Pages

November 21, 2020

புட்டுப் பற்றிக் கொஞ்சம் புட்டு வைக்கப் போறன்


அரிசிமாவை வறுத்து 
அதிலை தண்ணி சேர்த்து
திரட்டிக் கொஞ்சம் எடுத்து
பேணிச்சுண்டு கொண்டு 
சுளகில் போட்டுக் குத்தி
பிடைச்சு அத பிரிச்சு 
தேங்காய்ப்பூ கலந்து 
நீத்துப்பெட்டி எடுத்து
அதில அத நிரப்பி 
ஆவியிலை வைச்சு 
மூடி போட்டு அவிச்சு 
ஓலை பெட்டி எடுத்து
அதிலை அதை கொட்டி 
மூலைப்புட்டை அள்ளி
வாயிலை போட்டுப் பாரு

காலை நேரம் உரலை
மெல்லக் கொஞ்சம் நிமித்தி
பொரிச்ச மிளகாய் போட்டு
வெங்காயம் சேர்த்து 
பழப்புளியும் கலந்து
தேங்காய்ப்பூ போட்டு
இடிச்ச சம்பல் எடுத்து
அள்ளிப் புட்டை பிடிச்சு
கொஞ்சம் தின்று பாரு

கத்தரிக்காய் வெட்டி
உருளைக்கிழங்கு சேர்த்து
வெங்காயம் தூவி
ஆனைக்கோட்டை எண்ணை
அதிலை கொஞ்சம் விட்டு 
நல்லாப் பொரிச்சு எடுத்து
புட்டில் கொஞ்சம் கலந்து
கையில் அள்ளிப் பிடிச்சு
கொஞ்சம் தின்று பாரு

ஊர் முட்டை எடுத்து
உப்பு மிளகு சேர்த்து
நாலு ஈர்க்குச் எடுத்து
நல்லா நுரைக்க அடிச்சு
பச்சை மிளகாய் வெட்டி
வெங்காயமும் அறுத்து
வதங்கலாக பொரிய
அடிச்ச முட்டை சேர்த்து
அதிலை புட்டை போட்டு
அள்ளித் தின்று பாரு

நண்டு நாலு எடுத்து
நல்லா வதக்கிப் பிரட்டி
ஊர்த் தூளும் போட்டு
உறைப்பாக் கறி வைச்சு
கூப்பன் மாவை அவிச்சு
அரிச்சு குழைச்சு அவிச்ச புட்டு
மேலை கொஞ்சம் ஊத்தி
குழைச்சு அடிச்சுப் போட்டு
மிச்சக் கறிச் சட்டி 
அதிலை கொஞ்ச புட்டை
பிரட்டித் தின்று பாரு

முக்கனிகள் மூன்றில்
வாழைப்பழம் எடுத்து
தயிர் சீனி சேர்த்து
தளர்வாய் கொஞ்சம் பிசைந்து
கிள்ளித் தின்று பாரு
கறுத்தக் கொழும்பான் சீவி
அரிசிமாவு புட்டை
அதிலை கொஞ்சம் கொட்டி
பிசைந்து தின்னு பாரு

கீரைப்புட்டு
ஒடியல்புட்டு
உழுத்தம்புட்டு
பாற்புட்டு
இன்னும் பல இருக்கு
நேரம் கொஞ்சம் மட்டு
அதனாலை போட்டு
வாறன் பிறகு 
புட்டு பற்றி இன்னும்
புட்டுப் புட்டு வைப்பேன்

#ஈழத்துப்பித்தன்

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.