Pages

November 22, 2020

மலாய் அன்ரி அவிச்ச அரிசிமாப்புட்டு


உண்ணலும் உலாத்தலும் என் இரு கண்கள் இது உலகம் அறிஞ்ச ரகசியம்.

எங்கை போகத் திட்டமிட்டாலும்  அந்த இடங்களைப்பற்றி அறிய முதலே அங்கே என்ன என்ன சாப்பாடு கிடைக்குமென தேடிப் பட்டியலிடுவதே எனது முதற் கருமம்.

இப்படியாக நான் போகுமடங்களில் தேடித்தேடி அந்தப் பிரதேசங்களில் அடையாள உணவுகளையும் அங்கு கிடைக்கும் சிறப்பு உணவுகளையும் உண்பேன்.

இப்படித்தான் கடந்த 2017 இல் மலேசியா போன போது ஒரு நாள் சட்டிச் சோறு சாப்பிட்டுருந்தேன் அதன் சுவைக்காகவே கடந்த ஆண்டு மீண்டும் ஒரு தடவை இருநாள் பயணமாக மலேசியாவுக்கு போனது தனிக்கதை.

இப்படி சாப்பிட்ட சட்டிச் சோற்றின் சுவையால் ஈர்க்கப்பட்டு மறுநாளும் போனால் அன்று அந்தக் கடை பூட்டு முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு லிட்டில் இந்தியா வீதியில் அலைந்த என் கண் எதிரே மலேசியா மலாய் அன்ரி ஒருத்தி வீதியில் வைத்தே குழல் புட்டவிக்கும் காட்சியைக் கண்டதும் சொர்க்கமே கண்ணெரே தெரிந்தது போல் இருந்தது. 

சரி என்று போனா கடை வாசலில் வைத்து புட்டு அவிபடுது. வெள்ளை அரிசிமாப் புட்டும் குரக்கன் மா புட்டும் குழலாத தள்ளத் தள்ள ஆவி பறக்க விற்பனை சூடுபிடிக்குது. சரியென்று நானும் புட்டுக்கு சொல்லீட்டு இருந்தா முதல் சுற்றுக்கு வெள்ளை அரிசிமாப் புட்டும் வாழைப்பழமும் சர்க்கரை தூளும் வந்துது. அடுத்த சுற்றுக்கு திரும்பிப் பார்த்தா அத்தனை வகை கறியும் இருந்துது. விரும்பியதை எடுத்து வந்து சாப்பிடலாம்.

இரண்டாம் சுற்றை மீன்குழம்பு கத்தரிக்காய்/உருளைக்கிழங்கு பொரியலோடையும் குழைச்சு பிடிச்சு அடிச்சிட்டு வந்தன். அடுத்தநாள் வரை நின்று பிடிச்சுது.

சும்மா சொல்லக்கூடாது புட்டுக்கு பிரபலமான யாழ்ப்பண, கேரளா புட்டு எல்லாம் சாப்பிட்டிருக்கிறன் அதெல்லாத்தையும் விட விட மலேசியன் புட்டு மிருதுவாகவும் சுவையாகவும் இருந்துது. 


புட்டு பற்றி புட்டுப் புட்டு வைப்பேன்


புட்டு பற்றிய ஆய்வுக்காக


புட்டுப் பிரியன் மயூ

November 21, 2020

புட்டுப் பற்றிக் கொஞ்சம் புட்டு வைக்கப் போறன்


அரிசிமாவை வறுத்து 
அதிலை தண்ணி சேர்த்து
திரட்டிக் கொஞ்சம் எடுத்து
பேணிச்சுண்டு கொண்டு 
சுளகில் போட்டுக் குத்தி
பிடைச்சு அத பிரிச்சு 
தேங்காய்ப்பூ கலந்து 
நீத்துப்பெட்டி எடுத்து
அதில அத நிரப்பி 
ஆவியிலை வைச்சு 
மூடி போட்டு அவிச்சு 
ஓலை பெட்டி எடுத்து
அதிலை அதை கொட்டி 
மூலைப்புட்டை அள்ளி
வாயிலை போட்டுப் பாரு

காலை நேரம் உரலை
மெல்லக் கொஞ்சம் நிமித்தி
பொரிச்ச மிளகாய் போட்டு
வெங்காயம் சேர்த்து 
பழப்புளியும் கலந்து
தேங்காய்ப்பூ போட்டு
இடிச்ச சம்பல் எடுத்து
அள்ளிப் புட்டை பிடிச்சு
கொஞ்சம் தின்று பாரு

கத்தரிக்காய் வெட்டி
உருளைக்கிழங்கு சேர்த்து
வெங்காயம் தூவி
ஆனைக்கோட்டை எண்ணை
அதிலை கொஞ்சம் விட்டு 
நல்லாப் பொரிச்சு எடுத்து
புட்டில் கொஞ்சம் கலந்து
கையில் அள்ளிப் பிடிச்சு
கொஞ்சம் தின்று பாரு

ஊர் முட்டை எடுத்து
உப்பு மிளகு சேர்த்து
நாலு ஈர்க்குச் எடுத்து
நல்லா நுரைக்க அடிச்சு
பச்சை மிளகாய் வெட்டி
வெங்காயமும் அறுத்து
வதங்கலாக பொரிய
அடிச்ச முட்டை சேர்த்து
அதிலை புட்டை போட்டு
அள்ளித் தின்று பாரு

நண்டு நாலு எடுத்து
நல்லா வதக்கிப் பிரட்டி
ஊர்த் தூளும் போட்டு
உறைப்பாக் கறி வைச்சு
கூப்பன் மாவை அவிச்சு
அரிச்சு குழைச்சு அவிச்ச புட்டு
மேலை கொஞ்சம் ஊத்தி
குழைச்சு அடிச்சுப் போட்டு
மிச்சக் கறிச் சட்டி 
அதிலை கொஞ்ச புட்டை
பிரட்டித் தின்று பாரு

முக்கனிகள் மூன்றில்
வாழைப்பழம் எடுத்து
தயிர் சீனி சேர்த்து
தளர்வாய் கொஞ்சம் பிசைந்து
கிள்ளித் தின்று பாரு
கறுத்தக் கொழும்பான் சீவி
அரிசிமாவு புட்டை
அதிலை கொஞ்சம் கொட்டி
பிசைந்து தின்னு பாரு

கீரைப்புட்டு
ஒடியல்புட்டு
உழுத்தம்புட்டு
பாற்புட்டு
இன்னும் பல இருக்கு
நேரம் கொஞ்சம் மட்டு
அதனாலை போட்டு
வாறன் பிறகு 
புட்டு பற்றி இன்னும்
புட்டுப் புட்டு வைப்பேன்

#ஈழத்துப்பித்தன்

November 3, 2020

இலையுதிர்காலம் 1



வண்ணங்கள் பேசும் மாதம் 

வானவில் தோன்றும் மாதம் 

எண்ணங்கள் சிறகடிக்கும் மாதம் 

என்றும் இன்பம் சூழும் மாதம்


பகலை இரவு தின்னும் மாதம் 

பகலவன் ஓய்வு கொள்ளும் மாதம்

உணர்வுத் திசுக்கள் உயிர்க்கும் மாதம் 

சிசுக்கள் சில உருவாகும் மாதம்


குளிரும் வெயிலும் உரசும் மாதம் 

கூதல் மெல்ல மெய் வருடும் மாதம்

மேனி குளிரை உணரும் மாதம் 

சின்னத் தூறல் சிதறும் மாதம்


பொன்மணி போல் இலைகள் உதிரும் மாதம் 

பெண்மணிகள் மேனி மூடும் மாதம்

முன்பனிக்கு அழைப்பு விடுக்கும் மாதம் என்

பணிக்கு சோதனை தொடங்கும் மாதம்


#ஈழத்துப்பித்தன்

இலையுதிர்காலம் 2


கொடி முந்திரிகைக் குலைகள்கொ

ய்து போக அழைப்பு விடுக்கின்றன

குமளிச் செடிகளோ திரண்ட காய்களின்

கன்னங்கள் சிவந்து நாணி நிற்கின்றன

உலுப்பிக் கொட்டிய மூளைக் கடலை விதைகள் 

திசைகள் எங்கும் பரந்து தின்ன அழைக்கின்றன

ஊசி இலை மரங்கள் முன் பனி தாங்கத்

திடங்கொண்டு தினவெடுத்து நிற்கின்றன

இலை காய்ந்து சருகாகி உக்கிய பின்னும்

ஈரம் காயாது பூசணி திரண்டு கிடக்கின்றது

சுட்ட மரோனிக் கொட்டைகளின் வாசம்

நாசிகளை நிறைத்து சூடேற்றி அழைக்கின்றது

திட்டுத் திட்டாய் முடி சொரிந்த இளைஞன்போல்

வான் மறைத்த மரங்கள் வடிவு இழந்து நிற்கின்றன

பழுத்த இலைகள் விண்ணுக்கும் மண்ணுக்குமாய்

பரமபதம் ஆடி ஆடி பார்வைக்கு விருந்தாகின்றன

வான மகள் இருண்டு கறுத்து அழுது வடிக்கிறாள்

வானவில்லில் ஆரம் கட்டி வலிந்தும் சிரிக்கிறாள்

ஆடை இழந்து அம்மணமாய்க் கிடக்கும் மரங்களும்

தற்காலிக போர்வையோடு அழகொழிரும் தரையுமாய்

இலையுதிர்காலம் இனிதாய் நகருது இங்கு...


#ஈழத்துப்பித்தன்