னர் ஒரு தடவை அவரது பதிவொன்றில் நான் சொன்னதை நினைவில் வைத்து, பிள்ளைகளையும் அழைத்து வாங்கோ மாம்பழம் இயற்கை முறையில் பழுக்க வைத்துள்ளேன் என்று படமும் அனுப்பியிருந்தார். தொடர் பயணங்களால் அந்தப் பயணத்தில் அவரை திட்டமிட்டு சந்திக்க முடியாது போய்விட்டது.
இன்று மதியம் வந்த செய்தி இயற்கையை நேசித்த பூங்கோதை அவருக்கு மிகவும் பிடித்த இயற்கையுடன் இரண்டறக் கலந்தார் என்ற செய்தி!
தனக்காக யாரும் அனுதாபப் படக்கூடாது என்று விரும்புவர்.
அவர் அவரது எண்ணப்படி பூக்களின் உலகில் பூங்கோதையாய் என்றும் அழகிய தேவதையாய் உலாவரட்டும்.
நினைவுகளுடன்
இணுவையூர் மயூரன்

No comments:
Post a Comment
தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.