Pages

March 21, 2025

மனம் வணங்கும் மலர்களின் மெல்லிசை

மௌனத்தின் ஓசையில் பிறக்கும் வசந்தம்,

பனி துளிகள் உருகி நதி தேடும் பாங்கு.

உயிரின் நட்சத்திரங்கள் கண்களில் மலர,

அலைந்து திரியும் காற்றின் நாவில் இசை கனியும்.


மனம் வணங்கும் மலர்களின் மெல்லிசை,

காணாமல் கேட்டுப் போகும் கவிதை.

பழுப்பு வேர்களிலிருந்து பசுமை விரிந்து,

புதுப் பசுமை நினைவுகள் போல விரிகிறது.


ஒரு துளிக்காற்றில் ஒரு கிளையின் ஆடல்,

ஒரு வண்ணப் பூச்சியின் கரம்பற்றி ஓடல்.

வண்ணங்களின் மௌனச் சொற்பொழிவு,

உள்ளம் மட்டும் கேட்கும் வசந்தத்தின் இசை.


#ஈழத்துப்பித்தன்

21.03.2025


March 4, 2025

வீனஸ்து மிலோ (Venus de Milo)



லூவர் அருங்காட்சியகத்தில் மொனாலிசா ஓவியத்துக்கு நிகராக போற்றிப் பாதுகாக்கப்படும் ஒரு சிற்பம் வீனஸ்து மிலோ சிற்பமாகும்.

வீனஸ்து மிலோ (Venus de Milo) என்பது பண்டைய கிரேக்க சிற்பக்கலையின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இது அழகின் தேவதை அஃப்ரோடைட் (ரோமன் மரபில் “வீனஸ்”) உருவமாகச் சிற்பிக்கப்பட்டது.

கிரேக்கத்தின் மிலோஸ் (Melos) தீவில் 1820 களில் இச் சிலை கண்டுபிடிக்கப்பட்டது.

கி.மு. 130–100 (ஹெல்லெனிஸ்டிக் காலம்) காலப்பகுதியில் இச் சிலை உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.

இச் சிலையினை உருவாக்கிய சிற்பியின் பெயர் உறுதி செய்யப்படவில்லை, ஆனால் அலக்சாண்டர் ஆஃப் அந்தியோச் என்பவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

வெள்ளை மார்பிள் கல்லிலே செதுக்கப்பட்ட இச் சிற்பம் சுமார் 204 செ.மீ்்உயரமானது. 

இதில் காணப்படும் அழகு மற்றும் பாங்கான உடல் அமைப்பு கிரேக்க சிற்பக்கலையின் மிகுந்த நேர்த்தியை வெளிப்படுத்துகிறது.

சிலையின் இரு கரங்களும் இன்று இல்லை. கரங்கள் எவ்வாறு இருந்திருக்கலாம் என்பதில் பல கருதுகோள்கள் உள்ளன.

சிலை சற்றே சாய்வாக நிற்கும் நிலையில் உள்ளது, இது கிரேக்கக் கலையின் தனித்துவமான அம்சமாகும்.

உடை ஓரமாக பெயர்ந்திருப்பது, அதன் இயற்கை அழகை மேலும் அதிகப்படுத்துகிறது.

இது லுவர் அருங்காட்சியகத்தில் மிக முக்கியமான கண்காட்சிப் பொருளாகவும், உலகளவில் அழகின் தனிப்பட்ட அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.


March 1, 2025

இருபதாம் ஆண்டில்


 சுவிற்சர்லாந்தைப் பற்றி நான் சொன்னால் வேறு நாட்டில் வாழ்பவர்கள் இவர் சுவிசில் இருப்பதால் சுவிசைப் பற்றி புளுகிறார் என்று சொல்வார்கள்.

சுவிற்சர்லாந்தில் புளுகாமல் புழுகமாய் சொல்ல பல விடயங்கள் உண்டு.


அப்படி புளுகமாய்ச் சொல்லக் கூடிய ஒரு விடயம்தான் இதுவும்.


சுவிற்சர்லாந்தில் பிறந்து வளர்ந்து தமிழுடன் கலைகளையும் கற்று சிறுவயதிலேயே திரிபுறக்கற்று சுவிற்சர்லாந்தின் இளையோர் இசைக்குழு என பெயர்பெற்று விளங்கிய “அங்கையற்கண்ணி” இசைக்குழுவுடன் தன் பயணத்தைத் தொடர்ந்து. 2005 களில் தான் கற்ற மிருதங்க கலை தனக்கு அடுத்த தலைமுறைக்கும் கற்பிக்க ஆரம்பித்தவர் “கலை வித்தகர்” ருக்க்ஷன் ஸ்ரீரங்கராஜா அவர்கள்.


அவரது அந்த முயற்சியூடாக அவரிடம் மிருதங்கம் கற்று ஆசிரிய தரத்தை நிறைவு செய்த பத்து ஆசிரியர்களூடாக துர்க்கா தாள லயாலயம் சுவிஸ் முழுவதும் ஆரோவ் (Aarau), பாசல் (Basel), பேர்ண்(Bern), புர்க்டோர்வ் (Burgdorf), லங்கன்தாள் (Langenthal), லுசேர்ன் (Luzern), மார்த்தினி (Martigny), வில் (Wil), இவர்தோன் (Yverdon), சொஃபிங்கன் (Zofingen) மற்றும் சூரிச் (Zürich) ஆகிய இடங்களில் பரந்து விரிந்து பலநூறு மாணவர்களுக்கு மிருதங்க பயிற்சியினை வழங்குகின்றனர். 


கடந்த 2005 ஆம் ஆண்டு தண்ணுமை (மிருதங்க)கலையை பயிற்றுவிக்கும் நோக்கில் தொடக்கப்பட்ட துர்க்கா தாள லயாலயம்

நாளை 02.03.2025 அன்று இவ் விழா பெரும் முன்னெடுப்புடன் கொண்டாடப்படுகின்றது.


இப்பெரும் இசைவிழாவில் அனைவரையும் அன்போடு வரவேற்று நிற்கிறார்கள்🙏🙏🙏


இவ்விழா 2 மார்ச் 2025 அன்று Trimbach நகரில் நடைபெறவுள்ளது. நிகழ்வு நடைபெறும் இடம்: Schulhausstrasse 9, 4632 Trimbach. பிற்பகல் 14 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும்.


இவர்களை நாமும் புளுகமாக வாழ்த்தி வரவேற்கின்றோம்.



February 11, 2025

மழையின் மௌனம்

 

சாளரங்களை திறந்து பார்க்கிறேன் மழை

சதிராடிக்கொண்டிருக்கிறது

துளிகளாய் விழுந்து கண்ணில் நனைக்க

தூய நினைவுகள் ஒவ்வொன்றாய் மலர்கின்றன

வெற்றிட மனதின் ஓரம் தொட்டு

வெண்முகில் கண்ணீராய் வழிகின்றது

காற்றின் ஸ்வரத்தில் சொல்லாத கவிதைகள்

கரையாத உணர்வாய் நெஞ்சில் பெருகின்றது

மழை துளிகள் மண் மீது மட்டும் அல்ல - என்

மனதின் மீதும் பொழிகின்றது.


#ஈழத்துப்பித்தன்

10.02.2025

February 9, 2025

எங்களின் சமையல் கலை நிபுணர் – அப்பம்மா


எங்கள் அப்பம்மா சிறந்த சமையல்காரி. எங்கள் சொந்தங்கள், பந்தங்கள், அயலட்டையில் எவருக்கேனும் கொண்டாட்டம் என்றால், இடுப்பில் சீலையைத் தூக்கிச் சொருகிக்கொண்டு சமையல் பகுதியில் முதல் ஆளாக நின்றிருப்பா. அவரது வீடு ஒரு அமுதசுரபி போன்றது; எந்த நேரத்தில் யார் வந்தாலும், அவர்களுக்கு சாப்பாடு அளிக்காமல் அனுப்புவதில்லை.

அப்பம்மா சமைக்கும் உணவின் சுவை, அனைவரையும் கவரும். அவர் சமையல் எப்போதும் வீட்டு உறுப்பினர்களின் தேவையைத் தாண்டியே இருக்கும். எதிர்பாராத நேரத்தில் வந்தவர்களுக்காகவும் கூடுதல் உணவு இருக்கும். விருந்தினர் என்ற அடிப்படையில், அனைவரையும் அன்புடன் ஏற்றுக்கொண்டு, உணவின் மூலம் மகிழ்ச்சியை பரப்புவதே அவருடைய இயல்பு.

அப்பம்மாவின் சமையலறை ஒரு கொண்டாட்டத்திற்குரிய புனித இடம் போல இருக்கும். அவரது கையால் தயாரான உணவு, அப்படியொரு சுவையாய் இருக்கும். அப்பம்மாவின் அந்தக் கைப்பக்குவம் திருமணமாகி வந்த பின் அப்பம்மாவிடம் சமையல் பழகிய என் அம்மாவிடமும் உண்டு. அதே பக்குவம் என்னிடமும் என்னிடம் சமையல் பழகிய என் மனைவியிடமும் என் தங்கையிடமும் உண்டு.

அப்பம்மா வித்தியாசமான மாலைச் சிற்றுண்டிகள் செய்வா. மரவள்ளிக் கிழங்குக்கு எங்கள் ஊர் பெயர் போனது என்பதால் மரவள்ளிக் கிழங்கில் செய்யப்படும் சிற்றுண்டிகள் அதிகமாய் இருக்கும்.

மரவள்ளிக் கிழங்கை நீள நீளமாக வெட்டி, கோதுமை மாவில் உப்பு, மஞ்சள், அரைத்த செத்தல் சேர்த்து செய்த கலவையில் பொரித்தெடுப்பா. அப்பிடி ஒரு சுவையாய் இருக்கும். 

எனக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டிகளில் இதுவும் ஒன்று. நல்ல மாப்பிடிப்பான மரவள்ளி கிழங்கை கண்டால் அப்பம்மாவின் நினைவு வந்துவிடும்.  வேண்டி வந்து அதே போல் பொரித்துவிடுவேன்.

இன்றும் அதே போல்…

இதன் செய்முறை


https://youtu.be/qtK7PD-BFH4


#இணுவையூர்_மயூரன்

09.02.2025

நிலைக்கதவடி ஞாபகங்கள்




வெள்ளெண கோழி கூவ முன்னமே எழும்பி

எண்ணிலா வேலைகள் செய்யிறா அம்மா

திண்ணையில் கிடந்து திமிர் முறிக்காமல்

தண்ணி வார்க்கப் போகும் அப்பா 


கிட்டி விளையாட கூடிய பெடியள்,

மண்பானையை நொருக்கி சத்தம் கேக்க

நடுவீட்டில் தண்ணி ஒழுகிக் கிடந்தது,

“எவனடா உடைச்சது!” என்று கத்தும் அக்கா.


வீட்டுக் கூரையில் தூக்கணாங் குருவிகள்,

வெள்ளிக்கிழமை பிள்ளையாரின் மணி ஒலி

எட்டிப் பாத்தா புக்கை பொங்கிப் படையல்,

பெரியம்மா பூவரசம் இலையோட போறா.


பக்கத்து வீட்டுப் பெட்டை படலை திறந்து,

“பா பா இஞ்ச!” எண்டு கோழியை கூப்பிடும்,

“அப்பாடி” எண்டு விட்டு வெக்கமாய் சிரிச்சபடி,

அங்கையும் இஞ்சையும் சுத்திப் பாக்கும் குமார்.


மழைக்காலம் வந்தால் மண் வாசம் வீசும்,

தகரப் பேணியில் தட்டி விளையாடும், 

குஞ்சக்காவின் சின்னப் பெடி,  அந்த வாசல் நிலையிலை சாஞ்சபடி ரசிச்சதை மறக்கேலாது


எவ்வளவோ தூரம் போனாலும் மறக்கேலாது,

அந்தச் சத்தங்களும் தலைவாசலும் வாசங்களும்,

யாழ்ப்பாணத்து வீட்டு வாசலின் ஞாபகங்கள்

நெஞ்சோட நிண்டு பூவாய் பூக்குது இண்டைக்கும்


#ஈழத்துப்பித்தன்

04.02.2025 


February 2, 2025

பெருந்தலைவர் மாவைக்கு அஞ்சலி

 

பாதை நீண்டது, பயணம் முடிந்தது,

பாராட்டுக்களும், பிழைகளும் பின்னின்றது.

மண்ணில் விழுந்த சுவடுகள் போல,

மறவாதே என் தேசத்தின் ஓரங்கள் சொல்லும் உன் கதைகள்.


தீவிரத்தின் தீயில் தீண்டிய காலம்,

சிறை சுவரின் நிழலில் சிதைந்த கனவுகள்.

ஆரம்பத்தின் ஆர்வமான ஓர் போராட்டத் தீ,

ஆனால் காலங்கள் காயத்தை விட்டுச் சென்றது.


மக்களின் கண்ணீரும் நம்பிக்கையும்

மாறியதோ? மறைந்ததோ?

வாழ்க்கை என்ற சதுக்கத்தில்

வெற்றியும் தோல்வியும் கலந்து வந்ததோ?


அரசியல் ஓர் அரங்கம்; அதில் உன் பாதம்

வலியும் வலிமையும் தந்த பல அனுபவங்கள்.

கைகொடுத்தவனாய், சில சமயம் கை விட்டவனாய்,

நினைவுகளில் நீ கலந்து போவாய்.


பிழைகள் இருந்தாலும், பகை இருந்தாலும்,

போராட்ட பாதையின் ஓர் பக்கமாய் நீ இருந்தாய்.

அஞ்சல் இல்லாமல், அசைந்தாலும் வீழாத பயணம்,

அதற்கே என் கவிதையின் நிழல் அஞ்சலியாய்.


மண்ணுக்கும் மண்ணில் உனக்கே ஒரு நினைவாக,

மக்களின் மறதி கூட ஓர் புகழாக.

சங்கதி சாற்றும் வரலாறு உன் பெயரால் ஒலிக்க,

சாதனைக்கும் சாயலுக்கும் என் கவிதை ஓர் அஞ்சலி.


உண்மைகள் கடுமையாயிருந்தாலும்,

உணர்வுகள் மழை போல விழுந்தாலும்,

உன் பயணம் ஓர் வரலாறு.

பொதுவுடைமையாக, பொலிவோடு, பிழையோடு

உன் பெயர் எங்கோ பதிந்து போகும்.


பிழைகள் மறவாத உண்மைகள்,

போராட்டம் மறையாத ஓசை.

அவ்விதமே உனது வாழ்வும்,

இருப்பதால் - ஒருசிலருக்குப் பாராட்டாக,

மற்றவர்களுக்கு பாடமாக.


#ஈழத்துப்பித்தன்

December 9, 2024

சூடான திராட்சை மது (Glühwein)


ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலம் ஆரம்பித்து விட்டால் இந்த சூடான திராட்சை மதுவும் விற்பனைக்கு வந்துவிடும்.

குறிப்பாக நவம்பர் மாதத்தின் இறுதி வியாழக்கிழமை அன்று நத்தார் சந்தை ஆரம்பமாகும். நத்தார் சந்தை என்பது இரவு வேளைகளில் களை கட்டும். இச் சந்தைகளில் பல்விதமான பாரம்பரிய உணவுப்பண்டங்கள் சுடச் சுட சந்தையின் தெருக்கடைகளில் விற்பனையாகும். 

மிகவும் குளிரான காலநிலையில் அந்த குளிருக்கு உடல் ஈடுகொடுத்து தாங்கிக்கொள்ளும் வல்லமையை பெறுவதற்காக இந்த நத்தார் சந்தைகளில் சூடான திராட்சை மது விற்பனையாகும். 

சிவப்பு மற்றும் வெள்ளை வைன் இரண்டுமே இவ்வாறு சூடாக விற்பனை செய்யப்படும். 

திராட்சை மதுவுடன் கறுவாப்பட்டை, கராம்பு, நட்சத்திரப்பூ, தோடம்பழ துண்டுகள், தோடம்பழச்சாறு, கரும்புச் சீனி, ரம் போன்றவை சேர்த்து காய்ச்சி சூடாக வெட்டிய பழத்துண்டுகளுடன் பரிமாறப்படும். 

மதுவை சூடாக்கும் போது அதிலுள்ள மதுசாரத்தின் வீரியம் குறைந்து உள்ச்சேர்க்கைகளின் தன்மையும் சுவையும் அதிகரித்து உடலை கதகப்பாக்கி குளிரை தாங்கும் தன்மையை இந்தப் பானம் வழங்கும்.

இணுவையூர் மயூரன்

09.12.2024