கொடி முந்திரிகைக் குலைகள்கொ
ய்து போக அழைப்பு விடுக்கின்றன
குமளிச் செடிகளோ திரண்ட காய்களின்
கன்னங்கள் சிவந்து நாணி நிற்கின்றன
உலுப்பிக் கொட்டிய மூளைக் கடலை விதைகள்
திசைகள் எங்கும் பரந்து தின்ன அழைக்கின்றன
ஊசி இலை மரங்கள் முன் பனி தாங்கத்
திடங்கொண்டு தினவெடுத்து நிற்கின்றன
இலை காய்ந்து சருகாகி உக்கிய பின்னும்
ஈரம் காயாது பூசணி திரண்டு கிடக்கின்றது
சுட்ட மரோனிக் கொட்டைகளின் வாசம்
நாசிகளை நிறைத்து சூடேற்றி அழைக்கின்றது
திட்டுத் திட்டாய் முடி சொரிந்த இளைஞன்போல்
வான் மறைத்த மரங்கள் வடிவு இழந்து நிற்கின்றன
பழுத்த இலைகள் விண்ணுக்கும் மண்ணுக்குமாய்
பரமபதம் ஆடி ஆடி பார்வைக்கு விருந்தாகின்றன
வான மகள் இருண்டு கறுத்து அழுது வடிக்கிறாள்
வானவில்லில் ஆரம் கட்டி வலிந்தும் சிரிக்கிறாள்
ஆடை இழந்து அம்மணமாய்க் கிடக்கும் மரங்களும்
தற்காலிக போர்வையோடு அழகொழிரும் தரையுமாய்
இலையுதிர்காலம் இனிதாய் நகருது இங்கு...
#ஈழத்துப்பித்தன்
No comments:
Post a Comment
தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.