ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலம் ஆரம்பித்து விட்டால் இந்த சூடான திராட்சை மதுவும் விற்பனைக்கு வந்துவிடும்.
குறிப்பாக நவம்பர் மாதத்தின் இறுதி வியாழக்கிழமை அன்று நத்தார் சந்தை ஆரம்பமாகும். நத்தார் சந்தை என்பது இரவு வேளைகளில் களை கட்டும். இச் சந்தைகளில் பல்விதமான பாரம்பரிய உணவுப்பண்டங்கள் சுடச் சுட சந்தையின் தெருக்கடைகளில் விற்பனையாகும்.
மிகவும் குளிரான காலநிலையில் அந்த குளிருக்கு உடல் ஈடுகொடுத்து தாங்கிக்கொள்ளும் வல்லமையை பெறுவதற்காக இந்த நத்தார் சந்தைகளில் சூடான திராட்சை மது விற்பனையாகும்.
சிவப்பு மற்றும் வெள்ளை வைன் இரண்டுமே இவ்வாறு சூடாக விற்பனை செய்யப்படும்.
திராட்சை மதுவுடன் கறுவாப்பட்டை, கராம்பு, நட்சத்திரப்பூ, தோடம்பழ துண்டுகள், தோடம்பழச்சாறு, கரும்புச் சீனி, ரம் போன்றவை சேர்த்து காய்ச்சி சூடாக வெட்டிய பழத்துண்டுகளுடன் பரிமாறப்படும்.
மதுவை சூடாக்கும் போது அதிலுள்ள மதுசாரத்தின் வீரியம் குறைந்து உள்ச்சேர்க்கைகளின் தன்மையும் சுவையும் அதிகரித்து உடலை கதகப்பாக்கி குளிரை தாங்கும் தன்மையை இந்தப் பானம் வழங்கும்.
தென் தமிழகம் மீது எனக்கு எப்பொழுதுமே தீராதகாதலுண்டு. கன்னியாகுமரி தாண்டி திருச்செந்தூர் நோக்கிய வழித்தடத்தில் பயணம் செய்யும் போது எங்கள் ஊருக்கு போன உணர்வு வரும்.
பனைமரங்களும் செம்மண் தரையுமான தேரிக்காடு பார்ப்பதற்கு பேரெழில் கொஞ்சும் பகுதியாகும்.
தோகை விரித்தாடும் மயில்களும் மரமுந்திரி எனப்படும் கயூ மரங்களும் அதிகம் காணப்படும் பூமி. செம்மண் வெளி, செம்மண்வெளியை எட்டிக்கடந்தால் பால் போன்ற வெள்ளை மணலும் பக்கமெங்கும் விரிந்த இந்துமா கடலும்.
இந்தப் பூமியின் அழகு போலவே இங்கு வாழும் மனிதர்களும்.
தம்பி ராம் மற்றும் அவரின் துணைவி கஸ்தூரி ஆகியோரின் சொந்த ஊர் இந்தப்பகுதியில் அமைந்துள்ளமையால் இந்தப் பகுதிக்கு செல்லும் வாய்ப்பும், அனுசரித்து விருந்தோம்ப தாராளமான உறவுகளும் அங்குள்ளார்கள்.
நாம் வருவதாக அறிந்ததுமே தடல் புடலான ஏற்பாடுகள். பல விடயங்களை உணவுப்பண்டங்களை படமெடுக்க மறந்தளவு உபசரிப்பு.
கஸ்தூரியின் அக்கா வீட்டில் மதிய உணவு. உடன் கடலில் பிடித்து வந்த விளைமீனில் பொரியல், நாட்டுக்கோழி அடிச்சு அரைச்ச கறி, கோழி 65 பொரியல் உண்மையில் சுவை சொல்லி வேலையில்லை.
பின்னேரம் ஆடி மாதம் அம்மனுக்கு ஊத்தும் இனிப்புக் கூழ் உவரி கடற்கடையில் அலையாடல், மண் சட்டி ஐஸ்கிறீம், மறுநாள் காலையில் பதநீர், நொக்கு சர்பத் இப்படியாக தென் தமிழகத்தில் பயணம் தொடர்ந்தது…
நான் சமைக்கிறது நல்லா இருக்கெண்டு சாப்பிட்டுப் பார்த்தவை சொல்லினமெண்டா அதுக்கு காரணமும், விருப்பமே இல்லாமல் ஆண்டு 3 இல் சித்திரத்துக்கு பதிலா நான் சங்கீதத்த தெரிவு செய்ததுக்கும் காரணம் இவர்தான்.
அதுக்காக இவர் சமையல் வாத்தியோ சங்கீத வாத்தியோ இல்லை.
நாங்கள் படிக்கிற காலத்திலைதான் வாத்தியார்மாரை மாஸ்ரர், சேர் என்று கூப்பிடுற நாகரீகம் ஆரம்பமான காலம். ஆனாலும் அங்கு படிப்பித்த சிலர் வாத்தியார் என அழைக்கப்பட்டார்கள் கணபதிப்பிள்ளை வாத்தியார், குணரத்தினம் வாத்தியார், தட்சணாமூர்த்தி வாத்தியார் அந்த வரிசையிலை இவர் பாலசிங்கம் வாத்தியார்.
பாலசிங்கம் வாத்தியார் கண்டிப்பான பேர் வழி. எங்கள் பள்ளிக்கூடத்திலை சித்திரம், விவசாயம், உடற்பயிற்சி, நூலகம் போன்ற பாடங்கள் இவரது படிப்பிக்கிற பிரதான பாடங்களாஇருந்தது.
பாலசிங்கம் வாத்தியார் வெளுத்துப்போடுவார் என்ற பாடசாலையின் பொதுவான கருத்து எங்களை அவர் பக்கம் அண்ட விடவில்லை. ஆண்டு மூண்டில் சித்திரபாடம் அவர்தான் படிப்பித்ததால் அவரின்ர அடிக்குப் பயந்து நானும் விஸ்வமூர்த்தியும் குணமலர் ரீச்சரிடம் சங்கீதம் படிக்கப் போயிட்டம். பிறகு ஆண்டு அஞ்சில கோம்சயன்ஸ் அதுதான் சமையல் பாடமோ விவசாயமோ எண்டு வர விவசாய பாடத்துக்கு வாத்தியாரா இருந்த பாலசி்ங்கத்தாருக்குப் பயந்து நானும் விஸ்வமூர்த்தியும் சமையல் பாடத்தை தெரிவு செய்தம்.
ஆண்டு அஞ்சு வரையும் வகுப்புகள் இருந்த எங்கட பள்ளிக்கூடத்திலை சண்டை காலம் என்றதாலை வெளியூர் பள்ளிக்கூடங்களுக்கு பிள்ளைகளை அனுப்ப தாய் தகப்பன் பயப்பிட்டதாலை ஆறாம் வகுப்பு புதுசா தொடங்கப்பட்டுது. இணுவில் அமெரிக்கன் மிசனிலை ஆண்டு ஆறு தொடங்கப்பட்டு முதன் முதலாக படிச்ச பெருமை எங்கட பிரிவைத்தான் சேரும். ஆனா பகிடி என்னெண்டா இவ்வளவு காலமும் பாலசிங்கம் வாத்தியாரிட்ட தப்பின எங்களுக்கு ஆண்டு ஆறில் நூலகமும் உடற்பயிற்சியும் பாலசிங்கத்தார்தான். அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப்போச்சு. அப்ப எங்கட பள்ளிக்கூடத்திலை தனியான நூலகம் இல்லாத்தாலை அவர் எங்களுக்கு நல்ல வர்ணனையோட கதை சொல்லுவார். அதுக்கு பிறகு எங்களுக்கு அவரை நல்லாப் பிடிச்சுப் போச்சு. எங்களோட பம்பலடிச்சு பகிடியாய் கதைப்பார்.
அவரைப்பற்றி எனது ஊசியிலையும் உன்னதம் பெறும் காலம் நூலில் எங்கள் ஊரின் அடையாளம் சீனிப்புளிய மரம் என்ற கவிதையில் எழுதியிருப்பேன்.
“பாலசிங்கம் வாத்தியார் தான் படித்த கதைகளை எல்லாம் சுவை கலந்து சொல்ல நாம் வாய் பிளந்து கேட்டிருந்ததும் இந்த மரநிழலில்தான்”
இனி அவர் நினைவுகளில் மட்டுமே வாழ்வார் என்ற செய்தியை இந்த வார இறுதியில் சமூக வலைத்தளம் காவி வந்தது.
அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆதி முகாந்தரமாய் தோன்றிய முகிதல் இல்லாத முத்துக் குளிக்கும் கடலே
என் தமிழ் திருவே! உன் மலரடிக்கே
என் முதல் வணக்கம்.
தமிழன் என்ற நிமிர்வைத் தந்தவனையும்
தமிழ் வாழத் தம்முயிர் தந்த மானமாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி அனைவரையும் வணங்குகின்றேன்.
தன் வரலாற்றை பதியாத, தன் வரலாற்றை போற்றாத எந்த ஒரு இனமும் நீடித்து நிலைப்பது கிடையாது.
2009 மே 18 யுத்தம் முடிவடைந்த போது ஒரு சூன்ய மனநிலைக்குள் நாமெல்லாம் ஆட்பட்டிருந்தோம். பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக நாம் இருந்தோம். அடுத்து என்ன செய்வது எப்படி நகர்வது என தெரியாது விழித்தோம்.
எம் முன் இருந்த பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க முடியாது முட்டி மோதி வெளிக்கிளர முயன்று கொண்டிருக்க, சிறீலங்கா அரசும் அதனுடன் சேர்ந்து இயங்கும் அமைப்புக்களும் விலை போனவர்களும் புலிநீக்க அரசியலையும், எமது உண்மை வரலாறுகளை அழிக்கும் திரிபுபடுத்தும் பணிகளை மிகத் திறம்படச் செய்துகொண்டிருந்தார்கள். இது எம்மை அச்சம் கொள்ளச் செய்தது.
எங்கள் படைப்புகள், எங்கள் ஆவணங்கள், எங்கள் வரலாறுகள் பேணிப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினரின் கரங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் அதுவே எம் முன் உள்ள முதற்பணி என நம்பினோம். ஆனால் அன்று அதனை நடைமுறைப்படுத்துவதில் பல சவால்கள்.
ஆனால் இன்று அண்மையகாலங்களில் எமது விடுதலைப் போராட்ட காலத்து ஆவணங்களும் படைப்புக்களும் பலராலும் தொகுக்கப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் அவற்றின் தொடர்ச்சியாக எமது தமீழீழத் தேசியக் கவிஞர் பெருமதிப்பிற்குரிய புதுவை இரத்தினதுரை அவர்களின் பவள விழாவை முன்னிட்டு கடந்த ஆண்டு பிரான்சு தேசத்தில் வெளியீடு கண்ட பவள விழா சிறப்பு மலரின் இரண்டாம் பதிப்பு இன்று சுவிற்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் அறிமுகமாகின்றது.
இந்த நூலுக்கான அறிமுக உரையினை வழங்கும் பணியினை விழா ஏற்பாட்டாளர்கள் எனக்கு தந்துள்ளார்கள்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் 2005ம் ஆண்டு சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற “பூவரசம் வேலியும் புலுனிக்குஞ்சுகளும்” நூலின் அறிமுக உரையை வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. அதே போல் இந்து அந்தக் கவிஞனின் புகழ்பாடும் இந்த நூலின் அறிமுக உரையினை வழங்கும் பேறு கிடைத்துள்ளது. மகிழ்ச்சி!
அறிமுக உரை என்பது அந்த நூலின் நாயகன் மற்றும் நூல் பற்றி விதந்து உரைத்து அறிமுகப்படுத்துதலாகும்.
இந்த நூலின் நாயகனை நான் அறிமுகப்படுத்துவது என்பது ஒரு சிற்றெறும்பு இந்தப் பிரபஞ்சத்தையே தன் சிறுகைகளை விரித்து அடக்கி அளப்பதற்கு ஒப்பானது. இருந்தாலும் தந்த பணியை தலைமேற் சுமக்கின்றேன்.
எம் தேசியக் கவிஞனின் புகழ்தனை பதிவாக்கி ஆவணப்படுத்தி ஒரு பெரும் பொக்கிசமாக இந் நூல் விரிகின்றது.
எங்கள் தேசத்தின் போரை, போரின் எழுச்சியை போரின் வலியை மட்டும் கவிஞர் புதுவை இரத்தின துரை அவர்கள் பாடவில்லை. எங்கள் மண்ணை, மண்ணின் வாழ்வியலை மனித மனங்களை, இயற்கையையை, இறையை என எல்லாவற்றையுமே சாதாரண மனித மனங்களின். உணர்விலிருந்து பாடியுள்ளார். ஈழத்தின் பண்பாட்டு அசைவுகளை புதுவை தன் வரிகளில் அரிதாரம் பூசாது அப்படியே சொல்லியிருப்பார். அவை அலங்கரித்த தேராக எம் மனங்களில் உலா வருகின்றது.
எனக்கு விருத்தெரிந்த காலங்களில் இருந்து்ஈழத்திலும் சரி புலம்பெயர்ந்து இங்கு வந்த பின்னரும் சரி அதிகளவில் தாயகப்பாடல்களை கேட்டும் சூழலே இருந்தது. காட்சி ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தாத அந்தக்காலங்களில் எம் மனக்கண்களில் காட்சிகளை விரிய வைக்கும் வல்லமை கொண்டவையாக புதுவையரின் வரிகள் என் மனங்களில் பதிவாகிக் கொண்டது. புலம்பெயர்ந்து வளர்ந்த எனக்குள் என் தேசத்தை என்மொழியை என் தேச வாழ்வியலை அப்படியே பதிவாக்கிய ஒரு காரணியாக புதுவையரின் வரிகளும் இருந்தன என்றால் மிகையாகாது.
புதுவையரின் கவிதைகள் பற்றி எனக்குள் இருக்கும் அதே உணர்வை புதுவையரின் கவிதைகள் பற்றிய தனது பார்வையில் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் “புதுவை இரத்தினதுரை அவர்களின் கவிதைகள் காண்பிய தன்மையுடையனவாக உள்ளன என உறுதிப்படுத்துகின்றார்.
அதனால்தான் புதுவை எம் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார்.
ஏறுது பார் கொடி
தமிழன் என்ற திமிரையும் எங்கள் கொடி என்ற பெருமித உணர்வையுல் தந்து போகும் பாடல்.
மாவீரர் நாளின் தாரகப் பாடலான தாயக கனவுடன் பாடல் எமக்குள் ஆனந்தமும் வலியும் கூடிய உணர்வை ஏற்படுத்தி வித்தான எங்கள் மாவீரக் கண்மணிகளை மனக்கண்களுக்குள் கொண்டு வந்து உறவாட வைக்கின்ற அற்புத நர்த்தனத்தை நிகழ்த்தும் வல்மையைக் கொண்டது.
மாவீரர் விதைப்பின்போது பாடப்படும்
சூரியத் தேவனின் வேருகளே
ஒட்டுமொத்த ஆன்மாவையும் உருக்கும் வல்லமை கொண்டது.
“இந்தமண் எங்களின் சொந்தமண்”
ஒரு வித மிடுக்கை எம் தாய் மண் இது என்ற உணர்வை எமக்குள் தந்துபோகும் திறன் கொண்டது.
“வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்”
மீனவர்களின் வாழ்வையும் வலியையும் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்ற ஒரு பாடல்.
யாழ் இடப்பெயர்வை அதன் வலியை பிரதிபலிக்கும் பாடல். இந்தப் பாடல் பிபிசியினால் 2005ம் ஆண்டு நடத்தப்பட்ட உலகின் சிறந்த பத்து தமிழ்ப்பாடல் போட்டியில் ஐந்தாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
நல்லை முருகன் மீதான பாடல்கள், திசை எங்கும் இசைவெள்ளம் என்ற இசைப்பேழை யூடாக ஈழத்தின் பெரும்பாலான கோவில்கள் மீதான பாடல்கள். சுவிற்சர்லாந்தின் சூரிச் சிவன் கோவில் மீதான இசைப்பேழை, சுவிசின் செங்காளன் மாநில கதிர்வேலாயுத சுவாமி மீது பாடப்பட்ட தொகுப்பு.
இப்படி கவிஞரின் ஒவ்வோரு படைப்பைப் பற்றியும் சிலாகித்து சொல்லிக்கொண்டே போகலாம்.
கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் சந்தம்மிகு சொல் அடுக்குகள் வாசிக்க வாசிக்க உளம் எங்கும் பரவி தமிழ் மீது காதல் கொள்ளச் செய்யும் வல்லமை நிறைந்தது.
வியாசனின் "உலைக்களம்" ஊரில் விடுதலைப்புலிகள் பத்திகையூடாகவும் புலம்பெயர் தேசங்களில் களத்தில் பத்திரிகையூடாகவும் வெளிவந்து எம் கரம் சேர்ந்தது.
அந்த வியாசன் எப்படி பாரதப் போரை பதிவாக்கினாரோ அதே போல் எங்கள் வியாசன் ஈழப்போரை பதிவாக்கியவராவர்.
2002 ஈழத்தில் ஏற்பட்ட சமாதான காலம் கவிஞரை புலம் பெயர் தேசங்களுக்கு அழைத்து வந்தது. இங்குள்ள மக்களுடனெல்லாம் உறவு பாராட்ட வைத்தது. அவர் தொழில் நிமிர்த்தமாக பல தேசங்களுக்குச் சென்றிருந்தாலும் படைப்பாளியாக உறவுகளுடன் உறவுவாடவென முதன் முதலாக கால் பதித்த புலம்பெயர் தேசம் எனும் பெருமை இந்த சுவிற்சர்லாந்துக்கு அதுவும் இந்த சூரிச் நகருக்கு உண்டு. இன்று அவர் முதன் முதலாக கால்பதித்த புலம்பெயர் தேச நகரான சூரிச் நகரில் அவரது புகழைக் கூறும் பவள விழா மலர் வெளியீடு காண்பதென்பது ஏதேட்சையான நிகழ்வல்ல.
சுவிற்சர்லாந்தின் மாவீரர் நாளிலே சிறப்புரையாற்ற வந்த கவிஞர் இங்கு உரை முடிந்ததும் உடனடியாகவே ஜேர்மனியில் நடைபெற்றுக்கொண்டிருந்த மாவீரர் நாளிலே உரையாற்ற செல்ல வேண்டும். இங்கு மேடையில் உரை முடித்ததும் உடனடியாக சிறப்பு விமானம் மூலம் ஜேர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த மாவீரர் நாளிலே உரையாற்றி விட்டு சில நாட்களின் பின் மீண்டும் சுவிஸ் வந்திருந்தார். ஒரு நாள் நாங்களெல்லாம் அவருடன் அமர்ந்திருந்து உரையாடிக்கொண்டிருந்தபோது அந்த சம்பவத்தைப் பற்றி இப்படி விபரித்தார் “பிரபாகரப பேரரசின் குறுநிலமன்னர்களாக இருக்கும் இவர்கள்” என அன்று சுவிஸ் கிளையின் பொறுப்பாளராக இருந்த குலமண்ணாவை காட்டி இந்த புலவன் என்னை வான் ஊர்தி ஏற்றி அங்கும் இங்கும் பரிமாறிக்கொண்டார்கள். என்றார். அனைவருமே கலகலத்து இரசித்தோம்.
மாணவர் அமைப்பு மற்றும் ஊடகத்துறை சார்ந்த பணிகளில் செயற்பட்டதால் பல தடவைகள் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவருடன் அளவளாவிய பொழுதுகள் கிடைத்தற்கரிய அரும்பொழுதுகள்.
இந்தக் கரங்களைப் பற்றி என்ர குஞ்சு "ஏதோ நினைத்து வந்தேன்
என் எண்ணமெல்லாம் தவிடு பொடியானதெடா "
நாங்கள் ஓய்ந்தாலும்
நீங்கள் ஓயமாட்டியள்
இந்தச் செய்தியை என் தலைவனிடம் போய்ச் சொல்வேன் என்ற நம்பிக்கையோடு போனவனுக்கு இன்று நாங்களெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கும் செய்தி என்ன?
பொது எதிரியோடு அடிபட்ட நாங்கள் இப்ப எங்களுக்குள் அடிபடுகின்றோம் என்றா?
கவிஞருடன் நெருங்கிய தொடர்பைக்கொண்ட சுவிஸ் மண்ணில் வெளியீடு காணும் இந்த நூலானது மிகவும் சிறப்பு மிக்க ஒரு நூலாகும்.
ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் அவர் தம் வாழ்வின் பொன்னான தருணங்கள் பற்றியும் அறியும் அவா எங்களுக்கெல்லாம் இருப்பது இயல்பான ஒன்றே. அந்த வகையிலே கவிஞர் புதுவை இரத்தினதுரை பற்றிய பல சுவையான தகவல்கள் இந்த நூல் முழுதும் கொட்டிக் கிடக்கின்றது.
தமிழர் கலை. பண்பாட்டுக்கழகம் - பிரான்ஸ்
சங்கநாதம் கலைக் குமுமத்தினரின் அயராத உழைப்பின் பயனாக இந்த நூல் உருக்கொண்டுள்ளது.
அழகான தரமான வடிவமைப்பில் 460 பக்கங்களைக் கொண்ட இந்த நூலிலே பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழீழத் தேசியத் தலைவர் உட்பட தமிழீழ நிழலரசின் பல்வேறு துறைகளின் பொறுப்பாளர்கள் கவிஞரின் திறன் பற்றி வியந்து எழுதிய உரைகளும் சமகாலத்தில் அவருடன் பழகிய, பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் அவர் பற்றிய அனுபவக் குறிப்புகள் அடங்கிய கதைகளாக பதிவாகியிருக்கின்றது.
இதே வேளை கவிஞரின் சில படைப்புகளும், நேர்காணல்களும், அவர் பற்றிய பார்வைகளும் பிரெஞ்சு, ஜேர்மன், ஆங்கிலம் போன்ற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு இணைக்கப்படுள்ளமை மிகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கின்றது.
இந்நூல் கவிஞர் பற்றி இன்னும் அறிந்துகொள்ள விரும்புவோருக்கு தீனி போடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
கவிஞரைப் பற்றியும் அவர் தம் படைப்புகள் இந்த நூல் பற்றியும் பேச நிறைய விடயங்கள் உண்டு. காலமும் நேரமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் நிறைவுக்கு வருகின்றேன். இங்கே நூல் பற்றியும் தேசியக் கவிஞர் பற்றியும் பல சிறப்பான விடயங்களை எடுத்துவர சிறப்பான பேச்சாளர்கள் எல்லாம் காத்திருக்கின்றார்கள்.
கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள்
மண்ணை நேசிக்கும்
மண்ணை சுவாசிக்கும்
ஒவ்வொருவனுக்குள்ளும் இருந்து புதுவை கிழர்ந்தெழுவான்.
இன்று இந்த அரங்கிலே புதுவை இரத்தின துரை அவர்களின் வாழ்வும் வரலாறும் பதிவாகி அறிமுகமாகின்றது.
இதே போல் ஒவ்வொரு போராளிகளினதும், படைப்பாளிகளினதும் வரலாறுகளும் ஆவணப்படுத்தப்படல் வேண்டும். அதற்கான ஒத்துழைப்புகளை சுவிற்சர்லாந்தின் சைவநெறிக்கூடத்தின் தமிழர் கலரியும் சுவிற்சர்லாந்தின் ஆவணக்காப்பகமும் ஏற்கனவே செய்து வருகின்றார்கள்.
தனியே போராளிகள், படைப்பாளிகள் வரலாறு மட்டுமல்ல ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வரலாறை ஏதோ ஒரு வகையில் பதிவாக்க வேண்டும்.