அது 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் நாள் காலை. வன்னி மண்டலத்தின் விசுமடு கிராமம் வழமைபோல இயங்கிக்கொண்டிருந்து. மார்கழி மாத குளிரையும் பனித்துகிலையும் கிழித்துக்கொண்டு என்றும் இல்லாதளவு பிரகாசத்தோடு கதிரவன் அந்த நாளின் அதிகாலையிலேயே ஒளிபரப்பத் தொடங்கிவிட்டான். விசுவமடுவில் உள்ள கேணல் கிட்டு அரசறிவியல் கல்லூரி அந்த அதிகாலை வேளையிலும் என்றுமில்லாதவாறு மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. வழமையாக அங்கு உள்ளவர்களை விடவும் புதிதாகச் சிலர் வந்திருந்தனர். ஊடுருவி அனைத்தையும் ஆராய்ந்து கண்காணிக்கும் வல்லமை கொண்டவர்களாக அவர்களது தோற்றம் இருந்தது. அந்தப் பகுதி அந்தக் கணம் முதல் அவர்களின் முழுமையான கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் உள்ளது என்பதை தொடர்ந்த நடைமுறைகள் காட்டி நின்றன. நடைபெறுகின்ற செயற்பாடுகள் மனதுள் ஒருவித இனம் புரியாத மகிழ்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. என் மனதில் இருந்த உட்சபட்ச ஆசை இன்று எப்படியும் நிறைவேறும் என்ற நம்பிக்கை மனவெளியை நிறைத்து மகிழ்வைத் தந்தது.
அறியல் கல்லூரியின் அந்த கொட்டில் அறையில் அனைவரும் எங்கள் எங்கள் இருக்கைகளில் இருக்கின்றோம். காலை 9:00 மணி இருக்கலாம். கொட்டிலின் பின்புறத்தால் நுழைகின்றது அந்த உருவம். சாதாரண மனிதர்களைவிடவும் சற்று உயரம் குறைவு, உருண்ட கண்களில் பேரொளி கொண்ட பார்வை, உதடு பிரியாமல் மலர்ந்த மந்திரப் புன்னகை, ஒளி படர்ந்த பரந்த முகம் பின்னே ஒளி வட்டம் போன்ற பிம்பம் என் கண்களையே என்னால் நம்பமுடியாது விழிகளை அகல விரித்துப் பார்க்கின்றேன். ஓம்! அவரேதான். உலகத்தமிழர்கள் ஒருமுறையேனும் எட்ட நின்றேனும் கண்டு விட வேண்டும் என துடிக்கும் அவர் என் விழி வீச்சுக்குள் இதோ என் அருகே எனக்கும் அவருக்கும் இடையே ஒரு அடிக்கும் குறைவான இடைவெளி. விழிகளை மூடாது வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். தன் இருக்கையில் வந்து இருக்கின்றார். ஒவ்வொருவராக அறிமுகமாகி உரையாடுகின்றோம். என் முறை வழமையாக இத்தகைய சந்திப்புக்களில் தத்தளிக்கும் என் தமிழ் அருவி ஊற்றாய் தங்கு தடையின்றி வருகின்றது. “வணக்கம் அண்ணா” என்று அழைத்து அறிமுகமாகி உரையாடுகின்றேன்.
போரைப் பற்றி போர் வெற்றிகளைப் பற்றி வீரப் பிரதாபங்களைப் பற்றி அவர் பேசவில்லை. புலம்பெயர்ந்து போய் திரும்பி வந்த இளைஞர் கூட்டத்தோடு ஒரு இயல்பான உரையாடலை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றார். நாங்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் எந்தவொரு மிகைப்படுத்தலும் இல்லாமல் சாதாரணமாக பதில் சொல்லிக் கதைக்கிறார்.
அவருடனான காலை உணவுப் பொழுது. மிகவும் நிசப்தமாக நிகழ்ந்துகொண்டிருந்தது. அங்கு இருந்த ஒரு சிறுவன் மைலோவின் கடைசிச் சொட்டை ஊன்றி உள் இழுத்து உறுஞ்சுகின்றான். நிசப்தமாய் இருந்த அந்த இடத்தை அந்தச் சத்தம் நிறைக்கின்றது. அந்தத் தம்பியை திரும்பிப் பார்த்து இந்தத் தம்பி போலத்தான் எனக்கும் அந்த அடிச் சொட்டை உறுஞ்சிக் குடிக்க விருப்பம் சபை நாகரீகம் கருதி இருக்கிறேன் என்றார். சபை கலகலத்துச் சிரித்தது.
நிறைய விடயங்கள் உரையாடினோம். அவர் ஆசானாகவும் நாங்கள் மாணவர்களாவும் இருந்து கற்கும்
பலருக்கும் கிடைக்காத பேறு எனக்கு கிடைத்தது.
“மண் காத்த பெருமானின் கண் எதிரே கண்டேன்
மாசற்ற திருவுருவின் முன் அமர்ந்து இருந்தேன்”
#ஈழத்துப்பித்தன்

No comments:
Post a Comment
தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.